மெல்லத் தவழும் தென்றல் காற்று பூஞ்சோலையில் நுழைந்து அன்றலர்ந்த மலர்களின் நறுமணத்தை அள்ளிக் கொண்டு புதிய சுகந்தத்துடன் வெளிக் கிளம்புகிறது. அதைப் போலவே தமிழ் மொழியும் கலைஞரின் நாவிலும், பேனாவிலும் புகுந்து வெளிக்கிளம்பும்போது கற்பனை நயத் தையும் கருத்துச் செறிவையும் சுமந்துகொண்டு, எழிலார் நடையிட்டு வருகின்றது.
சொற்பொழிவு, கவிதை. சிறுகதை, நாவல், நாடகம், திரைக்கதை உரையாடல், கட்டுரை, தலையங்கம், கடித இலக்கியம் என்று பல்வேறு இலக்கியத்துறைகளிலும் புகழொடு தோன்றிப் புதிய சாதனைகளைப் படைத்த கலைஞர், அரசியலில் மட்டுமன்றி இலக்கியத்திலும் தலைமைச் சிறப் புடையவர்.
கலைஞரின் பழுத்த அரசியல் அனுபவமும் முதிர்ந்த இலக்கியப் புலமையும் ஒருங்கிணைந்ததன் விளைவே அவரது *நெஞ்சுக்கு நீதி'' எனல் மிகையன்று.
ஏனைய இலக்கியங்களைக் காட்டிலும் சுயசரிதை இலக் கியம் 'ஒரு தனிச் சிறப்புடையது. நாவல், நாடகம், சிறுகதை போன்றவை சாதாரணமானவர்கள் புகழ்பெறக் காரணமாகின்றன. ஆனால் புகழ்பெற்றவர்கள் மற்றவர் களோடு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள எழுதப்படுபவை சுயசரிதை'. எனவே சுயசரிதை நூல்கள், இலக்கிய மாக மட்டுமின்றி, வரலாறாக, சமூக மாற்றங்களைக் குறித்த சாசனமாக, காலப்பெட்டகமாக விளங்கும் ஆற்றல் மிக்கவை.
கலைஞரின் எழுத்து வன்மையையும், உள்ளம் மயங்கவைக்கும் சொல்லாட்சியையும் துள்ளு தமிழ் நடையையும், உயிர்த் துடிப்புள்ள உணர்ச்சி ஓவியங்களையும், அவரது ஏனைய படைப்புகளில் கண்டு மகிழ்ந்த நாம், இங்கே 'நெஞ்சுக்கு நீதியில் அவரது இதயத்தைக் காண்கிறோம்; அவர் பெற்ற மனநெகிழ்ச்சிகளையும், வாழ்க்கைப் பயணத்தில் அவர் தாண்டிவந்த தடைக் கற்களையும் தெரிந்து கொள்கிறோம்; அவரது முன்னோடிகளையும், அவருக்கு அறிவூட்டிய பெரியா ரையும், ஆளாக்கிய அறிஞர் அண்ணாவையும் பற்றிய சிறப்பு மிக்க செய்திகளையும் அறிந்து கொள்கிறோம். இந்நூலின் சிறப்பை எடுத்துக் கூற இன்னொரு கம்பன் தான் பிறந்து வரவேண்டும்.
உரை நடையில் அமைந்த இந்தக் காவியம், தேவ குமாரர்களும், அரசகுமாரர்களுமட்டுமல்ல சாமானியர்களும் சரித்திரம், படைக்கலாம் என்னும் நீதியை உணர்த்தி நிற்கும் தீங்காப் புகழ்மிக்க வரலாற்று ஓவியம் ஆகும்.
இணையிலாத சிறப்புமிக்க இந்நூலின், மூன்றாம் பதிப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
அ. இராமநாதன்,
திருமகள் நிலையம்.