புத்தகத்தை இங்கே வாங்கலாம்

 

https://periyarbooks.com/products/ninaivu-alaigal-than-varalaaru-3-tkp 

முன்னுரை

உலகம் பழையது! இந்தியா பழம் பெரும் நாடு! தமிழகம் பழைய பகுதி. அதில் ஒரு சிற்றூர். பல நூற்றாண்டுகளாகப் பண்பட்ட அச் சிற்றூரின் பெயர் நெய்யாடு பாக்கம். நான் அவ்வூரில் பிறந்தேன். திண்ணைப் பள்ளிக்கூடமும் இல்லாத காலத்தில் வளர்ந்தேன்.

காலத்தின் எழுச்சி, என்னைக் கல்வியின்பால் செலுத்தியது. அக்காலக் குக்கிராம இளைஞர்கள், கனவு காண முடியாத உயர் மட்டத்திற்குக் கொண்டு சென்றது.

1933 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை (சிறப்பு) ப் பட்டம் (B.A Hons) பெற்றேன். இப் பல்கலைக் கழகம் 1983 இல் என் தொண்டினைப் பாராட்டி 'இலக்கிய அறிஞர் (Df. Litt) என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கிப் பெருமைப் படுத்திற்று. இவை இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக, கருமமே கண்ணாயிருக்கத் தூண்டுவதாக!

சென்னை மாகாணக் கல்வித் துறையின் முதற் படியில் கால் எடுத்து வைத்தேன்; மாவட்டக் கல்வி அலுவலராக உயர்ந்தேன்; மாநகராட்சிக் கல்வி அலுவலராகப் பணி புரிந்தேன்; பொதுக்கல்வித் துணை இயக்குநரானேன். பிறகு சென்னை மாகாணப் பொதுக்கல்வி இயக்குநர், பொது நூலாக இயக்குநர் மற்றும் அரசுத் தேர்வு களின் ஆணையர் எனப் பதவி உயர்வு பெற்றேன்.

நான் துணை இயக்குநராக இருந்தபோது, இயக்குநராக இருந்த திரு. சதாசிவ ரெட்டியார், ஆப்பிரிக்காவிலுள்ள லைபீரிய நாட்டிற்கு யூனெஸ்கோ சார்பில், கல்வி இயக்குநராகப் பதவியேற்றுச் சென்றார்கள். அவர்கள் தன்னோடு, துணை இயக்குநராக வரும்படி என்னை அழைத்தார்கள். தாய் நாட்டுப் பற்று என்னை இங்கேயே நிறுத்திக் கொண்டது.

இயக்குநராக இருந்த பிறகு தில்லியில் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தில் இணைக் கல்வி ஆலோசகராகப் பணி புரிந்தேன். அடுத்து, தமிழக அரசின் தலைமைக் கல்வி ஆலேசகர், மற்றும் கூடுதல் செயலர், மற்றும் உயர் கல்வி, முதியோர் கல்வி, பொது நாலகங்கள் ஆகியவற்றின் இயக்குநராகத் தொண்டாற்றும் வாய்ப்புப் பெற்றேன்.

கல்வித் துறையின் கொடுமுடியாகக் கருதப்படும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பணிபுரியும் பேறு பெற்றேன்.

என்னை, இப் பதவிகள் இலங்கை, பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோவியத் நாடு, கிழக்கு ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், இத்தாலி, கானா ஆகிய உலக நாடுகளைக் கண்டு வரச் செய்தன.

மனிதன் தனிஆள் அல்ல; சமுதாயத்தின் சிறுதுளி. தனிமனித வளர்ச்சியும் தேய்வும் ஓரளவு அவன் கைகளில் உள்ளது: பெருமளவு, சழுதாயச் சூழல், காலத்தின் எழுச்சிகள் உணர்வுகள், தொடர்பு கொள்ளும் மக்களின் தன்மை ஆகியவற்றால் முடிவு செய்யப்படுகின்றன.

'தொலைவிலிருந்து இயக்குதல்' வளர்ந்து வரும் புதிய செயல் முறையாம். ஞாயிறு அனைய காந்தியடிகளார், தந்தை பெரியார், மாமேதை லெனின் ஆகியோர் என்னை வெவ்வேறு வகையில் ஆளாக்கியுள்ளனர்.

நான் யார்? மொழியால் தமிழன்! நாட்டு வழி இந்தியன்! இன வழி மனித இனத்தவன்!

நான் நடந்து வந்த வாழ்க்கையாம் நெடுஞ்சாலையை எண்ணிப் பார்க்கிறேன். நினைவுகள், அலை அலையாக எழுகின்றன. பற்பல காட்சிகள் மின்னுகின்றன. பெற்ற எழுச்சிகள், இயைந்த வாய்ப்புகள், குறுக்கிட்ட நெருக்கடிகள், உதவி புரிந்த நல்லோர், பெற்ற சாதனைகள் ஆகியவை ஒளி விடுகின்றன. எத்தனை நல்லோர்! எவ்வளவு பாடுகள்! எவ்வளவு தியாகங்கள்!

இந் நினைவுகள், என்னைத் தன்னிலைப் படுத்து கின்றன. 'யான், எனது ' என்னும் செருக்கறுக்க உதவுகின்றன.

'நான், நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்! பல பெரியயோர்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறேன்! எண்ணற்ற எளியோர்க்கும் பெருமளவு கடன்பட்டிருக்கிறேன். அவர்களாலேயே நான் உயர்ந்தேன்' என்ற உணர்வு சுரக்கிறது. பழுத்த நெற்பயிரெனத் தலை வணங்குகிறேன்.

நீர்த்துளி, எப்போது பெருமை பெறுகிறது? எப்போது பெரும் பயன் விளைவிக்கிறது? கோடி கோடி நீர்த் துணிகளோடு இரண்டறக் கலந்து விடும் போது! குளமாகிறது. ஏரியாகிறது. கடலாகிறது. பெருங்கடலும் ஆகிறது! அந்நிலையில் பெருமையோடு பயனும் விளைவிக்கிறது!

அய்ந்து கோடி மக்களைக் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தில் நான் ஒரு சிறுதுளி. அதை என்றும் மறந்ததில்லை. எவரோடு பணியாற்ற வேண்டுமோ எவரை இயக்க வேண்டுமோ அவர்களோடு சேர்ந்து நின்று. அவர்களில் ஒருவனாகவே செயல்பட்டு வந்துள்ளேன்.

தொண்டர்களில் ஒருவனமாக அவர்களுக்கு முன்னே நின்று துணிந்து வழிநடத்திச்செல்லும் வாய்ப்புகள் வந்த போதெல்லாம், செய்தற்கு அரிய செய்ய முயன்றேன். ஆதரித்தோர் எண்ணற்றோர்: உடன் வந்தார் ஏராளம்; கை கொடுத்தோர் கணக்கில் அடங்கார். அவர்கள் பல நிலையினர்; பல போக்கினார்.

என் வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம் பெற்றோர், உற்றார், ஊராருக்கு அடுத்து எனக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர்கள் நன்றியைப் பெறுகிறார்கள். அடுத்து, தமிழ்நாட்டு ஆசிரியப் பெரும்படை

'தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு இணையில்லை' என்று இறும்பூது எய்தும் வகையில் என்னுடன் ஒத்துழைத்த நலப்பள்ளி ஆசிரியர்கள் செபஸ்டியான், முத்துசவாரி முதல், பல்லாண்டுகாலம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் நண்பராக, வழிகாட்டியாக ஞானத் தந்தையாக விளங்கிய மாஸ்டர் ராழுன்னி ஈறாகப் பல்லாயிரம், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தியாகப் படையாக அவதாரம் எடுத்து, பள்ளிப் பகல் உணவுத் திட்டத்தையும், சீருடை இயக்கத்தையும், பள்ளிச் சீரமைப்பு இயக்கத்தையும் செம்மையாக நடத்திக் காட்டி, வெற்றி மேல் வெற்றியைக் குவித்து, முதல் தொண்டனாம் என்னிடம் சேர்ப்பித்ததற்கு எப்படிப் போதிய அளவு நன்றிகூற இயலும்? அவர்கள் அப்படிச் செயல்பட உரிமை தந்த பள்ளி நிர்வாகிகளின் உதவியை நன்றியோடு நினைப்பதே, நெறி.

சாதி பாராமல், வருவாய் பாராமல் பள்ளியிறுதிவரை எல்லோர்க்கும் இலவசக் கல்வி அளிக்கும் அரசின் திட்டத்தை நிறைவேற்ற உதவிய, உயர்நிலைப் பள்ளி நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் நான் பட்டிருக்கிற நன்றிக் கடன் மிகப் பெரிதாகும்.

பொது மக்களின் உதவியோடு, ஏழை மாணவ மாணவியருக்கு மாநிலம் தழுவிய பகல் உணவுத் திட்டம், பொதுமக்களைக் கொண்டே, ஊர்ப் பள்ளிகளைச் சீரமைக்கும் பள்ளிச் சீரமைப்புத் திட்டம் ஆகியவற்றைப் புதிதாகப் புனைந்து வெற்றிகரமாக நடத்தி வந்ததற்காக இந்திய அரசு, எனக்குப் 'பத்மஸ்ரீ விருது அளித்ததே - அதை உண்மையில், தமிழ் நாட்டு ஆசிரியர்களுக்காக என் கையில் அளித்ததாகவே நான் உணர்கிறேன்.

உலகப் புகழ் பெற்ற டாக்டர் ஆ. இலட்சுமணசுவாமி முதலியாரை அடுத்து, சென்னைப் பல்கலைக் கழத் துணைவேந்தர் பதவியை நான் ஏற்க நேர்ந்தது. அந்நிலையில் அப்பல்கலைக் கழகப் பணியாளர்கள், எழுத்தார்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணாக்கர்கள் பேரவையினர், கல்வி மன்றத்தினர், ஆட்சிக் குழுவினர் ஆகிய அனைவருமே எனக்குத் துணை நின்றார்கள்.

சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைந்த கல்லூரிகளின் நிர்வாகிகளும், முதல்வர்களும், பேராசிரியர்களும், மாணாக்கர்களும் கொடுத்த ஒத்துழைப்பு பெரிது. அவர்கள் அனைவருக்கும் நன்றியுடையேன்.

'முன்னர் எந்த ஆறு ஆண்டுகளிலும் சாதிக்காத அளவு சாதனைகளை நெ.து.சு துணைவேந்தராக இருந்த போது சாதிக்க முடிந்தது' என்று அறிந்தோர் பாராட்டும் வகையில் என்னால் வினையாற்ற முடிந்ததற்கு அவர்களுடைய ஒத்துழைப்பும் உதவியும் காரணங்கள் ஆகும்.

சில இயக்கங்கள், பல பிரிவினர், என்னை வளர்த்துட் பயன்படும் தொண்டனாக்கியதோடு, சில பெரியவர்கள் எனக்குப் பெருந்துணையாக விளங்கினார்கள்.

முதலமைச்சர் மூதறிஞர் இராசாசி அவர்கள், நான் துணை இயக்குநராக இருந்த போதே என்னை அடையாளம் கண்டு சுட்டிக் காட்டி, 'சுறுசுறுப்பும் சமாளிக்கும் திறமையும் நேர்மையும் உடையவர்' என்று மதிப்பிட்டார். அவ்வுதவி, ஞாலத்தின் பெரிதல்லவா? அந்நன்றியை மறக்க இயலாது.

முதலமைச்சர் காமராசர் அவர்கள், 'நெ.து.சு இராசாசியின் நன்மதிப்பைப் பெற்றவராயிற்றே என்று ஐயுறாமல், என்னை ஏழை பங்காளர்களில் ஒருவனாகக் கண்டு கொண்டார். என்னைப் பொதுக் கல்வி இயக்குநராக்கி, முழு உரிமை கொடுத்து ஊக்குவித்து, பெருமைக்குரியவனாக்கிவிட்டார். அவருக்கு நன்றி கூறச் சொற்களே இல்லை.

பல முக்கியமான நேரங்களில், தாமே முன்வந்து உதவிய பெரியவர் பக்தவத்சலம் அவர்களுக்கு நிறைய நன்றியுடையேன்.

இந்திய அரசின் கல்வி அமைச்சர் டாக்டர் சாக்ளாவின் பரிவான அழைப்பு. என்னை இந்திய அரசின், கல்வி அமைச்சகத்தில் இணைக் கல்வி ஆலோசகராகப் பணிபுரிய வைத்தது. அப் பெரியவருக்கும் கடப்பாடு உடையேன்.

முதலமைச்சர் அண்ணா அவர்கள், தில்லியிலிருந்த என்னை அழைத்து, தமிழக அரசின் தலைமைக் கல்வி ஆலோசகர் மற்றும் கூட்டுச் செயலராகவும், உயர்கல்வி, முதியோர் கல்வி, பொது நாலகங்கள் ஆகியவற்றின் இயக்குநராகவும் உயர்த்தினார். அட் பண்பாளருக்குப் பெரிதும் நன்றியுடையேன்.

முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள், என்னை இருமுறை, சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக்கி மகிழ்ந்தார்கள். அந்நிலைக்கேற்ற உரிமையும் ஆதரவும் தாராளமாகத் தந்தார்கள். அவருக்கு என்றும் பசுமையான நன்றியுடையேன்.

முதலமைச்சர், டாக்டர், எம்.ஜி. இராமசந்திரன் அவர்கள், என்பால் தொடர்ந்து அன்பைப் பொழிந்து வருகிறார்கள். அவர் காட்டி வரும் அன்புக்குப் பெரிதும் நன்றியுடையேன்.

இத்தகைய பெரியவர்கள் வாயிலாக, சழுதாயம் பெரும் பொறுப்புகளையும் வாய்ப்புகளையும் உரிமைகளையும் வழங்கிற்று. அப் பொறுப்புகளை நிறைவேற்றுகையில் பிரத மா பண்டித ஜவகர்லால் நேரு, குடியரசுத் தலைவர் டாக்டா இராசேந்திர பிரசாத் ஆகியோரின் பாராட்டைப் பெறும் நல்வாய்ப்புக் கிட்டிற்று.

சென்னை மாகாணத்தைப் பின்பற்றி, ஊர்ப் பொதுமக்களின் உதவியைக் கொண்டு, பகல் உணவுத் திட்டத்தை, பள்ளிச்சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, பிரதமர் நேரு எல்லா மாநில முதலமைச்சர்களுக்கும் நேர்முகக் கடிதம் எழுதினார் இதைவிட ஒரு பெரிய, பாராட்டு ஏது? இந்தப் பாராட்டல்லவா, தமிழ் நாட்டுக் கல்வித் துறையையும் ஆசிரியர்களையும் தேனீக்கள் போல் செயல்பட வைத்தது.

'கிராம மக்களைக் கொண்டே கிராமங்களைச் சீரமைக்கும் பணியில், காந்தி அடிகளாரும் நானும் இந்நூற்றாண்டின் முப்பதுகளில் ஈடுபட்டோம். அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுச் சென்னை மாநிலக் கல்வித் துறை வெற்றி பெற்றுள்ளது' என்று டாக்டர் இராசேந்திர பிரசாத், வேலூர் பள்ளிச் சீரமைப்பு மாநாட்டில் உலகறியப் போற்றினார். அதை நினைக்க, நினைக்க இனிக்கிறது!

குடியரசுத் தலைவர்கள் டாக்டர் இராதாகிருஷ்வான், டாக்டர் வி.வி கிரி ஆகியோரின் அன்பைப் பெற்றது. என் நல்வாய்ப்பாகும்.

பன்னிரண்டு ஆண்டுகளாக, 'இந்திய சோவியத் பண்பாட்டுக் கழகம்' என்னும் நாடு தழுவிய அமைப்பின், தமிழ் மாநிலக் குழுவிற்குத் தலைவனாக இயங்குகிறேன். இந்தியர்களுக்கும், சோவியத் மக்களுக்குமிடையில் நட்பை வளர்க்கும் பணியில், தமிழக மக்கள் எனக்குக் கொடுக்கும் ஆதரவு பெரிது. அவர்கள் அனைவருக்கும் நன்றி.

அவ்வாதரவால் நான் நற்பணியாற்ற முடிந்தது. அது எனக்குச் "சோவியத் நாடு நேரு விருதி' னைப் பெற்றுத்தந்தது.

என் வாழ்க்கைத் துணைவியாக விளங்கும் காந்தம்மா, என்னிலும் அதிகம் கல்வித் தகுதி பெற்றவர். எனினும், பதவிகளைத் தேடாமல், எனக்கு வாழ்க்கைத் துணைவியாக வாழ்வதையே, எல்லாமாகக் கருதுகிறார். எரிச்சல் கொண்டிருந்த என் சுற்றத்தாரை, தமது பொறுமையால், இன்சொலால், எனக்கு வேண்டியவர்களாக்கி விட்டார். எனக்கு வரும் சுமைகளைத் தாழும் தாங்குகிறார்; தொல்லைகளை இன்முகத்தோடு ஏற்றுக் கொள்கிறார். சுருங்கக்கூறின், என் காரியம் யாவினும் கைகொடுத்து வருகிறார். என்னோடு சேர்ந்து. ஊர் ஊராக அலைந்து. பகல் உணவுத் திட்டத்தை ஊக்குவித்தார். மனையறங்காக்கும் காந்தம்மாவின் துணையே, என் வெற்றி வாழ்க்கையின் வித்தாகும்.

'பங்காளி' களாகச் செயல்படாமல், என் நிழலென இயங்கிவரும் என் தம்பியர் சிவானந்தம், நடராசன், திருநாவுக்கரசு ஆகிய மூவரும், எனக்கு இனியர்.

மிக இளம் வயதில் பொதுக்கல்வி இயக்குநரான நான், வெற்றிகரமாகச் செயல்பட பல்லாயிரக் கணக்கான சாதாரணப் பொது மக்கள் முதல், ஆட்சிப் பொறுப்புகளில் விளங்கிய, விளங்கும் பெரியோர்கள் வரை ஆற்றிய உதவிகளை நன்றியுடன் உலகறியத் செய்வதே 'நினைவு அலை' களின் நோக்கமாகும். என்னைப் பற்றி மட்டும் எழுதுவதாயின், இருநாறு பக்கங்களில் முடித்திருக்கலாம். என்னுடைய காலத்து அரசியல், சமூகவியல், பொருளியல் ஆகியவற்றைக் காட்ட எழுதப்படுவதால் 'நினைவு அலைகள்' விரிந்து வளர்ந்து விட்டது.

'பிள்ளை இல்லாத: என்னுடைய மணிவிழாவினை 12.10.1972 அன்று சென்னையில் தந்தை பெரியார் எடுத்துப் பெருமைப் படுத்தினார். அது முதல் என் வரலாற்றை எழுதும்படி 'சத்ய கங்கை' யின் ஆசிரியரும் என் கெழுதகை நண்பருமான திரு பகீரதன் நச்சரித்து வந்தார். நான் நழுவிக்கொண்டே இருந்தேன்.

'சழுதாயம் உங்களுக்கு அளித்த பட்டறிவை உங்கள் குடும்பச் சொத்தாக்கி விடலாமா? அதைச் சமுதாயத்திற்குத் திருப்பி ஒப்படைக்க வேண்டாமா?' என்று ஒரு முறை கேட்டது என்னைச் சிந்திக்க வைத்தது. 1977 சனவரியில் கும்பகோணம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட, "தீ விபத்து அதிர்ச்சி செயல்பட வைத்தது.' 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல், 'சத்ய கங்கையில்' என் வரலாற்றினைத் தொடர்ந்து எழுதி வருகிறேன். என்னுடைய பல நூல்களுக்குத் தாயகம், 'சத்ய கங்கை'யாகும் அதன் ஆசிரியருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது.

சிறந்த தமிழ் நூல்களை வெளியிடுவதில் தனிச்சுவை காணும் வானதி திருநாவுக்கரசு ஏற்கெனவே, எனது 'மேதை மேகநாதன் முதல் 'நினைவில் நிற்பவர்கள்' ஈறாக எட்டு நூல்களை வெளியிட்டு உதவியுள்ளார். அவர் நினைவு அலைகள்' என்ற இப்பெரு நூலின் முதல் பாகத்தை மிகச் சிறந்த முறையில் ஆர்வத்துடன் வெளியிட முன் வந்த உதவி மலையளவாம். அவர் தொடர்ந்து வெற்றிநடை போடும்படி மனமகிழ்ச்சியோடு உளமார வாழ்த்துகிறேன்.

தொடர் கட்டுரைகளாக வந்த 'நினைவு அலைக'ளைத் தொகுத்து, அதிகாரங்களாகப் பகுத்து, நூலாக்க உதவிய, திரு. தி.வ. மெய்கண்டார், உடன் பிறவாத் தம்பியெனத் துணை நிற்கிறார். என் குடும்பத்தார் படம் நீங்கலாக, ஏனைய படங்களில் வனமலர்ச் சங்கம் உட்பட - மிகப் பெரும்பாலானவற்றை அவர் திரட்டித் தந்துள்ளார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி.

படங்களை எனக்குத் கொடுத்துதவிய அன்பர்களுக்கு என் நன்றி.

இந்நூலை நல்ல வண்ணம் அச்சிட்டுத் தந்த நாவல் ஆர்ட் அச்சகம், கவிஞர். நாரா. நாச்சியப்பன் அவர்களுக்குப் பெரிதும் நன்றி.

அச்சுப்படிகளைத் திருத்தும் பணியினை உடனுக்குடன் நன்முறையில் செய்த சுசீந்திரம் வ. நீலகண்டன் அவர்கள் என் நன்றிக்குரியவர்.

அன்பர்களே! நீங்கள் பல்லாண்டுகளாக என்னை ஆதரித்து வருகிறீர்கள்.

என்னுடைய 72 ஆவது பிறந்த நாள் அன்பளிப்பாக வெளிவரும் 'நினைவு அலைகள்' உங்கள் சொத்து. இதன் தொடர்ச்சி உரிய நேரத்தில் வெளிவரும். நமது அரசியல், சழுதாய இயல் முதலியவற்றை அறிமுகம் செய்ய என் வாழ்க்கை வரலாற்று நால் உதவுமானால் அது எனக்கு உள்ள நிறைவை வழங்கும் வழக்கம் போல் இந்நூலையும் ஆதரிப்பீர்களென்ற முழு நம்பிக்கையோடு நன்றி கூறுகிறேன்.

 

நெது. சுந்தரவடிவேலு

12.10.1983

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்: