நீதிக்கட்சி வரலாறு - தொகுதி 1 & 2 (2 புத்தகங்கள்) - முன்னுரை
தலைப்பு |
நீதிக்கட்சி வரலாறு - தொகுதி 1 & 2 (2 புத்தகங்கள்) |
---|---|
எழுத்தாளர் | க.திருநாவுக்கரசு |
பதிப்பாளர் |
நக்கீரன் பதிப்பகம் |
பக்கங்கள் | 1078 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2009 |
அட்டை | தடிமன் அட்டை |
விலை | Rs.1,200/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/neethikkatchi-varalaaru.html
முன்னுரை
நூற்றாண்டு விழாவை நெருங்கிக்கொண்டு இருக்கும் திராவிட இயக்கத்தின் முதல் 30 ஆண்டு கால முழுமையான வரலாறு இது. 'திராவிடர் இயக்க வரலாற்றுக் கணினி’ என்று பாராட்டப்பட்ட க.திருநாவுக்கரசு தனது அதீதமான உழைப்பால் இதை உருவாக்கியிருக்கிறார். அடுத்து சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முழுமையான வரலாற்றையும் அவர் பரபரப்பாய் எழுதி வருகிறார். பலரது கூட்டுமுயற்சியால் உருவாக்கப்பட வேண்டிய, பெரிய உழைப்பு தேவைப்படும் ஒரு பணியை தனி மனிதராய் இருந்து செயல்படுத்தும் திறமை கொண்ட வரலாற்று ஆசிரியர்களில் முக்கியமானவர் க.திருநாவுக்கரசு.
'நீதிக்கட்சி’ என்று பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டாலும் 1916-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்கத்தின் பெயர், 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.’ பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா தனது அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் இருந்தபோது, சமூக விடுதலைக்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. 'நாட்டின் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்களை ஒடுக்கி வைத்திருக்கும் ஒரு நாட்டுக்கு அரசியல் விடுதலை தரப்பட்டால், அது மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே பயன்படும்’ என்று சொல்லி சமூக விடுதலையை முன்னெடுத்த அமைப்பு இது.
நாட்டில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் (1920-ம் ஆண்டு) நீதிக்கட்சி சென்னை ராஜதானியில் ஆட்சியைக் கைப்பற்றி செய்த பல்வேறு சீர்திருத்தங்கள் மலைப்பைத் தருகின்றன. அந்தக் கட்சியே தொடர்ந்து இரண்டு மூன்று தேர்தல்களில் வென்றது. தொடர்ச்சியாக ஆட்சியை வைத்திருந்தால், நன்மையைப்போலவே எதிர்மறையான விளைவுகளும் அதிகமாக இருக்கத்தானே செய்யும். பதவியை விட்டுத்தரத் தயாராக இல்லாத மனிதர்கள் சிலர் இதன் முக்கியஸ்தர்களாக மாறியபோது, 1935-ம் ஆண்டு பெரியார் ஈ.வெ.ரா இதன் தலைவராக ஆகிறார். அதில் இருந்து இந்தக் கட்சிக்கு மீண்டும் ஓர் உற்சாகம் கிடைக்கிறது. ஆனாலும் திருந்தாத சிலரை விலக்கி வைத்துவிட்டு, மற்றவர்கள் துணையுடன் 1944-ல் சேலம் மாநாட்டில் தொடங்கப்பட்டதுதான் திராவிடர் கழகம். இந்த வரலாற்றுகளைச் செறிவுடன் கொடுத்துள்ளார் க.திருநாவுக்கரசு.
ஒரு வரலாற்றுப் புத்தகத்துக்கானத் தொடர்ச்சியான தகவல்களும் அந்த நிகழ்வுகளுக்கான காரணத்தைச் சொல்வதற்கான விளக்கங்களும் விவாதம் தேவையான இடங்களில் விமர்சனங்களும். என பல்வேறு பரிமாணங்கள் கொண்டதாக இந்தப் புத்தகம் இருக்கிறது. இந்தக் காலகட்டத்துக்கு அவசியமான வரலாறு இது.
நன்றி: விகடன்