பெண் ஏன் அடிமையானாள் | எட்டாம் அத்தியாயம் – சொத்துரிமை

ஏழாம் அத்தியாயம்

எட்டாம் அத்தியாயம் – சொத்துரிமை

 

இந்திய நாட்டில், பெரும்பாலும் உலகத்தின் வேறு எங்கும் இல்லாததும், மனிதத் தன்மைக்கும், நியாயத்திற்கும், பகுத்தறிவிற்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும், அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்படவேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல எனவும், மனிதத்தன்மையும், நாகரிகமுமுடையதான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்படவேண்டுமானால் மற்றும் உலகிலுள்ள பெரும்பான்மையான நாட்டார்களைப் போலவே அந்நிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ளவும் வேண்டுமானால், முக்கியமாகவும் அவசரமாகவும் ஒழிக்கப்பட வேண்டியதாகவுமிருக்கும் கொடுமைகள் இரண்டுண்டு.

அவைகளில் முதலாவது எதுவென்றால், இந்திய மக்களிலேயே பல கோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாக உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதாகும்.

இரண்டாவது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடுபிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க 'கடவுளாலேயே' சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதாகும். ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியாவில் இனி அரைஷணம் கூட இருக்கவிடாமல் ஒழித்தாக வேண்டியவைகளாகும்.

மேலும், நாம் மேற்கண்ட இரண்டு கொடுமைகளும் அழிக்கப்படாமல், இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் கேட்பதோ, இந்தியாவின் பாதுகாப்பையும், ஆட்சி நிர்வாகத்தையும் இந்திய மக்கள் தாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம் என்று சொல்லுவதோ மற்றும் இந்தியாவிற்கு அந்நியருடைய சம்பந்தமே சிறிதும்வேண்டாம் என்று சொல்லுவதோ ஆகிய காரியங்கள் முடியாதென்றும், முடியுமென்று யாராவது சொல்வதானால், சுயநலச் சூழ்ச்சியே கொண்ட நாணயத் தவறான காரியமாகுமென்றும் சொல்லி வருகிறோம் என்பதோடு இப்படிச் சொல்லும் விஷயத்தில் நமக்குப் பயமோ, சந்தேகமோ கிடையாது என்றும் சொல்லுவோம். அதனால்தான், இவ்வித முட்டாள்தனமானதும், சூழ்ச்சியானதுமான முயற்சிகளை நாம் எதிர்க்க வேண்டியவர்களாயுமிருக்கிறோம்.

ஏனெனில், நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூகத்தாரென்றும், நமது சகோதரர்களென்றும், ஜீவ காருண்யமென்றும்கூடக் கருதாமல் நம் மக்களுக்கே நாம் விரும்பும் சுதந்திரமளிக்காமல், மனிதர்கள் என்றுகூடக் கருதாமல் அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி, இழிவுப்படுத்தித் தாழ்த்தி வைத்திருக்கிறோம். ஆதலால், அத்தாழ்த்தப்பட்ட மக்களின் நலத்தையோ, விடுதலையையோ நம்மிடம் ஒப்புவிப்பதென்றால், கசாப்புக் கடைக்காரரிடம் ஆடுகளை ஒப்புவித்ததாகுமே தவிர, வேறல்ல என்று கருதுவதால்தானே ஒழிய வேறல்ல.

இந்தத் தத்துவமறியாத, சில தீண்டப்படாதவரென்ற தாழ்த்தப்பட்ட மக்களும், சுதந்திரம் அளிக்கப்படாதவர்கள் என்ற அடிமைப்படுத்தப்பட்ட பெண்களும் தங்களுக்கு மற்றவர்களால் இழைக்கப்பட்ட கொடுமையையும், இழிவையும் கருதிப் பாராமல், இந்தியச் சுதந்திரம் விடுதலை என்கின்ற கூப்பாடுகளில் இவர்களும் கலந்துகொண்டு தாங்களும் கூப்பாடு போடுவதைக் காண்கிறோம். ஆனாலும், அதற்குக் காரணம் அவர்களுக்கு உண்மையான சுதந்திரம், விடுதலை என்பவைகளின் பொருள் தெரியாததாலும், தெரிய முடியாமல் வைத்திருந்த வாசனையினாலும் இவ்வாறு அறியாமல் திரிகின்றார்களே தவிர வேறில்லை.

தீண்டாமை என்னும் விஷயத்தில் இருக்கும் கொடுமையும், மூடத்தனமும், மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ அலட்சியமாகக் கருதவோ நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கு என்ன அவசரம்' என்று காலந்தள்ளவோ சிறிதும் மனம் இடந்தருவதில்லை. ஒருவனை அதாவது பிறரைத் தீண்டாதார் எனக் கருதி கொடுமைப்படுத்துகின்றவர்களை அத்தீண்டாதார்களுக்கு இருக்கும் உண்மையான கஷ்டத்தை உணரச் செய்யவேண்டுமானால், இப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்தின்கீழ் அனுபவிக்கும் மனுதர்மக் கொடுமைகள் என்பவைகள் போதாது என்றும் சிறிதும் சுதந்திரம், சமத்துவமும் அற்றதும் சதா ராணுவச் சட்டம் அமலில் இருப்பதுமான ஏதாவது ஒரு கொடுங்கோல் ஆட்சி இருந்தால்தான் இம்மாதிரிக் கொடுமைப்படுத்துகின்ற மக்களுக்கு உணர்ச்சி வந்து புத்தி வருமென்றும் நமக்குச் சிற்சில சமயங்களில் தோன்றுவதுண்டு.

ஆனால், இந்தியாவை இம்மாதிரி மூர்க்கத்தனமும் நாணயக் குறைவும் மாத்திரம் சூழ்ந்து கொண்டிருக்காமல், மூடத்தனமும் சேர்ந்து கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதால் இன்னமும் எவ்வளவு இழிவும், கொடுமையும் ஏற்பட்டாலும் இம்மாதிரியான மக்களுக்கு உண்மையான துன்பத்தை உணரத்தக்க நிலைமை ஏற்படுவது கஷ்டமாக இருக்கும் என்றாலும், இந்நிலை மாறுதலடையக் கூடும் என்ற உறுதியை உண்டாக்கத்தக்க நம்பிக்கை கொள்வதற்கு இடமில்லாமல் போகவில்லை.

இனி, பெண்கள் விஷயத்தில் இதுபோலவேதான் அவர்களுடைய சுதந்திரத்தையும், உணர்ச்சியையும் கட்டிப் போட்டிருக்கும் கொடுமை யானது, இந்தியர்களுக்கு சுதந்திர உணர்ச்சியே இல்லை என்பதைக் காட்டவும் அவர்கள் அடிமைகளின் குழந்தைகள் என்பதை ஒப்புக் கொள்ளவும் ஆதாரமானதென்றுதான் சொல்லவேண்டும்.

எப்படியெனில், இவ்விரண்டைப்பற்றி இந்திய விடுதலைவாதிகள், சுதந்திரவாதிகள், சுயேச்சைவாதிகள், தேசியவாதிகள், மக்கள் நல உரிமைவாதிகள் என்கின்ற கூட்டத்தார்கள் ஆகியவர்களுக்குச் சிறிதும் உண்மையான கவலை இல்லாவிட்டாலும், மேற்கண்ட கூட்டத்தார்களில் 100-க்கு 90 பேர்களுக்கு மேலாகச் சுயநலங்கொண்ட நாணயமற்றவர்களாவே காணப்படினும், இவர்களது முயற்சி இல்லாமலும் சில சமயங்களில் மேற்கண்ட சுயநலச் சூழ்ச்சிவாதிகளின் எதிர்ப்பிற்கும் இடைஞ்சலுக்கும் இடையிலும் கொடுமைகள் அனுபவிக்கும் மேற்கண்ட பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள சீர்திருத்தக்காரர்களைவிட இந்தக் கொடுமைகளை ஒழிக்க ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொன்றுமாக முன்வந்திருக்கின்றது என்பதாகும்.

காஷ்மீர் சமஸ்தானத்தில் எந்த விஷயத்திலும் தீண்டாமையைப் பாவிக்கக் கூடாதென்றும், தீண்டப்படாதார் என்னும் வகுப்பாருக்கு மற்றவர்களைப்போல் சகல உரிமைகளும் அளிக்கப்பட்டிருப்பதோடு கல்வி விஷயத்தில் அவர்களுக்குச் சாப்பாடு போட்டும் இலவசமாய்க் கற்றுக் கொடுக்கவேண்டும் என்றும் தீர்மானமாயிருக்கும் விஷயம் முன்பே தெரிவித்திருக்கிறோம்.

மற்றும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு கோயில்கள், தெருக்கள், குளங்கள் ஆகியவை தாராளமாகத் திறக்கப்பட்டு, இவ்விசயங்களில் மற்றவர்களுக்குள்ள சுதந்திரங்கள் அளிக்கப்பட்டிருப்பதோடு, பெண்களைக் கடவுள் பேரால் விபச்சாரிகளாக்கிக் கோயில்களின் ஆதரவுகளைக் கொண்டு அவ்விபச்சார தன்மையை நிலை நிறுத்துவதையும், அஃதன்றி நடந்துவரும் விபச்சாரத்தையும் ஒழிக்கச் சட்டம் நிறைவேற்றி அமலுக்குக் கொண்டு வந்ததையும் முன்னமே தெரிவித்திருக்கின்றோம்.

இப்போது மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் விஷயமாக யோசனை செய்யப்பட்டு, அந்த யோசனையை அரசாங்கமும், ஜனப் பிரதிநிதிகளும் ஒப்புக்கொண்டு அதற்காக ஒரு கமிட்டியும் நியமித்து அக்கமிட்டியார் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கலாம் என்ற தத்துவத்தை ஒப்புக்கொண்டு ஏகமனதாக ரிப்போர்ட் அனுப்பி இருப்பதாயும் எல்லாத் தினசரிப் பத்திரிகைகளிலும் வெளியாகியிருக்கிறது. அதன் முக்கியப் பாகம் என்னவென்றால்:-

  1. பெண்கள் வாரிசுச் சொத்துரிமை அனுபவிக்கத் தகுதியுடையவர்கள் அல்லவென்பது கொடுமையும் அநீதியுமாகும்.
  2. பெண்கள் சீதனம், நன்கொடை முதலிய சொத்துகளை அடைந்து அவைகளை வைத்து நிர்வகித்து வரத் தக்கவர்கள் என்ற உரிமையும், வழமையும் இருக்கும்போது, வாரிசான சொத்தை அடைய ஏன் தகுதியுடையவர்களாகமாட்டார்கள்?
  3. பெண்களுக்கு வாரிசுச் சொத்துரிமை இல்லையென்பது பெண்கள் முன்னேற்றத்திற்குத் தடையாயிருப்பதோடு பொதுவாக இந்து சமூக முன்னேற்றத்திற்கே கேடாயிருக்கிறது.
  4. ஆகவே, இவற்றிற்கான சட்டம் செய்யவேண்டியதும், பெண்கள் என்கின்ற காரணத்திற்காக இவர்களுக்கு எவ்விதச் சிவில் உரிமையும் தடுப்பது கூடாதென்று திட்டமாய் முடிவு செய்துவிட வேண்டியதுமான காலம் வந்துவிட்டது.
  5. எந்தவிதமான சீதனச் சொத்தையும் பெண்கள் தங்கள் இஷ்டப்படி விநியோகித்துக் கொள்ளலாம் என்பவைகளாகும்.

இவைகள் ஒருபுறமிருக்க, மற்றொரு விஷயத்திலும் பெண்களுக்குச் சில சுதந்திரங்கள் அளிக்க அக்கமிட்டி சிபாரிசு செய்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

அவை என்னவெனில்,

'புருஷன் மேக வியாதிக்காரனாகவாவது கொடிய தொத்து வியாதிக்காரனாகவாவது இருந்தாலும், வைப்பாட்டி வைத்திருந்தாலும், தாசி வேசி வீடுகளுக்குப் போய்க் கொண்டிருப்பவனாயிருந்தாலும், மறு விவாகம் செய்து கொண்டிருப்பவனாயிருந்தாலும், கொடுமையாய் நடத்தினாலும், வேறு மதத்திற்குப் போய்விட்டாலும், புருஷனை விட்டுப் பிரிந்திருக்கவும், புருஷனிடம் ஜீவனாம்சம் பெறவும் உரிமையுண்டு என்பதாகும்.

அதோடு மேற்படி விஷயங்களை அனுசரித்து ஒரு மசோதாவும் தயாரிக்கப் பட்டிருக்கின்றதாகவும் காணப்படுகின்றது.

ஆகவே, இந்தச் சட்டம் அநேகமாகக் கூடிய சீக்கிரம் மைசூர் சமஸ்தான சட்டசபையில் நிறைவேறிச் சட்டமாக்கப்படுமென்றே நம்பலாம். இவற்றில் சொத்துகளின் அளவு விஷயத்தில் ஏதாவது வித்தியாசமிருந்தாலும் பெண்களுக்குச் சொத்துரிமைக் கொள்கையும், பெண்கள் புருஷனை விட்டு விலகி இருந்துகொள்ளும் கொள்கைகளும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் விஷயம் கவனித்துப் பாராட்டத்தக்கதாகும்.

இவை போன்று பல காரியங்களில், இந்தியாவிலுள்ள சுதேச இந்து சமஸ்தானங்களெல்லாம் ஒவ்வொரு துறையிலும் முன்வந்து சட்டம் செய்துகொண்டு வரும்போது, பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள தேசியவாதிகளுக்கும், பூரண சுயேச்சைவாதிகளுக்கும், பொதுஜன நல உரிமைவாதிகளுக்கும் மாத்திரம் இக்கொள்கைகள் அவசியமானவைகள் என்றோ சட்டம் செய்யத்தக்கது என்றோ தோன்றப் படாமலிருப்பதானது, இக்கூட்டத்தார்களின் நாணயக் குறைவையும், பொறுப்பற்ற தன்மையையும் நன்றாகக் காட்டுவதற்கு ஒர் அறிகுறியாகும்.

சாரதா சட்டம் (குழந்தை மனத்தடுப்புச் சட்டம்) என்கின்ற ஒரு சட்டம் பிரிட்டிஷ் சர்க்கார் தயவினால் பாசாகியும், இந்திய தேசியவாதிகளாலும், பூரண சுயேச்சைவாதிகள் முயற்சியாலும் அது சரியானபடி அமுலுக்குவர முடியாமல் முட்டுக்கட்டை போடப்பட்டு வருவதும், அச்சட்டம் கூடாதென்று வாதாடி ஒழிப்பதாக தெரியப்படுத்தினவர்களை ராஜாங்க சபைக்கும் மாகாண சபைக்கும் நமது பிரதிநிதிகளாக அனுப்பியதும் நம்மவர்களுக்கு மிகமிக மானக்கேடான காரியமாகும்.

நமது தேசியவாதிகள் என்னும் அரசியல்வாதிகள் இம்மாதிரியான காரியங்களைச் சிறிதும் கவனியாமல் இருப்பதோடு, நாம் ஏதாவது இவற்றிற்காகப் பிரச்சாரம் செய்தால், ‘இது தேசியத்திற்கு விரோதம்’, ‘சுயராஜ்யம் கிடைத்துவிட்டால் பிறகு சட்டம் செய்துகொள்ளலாம்’ என்று சொல்வதும், வேறு யாராவது இவைகளுக்காகச் சட்டம் செய்யச் சட்டசபைக்கு மசோதாக்கள் கொண்டு போனால், “சீர்திருத்தங்கள் சட்டங்கள் மூலம் செய்துவிட முடியாது; பிரச்சாரத்தின் மூலம்தான் செய்ய வேண்டும் என்று சொல்லுவதுமான தந்திரங்களால் மக்களை ஏமாற்றிக் காலம் தள்ளிக்கொண்டு வருகிறார்கள்.

ஆகவே, இந்த நிலைமையில் முதலில் நமது கடமை என்னவென்பதை யோசித்துப் பார்த்தால், இம்மாதிரியான காரியங்களுக்கு ஆண்கள்தான் முயற்சிக்க வேண்டியவர்கள் என்கின்ற உரிமை முதலில் நீக்கப்பட வேண்டும். நம் பெண்மணிகள் இக்காரியங்களில் வரிந்து கட்டிக் கொண்டு இறங்க வேண்டும். பெண்கள் கிளர்ச்சி முதலாவதாக, ஆண்களைப் போன்ற சொத்துரிமை பெறுவதற்கே செய்யப்பட வேண்டும். பெண்களுக்குச் சொத்துரிமை இருந்துவிட்டால், அவர்களுக்கு இருக்கும் எல்லாவிதமான அசவுகரியங்களும் ஒழிந்து போகும். கேவலம் தாசிகளுக்குச் சொத்துரிமை இருப்பதால் அவர்கள் தங்கள் குடும்பங்களில் தங்கள் சமுதாயத்தில் எவ்வளவு சுதந்திரமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று பார்த்தால், குடும்ப ஸ்திரிகளுக்குச் சொத்துரிமை இருந்தால் எவ்வளவு மேன்மையாய் வாழ்க்கை நடத்துவார்கள் என்பது விளங்கும். அன்றியும், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படாததற்குக் காரணம் இதுவரை யாரும் சொன்னதே கிடையாது. பெண்களுக்குப் படிப்பு, தொழில் ஆகிய இரண்டும் பெற்றோர்களால் கற்பிக்கப்பட்டுவிட்டால் சொத்துச் சம்பாதிக்கும் சக்தி வந்துவிடும். பின்னர் தங்கள் கணவன்மார்களைத் தாங்களே தெரிந்தெடுக்கவும் அல்லது பெற்றோர்களால் தெரிந்தெடுக்கப்பட்டாலும் கணவனோடு சுதந்திரமாய் வாழ்க்கை நடத்தவும் கூடிய தன்மை உண்டாகிவிடும்.

பெண் அடிமை என்பதற்கு உள்ள காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாதது என்பதே மிகவும் முக்கியமான காரணம் என்பது நமது அபிப்பிராயம். ஆதலால், பெண்கள் தாராளமாகவும், துணிவுடனும் முன்வந்து சொத்துரிமைக் கிளர்ச்சி செய்யவேண்டியது மிகவும் அவசியமும், அவசரமுமான காரியமாகும்.

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

ஒன்பதாம் அத்தியாயம்

Back to blog