நள்ளிரவில் சுதந்திரம் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/nalliravil-suthanthiram
முன்னுரை

 

 

 

"நள்ளிரவில் பெற்றோம்

இன்னும் விடியவே இல்லை"

என்ற புதுக்கவிதை வரிகள் பலரின் மனங்களில் பசுமரத்தாணிபோல் ஆழப்பதிந்து விட்டவை.

இந்தியாவுக்குச் சுதந்திரம் ஏன் நள்ளிரவில் வழங்கப்பட்டது என்ற கேள்வியைக் கேட்டால் பல பேரிடமிருந்து பலவிதமான விடை கிடைக்கும். சரியான விடை 'Freedom at Midnight' (நள்ளிரவில் சுதந்திரம்) என்ற இந்த நூலில் கிடைக்கிறது.

1947ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்துக்களும் முஸ்லீம்களும் பட்ட துயரங்கள் இதில் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளன. இது போல் இன்னொரு கொடுமை எங்கேயும் நிகழக்கூடாது என்ற எண்ணம் எழாதவர் மனிதராகவே இருக்க முடியாது. எதிர் எதிர் திசையில் குடிபெயர்ந்து நடந்து செல்லும் மக்கள் நமது இதயங்களில் கால் பதித்து வலியை ஏற்படுத்துகிறார்கள். சுதந்திரம் என்றால் என்னவென்று அறியாத கிராமங்களின் மக்களும் கூட மதவெறிக்கு பலியானார்கள். இந்தச் செய்திப் பதிவு இன்றைக்கும் அப்பாவிகள் மதவெறிக்கு இரையாவதை நினைவுப்படுத்துகிறது.

இனியொரு ரணகளம் இந்தியாவில் வேண்டாம்; மதங்களின் பெயரால் ரத்தம் சிந்த வேண்டாம் என்ற எண்ணத்தை இந்த நூலின் சில அத்தியாயங்கள் உணர்த்துகின்றன. பழைய அவலங்களின் பதிவும் மனித இதயங்களில் இருக்கும் மாச்சரியங்களை அகற்ற உதவும். அந்தச் செயலுக்கு இந்த நூல் பயன்படும் என்று நம்பலாம். மதவெறியர்களின் வஞ்சகச் செயல்களை அடையாளம் காணவும் - எச்சரிக்கை செய்யவும் கூட இந்த நூல் உதவும்.

வெளிநாட்டு எழுத்தாளர்களின் பார்வையில் - இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவின் பேட்டிகள் - ஆவணக்காப்பகத் தகவல்கள் - பிரிட்டிஷாரிடம் பணியாற்றிய அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள் கள ஆய்வுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்த நூல். பெரும்பாலும் மவுண்ட்பேட்டனையே மையமாகக் கொண்டிருக்கும் இந்த நூல், இந்திய சுதந்திரப் போராட்டம் என்றாலே காந்தி, நேரு, ஜின்னா, படேல் என விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே ஹீரோக்கள் என்று சித்தரிக்கும் போக்கிலிருந்து மாறவில்லை.

வரலாற்று நிகழ்வுகளை ஆண்டுகள் வாரியாகத் தொகுத்துத்தரும் பழமையான பாடநூல் வடிவத்திலிருந்து மாறுபட்டு ஒரு புதிய பாணியில் வரலாற்றைக் கூற முடியும் என்பதற்கு இந்த நூல் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிப்பும் அடுத்த அத்தியாயத்தின் தொடுப்பும் இடை நிறுத்தாமல் நூலினைப் படிக்கத் தூண்டுகிறது. மூல நூலாசிரியர்களின் இந்தக் கருத்தோட்டத்தை அப்படியே மொழி பெயர்ப்பிலும் தந்திட முயற்சி செய்துள்ளோம். முழு வெற்றி பெற்றிருக்கிறோமா என்பதை வாசகர்கள் தான் சொல்ல வேண்டும்.

ஃபிரான்சையும் அமெரிக்காவையும் சேர்ந்த எழுத்தாள இரட்டையர் களான லேரி காலின்ஸ், டொமினிக் லேப்பியர் ஆகியோரின் 'Freedom at Midnight' என்ற ஆங்கில நூலினைத் தமிழில் ஆக்க வேண்டும் என்ற பெருமுயற்சியில் ஈடுபட்டவர் அலைகள் வெளியீட்டகத்தின் தோழர் பெ.நா. சிவம் அவர்கள். "வாசகர்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை; வாசகர்களை நாம் தான் உருவாக்குகிறோம்" என்பதில் உறுதியாக இருக்கும் தோழர் சிவம் அவர்கள், வயலில் எவ்வளவு விளைந்தாலும் விதைக்கான நெல்லைத் தெரிவு செய்து பாதுகாக்கும் விவசாயி போல நிகழ்காலச் சந்தையை மட்டும் கருதாமல் எதிர்காலச் சந்ததியினருக்குத் தேவையான நூல்களைத் தெரிவு செய்து பதிப்பித்து வருபவர்.

அப்படிப்பட்ட நூல்களின் வரிசையில் ஒன்றாகவே 'Freedom at Midnight' என்ற இந்த நூலையும் தெரிவு செய்து மொழியாக்கம் செய்யும் பணியை எங்களிடம் ஒப்படைத்தார். தீக்கதிர் பத்திரிக்கைக்கு செய்திகளை மொழி பெயர்த்து தருவதைப் பணியாகக் கொண்டிருந்த எங்களுக்கு 600 பக்க நூலினை மொழி பெயர்த்தது புதிய அனுபவத்தைத் தந்தது.

தமிழ்கூறு நல்லுலகிற்கு இப்படியொரு மொழியாக்க நூலைப் படைக்கும் வாய்ப்பினை எங்களுக்கு அளித்துள்ள அலைகள் வெளியீட்டகத்தாருக்கு எங்களின் இதயமார்ந்த நன்றி என்றும் உரித்தாகும்.

நாளிதழ் பணிகளுக்கிடையே நூல் மொழி பெயர்ப்புக்கு ஊக்கமளித்து தேவைப்பட்ட போது விடுப்புக்குக்கூட அனுமதி அளித்து உதவிய தீக்கதிர் ஆசிரியர், பொறுப்பாசிரியர் மற்றும் நிர்வாகிக்கும் எங்களின் நன்றி உரியதாகும்.

ஆங்கில நூலில் இடம் பெற்ற வரைபடங்களை மொழி பெயர்ப்பு நூலுக்குத் தகவாகக் கொண்டுவர உதவி செய்த தோழர் சுப. செல்வத்துக்கும் நன்றி உரித்தாகும்.

சான்றோன் எனக் கேட்கும் போதுதான் ஈன்ற பொழுதில் தாய் பெரிதுவப்பாள். அது போல வாசகர்களின் கருத்துக்கள் தான் எங்களையும் இந்த நூலையும் செழுமைப்படுத்தும். அதனை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

வி.என்.ராகவன்

மயிலை பாலு

Back to blog