ஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018) - முன்னுரை....
திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டைக் கடந்து விட்டது. பிரிட்டிஷ் அரசு செய்த நிர்வாகச் சீர்திருத்தங்களின் விளைவாக சென்னை மாகாணத்தில் தோன்றிய அரசாங்க அமைப்புகளில் மக்கள் தொகையில் மூன்றரை சதவீதமே இருந்த பிராமணர்களுக்கு மிதமிஞ்சிய பிரதிநிதித்துவம் இருப்பதை எதிர்த்தும், பெரும்பான்மையாக இருந்த பிற சமூகங்களின் மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் கோரியும் 1916இல் தோன்றியது தென்னிந்திய நலவுரிமைச் சங்கம். அது வெளியிட்ட பிராமணரல்லாதோர் அறிக்கை புள்ளி விவரங்களுடன் இந்தக் கோரிக்கையின் நியாயங்களைப் பொது மன்றத்தில் வைத்தது. இச்சங்கம் துவக்கிய ஜஸ்டிஸ் என்கிற ஆங்கிலப் பத்திரிக்கையின் பெயரின் அடிப்படையில் நீதிக்கட்சி என்று வரலாற்றில் இடம் பெற்றது. அதே நேரத்தில் பொது மன்றத்தில் நிலவிய சமஸ்கிருத ஆதிக்கத்தினை எதிர்த்து தனித் தமிழ் இயக்கமும் தோன்றியது. திராவிட இயக்கத்தின் நீரோட்டங்களான இந்த இரு இயக்கங்களும் தோன்றிய முதல் பத்துவருடங்களுக்குள் பிறந்தவர்தான் கலைஞர் என்று பின்னர் புகழ் பெற்ற முத்துவேல் கருணாநிதி, நீதிக் கட்சி, பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று அரசியல் பரிணாமம் அடைந்த திராவிட இயக்க வரலாற்றுடன் இணையாக வளர்ந்த ஆளுமைதான் கலைஞர் கருணாநிதி.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சென்னை மாகாணத்தில் ராஜகோபாலாச்சாரியாரின் தலைமையில் பொறுப்பேற்ற அரசு இந்தியைக் கட்டாயப் பள்ளிப் பாடமாக்கும் சட்டத்தினைக் கொண்டுவந்த போது எழுந்த இந்தி எதிர்ப்புப் போர்க் களத்தில்தான் சமூகநீதி இயக்கம், தனித்தமிழ் இயக்கம் என்கிற இரு நீரோட்டங்களும் சங்கமித்து திராவிட இயக்கம் ஆழமாக வேரூன்றியது. இந்தக் களத்தில் நடந்த சமூகக் கலாச்சாரப் பிரளயத்திலிருந்து தோன்றியவர்கள்தாம் சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி போன்ற தலைவர்கள். பெரியாரின் சமுக நீதி, சுயமரியாதைக் கருத்துக்களை உள்வாங்கி, அவற்றை தமிழ் மொழியில் அற்புதமாக வெளிப்படுத்தும் கலை இலக்கிய ஆற்றலைப் பெற்ற இந்த இருவரும் வெகுஜனத் தலைவர்களாக தமிழ்ப் பொது வெளியில் எழுந்தனர். இதழியலையும், நாடகக் கலையையும் முழுமையாகப் பயன்படுத்தி முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு சமூக அரசியல் கருத்துகளை வெகுஜனக் களத்திற்குக் கடத்துவதில் வெற்றி பெற்றிருந்த இருவருக்கும் திரைப்படம் என்கிற காட்சி ஊடகம் புதிய சாத்தியங்களை அளித்தது. ஒரு கருத்தியல் மக்களின் சிந்தனையைக் கவ்விப் பிடிக்கும் போது பவூதிக சக்தியாக மாறுகிறது என்கிற மார்க்சின் கோட்பாடு உண்மையானதற்கு ஒரு சான்றாக இருப்பதுதான் திராவிட இயக்கம். தமிழ் பேசும் பிராமணரல்லாதோர் இந்த இயக்கத்துடன் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டதுதான் அவ்வியக்கம் இன்றும் தமிழக அரசியல் தளத்தில் தனிப் பெரும் சக்தியாக நீடித்திருப்பதற்குப் பின்னிருக்கும் ரகசியம்.
தமிழகத்தில் சுயமரியாதை, சமூக நீதி, சமதர்மம் என்கிற பெரியாரின் கருத்தியல்களைத் தாங்கி மேலெழுந்து வந்த சமூக இயக்கத்திற்கு சுதந்திர இந்தியாவில் அரசியல் அதிகாரத்தை நோக்கிச் சொல்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதைக் கூர்மையாக உணர்ந்து கொண்ட அண்ணாதுரையும் அவரது தோழர்களும் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற அமைப்பை அதற்கான வாகனமாக உருவாக்கினர். இந்திய ஒன்றியத்தில், சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட ஆனால் மொழிப் பெருமை மிகுந்த தமிழ் பேசும் மக்களின் விரக்திகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் இயக்கமாக உருவெடுத்த திமுக, அது தோன்றிய முதல் இருபது ஆண்டுகளுக்குள்ளேயே வெகுஜன ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இந்த அதிசயம் நிகழ்ந்த இரு ஆண்டுகளுக்குள்ளேயே அண்ணாதுரை மறைந்து விட கட்சியையும் ஆட்சியையும் கட்டிக் காக்கும் பொறுப்பு கருணாநிதியின் தோள்களில் விழுந்தது.
இந்தியா சுதந்திரம் பெற்று அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நாளிலிருந்தே அதிகாரங்களின் குவிமையமாக மத்திய அரசை ஆக்கிடும் போக்கு தொடர்ந்து வந்த சூழலில், ஒரு மக்கள் நல மாநில அரசை நடத்த வேண்டிய சவால் ஒரு புறம், கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டிய சவால் மறு புறம். இவ்விரண்டு சவால்களையும் எவ்வாறு கருணாநிதி எதிர் கொண்டு வென்றார் என்பது ஆச்சரியங்கள் நிறைந்த வரலாறு. இன்று தமிழகத்தில் இருக்கும் பல பொது நிறுவனங்களும், தொழில், விவசாய வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டுமானங்களும் அவர் காலத்தில் நிறுவப்பட்டவைதான். பொது மருத்துவம், கல்வித் துறைகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக மாறுவதற்கு அவர் இட்ட அடித்தளம்தான் காரணம்.
அவர் ஏற்படுத்திய பொது வினியோகத் திட்டம் இந்தியாவுக்கே ஒரு முன் மாதிரியானது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்கிற கோட்பாட்டினை நிலை நிறுத்துவதுதான் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரே வழி என்று அவர் நினைத்ததோடு மட்டுமின்றி, மாநில சுயாட்சிக்கான போராட்டத்தில் இறுதி வரை முன் நின்றார். நிலவும் அதிகார வரம்புகள், நிதிச் சூழலுக்குள் இருந்து கொண்டே இந்தச் சாதனைகளை நிகழ்த்தினார் அவர் என்று இந்தப் புத்தகத்தில் இடம் பெறும் கட்டுரைகள் காட்டுகின்றன. பொருளாதார வளர்ச்சி முதலில், அதிலிருந்து சமூக நீதி என்கிற கோட்பாட்டினைத் தலைகீழாக்கி, சமூக நீதியின் மூலம் அடையும் வளர்ச்சியே நிலைத்து நிற்கும் என்பதைப் பறைசாற்றும் விதமாகத்தான் அவர்களுடைய அரசியல், நிர்வாகச் செயல்பாடுகள் இருந்தன. இது அவருடன் பணியாற்றிய அதிகாரிகளின் நேரடி அனுபவம். எண்பது ஆண்டுகள் நீடித்த தன் நெடும் அரசியல் பயணத்தில் ஐந்து முறை முதல் அமைச்சராகவும், 50 ஆண்டுகள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும், ஐம்பது ஆண்டுகள் கட்சித் தலைவராகவும் செயல்பட்டது வேறு எந்த இந்தியத் தலைவருக்கும் இல்லாத பெருமை. ஏறக்குறைய எல்லா பிரதமர்களுடனும் பணியாற்றியது மட்டுமின்றி, காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து வந்த கூட்டணி அரசுகளின் சகாப்தத்தில் பல தேசிய அளவிலான அணிகளைக் கட்டும் முயற்சியின் மையப் புள்ளியாகவும் கருணாநிதி இருந்தார்.
கொள்கைச் சமரசங்கள் பலவற்றை இந்தக் காலகட்டத்தில் அவர் மேற்கொண்டார் என்கிற விமரிசனங்கள் எழுந்த போதும், இந்தப் புத்தகத்தில் பல தலைவர்களும் சுட்டிக்காட்டியபடி, அவர் தன் தவறுகளைச் சரி செய்து முன் செல்ல எப்போதுமே தயாராக இருந்தார். கலைஞர் கருணாநிதி தன் வாழ்நாள் முழுவதும் உயர்த்திப் பிடித்த சமூக நீதி, மாநில சுயாட்சி, பன்முகக் கலாச்சாரம், மதச்சார்பின்மை போன்ற உயர் கொள்கைகளுக்குப் பேரபாயம் ஏற்பட்டி ருக்கும் ஓர் அரசியல் சூழலில் அவருடைய மறைவு நிகழ்ந்திருக்கிறது. இந்திய வரலாற்றில் தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம், ஓர் ஓரத்தில் தான் வைக்கப்பட்டிருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னும் தமிழகத்திற்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கியதில் மிகப் பெரும் பங்காற்றிய கலைஞர் கருணாநிதியின் பன்முகத் திறன்களும், அரசியல் சாதுரியங்களும், நிர்வாகச் சாதனைகளும் தமிழகத்திலேயே கூட அதிகம் பேசப்படவில்லை. இந்தியாவின் பிற பகுதிகளில் ஒரு எதிர்மறை பிம்பமே கட்டப்பட்டிருந்தது. அதிகம் பேசப்படாத இந்த வரலாற்றின் சில முக்கிய அம்சங்களை வெளிக் கொண்டு வருவது கலைஞர் கருணாநிதிக்கு செய்யப்படும் சிறந்த அஞ்சலியாக இருக்கும் என்ற விதத்தில் ஃபிரண்ட்லைன் அவர் மறைந்த ஒரு வாரத்திற்குள் ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. அது பெரும் வரவேற்பையும் பெற்றது. அந்த இதழின் உள்ளடக்கம் தமிழிலும் வரவேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தது. அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகத்தான் இந்தப் புத்தகம் உருவாகியுள்ளது. ஆங்கிலத்தில் இடம் பெற முடியாத சில அம்சங்களையும் தாங்கி வருகிறது. கலைஞர் கருணாநிதியின் முதல் நினைவு தினத்தினையொட்டி இந்தச் சிறப்பு வெளியீட்டினை வாசகர்களின் முன் வைக்கிறோம். ஓர் ஆங்கிலப் பத்திரிக்கை முழுவதும் தமிழிலான ஒரு புத்தகத்தை வெளியிடும் இந்த முயற்சிக்கு வாசகர்களின் பெரும் ஆதரவு இருக்கும் என்கிற நம்பிக்கையுடன்....
- ஆர். விஜயசங்கர் ஆசிரியர், ஃபிரண்ட்லைன்
எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை கிடையாது. ஒரு இலட்சியத்தை மையமாகக் கொண்டு சுழலும் இயக்கத்தின் வரலாற்றில் நான் ஒரு பகுதி.
- கலைஞர் மு. கருணாநிதி