தமிழகத்தில் அறிவுச் செழுமை வளர்வதற்கும், பல துறைகளில், பல மட்டங்களில் பயனளிப்பதற்கும் உள்ள தடைகளில் ஒன்று தமிழில் மொழிபெயர்ப்புகள் பெருமளவில் இல்லாமை. அறிவு அசுர வேகத்தில் வளரும் இன்றைய காலத்தில் பல மொழிகளின் சிறந்த படைப்புகள் தமிழில் கிடைக்கப் பெறுவது தமிழ் மக்களின் வளர்ச்சிக்கு ஆதாரத் தேவையாகும். மற்ற பல உலக மொழிகளின் நூல்கள் இல்லாவிட்டாலும், நவீன இந்தியாவின் வாழ்வுடன், விதியுடன் இரண்டறக் கலந்து விட்ட ஆங்கில மொழி நூல்களேனும் அவை வெளிவந்தவுடனேயே தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
தமிழில் ஒவ்வொரு துறையிலும் மூல நூல்களும், மொழி பெயர்ப்புகளும் பெருமளவு வெகு விரைவிலேயே வெளிவரும் என்ற எதிர்பார்ப்புகள் ஐம்பதுகளில் இருந்தன; ஆனால் விரைவிலேயே பொய்த்து விட்டன. தமிழ் வழிக்கல்வி ஆதரவற்ற அனாதையாகிவிட்டதும், குறிப்பாக உயர் கல்வியில் கைவிடப்பட்டதும் இதற்கு ஒரு காரணம். தமிழ் அரசியலாகி, மொழி அரசியலின் தாக்கம் தமிழ் நாட்டை வளைத்து ஆக்ரமித்துக் கொண்டாலும், தமிழ் வழிக்கல்வி ஆங்கிலத்திற்கு அடி பணிந்து விலகிக் கொண்டு விட்டது. இதன் காரணமாகவும் தமிழில் மொழி பெயர்ப்புகள் வெளிவருவதற்கான தேவை வளரவில்லை. தமிழில் மொழிபெயர்ப்புகள் இல்லாமை இன்று தமிழ் வழிக் கல்வியை எதிர்க்கும் அணியினருக்குச் சாதகமான வாதமாகவும் ஆகிவிட்டது.
இந்தப் பின்னணியில் நள்ளிரவில் சுதந்திரம்' என்ற மொழி பெயர்ப்பு நூல் வரவேற்புக்குரியது. இது ஒரு வரலாற்று நூல் என்பது இதன் முக்கியத்துவத்தை இன்னும் உயர்த்துகிறது. தமிழகப் பல்கலைக் கழகங்களில் வரலாற்றுப் பாடத்தின் தரம் மிகவும் தாழ்ந்து கிடக்கின்றது. வரலாறு நம் கல்விக் கூடங்களில் எவரும் வேண்டாத, விரும்பாத பாடமாக, கடைநிலை மாணவனின் கடைசி புகலிடமாக இருப்பது அதன் தரத் தாழ்வுக்கு ஒரு காரணம். ஆனால், வரலாறு இன்றி ஒரு சமுதாயம் வாழ இயலாது. அதனை வாசல் வழியாக விரட்டினால், புழக்கடை வழியாக உள்ளே புகுந்து நம்மைப் பேயாகப் பிடித்து ஆட்டும்.
இன்று அதுதான் நம் நாட்டில் நடக்கிறது. வரலாறு அரசியலாகி இருக்கிறது. இந்திய அரசியலின் போக்கை நிர்ணயிக்கும் பூதாகார சக்தியாக வரலாறு இன்று உருக்கொண்டிருக்கிறது. பெரும் வக்கரிப்புகளுக்கு ஆளாகி, இந்திய மக்களைப் பிரிக்கும் துவேஷக் கருவியாகியுள்ளது. வரலாறு மத வெறியர்களினால் 'ஹைஜாக்' செய்யப்பட்டு விட்டது.
இதற்கு ஒரு காரணம் வரலாற்றின் புறக்கணிப்பு, கல்வி நிலையங்களிலும், வெகுஜன அரங்கத்திலும் வரலாறு கொச்சைப்படுத்தப்படுகிறது. அதன் அறிவுத் துறைக்குரிய விஞ்ஞான நியதிகளின் அடிப்படையில் உருவான வரலாறு அல்ல நாம் கற்பதும், அறிவதும், இந்நிலை மாற வேண்டுமென்றால், வரலாறு காப்பாற்றப்பட வேண்டுமென்றால், சிறந்த நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, ஆங்கிலம் நன்கு புரியாத பெரும் பகுதியிலான மக்களுக்குக் கிடைக்கப் பெற வேண்டும்.
'நள்ளிரவில் சுதந்திரம்' சுதந்திர இந்தியாவும், பாகிஸ்தானும் உதயமான பிரளய காலத்தைப் பற்றியது. மனித வரலாற்றின் மிகப் பெரிய சாம்ராஜ்யமான பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம் அதன் உயிர் நாடியான இந்திய உய கண்டத்தில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பல ஆண்டுகளின் ஆய்வின் அடிப்படையில் விவரிக்கும் நூல். உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற அதே கட்டத்தில், மனித வரலாற்றின் மிகப் பெரிய, மிகக் கொடிய மக்கள் புலப்பெயர்வு நிகழ்ந்தது. பல லட்சம் மக்கள் தாங்கள் பிறந்த மண்ணைவிட்டு அகதிகளாய் ஓடினர். அக்காலத்தின் அரசியல் கொந்தளிப்புகள், சாதாரண மக்களையும் ஆட்டிப்படைத்த வெறித்தனங்கள், சூறையாடப்பட்ட லட்சக் கணக்கான மனித உயிர்கள், அரசியல் சூட்சமங்கள் இவற்றை வரலாற்று உணர்வுடனும் எளிதாக வாசித்து ரசிக்கத் தகுந்த வண்ணமும் எழுதப்பட்ட நூல் இது.
இந்நூலின் முதல் பதிவு 1975இல் வெளிவந்தவுடனேயே மிகவும் பிரபலமடைந்தது. இந்தப் புதிய பதிப்பு இந்திய சுதந்திரத்தின் 50வது ஆண்டு சிறப்புப் பதிப்பாக வெளிவந்துள்ளது. இதன் இரு ஆசிரியர்கள் டோமினிக் லாப்பியர், லாரி காலின்ஸ் இரு வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களது கூட்டுப்படைப்புகள் தனித்துவம் கொண்டவை. இருவரும் ஒன்றாக ஆய்வு செய்து, ஒரே சமயத்தில் தத்தம் மொழிகளாகிய ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் எழுதி, ஒரே சமயம் வெளியிட்டனர். நூலின் முக்கிய ஆதாரமாக அமைந்தது பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசி வைஸ்ராயான மௌண்ட் பாட்டனின் (நூலின் நாயகன் அவர்தான் என்று சில விமர்சகர்கள் கருது கின்றனர்.) ஆவணக் களஞ்சியமும் அவருடன் ஆசிரியர்கள் நிகழ்த்திய நேர் காணலின் 30 மணி நேர ஒலி நாடாப் பதிவுமாகும். நூல் உலகெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் மொழிபெயர்க்கத்தான் இத்தனை காலம் ஆகியிருக்கிறது.
நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் நெஞ்சை உருக்கும் மாபெரும் சோக நிகழ்ச்சிகள் நடந்தேறி அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகி விட்டன. ஆனால், அன்றைய துவேஷம் இன்னும் தணியவில்லை. புதுப்புது அவதாரங்களும் எடுக்கின்றது. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே விரோதங்கள் குறைய விடாமல் அவ்வப்பொழுது நெய் ஊற்றி வளர்க்கப்படுகின்றன. இரு நாடுகளிலும் கொள்கை உருவாக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் போர்க்குணம் கொண்ட கழுகுகள்தான். இவர்களின் உந்துதலால் இரு நாடுகளும் பயங்கரமான ஆயுதப் போட்டியில் ஈடுபட்டுள்ளன; ராணுவ செலவைக் கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. போரின் விளிம்பில் எப்பொழுதுமே நின்று கொண்டிருக்கின்றன. இப்பொழுது இரு நாடுகளும் அணு ஆயுதங்களையும் பெற்று விட்டதனால் போர் மூண்டால் ஏற்படப் போவது சர்வ நாசம் என்ற அச்சம் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
அது மட்டுமல்ல. இந்தியாவில் பாகிஸ்தான் எதிர்ப்பு என்பது நம் நாட்டு இஸ்லாமியர் எதிர்ப்பாகவும் மாறுகிறது. மத அடிப்படை வாதத்தின் எழுச்சியும், அதன் விளைவாக சிறுபான்மை இனத்தவர் மேல் தொடுக்கப்படும் தாக்குதல்களும், பாபர் மசூதி இடிப்பும், பம்பாய்க் கலவரமும், இன்று கிறிஸ்துவ மதத்தின் மீதும், மக்கள் மீதும் ஏவப்படும் அவதூறுகளும், தாக்குதல்களும் இவை அனைத்தும் மதமே மக்களின் அடையாளம் (identity) என்கின்ற விபரீதச் சித்தரிப்பின் விளைவுகள்,
'நள்ளிரவில் சுதந்திரம்' பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இறுதிக் கட்டங்களில் வளர்ந்த பிரிவினை வாதத்தையும், அதனைத் தொடர்ந்த மதக் கலவரங்களையும், குருதி வெள்ளத்தில் மக்களும், மனிதமும் மாய்ந்து மடிந்ததையும் நெஞ்சுருக விவரிக்கிறது. மகாத்மா காந்தியும், மற்றவர்களும் பற்றியெரியும் தீயை அணைக்க பட்ட பாட்டையும் விவரிக்கிறது. அந்தப் பக்கங்களை வாசிப்பவர்கள் இன்று விசிறிவிடப்படும் மதவெறி நம் சமுதாயத்தை எங்கே கொண்டு விடுமோ என்று ஒரு நிமிடமேனும் நின்று சிந்திக்காமலும், அச்சம் கொள்ளாமலும் இருக்க முடியாது. அந்த சிந்தனையும், அச்சமும், அதில் உதயமாகக் கூடிய விவேகமும் இன்று நமது பெரும் தேவை. வரலாற்றின் தவறுகளிலிருந்து படிப்பினை பெற மறுப்பவர்கள் அவற்றை மீண்டும் இழைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர் என்பது பழமொழி, வரலாற்றின் எச்சரிக்கையாக இந்த நூல் இருக்குமென்றால், அது மகத்தான பணியாகும்.
நூல் மொழி பெயர்ப்பாளர்கள் திரு. மயிலை பாலு, திரு. வி.என். இராகவன் இருவரின் இந்த முதல் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். அவர்களுக்குத் துணை நின்ற அனைவருக்கும் நன்றி.
21.5.2001 டாக்டர் வே. வசந்திதேவி
சென்னை முன்னாள் துணைவேந்தர்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: