என்னுரை
மனிதன், நூறாண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயச் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடித்துவிட்ட நிலையில் என் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து நெஞ்சுக்கு நீதி'' என்ற தலைப்பில் இந்தப் பெருநூலின் முதற் பாகத்தைத் "தினமணி கதிர்'' இதழில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாம் பாகத்தை “குங்குமம்'' இதழில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாம் பாகத்தை எழுதி முடிக்கும்போது அறுபது வயதைக் கடந்து; இந்த நூல்களுக்கான முன்னு ரையை எனது அறுபத்தி இரண்டாவது அகவையின் பொழுது எழுதுகிறேன்.
இந்த அறுபத்து இரண்டு ஆண்டுகளில் மிகப் பெரும் பகுதி - பொது வாழ்வுக்கே செலவாகியிருக்கிறது என்பது, என் இதயத்துக்கு ஆறுதலைத்தர வல்லதாகும். எஞ்சியிருக்கும் நாட்களும் சிறப்பாகத் தமிழுக்கும், தமிழின மக்களுக்கும் - பொதுவாக மக்கட் பணிக்கே பெரிதும் பயன்பட வேண்டு மென்பது என் தணியாத ஆசை.
நடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு, "ஏ, அப்பா! இவ்வளவு தூரம் நடந்துவிட்டோமா? இனிமேல் நடக்க முடியாது'' என்று அயர்ந்து போவதற்குப் பதிலாக - ''பரவாயில்லை! இவ்வளவு தூரம் நடந்துவிட்டோம். இன்னும் சிறிது தூரம் தானே!'' என்ற புதிய விறுவிறுப்பைப் பெற்றாக வேண்டும்.
அந்த விறுவிறுப்பைப் பெறத்தான் என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்துக்கொள்கிறேன்.
வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போா உளர்! எனக்கோ: போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது.
போர் வீரனுக்கு மகிழ்ச்சியே கிடையாதா? ஏன் கிடையாது? கொட்டும் குளிரில், பனிப் பாறைகளில் ஊர்ந்து சென்று பகையைத் தாக்கும் போது சூடாக ஒரு கோப்பைத் தேநீர், அவனும் அருந்துவது உண்டு. அதுவே அவனுக்குப் பெரிய இன்பம்.
'மீனைச் சுவைத்துச் சாப்பிடும் பொழுது, அதன முன் நாவிலே குத்தி விடுவதுண்டு. அதனால் சிறிது ரத்தமும் கசிவ துண்டு. அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மீன் துண்டு களைச் சுவைப்போரைப் பார்த்திருக்கிறோம்.
சில பேருக்கு மீனின் முன், தொண்டையிலே அடைத்துக் கொண்டு, அவஸ்தைப்படுவதும் உண்டு.
என் வாழ்வு, இதில் இரண்டாவது வகை.
“உன்னை ஒருவன் இழித்துப் பேசினான்'' என்று தன் நண்பனிடம் ஒரு நண்பன் கூறினான். அதைக் கேட்ட அந்த நண்பன் வியப்புற்று, “அப்படியா! இருக்காதே! என்னை அவன் இழித்துப் பேசியிருக்கமாட்டானே! நான் அவனுக்கு எந்த உதவியும் செய்யவில்லையே! பிறகு எப்படி அவன் என்னை ஏசியிருக்க முடியும்?'' என்று கேட்டான்.
இந்த உரையாடல் துணுக்கில் இந்த உலகத்தின் படமே தெரிகிறதல்லவா? இத்தகைய உலகில் தான் நமது. வாழ்க்கைப் பந்து உருளுகிறது.
அந்தப் பந்தை நாம்தான் உதைத்து விளையாட வேண்டும். யாரோ உதைப்பார்கள் என்று சோம்பலா யிருந்தால், அவர்கள் நம்மையும் சேர்த்து உதைப்பார்கள்.
கல்லிலும், முள்ளிலும், கட்டாந்தரையிலும் அடித்து "அவுட்” (Out) ஆகாமல் பந்து, (Goal) கோலுக்குள் நுழைந் திட வேண்டும். (Goal) கோல் இல்லாமல் பந்தாடுவதில் மட்டும் திறமையைக் காட்டிப் பயனில்லை. வெற்றி தோல்விகள் இயற்கைதான் எனினும் விடா முயற்சியும் கொள்கை உறுதி பும் ஓயா உழைப்பும் தேவை.
'ஓய்வெடுத்துக் கொள்க!' என்று சில மாற்றுக் கட்சி நண்பர்கள் கேலியாகக் கூறினர். ''ஓய்வெடுக்காமல் உழைத் தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்'' என்று என் கல்லறையின் மீதுதான் எழுதப்படும் என்று பதில் சொன்னேன்.
அந்த உணர்வுகளின் தொகுப்புத்தான் இந்த நூல். இது முழுமையானதல்ல. இன்னும் நிறைய இருக்கிறது, எழுத! மூன்றாம் பகுதியாக, அது வெளிவரக்கூடும்.
இந்த முதல் பகுதியைத் தொடர்ந்து எழுதத் தூண்டி யவர் என் நண்பர் சாவி. ஆர்வமுடன் தினமணி கதிரில் வெளியிட்டவரும் அவரே! அவருக்கு என் நன்றி!
தொடர்ந்து எழுதுவதற்குத் துணையாக, அவ்வப்போது நான் கேட்ட அரசியல் குறிப்புகளைத் தந்து உதவிய, தி. மு. க. தலைமை நிலைய நண்பர் சண்முகம், தம்பி சண்முகநாதன், நண்பர் மறைமலையான் ஆதியோர் மறக்க முடியாதவர்கள்.
இதன் முதற்பதிப்பை, தினமணிக் கதிர்' நிறுவனத்தார் வெளியிட்டனர். முதல் பாகத்தின் இரண்டாம் பதிப்பையும், இரண்டாம் பாகத்தின் முதல் பதிப்பையும் "திருமகள் பதிப்பகம்'' நண்பர் திரு. இராமநாதன் அவர்கள் வெளியிடு வதற்கு முன்வந்தமைக்கு நான் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அரிய முயற்சிக்கு என் நன்றி!
* பெற்றெடுத்த தாய் தந்தை
* அறிவூட்டிய பெரியார்
* ஆளாக்கிய அண்ணா
ஆகியோருக்கு இது காணிக்கை.
சென்னை அன்புள்ள
1987 மு.கருணாநிதி