நிச்சயமற்ற பெருமை
'பாருக்குள்ளே நல்ல நாடு' என்றார் பாரதி. 16ஆம் நூற்றாண்டில் பொன்னும், மணியும் செல்வ வளமும் தேடி, ஐரோப்பாவின் துறைமுகங்களிலிருந்து பயணம் புறப்பட்ட கொலம்பஸ் உள்ளிட்ட கடலோடிகளுக்கும் அவர்களது பயணத்திற்கு படியளந்த பேரரசுகளுக்கும் 'இந்தியா' தான் கனவு பூமியாக இருந்தது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கூட இந்தியாவின் ஏற்றுமதி அதன் இறக்குமதியைப் போல் 700 மடங்கு என்று ஐ.நாவின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு ஆணையம் (UNCTAD) கணக்குச் சொல்கிறது. இந்தியா என்றைக்கும் ஏழை நாடல்ல; ஆனால் இந்தியர்களில் பெரும்பகுதியினர் ஏழைகள். இந்தியா விடுதலை பெற்ற பிறகு பல ஆண்டுகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி முகத்தில்தான் இருந்தது. 'ஹிந்து' வேகத்தின் வளர்ச்சி (Hindu Rate of growth) எனக் கேலியாகக் கூறப்பட்டாலும், அது சர்வதேசப் பொருளாதார வளர்ச்சி வேகத்தோடு ஒப்பிடக்கூடியதே. கடந்த சுமார் 20 ஆண்டுகளாக அதன் வளர்ச்சி வேகம், இன்றைய உலகில் சீனா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே கண்டது. ஆனால் இந்த 'வளர்ச்சி', வறுமையையும் ஏற்றத்தாழ்வுகளையும் சூழல் சீர்கேடுகளையும் அதிகரிப்பதை விளைவாய்க் கொண்டுள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை உள்ளிட்ட பல அம்சங்களை இந்தியாவின் வளங்களோடு சேர்த்துப் பார்க்க வேண்டிய வலிமை எனக் கூறும் ஜீன் டிரிஸ், அமர்த்தியா சென், இந்த முரண்பாட்டையும் இது உருவாகி, திடமாகிய பொருளாதார, வரலாற்று நிகழ்வுப் போக்கையும் விளக்குகின்றனர். உலகம் மதிக்கும் மேதைகளும், எந்தவொரு சித்தாந்தத்தின் மீதும் உணர்வு பூர்வமான சாய்வு இல்லாதவர்களுமான அவர்கள் கருத்தோடு எவரும் முரண்படலாம். ஆனால் புறந்தள்ளுவது சாத்தியமல்ல. உலகை விளக்கும் பண்டிதர்களாய் மட்டும் நிற்காது, அதனை மாற்றி அமைப்பது குறித்தும் விவாதிக்கும் அவர்களது எழுத்து, முற்போக்கான அனைவரும், மாற்றம் வேண்டுவோர் அனைவரும் ஊன்றி வாசிக்க வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு துறையிலும் உலகின் மிகச் சிறந்த சிந்தனைகளைத் தமிழுக்கு கொணர்ந்து சேர்க்க முயலும் பாரதி புத்தகாலயத்தின் முயற்சியில் இது ஒரு புதிய மைல் கல் என நம்புகின்றோம்.
பாரதி புத்தகாலயம்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: