Skip to content

நினைவு அலைகள் - தன் வரலாறு (தொகுதி 2) - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

 

https://periyarbooks.com/products/ninaivu-alaigal-than-varalaaru-3-tkp 

கல்வி நெறிக்காவலர் அய்யா நெ.து.சு. அவர்கள் நினைவு அலைகள் இரண்டாம் பாகத்தின் முதற்பதிப்புக்கு அளித்த முன்னுரை

பிறவி - மனிதப் பிறவி - பெறற்கரிய பேறாம். அப் பேற்றினை யான் பெற்றேன்; வழி வழி வந்த சான்றாண்மைச் சூழலில் வளர்ந்தேன். அது பெரும் ஆதாயம். அப்பேற்றினைப் பெற்றவர்கள் அனைவரும் கற்றவர்கள் அல்லர். திண்ணைப் பள்ளிக்கூடமும் இல்லாத சிற்றூரில் பிறந்தாலும், இந்தியாவின் மூத்த பல்கலைக் கழகங்களில் ஒன்றாகிய சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெறும் பேறு அரிய பேறே!

பிறவியும் கல்வியும் பெற்றவர்களுக்கும். வாய்ப்புகள் தாராளமாக வந்தடையும் என்று சொல்லி விட இயலாது. எனக்கோ வாய்ப்புகள் வந்தன. நாடாத போதும் தேடி வந்து தழுவிக் கொண்டன.

'தமிழ் நாடு' நாளிதழின் உதவி ஆசிரியர் பதவி முதல் சென்னைப் பல்கலைக் கழகத்துணை வேந்தர் பதவி வரை பெற்ற மவ்வொருபதவிக்கும் தேவைப்பட்ட தகுதியிருந்தாலும் அவற்றை நான் பெற்றது என்னுடைய திறமையால் என்று பெருமை பேசு இயலாது. எப்படியோ எய்தற்கரியன வந்து இயைந்தன. அவற்றில் என் பெருமை சிறிதளவே! காலத்தின் வளம், பெரியோர்களின் நேர்மை இவற்றின் பங்கே பெரிது.

நான் செய்தது ஒன்றுமில்லையா? உண்டு. அது என்ன? ஒவ்வொரு பதவியையும் வாய்ப்பாகப் பயன்படுத்தினேன். செய்தற்கரிய செய்யப் பாடுபட்டேன்.

'என் கடன் பணி செய்து கிடத்தலே! இது நம் ஆன்றோரின் குறிக்கோள், நாம் கற்றறிந்த உயர் நோக்கம். இவ் விலக்கணத்திற்கு இலக்கியமாக விளங்கிய காந்தியடிகளார், பெரியார், காமராசர், அண்ணா ஆகியோரின் பொதுத் தொண்டு என்னை ஊக்குவித்தது. போற்றுவோர் போற்றட்டும்! தூற்றுவோர் தூற்றட்டும்! இன்று செய்ய வேண்டிய பணியை இன்றே செய்வோம்' என்ற முனைப்பில் உழைத்தேன்.

ஒவ்வொரு நிலையும் அடுத்த நிலைக்கு என்னை ஆயத்தப் படுத்திற்று என்பது மிகையன்று.

தொடக்கத்தில், புறக்கணிக்கப்பட்ட நாட்டுப் புறச் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு நான் பண்பட்டேன். தடபுடல் ஏதும் இல்லாத அக்கால நாட்டுப்புறங்களில் நல்லோர் பலர், இலைமறை காய்களாக இருந்ததை உணர்ந்தேன்.

பின்னர் கல்வித்துறையின் முதற் படிக்கட்டில் அடி எடுத்து வைத்தேன். தொடக்கப் பள்ளிகளில் அமைதியாக அரும்பணி ஆற்றும் நல்லாசிரியர்களை எளிய உருவங்களில் கண்டேன், அத்தொண்டர்களின் தோழமை என்பால் சமத்துவ உணர்வைப் பெருக்கிற்று. 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்னும் முழு நம்பிக்கையை வளர்த்தது. மெய்யான சமத்துவத் தோழமை இருசாராரிடமும் செயல் திறனைப் பெருக்கிற்று. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வளர்த்த நம்பிக்கை வெளிச்சத்தில் வீறு நடை போட்டேன். வஞ்சனையின்றித் தன்நினைவு கெட்டு - கல்வித் தொண்டிற்குப்பித்தனானேன்.

அடுத்து, மாவட்டக்கல்வி அலுவலர் என்னும் பெரும் வாய்ப்பு வந்து கூடிற்று. பெருமைப்படுவதற்குப் பதில் பெரியன செய்ய முயன்றேன். பொதுநலக் கண்ணோட்டமுடைய நல்லோர் சிலரின் ஒத்துழைப்பும் ஆதரவும் உதவின. கண்ட இடர்ப்பாடுகளும் உண்டு.

ஞாலன் கருதினுள் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின

என்னும் குறள் மின்னி என்னை நிலைப்படுத்தியது: நம்பிக்கையை ஊட்டியது: மேலும் அகன்ற பார்வையைத் தந்தது.

சிகாகுளம், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டறிவு பெற்றேன். பின்னர், எந்தப் பதவியைத் தொட அஞ்சினேனோ, அப்பதவி என்னை வலிய வந்து தழுவிக் கொண்டது. சென்னை மாநகராட்சியின் கல்வி அலுவலர் பதவி, 'நல்ல தமிழர் என்பதற்காக என்னைப் பற்றிக்கொண்டது. அந்த மதிப்பீடு தவறாகவில்லை. அப்பதவியிலிருந்ததால், எனக்கு மக்கள் தொடர்பு விரிந்தது: ஆழ வேரூன்றியது.

அறைகூவல்கள் ஆட்களின் அளவு கோல்கள் எனலாம்: மூதறிஞர் இராசாசி கொண்டுவந்த புது முறைத் தொடக்கக் கல்வி என்னைப் பதம் பார்த்தது. நான் வளர்த்துக் கொண்டிருந்த கடுமையான கட்டுப்பாடு என்னைக் காத்தது. மூதறிஞரின் நன்மதிப்பைப் பெற உதவிற்று: நான் மாநிலம் அறிந்த மனிதன் ஆனேன்.

ஏழைகளின் பங்காளர் காமராசரின், கல்வி வளர்க்கும் பேரியக்கத்தில், முதல் தொண்டனாகச் செயல்படும் நற்பேறு என் சிந்தனையையும் செயற்பாட்டினையும் உயர் மட்டத்திற்குச் கொண்டு சென்றது. பெருந்தலைவர் என்னிடம் வைத்திருந்த நம்பிக்கை தனிவாழ்க்கை இடிகளைத் தாங்க உதவிற்று.

அறிஞர் அண்ணா, என்பால் கொண்டிருந்த நம்பிக்கை எனது வாழ்க்கையின் கசப்பைப் போக்க உதவிற்று.

அதே போல், டாக்டர்கலைஞர் கருணாநிதி காட்டிய ஆதரவு சென்னைப் பல்கலைக் கழகத்தைக் கட்டிக் காக்கவும், புதுப் பொலிவு ஊட்டவும் உதவிற்று.

முதல் அமைச்சர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் என்பால் காட்டிய அன்பு என்னை முதுமையிலிருந்து காக்கிறது.

இத்தகைய பெரியவர்கள் வாயிலாகக் காலமும் சமுதாயமும், பெரும் பொறுப்புகளையும் வாய்ப்புகளையும் உரிமைகளையும் வழங்கின. அப் பொறுப்புகளை நிறைவேற்றுகையில் இடர்ப்பாடு களும் உண்டு: உதவிகளும் உண்டு.

ஏழைக்கு எழுத்தறிவிக்கும் அறப்பணியில் - சமுதாயப் பணியில் - முன்வந்து உதவியோர் ஏராகாம். எத்தனை நல்லோரின் நன்கொடைகள் பகல் உணவாக, சீருடையாக பள்ளிச்சீரமைப்பாக உருவெடுத்தன. அந்நிகழ்ச்சிகளைப் பற்றிய நினைவுகள் அழுதமாக வாழ்விக்கின்றன.

என்னிலும் இனியார், என்னிலும் கற்றார். என்னிலும் ஆற்றல் மிக்கார் எனினும் தன்னை மறந்து - தன் நாமம் கெட்டு, என்னையே எல்லாமாகக் கருதி, எனக்காகவே வேதனைகளையெல்லாந் தாங்கி 2.2.11.84 வரை வாழ்ந்த - தியாகி - காந்தம்மாவை, எனது வாழ்க்கைத் துணைவியாக - எனது தனிச் செயலராக - செய்தித் தகவல் வாயிலாக - பாதுகாவலராகப் பெற்றது. பெரும் பேறு ஆகும்.

பாடுபட்டு வளர்க்க வேண்டியவை பல. அவற்றில் ஒன்று நன்றியுணர்வு. எனது நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ எளியோர்க்கு அறிஞர்களுக்கு, பெரியவர்களுக்கு நல்லவர்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கின்றேன். அவற்றை ஆங்காங்கே சொல்லி, நன்றிப் பயிரை வளர்த்தல் எனது கடமை. அப்பெரு நோக்கை மையமாகக் கொண்டே 'நினைவு அலைகள்' வீசுகின்றன.

நெ.து. சுந்தரவடிவேலு என்னும் ஆல விதையைக் காலமும், சூழலும், தொலை நோக்காளரும், அறவோரும் பயன்படுத்தி, தொண்டு மரமாக வளர்த்து விட்டார்கள்.

கோடிக் கணக்கான மக்கள் கொண்ட மாந்தர் இனத்தில் நான் ஒருவன்; சிறியேன். சிறியேன் எப்படிப் பெரியவன் ஆனேன்?

தன்னலங் கருதாத் தொண்டால், பயன் கருதாப் பணியால்: ஒருமனப்பட்ட ஈடுபாட்டால்: இன்பம் விழையாமையால், இடும்பை இயல்பென உணர்ந்தமையால்; தியாக மலைகளை வழி காட்டிகளாகக் கொண்டமையால்; ஒரு சில செய்ய முடிந்தது.

படிப்பையே மறந்திருந்த, தமிழ் மக்களிடையே, ஆண்டுக்கு ஆண்டு பெருகி வரும் கல்விப் பசியை வளர்க்கும் திருத்தொண்டில் எனது வாழ்நாளில் முப்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெற்றன.

"குடிசை வாழ்வோரெல்லாம், உரிமையோடு உங்காரிடம் வந்து, மேல்பட்டப் படிப்பிற்கு இடம் பெற்றுக் கொண்டு போக முடிகிறதே! இதனால்தான் உங்களைத் தேடுகிறேன் என்று அன்று தந்தை பெரியார் கூறிய பாராட்டுக்கு ஈடு எது?

இந்திய சோவியத் நட்புறவை வளர்க்கும் நற்பணியில் பதினைந்து ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன்.

வாய்ப்புகள் தந்த தரும் பட்டறிவு சழுதாயத்தினுடைய பொதுச்சொத்து. எனவே 'நினைவு அலைகள்' பலர் புகழ்பாடும் நாலாக உருவாகி வருகிறது.

எனக்கு எழுச்சியூட்டிய இயக்கங்கள் என் சிந்தனைகளை வளர்த்த அறிஞர்கள், என் மனிதாபிமானத்தை வளர்த்த பெரியோர்கள் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன்.

சிறுவர்களுக்கான பதின்மூன்று நூல்களையும் வயது வந்தவர் களுக்காக முப்பதுக்கு மேற்பட்ட நூல்களையும் எழுதி, தமிழ் மொழிக்குத் தொண்டாற்றும் பேறு பெற்றேன். இத்துணை நூல் களையும் எழுதும்படி தூண்டியவர்கள் சிலர். அவர்களில் முன்னே நிற்பவர், 'சத்ய கங்கை' மாத மிருமுறை இதழ் - ஆசிரியரும் என் இனிய நண்பருமான திரு. பகீரதன் ஆவார். அவர் இடம் கொடுத்துக்கொண்டிருப்பதால் இந்நூல் வெளிவர முடிந்தது. அவருக்கு நன்றி! நன்றி! நன்றி!

தரமான தமிழ் நூல்களை வெளியிட்டு மகிழும் திரு. வானதி திருநாவுக்கரசு என்னுடைய நூல்கள் பலவற்றை வெளியிட்டு உதவியுள்ளார். இது, அவர் வெளியிடும் எனது நூல்களில் பத்தாவது ஆகும். அவருக்கு எச் சொற்களால் நன்றி கூறி நிறைவு செய்ய முடியும்!

நெடுங்காலமாக எனக்குக் கை கொடுத்து வரும் அன்பர்கள் 'நினைவு அலைகள் முதல் பாகம் வெளியான ஓராண்டிற்குள் முதல் பதிப்பு முழுவதையும் வாங்கிப் பெருமைப் படுத்தியமைக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் அளித்த ஆர்வமிக்க ஆதரவே, இரண்டாம் பகுதியைக் கொண்டு வரும் துணிவைத்தந்தது.

நினைவு அலைகள் இரண்டாம் பகுதியையும் தயவு செய்து வாங்கிப் படியுங்கள். செயற்கரிய செய்வதற்குத் தன் முயற்சி, பலருடைய ஆதரவு, காலத்தின் சூழல் எனப் பல தேவை என்பதை உணருங்கள். பெரியோரை வியத்தலுக்குப் பதில், சிறியோர்க்கு உணர்வு ஊட்டுங்கள் என்று வேண்டிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்நூலை நல்ல முறையில் அசிட்டு உதவிய 'நாவல் ஆர்ட் அச்சக உரிமையாளர், கவிஞர் நாரா. நாச்சியப்பனுக்கும், பிழை திருத்தி உதவிய திரு சு.வ. நீலகண்டனுக்கும் நன்றி கூறுகிறேன்.

எத்தனையோ அதிர்ச்சிகள் குறுக்கிட்டாலும் சமாளித்து என் கட்டுரைகளைத் தொகுத்துப் பகுத்து நூலாக்க உதவிய - புகைப் படங்களைத் திரட்டி உதவிய - நண்பர் திருதி.வ. மெய்கண்டாருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியுடையேன்.

நெது. சுந்தரவடிவேலு

 

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog