நெஞ்சுக்கு நீதி பாகம் 4 - பதிப்புரை
பதிப்புரை
தலைவர் கலைஞரின் சுயசரிதமான 'நெஞ்சுக்கு நீதி ' முதல் மூன்று பாகங்களையும் படித்து இன்புற்று மகிழ்ந்த எமது நெஞ்சிற் கினிய வாசகர்களுக்கு இந்த நான்காவது பாகத்தையும் தருவதற்கு மிகவும் பெருமைப்படுகிறோம்; மகிழ்ச்சி அடைகிறோம்.
கலைஞர் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு, இயக்க வரலாறு மற்றும் உலக வரலாற்றுக் குறிப்புகளை தெள்ளிய ஆற்று நீர் போல நெஞ்சுக்கு நீதி முதல் பாகம் முதல் மூன்றாம் பாகம் வரை தொகுத்துக் கொடுத்துள்ளார்.
இதோ! நெஞ்சுக்கு நீதியின் நான்காம் பாகம் வாசகர்களின் கரங்களில் பிறந்த குழந்தையின் பிஞ்சு விரல்களை வருடும் போது ஏற்படுகின்ற உணர்வுடன் வாசகர்களின் கரங்களை வருடிக் கொண்டிருக்கிறது.
உலகளாவிய வரலாற்று நிகழ்வுகள்; இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள்; அவற்றைத் தீர்க்க கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கைகள்; ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது தமிழகத்தில் கழகம் செய்த சாதனைகள் ஆகியவற்றை தனக்கேயுரிய கற்கண்டுத் தமிழில் சமைத்த இனிப்புப் பொங்கலாய் நெஞ்சுக்கு நீதி' நான்காம் பாகத்தில் வாசகர்களுக்கு விருந்து படைத்துள் வார், கலைஞர் அவர்கள்.
இத்தகைய பெருமை வாய்ந்த, இந்த நூலை வெளியிட அனுமதி அளித்த இருபதாம் நூற்றாண்டின் தொல்காப்பியர்; அறிஞர் இலக்கியக் கடல் கலைஞருக்கு பெரிதும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
வழக்கம் போல், இந்த நூலை வாங்கிப் பயனடைந்து எம் நிறுவனத்தைப் பெருமைப் படுத்தும் இனிய வாசகர்களையும் நினைவு கூர்கிறோம்.
'நெஞ்சுக்கு நீதி' ஐந்தாம் பாகத்தை கலைஞர் எழுதி, அதனையும் நாங்கள் வெளியிடும் பாக்கியத்தை காலம் எங்களுக்குத் தர வேண்டும் என்று இறைஞ்சுகிறோம்.
இந்நூல் வெளியிடுவதற்கு தேவைப்பட்ட அனைத்து உதவிகளையும் காலத்தே செய்துதவிய திரு.சண்முகநாதன் அவர்களையும் இத்தருணத்தில் அன்புடன் நினைவு கூர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
திருமகள் நிலையம்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: