பெண்ணும் ஆணும் ஒண்ணு - அணிந்துரை - 2
பெண்ணும் ஆணும் ஒண்ணு - அணிந்துரை - 2
அணிந்துரை – 2
ஓவியப் பெண்ணே! நீ வாழ்க! வளர்க!
பேராசிரியர் சரசுவதி
சமூக செயற்பாட்டாளர்
Man is born free; but everywhere he is in chains' என்று ஆதங்கப்பட்டார் ரூஸோ. ஆனால் இந்திய இந்துச் சமூகக் கட்டமைப்பில், 'பெண்' என அடையாளப்படுத்தப்படும் மானுடம், தாய் வயிற்றில் சிசுவாக வளர்வதற்கும், பத்து மாதம் வளர்ந்த பின், குழந்தையாகப் பிறப்பதற்குக்கூட உரிமையற்றவளாக ஆக்கப்பட்டிருக்கும் கொடுமையை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. (Man includes woman என்று விளக்கமளிப்பது ஆணாதிக்க கருத்துருவாக்கம். கூறப் போனால் Woman includes man என்பதுதான் சரியாக இருக்கும்) பெண் கருக்கொலைகளும் சிசுக் கொலைகளும் சமூகப் பொதுப் புத்தியால் இயற்கையானவைகளாக இயல்பானவைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சூழல் தொடரும் அச்சம். சட்டங்களும், சமூக சீர்திருத்தக்காரர்களும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும், எவ்வளவுதான் முட்டி மோதினாலும், சமூக மாற்றமோ, முன்னேற்றமோ நத்தையாய் ஊறும் நிலை. மூடத்தனத்தின் முடை நாற்றம், திக்கெட்டும் வீசி மூச்சை அடைக்கிறது.
சாதி, மதம், கடவுள் என்ற கற்பிதங்களின் அடிப்படையில் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள், பழக்க வழக்கங்கள், பண்பாடு என்பவற்றின் பெயரால் பெண்கள் மீது பூட்டப்பட்டிருக்கும் விலங்குகள் எத்தனை எத்தனையோ! பெண்ணின் மூளைக்குப் போடப்பட்ட விலங்கு, அவளின் சிந்தனைத் திறனை சிதறடித்தது. தன்னம்பிக்கையை தகர்த்தெறிந்தது. சுயமரியாதையைச் சுட்டுப் பொசுக்கியது. எதற்கும், எந்த நிலையிலும், இடத்திலும், ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது. இவற்றையெல்லாம் பெண்களே ஏற்றுக் கொள்ளவும், நியாயம் கற்பிக்கவும் வேண்டி ஆண்கள் மேற்கொள்ளும் நரித் தந்திரங்கள் பல வடிவங்களில் தொடரத்தான் செய்கின்றன.
பெண், கல்வி பெறவும், பேசவும், சுதந்திரமாக நடமாடவும், ஏன் வயிறார உண்ணவும், ஆசையாக உடுக்கவும்கூட தடைகளும், நிர்ப்பந்தங்களும் விதிக்கப்பட்டன. விதிக்கப்படுகின்றன. அடிமை இயந்திரமாகவும் பாலியல் பண்டமாகவும் ஆணுக்கென வாரிசுகளைச் சுமந்து பெற்றுத் தரும் கருவியாகவும் பெண் ஆக்கப்பட்டாள். 'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே' என்பது அவளுக்கான வேத வாக்கு. ஆனால் சமூக மறு உற்பத்தி என்னும் மகத்தான பணியை மேற்கொள்ளும் பெண்ணின் குடும்ப, சமூக அந்தஸ்து பெருமிதம் கொள்ளத் தகுந்ததாக இல்லை.
வாழ்க்கை ஆணுக்கு மட்டுமே. அவனது துணை நலமான பெண், 'பெய்யெனப் பெய்யும் பெருமழையைக் கொண்டு வரும் கற்புக்கடம் பூண்டவளாய், பின் தூங்கி முன்னெழும் பேதையாய் கொண்டவனின் இச்சைக்கு வடிகாலாய் - இதுதான், இப்படித்தான் பெண்ணுக்கென்று விதிக்கப்பட்ட பெரு வாழ்க்கை அமைந்திருக்கிறது.
அவனின்றி அணுக்கள் அசைந்தாலும் அசையும்; ஆனால் ஆணின்றி பெண் வாழவே முடியாது; வாழக் கூடாது என்ற கட்டாயத்தையும் கட்டமைப்பையும் கொண்டு பெண்ணை ஆணின் நிரந்தர அடிமையாக்கிக் கொண்டாடும் சமூகம் இது.
ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் அளவுகோல், அந்த நாட்டில் பெண்களின் நிலை (Status of Women) எப்படி இருக்கிறது என்பது தான். உலகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளில் முதல் இடத்தைப் பெற்றிருக்கும் நாடு இந்தியா என்ற செய்தி இங்கு நாடாள்வோர் யாரையும் வெட்கமடையச் செய்யவில்லை.
பெண்களின் இழிநிலையும், சுதந்திர இந்தியாவிலும்கூட இரண்டாம் தர குடிமக்களாக (Second rate citizens) ஆக்கப்பட்டிருக்கும் அநீதியையும் கண்டு குமுறி எழுந்தவர்களுள், தந்தை பெரியார் தலையானவர். தனது அறுபதாண்டு கால பொது வாழ்க்கையில், அவர் யாரைப் பற்றி அதிகம் கவலைப்பட்டார்? யாருடைய மானுட சமத்துவத்துக்கு அதிகம் பாடுபட்டார்? என்ற கேள்வி எழுமானால், கிடைக்கும் பதில், அவர் பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்காகவும் தான் அதிகம் வாதாடினார், போராடினார் என்ற உண்மையை அனைவரும் ஒப்புக் கொள்வர்.
பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் குறித்து, பெரியாரின் சமகால சீர்திருத்தக்காரர்களும் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பேசியதற்கும், பெரியார் பேசியதற்கும் அடிப்படை வேறுபாடுண்டு. மற்ற சீர்திருத்தக்காரர்களெல்லாம் பெண் கல்வி பெறுவது சுதந்திரமாகச் செயல்படுவது எல்லாம், அவள் குடும்பத்துக்கு, சமூகத்திற்கு, நாட்டிற்கு பெரிதும் பயன் விளைவிக்கும். எனவே அவள் உரிமை பெற்றவளாக வேண்டும் என வாதாடினர்.
ஆனால் பெரியாரோ, பெண் விடுதலை, சுதந்திரம் கோருவது, பெண்ணுக்காக மட்டுமே! அவள் ஒரு மனுஷியாக, சுதந்திர ஜீவியாக வாழ வேண்டும் என்பதற்காகவே! மற்றவர்களை வாழ வைக்கும் தியாகத் தீயாக அதிகம் ஒளி பெற வேண்டும் என்பதற்காக அல்ல.
இங்கு தான் பெரியார் ஒரு புரட்சியாளராகத் தனித்து நிற்கிறார்.
ஆணாதிக்கத்திற்கு எதிராக, பெண்கள் விடுதலைக்காவும் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து பாடாற்றிய ஈ. வெ. இராமசாமியை 'பெரியார்' என்று வாய் நிறைய, மனம் மகிழ அழைத்து, பெண்ணுலகு தன் நன்றியை நிரந்தரமாக நித்தம் நித்தம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆதிக்க சமூக அமைப்பை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டு, சுயமரியாதை, சமத்துவம், பொது உரிமை, பொது உடைமை, சமூக நீதி கொண்ட புதிய அமைப்பை உருவாக்கத் தன் வாழ்வின் இறுதி நாள் வரைப் பாடுபட்டவர் பெரியார். பெரியாரின் தத்துவ சிந்தனையை, மனித நேய விழுமியத்தை மானுட சமத்துவ கருத்தை முழுமையாக தன் வயமாக்கிக் (Internalise) கொண்டவர் ஓவியா. புதியதோர் உலகு செய்ய முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமகால பெண்ணிய செயல்பாட்டாளர்களுள் குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்றிருப்பவர். பெரியாரியலை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கும் மூன்றாவது தலைமுறைக்காரர். பிறக்கும் போதே அவர் ஒரு பெரியாரிஸ்ட் என்று குறிப்பிடலாம் - அது மிகையில்லை.
தனி வாழ்க்கைக்கும், பொது வாழ்க்கைக்கும் இடையே எத்தகைய இடைவெளியும் கூடாது என்று கவனத்தோடு செயலாற்றுபவர். சொல்லுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடு இல்லாத வெளிப்படைத் தன்மை அவருக்கானது.
கொண்ட கொள்கையில் தெளிவும், அதை பிறருக்கு எடுத்துச் சொல்வதில் நேர்த்தியும், மாற்றுக் கருத்துக்கும் செவி சாய்க்கும் பெரியார் மரபும் ஓவியாவிற்கு உரித்தானவை.
'பெண்ணும் ஆணும் ஒண்ணு' என்ற இந்த நூல், நாளிதழ் ஒன்றின் ஞாயிறு மலரில் தொடர்ந்து 30 வாரங்கள் வெளியான ஓவியாவின் கட்டுரைகளின் தொகுப்பு. 'பெண்ணும் ஆணும் ஒண்ணு' என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள, இன்று வரை தயங்கும், மறுக்கும் 'களிமண்' மூளையருக்கும் பெண் குறித்த உண்மைகளை, செய்திகளை விளங்கும்படி சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே உடல் அமைப்பிலும், உறுப்புகளிடையேயும் சில வேற்றுமைகள் (differences) உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த வேற்றுமை, பாகுபாடுகளுக்கான (discrimination) காரணமாகவோ, உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கான நியாய வாதமாகவோ அமையக் கூடாது (Differences should not be the basis for discrimination) என்பதுதான் பெண்ணுரிமையின் முதல் முழக்கம். ஆண், பெண் வாழ்க்கைப் பயணத்தில் பாகுபாடுகள் கற்பிக்கப்படும், பின்பற்றப்படும் அனைத்து நிகழ்வுகளையும் - குழந்தைப் பருவத்திலிருந்து முதுமை வரை, உணவு முதல் மொழி வரை, வீடு முதல் சுடுகாடு வரை, கல்வி முதல் அரசியல் வரை சான்றுகளுடன் விளக்கி, பாகுபாடுகளை ஒழிப்பதுதான் ஆண், பெண் சமத்துவத்திற்கான முதல்படி என்று வலியுறுத்துகிறார்.
ஆணுக்கு உரிமையாகும் பலவும் (உ.ம். கல்வி, வேலைக்குச் செல்வது, சொத்து) பெண்ணுக்கு 'சலுகையாக கருதப்படும். சார்புப் பார்வை (biased perception) ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி பேசும் மனுவாதிகளின் விஷமப் பேச்சுகள், மேடைக்கொரு பேச்சும், தனக்கென்று எதிர் கருத்துமாக இரட்டை நாக்குடைய மேலோர்களை (!) நம்பி, பெண்ணே நீ வாளாவிருக்காதே!
ஆணின் முன்னேற்றம், அவனின் அறிவு, திறமை, உழைப்பைச் சார்ந்தது. பெண்ணின் முன்னேற்றம், அவள் உடல் சார்ந்தது என்ற வக்கிர புத்தியினர் வளைய வரும் நாடு இது.
உன் சுதந்திரத்தையும், விடுதலையையும், கெளரவத்தையும் நீதான் போராடி வென்றெடுக்க வேண்டும் என்ற பெண்ணுக்கான பெரியாரின் அறிவுரைகளை ஏற்று, போர்க்கோலம் பூணுவோருக்கு, ஓவியாவின் 'பெண்ணும் ஆணும் ஒண்ணும் கருத்துப் பேழையாக விளங்குகிறது.
ஓவியப் பெண்ணே! நீ வாழ்க! வளர்க!
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/pennum-anum-onnu.html