நெஞ்சுக்கு நீதி பாகம் 6 - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/nenjukku-neethi-part-6-thirumagal-niliyam
 
ஆறாம் பாகம்

முன்னுரை

“நெஞ்சுக்கு நீதி” ஆறாம் பாகம் பலரின் வேண்டுகோளுக் கிணங்க விரைவாகவே வெளிவரவுள்ளது. இதன் முதற்பாகம், நான் பிறந்த 1924ஆம் ஆண்டு முதல், 1969இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது வரையிலான 45 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை நிகழ்வுகளின் சுருக்கமாகும். 1969ஆம் ஆண்டு முதல் 1976இல் நெருக்கடி நிலையைச் சந்திக்க முற்பட்ட காலம் வரையிலான 7 ஆண்டு காலச் சம்பவங்களின் தொகுப்பே இரண்டாம் பாகமாகும். 1976 முதல் 1989 வரையிலான 13 ஆண்டுக் காலத்தில் நான் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அரசியல் பயணங்களின் சுருக்கமே மூன்றாவது பாகமாகும். 1989 முதல் 1996 வரையில் நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை நான்காம் பாகத்தில் விளக்கியிருந்தேன். நான்காம் பாகத்தின் இறுதி அத்தியாயத்தில் அதற்குப் பிறகு நடைபெற்ற முக்கிய சம்பவங்களையும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன்.

நான்காம் பாகத்திற்கான முன்னுரையை 15-6-2003 அன்று எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு ஒன்பதாண்டுகள் கழித்துத் தான் 28-8-2012இல் ஐந்தாம் பாகத்திற்கான முன்னுரையை எழுதினேன். அந்த ஐந்தாம் பாகத்தில் 1996 முதல் 1999ஆம் ஆண்டு வரையிலான என் வாழ்க்கைச் சரித்திரத்தையும், கழகத்தின் வரலாற்றையும் இணைத்து தொகுத்தேன். இதோ! ஆறாம் பாகம் ஓராண்டு காலத்திற்குள்ளாகவே வெளி வரவிருக்கின்றது.

“நெஞ்சுக்கு நீதி” என்னுடைய சுயசரிதையாக தொடங்கப் பட்ட போதிலும், பின்னர் இது நமது இயக்கத்தின் வரலாறாகவே விரிவடைந்து, இன்னும் சொல்லப் போனால், நமது தமிழக அரசியல் வரலாற்றின் அடிப்படையான ஒரு பகுதியாகவே அமைந்து விட்டது; மேலும், திராவிட இயக்கப் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமாகவும், திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின் சமூக - பொருளாதார மாற்றங்களுக்கு வழங்கியிருக்கும் பங்களிப்பைப் பற்றிய விளக்கமாகவும் அமைந்திருக்கிறது இந்த நூல். நான்காம் பாகத்திற்கான முன்னுரையை நான் எழுதும்போது, “காலம் கருணை காட்டிய காரணத்தால், அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு விட்டுப் போனவைகளையும் இணைத்து "ஐந்தாம் பாகம்” தருவதற்கு முயற்சி எடுப்பேன்'' என்று குறிப்பிட்டிருந்தேன். காலம் இடம் தந்த காரணத்தால், அதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு ஐந்தாம் பாகத்தையும் முடித்து புத்தகமாக வெளிவந்து, ஆறாவது பாகத்தையும் தற்போது முடித்து புத்தகமாக வெளி வருகிறது.

இந்த "நெஞ்சுக்கு நீதி" நூலை மட்டும் எடுத்துக் கொண்டால் ஐந்து பாகங்கள் வரை 3,616 பக்கங்கள் எழுதினேன். தற்போது ஆறாவது பாகம் 552 பக்கங்களைக் கொண்டது. இதையும் சேர்த்தால் இதுவரை 4,168 பக்கங்கள் எனக்கே வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கின்றது! இவ்வளவு பக்கங்களை எழுதியிருக்கிறோமா? நம்முடைய வாழ்க்கைச் சரித்திரம் இத்தனை நீளமானதா? என்னுடைய சுய சரிதையுடன் இணைத்து, கழகத்தின் முக்கிய சம்பவங்களும், தமிழக அரசியலின் சம்பவங்களும் பின்னிப் பிணைந்து கிடப்பதால் இதன் பக்கங்கள் வளர்ந்து விட்டன. இருந்தாலும் இந்தச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட வேண்டியவை; எதிர்காலத்துக்குப் பயன்படக் கூடியவை என்பதால் தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

1985ஆம் ஆண்டு "நெஞ்சுக்கு நீதி' முதல் பாகத்திற்கு முன்னுரை எழுதிய போது, "ஓய்வெடுத்துக் கொள்க!" என்று சில மாற்றுக்கட்சி நண்பர்கள் கேலியாகக் கூறினர்.”ஓய்வெடுக் காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்று என் கல்லறையின் மீது தான் எழுதப்படும் என்று பதில் சொன்னேன். அந்த உணர்வுகளின் தொகுப்புதான் இந்த நூல்.

இது முழுமையானதல்ல, இன்னும் நிறைய இருக்கிறது, எழுத!” என்று நான் குறிப்பிட்டது இப்போதும் பொருந்தும். எழுதுவதிலும், உழைப்பதிலும் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சி யையும், மனநிறைவையும் வார்த்தைகளால் அளவிட முடியாது.

இந்தப் புத்தகங்களில் அடங்கியுள்ள சம்பவங்கள், தேதி வாரியாக குறிப்பிட்டு எழுதியிருக்கும் நிகழ்ச்சிகள் தங்களுடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருப்பதாக என்னிடம் சில ஆராய்ச்சி மாணவர்கள் எடுத்துச் சொன்ன போது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருந்தது. அதே நேரத்தில் வருங்காலச் சமுதாயத்தினருக்குத் தேவையான விளக்கத்தையும் எழுச்சியையும் வழங்கிட இந்தத் தொடர் நிச்சயம் பயன்படும் என்ற நம்பிக்கையினை எனக்களிக்கிறது. என்னுடைய இந்த முயற்சிக்கு தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் தமிழ் மக்கள் அனைவருக்கும், என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளுக்கும், இந்த ஆறாம் பாகத்தை நூலாகத் தொகுத்து வெளியிடும் திருமகள் நிலையத்தாருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"நெஞ்சுக்கு நீதி” எனும் எனது சுயசரிதையை எனை ஈன்ற தாய் - தந்தை; பெரியார் - அண்ணா ஆகியோரைப் பற்றி, நொடிப் பொழுதும் அகலாத நினைவுகளுக்குக் காணிக்கையாக்குகிறேன்!

என்றும் அன்புள்ள

 (மு.கருணாநிதி)

சென்னை,

14-9-2013

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog