என்.எஸ்.கே : கலைவாணரின் கதை - பதிப்புரை
தன் நகைச்சுவை நிறைந்த நடிப்பாலும் வசனத்தாலும் தமிழ்த் திரையுலகில் தனித்தன்மையுடன் வலம் வந்தவர் என்.எஸ்.கே. அம்பிகாபதி படத்தில் நடித்த என். எஸ். கிருஷ்ணன், மதுரம் இருவரையுமே மக்கள் வெகுவாக ரசித்தனர். என். எஸ். கிருஷ்ணன், 'நிஜ வாழ்வில் மட்டுமல்ல, திரை வாழ்விலும் தமக்குச் சரியான ஜோடி மதுரம்தான்' என்று அப்போதே முடிவு செய்தார். அதன்பிறகு அவர்கள் தங்கள் பாணியில் சேர்ந்து நடித்தனர்.
தன்னைத்தானே நொந்து கொள்ளுகிற மாதிரி சொல்லி, எல்லோரையும் கலகலவென்று சிரிக்கச் செய்வதுதான் உயர்ந்த ரகமான விகடம். கிருஷ்ணன் பிறரைக் கேலி செய்யும் விதமே வினோதமாக இருக்கிறது. யாரை அவர் கேலி செய்து கிண்டல் பண்ணுகிறாரோ, அவரும் சேர்ந்து சிரிக்கும்படியான விதத்தில் கிருஷ்ணன் கேலி செய்கிறார். பிறருடைய உள்ளத்தை குத்திப் பிளப்பதில்லை. அவர் பிறருடைய உள்ளத்தை விரியச்செய்கிறார். அறிஞர் வ.ரா., தமிழ் பெரியார்கள் என்ற நூலில் என்.எஸ். கேவைப் பற்றி எழுதிய விமர்சனம் இது.
அறிஞர் அண்ணாவின் பார்வையோ வேறு கோணத்தில் இருந்தது. மாணிக்கவாசகர் படத்தை சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த அண்ணா தனது நண்பர்களுடன் பார்த்துவிட்டு அசந்து போய் 'நாம் இத்தனை வருஷங்களாகச் சொல்ல முயற்சி செய்வதை ஒரு நிமிஷத்தில் சொல்லிவிட்டாரே, இவர்' என்று பெரியாரிடம் சொன்னார். பெரியார், என்.எஸ்.கிருஷ்ணனை நேரில் பார்க்க விரும்பினார். குடியரசு ஏட்டில் பிராமணர்களுக்கு எதிராக பெரியார் எழுதிய கட்டுரைகள் என். எஸ். கிருஷ்ணனை வெகுவாகப் பாதித்திருந்தன. என்.எஸ்.கிருஷ்ணனின் நெருங்கிய நண்பரான ப. ஜீவானந்தமும் சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றி வந்தார். அந்தத் தாக்கத்தின் காரணமாக தட்ச யக்ஞம் படத்திலும் அதற்குப் பிறகு தான் நடித்த பல படங்களிலும் கடவுள் கதாபாத்திரங்களைக் கிண்டல் செய்தார் என். எஸ். கிருஷ்ணன். பிராமண மேலாதிக்கத்தையும் நையாண்டி செய்தார்.
தன் துறையைச் சேர்ந்தவர்களை அவர் பெரிதும் நேசித்தார். தன்னுடன் நாடகத்தில் நடித்த பல நடிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தன் படங்களில் வாய்ப்புக் கொடுத்தார்.
என். எஸ். கே அரசியலில் ஈடுபட வேண்டும் என்று விரும்பிய பிரபல சமூக சேவகரான துர்காபாய் தேஷ்முக் நேருவிடம் செல்வாக்குள்ளவர். அவர் என். எஸ். கேவை காங்கிரஸ் கட்சி மூலம் மேலவை உறுப்பினராக்க விரும்பினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜ் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது, கூத்தாடிகள் காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்து சட்டமன்ற உறுப்பினராகவும் ஆகிவிடுவாரென்றால், காங்கிரஸ் கட்சியை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதால் என். எஸ். கே கட்சியில் சேரும் முடிவைக் கைவிட்டார். என். எஸ். கேவை கூத்தாடி என்று சொன்ன காமராஜரே, பின்னர் நடிகர் சிவாஜி கணேசனை வரவேற்க வேண்டி வந்தது.
அம்பிகாபதி படத்தின் பாடல்களை எழுதிய கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் ஏற்பட்ட ஒரு சிறு சண்டையால் கண்ணதாசன் தன்னுடைய தென்றல் பத்திரிகையில் சிவாஜியின் எதிர்காலம் என்ற தலைப்பில் வெளியிட்ட கார்ட்டூன் சிவாஜியின் திரை உலக வாழக்கையையே கேள்விக்குறியாக்கும் விதத்தில் இருந்தது. இருவரையும் வரவழைத்துப் பேசிய என்.எஸ்.கே, 'கலை உலகத்தில் நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும் என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லி, இருவரும் இணைந்த விஷயத்தை அவர் செலவிலேயே தினசரிகளில் வரச் செய்தார்.
சொல் வேறு செயல் வேறு என்ற பேச்சுக்கே என். எஸ். கே வாழ்க்கையில் இடமிருந்ததில்லை. நான் திரைப்படத்தில் நடித்து, ஏராளமான பணம் சம்பாதிப்பதால் என்னை பணக்காரன் என்றே எல்லோரும் கருதுகிறார்கள். உண்மையில் நான் இப்போது பணக்காரன் தான். ஆனால் நான் இறக்கும் போது பணக்காரனாக இறக்க மாட்டேன்! என்னிடம் வந்து சேரும் பணத்துக்கும் பணக்காரர்களிடம் வந்து சேரும் பணத்துக்கும் வேறுபாடு உண்டு. என் பணம் ஏழைகளுக்கு உதவும். பணக்காரர்களிடம் இருக்கும் பணம் ஏழைகளை உறிஞ்சத்தான் உதவும்' - ஒரு பேட்டியில் என்.எஸ்.கே. சொன்ன வார்த்தைகள் இவை. அவர் செய்த நன்கொடை கணக்குகள் வருமான வரி அலுவலகம் வரை மிகவும் பிரபலம்.
ஒருநாள் படப்பிடிப்பின்போது என்.எஸ்.கேவுக்குக் குடை பிடித்துக் கொண்டு நின்றிருந்தார் ஒருவர். அவருக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு பெண் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு நின்றிருந்தாள். அன்று எடுக்கவேண்டிய காட்சிக்காக அவள் அந்தக் குழந்தையைக் கொண்டு வந்திருந்தாள்.
அந்தக் குழந்தைக்கும் அந்த அம்மாவுக்கும் குடை பிடிப்பா!' என்றார் உதவியாளரிடம்.
எவ்வளவு ரூபாய் பேசியிருக்கீங்க இந்தப் பெண்ணுக்கு?' என்றும் அவர்களிடம் கேட்டார்.
'இருபத்தைந்து ரூபாய்.'
உடனே நூறு ரூபாய் கொடுத்துவிடுங்கள்' என்று சொன்னார்.
கருணையின் பிறப்பிடம் அவர்.
காலத்தின் கோலத்தால் அவரது வாழ்வில் சுனாமி வீசியது. பிரபலமான லட்சுமிகாந்தன் கொலை வழக்கு அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. உருக்குலையவும் செய்தது. அந்த வழக்கில் எப்படியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த அவரைச் சார்ந்தவர்களுக்கு அவருக்கு ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
அதற்குப் பிறகு வாழ்நாளெல்லாம் வாரி வாரிப் பிறருக்குக் கொடுத்துக்கொண்டிருந்த மனிதர் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். வழக்கை நடத்துவதற்காக இருந்த சொத்தையெல்லாம் இழக்க வேண்டி வந்தது. சொந்த ஊரில் இருந்த நிலங்கள் விற்கப்பட்டன. கடன் வாங்க வேண்டி வந்தது. வக்கீல்களுக்குப் பணம் கொடுக்கவும், விடுதலை முயற்சிக்கான வழக்கை நடத்துவதற்கும், இதர செலவுகளுக்குமாக டி.ஏ. மதுரம் மிகவும் சிரமப்பட்டார். ‘மதுரம், எவருமே ஐம்பது வயதுக்கு மேல் உயிரோடு இருக்கக்கூடாது. இருந்தால் சிரிப்புச் சேவையில் கிழடு தட்டிவிடும். எனவே, நான் ஐம்பது வயதுக்குள் இறந்துவிடப் போகிறேன். இப்பொழுது எனக்கிருக்கும் மதிப்போடு இறந்துவிடுவது மேலானது!' என்றார் தன் கடைசி காலத்தில் என்.எஸ்.கே.
வள்ளல் என்று சினிமாவுலகில் எம்.ஜி.ஆரைத்தான் சொல்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட எம்.ஜி.ஆருக்கு வள்ளல் தன்மையை வாரிக் கொடுத்தவர் என். எஸ். கேதான். ஆம். உதவி கேட்டு வருவோருக்கு என். எஸ். கேயைப் பார்த்தே, ஏழைகளுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் தனக்குள் உருப்பெற்றது என்று எம்.ஜி.ஆரே பதிவு செய்திருக்கிறார் என்றால், இனிமேல் பேச என்ன இருக்கிறது. வாருங்கள்... வாசிக்கலாம் ... கலைவாணரின் கதையை!
முத்துராமன் எழுதி சிக்ஸ்த்சென்ஸில் வரும் முதல் புத்தகம் இது. அது சிறப்பாக அமைந்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
பதிப்பகத்தார்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: