முன்னுரை
மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் "நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?” என்ற தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். இப்புத்தகத்தை படித்து பார்த்தேன்.
ஒவ்வொரு தலைப்பிலும், ஒரு குறிப்பிட்ட விடயத்தை எடுத்து அலசி இருக்கிறார். நம் ஒவ்வொருவர் மனதிலும் அன்றாடம் பல வகையான எண்ணங்கள், கேள்விகள் மற்றும் சிந்தனைகள் எழுகின்றன. சிலவற்றிற்கு விளக்கம் கிடைக்கின்றன. பதில் கிடைக்கின்றன மற்றும் அவை அர்த்தமாகின்றன. பலவற்றிற்கு இவை எதுவும் சாத்தியமாவதில்லை. இருப்பினும். அத்தகைய சிந்தனைகளோடுதான் நாம் வாழ்ந்து வருகிறோம். பல பேச்சுகள், உரையாடல்கள், விவாதங்கள், விரிவுரைகள், சொற்பொழிவுகள், கதைகள், கட்டுரைகள், சம்பவங்கள் மற்றும் அனுபவங்கள் நமக்கு விளக்கங்களையும் விவரங்களையும் கொடுக்கின்றன. பெரும்பாலும் இவை எதார்த்தமாக நிகழ்வதாகும். சிலருக்குதான் இத்தகைய எதார்த்தங்கள் எளிதில் வாய்க்கின்றன. பெரும்பாலான சமயங்களில், தேடிப்போனால் பதில் எங்கும் கிடைக்காது. கிடைக்கும் பதிலும் பொருத்தமாக இருக்காது; பொருத்தமாக தோன்றினாலும் திருப்தியாக இருக்காது. இது நிதர்சனமாகும்.
நாம் அனைவரும் உடல் நலத்தைப் பேணி பாதுகாக்கிறோம், உடல் நலத்திற்கான அக்கறையும் விழிப்புணர்வும் தற்போது மக்களிடையே அதீதமாக நிலைபெற்று இருக்கிறது. அதே சமயம், மன நலத்தையும் நாம் பேணிக்காக்க விரும்புகிறோம். ஆனால் அதற்கான வழிமுறைகளும், மற்றவைகளும் நமக்கு எளிதில் கிட்டுவதில்லை. பெரும்பாலும் தத்துவார்த்த விளக்கங்களும், வேதாந்த சித்தாந்த கதைகள் மற்றும் எடுத்துகாட்டுகளும் தான் கிடைக்கின்றன. அறிவியல்பூர்வமாக, அனுபவப்பூர்வமாக, அர்த்தரீதியாக 'மனம் என்றால் என்ன?', 'மனநலம் என்றால் என்ன...?', 'மனநலத்தை பேணுவது எப்படி?' என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள், தேடுகிறார்கள். சில சமயங்களில் தேடி அலையவும் செய்கிறார்கள். திருத்தமான பதில்கள் கிடைப்பதில்லை.
தற்போது சமூக வலைதளங்கள் நமது கைகளுக்குள் அடங்கியுள்ளன. நினைத்த மாத்திரத்தில் பதில்கள் கிடைக்கின்றன. ஆனால் அவை அறிவியல்பூர்வமாக இருப்பதில்லை; அப்படி கிடைக்கும் செய்திகளும் தாய்மொழியில் இருப்பதில்லை; ஆங்கிலத்தில்தான் அவை பெரும்பாலும் உள்ளன. மனதையும், மனதின் போராட்டங்களையும் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமானால் அதற்கான விளக்கங்கள் தாய்மொழியில் இருக்க வேண்டும். அப்போது தான் சரியான அர்த்தங்கள் புலப்படும்.
அந்த வகையில் மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், தமிழில் இத்தகைய விடயங்களை தேன் துளிகளாக தர முயற்சித்திருக்கிறார். தேனை துளித்துளியாகத் தான் ரசிக்க முடியும்; ருசிக்க முடியும். குவளையாக அருந்த முடியாது. வாழ்க்கைக்கு வேண்டிய, மனநலத்திற்கு தேவையான விடயங்களை சிந்தனைத் துளிகளாக தந்திருக்கிறார். அதற்காக அவருக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மேலும் பல படைப்புகளை அவர் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மக்கள் பெருவாரியாக இச்சிந்தனைத் துளிகளை பருகி, பயன்பெற வேண்டுகிறேன்.
இப்படிக்கு
மரு. மா. திருநாவுக்கரசு
முன்னாள் தலைவர், இந்திய மனநல சங்கம்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
மனநலத்துறை
எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
சென்னை
Dr. Sivabalan Elangovan speech | சிவபாலன் இளங்கோவன் | உயிர்மை
தொடர்புடைய மற்ற பதிவுகள்: