பெண்ணும் ஆணும் ஒண்ணு - அணிந்துரை - 3

பெண்ணும் ஆணும் ஒண்ணு - அணிந்துரை - 3

அணிந்துரை – 3

 மானுட விடுதலையை நோக்கி...

பிருந்தா சீனிவாசன்

பத்திரிகையாளர்

தன் கருத்தோடு உடன்படுகிறவர்களை மட்டுமல்ல, மாற்றுக் கருத்துகளைச் சொல்கிறவர்களையும் ஒருங்கிணைத்துப் பயணப்பட நினைக்கிற மிகச் சிலரில் ஓவியாவும் ஒருவர். நான்கு ஆண்டுகளுக்கு முன், நாளிதழ் பேட்டி ஒன்றுக்காக அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது 1990-களில் மதுரையில் இயக்கத் தோழர்களுடன் சேர்ந்து முன்னெடுத்த கருத்துப் பிரச்சாரம் குறித்துப் பேசினார். இந்து அறநிலையத் துறையில் அதிகாரியாகப் பெண்ணை நியமிக்கக் கூடாது என்ற அப்போதைய நடைமுறையை எதிர்த்து நடத்தப்பட்ட பிரச்சாரம் அது. பெண்கள் அதிகாரியாக நியமிக்கப்பட்டால் மாதவிடாய் நாட்களிலும் அவர்கள் கோயிலுக்குள் நுழைவார்கள் என்பதற்காகவே அப்போது பெண்களை அதிகாரியாக நியமிக்கவில்லை. "உங்கள் உடலில் இருந்து வெளியேறுகிற மலஜலம் தீட்டாகாதபோது பெண்களின் உடலில் இருந்து வெளியேறுகிற உதிரம் மட்டும் தீட்டா?" என்று பதாகைகளில் எழுதப்பட்ட வசனத்தைப் படிக்கப் பெண்களே தயங்கியுள்ளனர். அப்போது அங்கே சுற்றி நின்றிருந்த பெண்களில் சிலர், "ஏம்மா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை?'' எனக் கேட்டிருக்கிறார்கள். பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதற்குப் பின்னால் இருக்கும் அரசியலைக்கூடப் புரிந்துகொள்ளாமல், அப்படி நுழைவது தீட்டு என்று காலங்காலமாகக் கற்பிக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண்களையும் சேர்த்துக்கொண்டுதான் நாம் போராட வேண்டும் என்பதில் ஓவியா உறுதியோடு இருந்தார். கேள்வி கேட்ட பெண்களைப் புறக்கணித்துக் கடக்காமல், அவர்களுக்குப் புரியும் விதத்தில் போராட்டத்தின் அவசியத்தை உணர்த்திவிட்டுத் தன் கருத்துப் பிரச்சாரத்தை ஒவியா தொடர்ந்தார். ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டியவள் பெண் என்ற கருத்து நிலைபெற்றிருக்கும் இந்தச் சமூகத்தில் பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் சேர்த்துக்கொண்டு பயணித்தால் மட்டுமே சமநிலை சமூகத்தை உருவாக்க முடியும் என்பது ஒவியாவின் நிலைப்பாடு. பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தி அவர் எழுதியிருக்கும் 30 கட்டுரைகளும் அதையே சொல்கின்றன.

சமூகத்தில் வேரோடிப்போயிருக்கும் எல்லாக் கீழ்மைகளும் சாதி, மதம், பாலினம் போன்ற பாகுபாட்டிலிருந்தே பிறக்கின்றன. சாதியையும் மதத்தையும் எதிர்க்கிற அதே நேரம் பாலினப் பாகுபாட்டைக் களைவதும் காலத்தின் தேவை என்பதை இந்தக் கட்டுரைகளில் ஓவியா தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். மனிதர்களுக்குள்ளான பேதத்தை அகற்றுவதையே தன் பணியாகக் கொண்டிருந்த தந்தை பெரியாரின் வழிநின்று மானுடச் சமத்துவத்துக்கு வழிகாட்டும் சிற்றகலாக ஒளிர்கிறது இந்த நூல். 'பெண்ணியம்' என்பதே மிகச் சிக்கலானதானப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் இந்த நாளில் பெண்களைப் பிணைத்திருக்கும் அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிவது சவால் நிறைந்தது. அதிலும் பெண்கள் தங்களுக்குத் தாங்களே விரும்பிப் பூட்டிக்கொண்டிருக்கும் விலங்குகள் ஏராளம். அவை அடிமைத்தளைகள் என்பதைப் புரியவைக்கப் பொறுமையும் அனுபவமும் அவசியம். இவை இரண்டும் கைவரப் பெற்றிருக்கிறார் ஓவியா. அதனால்தான் கட்டுரைகளை வெறும் சொற்சேர்க்கையாகக் கையாளாமல் நம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு அருகிலேயும் நடக்கும் நிகழ்வுகளின் துணையோடு எளிமையாகச் சொல்லியிருக்கிறார். தேவைப்படுகிற இடங்களில் வரலாற்றுத் தகவல்களையும் அறிஞர்களின் கருத்துகளையும் சொல்லித் தன் கருத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார்.

குழந்தை வளர்ப்பு, கல்வி நிலையங்கள், பணியிடங்கள் போன்றவற்றில் நிலவும் பாலினப் பேதத்தைச் சுட்டுக்காட்டும் ஓவியா, குடும்ப அமைப்புக்குள் நிலவுகிற பாகுபாட்டையும் சுரண்டலையும் தோலுரிக்கிறார். குடும்பம் என்னும் நிறுவனம் பெண்கள் மீது தொடர்ந்து செயல்படுத்தும் வன்முறை, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பெண்மை, தாய்மை, குடும்பப் பெண் என்பது போன்ற கற்பிதங்களால் பெண்கள் மீது கட்டுக்கடங்காத சுமை ஏற்றப்படுகிறது. அந்தச் சுமைகளைச் சுகமென நினைத்துச் சுமப்பதே பெருமிதம் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இவற்றில் 'கற்பு' என்னும் கற்பிதம் முக்கியமானது. பெண்ணுரிமை குறித்துப் பேசுகிற, பெண்களுக்காகக் குரல் கொடுக்கிற, பொதுத்தளத்தில் செயலாற்றுகிற பெண்களை மட்டுமல்ல, கற்பிதத்தை ஏற்க மறுத்துக் கேள்வி கேட்கிற பெண்களைக்கூடக் கிழித்துவிடுகிற முனைப்போடு அந்தக் கூராயுதம் செயல்படுவது குறித்தும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார் ஓவியா. இந்திய அரசியல் தண்டனைச் சட்டப் பிரிவு 497 தற்போது நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத் தளத்தில் விவாதங்கள் எழுந்துவரும் இந்த நேரத்தில் குடும்ப அமைப்பு, அதில் மலிந்திருக்கும் சுரண்டல்கள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. குழந்தைகள், மாற்றுப் பாலினத்தவர் ஆகியோர் மீது செலுத்தப்படும் வன்முறைகள் சமூகத்தின் கண்களிலிருந்து மறைக்கப்படுகின்றன. நீதிகேட்டுப் போராடும் குரல்கள் நசுக்கப்படுகின்றன. கொடுமைகளைக் கண்டும் காணாததுபோல் இருப்பதும் ஒரு வகையில் வன்முறை என்பதையும் இந்த நூல் உணர்த்துகிறது.

எல்லாத் துறைகளிலும் பெண்கள் முன்னேறிவிட்டதாகப் பரப்புரை செய்யப்பட்டாலும் ஒவ்வோர் இடத்திலும் பெண்கள் தங்கள் உரிமையைப் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. பெண்கள் அரசியலுக்குள் நுழையவும் இட ஒதுக்கீட்டின் துணை தேவைப்படுகிறது. தடைகளை மீறி அரசியல் களத்தில் இருக்கிற பெண்களிடம், மாற்றத்துக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரம் இருக்கிறதா என்னும் கேள்வியை ஒவியா நம் முன் வைக்கிறார். காரணம் அரசியலைப் பெண்கள் கையில் எடுத்தால்தான் சமத்துவம், சமூக நீதி போன்றவை சாத்தியப்படும். பிரச்சினைகளை மட்டுமே பட்டியலிட்டு அயர்ச்சியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தாமல் நம்மைத் தீர்வை நோக்கிச் செலுத்துவதும் நூலின் தன்மைகளில் ஒன்று. ஓவியாவின் இந்த நூல் அதைத் தவறாமல் செய்கிறது.

 


புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/pennum-anum-onnu.html

Back to blog