நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா? - என்னுரை
என்னுரை
வாசிப்பதை காட்டிலும், எழுதுவதின் மீது தீராத மோகத்தில் இருப்பவனை நாம் என்னவென்று சொல்லுவோம்? 'ஆர்வகோளாறு?' 'அமெச்சூர்தனம்?' 'மேதாவி?' என இன்னும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி யாரும் சொல்லிவிட 'கூடாது என்பதற்காக வாசிக்கத் தொடங்கினேன். நான் அப்படி ஒன்றும் வாசிப்பனுபவம் பெற்றவன் அல்ல. ஐந்தாவது படிக்கும் போது சாண்டில்யனை தேடி வாசித்த ஒருவனுக்கு இலக்கியம் எப்படி கைகூடும்? கிராமத்து நூலகத்தின் அத்தனை சாண்டில்யன் கதைகளையும் தேடித்தேடி வாசித்த நாட்கள் அது. அதன் பிறகு நான் கல்லூரி காலம் வரை படித்தது எல்லாமே இதுபோன்ற வரலாற்று நூல்கள்தான். வரலாறின் மீது எனக்கு ஒன்றும் தனிப்பிரியம் எல்லாம் ஒன்றும் இல்லை. சாண்டில்யனை எல்லோரும் எதற்காக படித்தார்களோ அதற்காக தான் நானும் படித்தேன் இல்லையென்றால் நான் படித்த காரணத்திற்காகவே மற்றவர்களும் படித்தார்கள் என நம்பிக் கொண்டிருந்தேன்.
எனது கல்லூரி காலங்களும், அதில் எனக்குக் கிடைத்த நண்பர்கள் போஸ், சக்தி, குமணன் போன்றவர்கள் தான் புத்தகங்களை நோக்கிய எனது உண்மையான ஆர்வத்தை வார்த்து எடுத்தார்கள். பெரியாரில் தொடங்கி சேகுவேரா, ஃபிடல், லெனின், ஸ்டாலின், கொஞ்சம் மார்க்ஸ் என புரட்சியின் வரலாறுகளை படித்துக் கொண்டிருந்த நான் இறுதியில் தஞ்சமடைந்தது அம்பேத்கரின் கரங்களில் தான். ஒரு புத்தகத்தோடு என்னால் உணர்வுபூர்வமாக ஒன்ற முடிந்தது என்றால் அது அம்பேத்கரின் புத்தகங்களில் தான். மறைக்கப்பட்ட வரலாறுகளை தர்க்கரீதியாக மீட்டு எடுத்தலும், அதற்கான தரவுகளை தொகுப்பதின் பொருட்டு அவர் எடுத்துக் கொண்ட சிரத்தையும், கடினமான உழைப்பும், தேடித்தேடி புத்தகங்களை வாசிக்கும் குணமும், அவர் கொண்டிருந்த மொழி புலமையும் என எழுதுவதற்கான எல்லா முகாந்திரங்களையும் நாம் அவரிடம் இருந்து கற்றுக் தொள்ளலாம்.
எழுதுவது என்பது நான் எப்போதோ முடிவு செய்த ஒன்று. ஆனால் அதன் வடிவம் என்ன? என்ன எழுத போகிறேன்? என்பதில், போன வருடம் வரை எந்த தெளிவும் இல்லை . நான் முதலில் ஒரு கவிதை புத்தகத்தை தான் எழுதி வெளியிடுவேன் என நினைத்தேன். ஏனென்றால் கல்லூரி காலங்களை நிறைவு செய்யும் வரை, சில அமெச்சூர் கவிதைகளை தவிர வேறு எதுவுமே எழுதியதில்லை. முகநூலில் கணக்கு தொடங்கியதன் பின்னரும் கூட இப்படிப்பட்ட கவிதைகளை தான் எழுதி கொண்டிருந்தேன்.
முதல்முறை தமிழக அரசியல் பத்திரிக்கையில் "மனதினை பற்றி எழுத முடியுமா?” என கேட்ட போது நான் அத்தனை பதட்டத்துடன் தயங்கினேன். எனது தயக்கத்திற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அவர்கள் கேட்டது கட்டுரை வடிவம், அதுவரை கட்டுரைகள் எழுதுவதின் மீதான எந்த ஒரு அனுபவமும் எனக்கு இல்லை (எதிலும் அனுபவம் இல்லை என்பது இங்கு சுட்டிக்காட்டக் கூடாதது) அதையும் மீறி வாரத்திற்கு இரண்டு கட்டுரை அனுப்ப வேண்டும். ஒரு கட்டாயத்தின் பேரில் எதையும் எழுத கூடாது என்பதை நான் முழுமையாக நம்பிக்கொண்டிருந்தேன் (எந்த கட்டாயமும் இல்லை என்றால் நம்மால் எப்போதும் எழுத முடியாது என்பதும் இங்கு சுட்டிக் காட்டக் கூடாதது). இரண்டாவது காரணம் எனது துறையிலிருந்து நான் எழுத வேண்டும், அது எனக்கு சாதகமானது தான். ஆனால் 'தெரிந்ததை எழுதுபவன் நல்ல எழுத்தாளனல்ல' என்பது நான் கொண்டிருந்த நம்பிக்கை. திரு.குணசேகரன் கொடுத்த நம்பிக்கையின் பேரில் நான் எழுத தொடங்கினேன்.
மனதினை பற்றியும், அதன் வரலாறு மற்றும் வேறுபட்ட அதன் பரிமாணங்கள் பற்றியும் நான் தரவுகளை திரட்டும் போது தான், ஒன்றை மிகத்தெளிவாக தெரிந்து கொண்டேன்; அது மனம் குறித்து அதுவரை எனக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. துறைசார்ந்த எனது முதுநிலை படிப்பில் தெரிந்து கொண்டதை விட இந்த கட்டுரையின் பொருட்டு நான் தேடிச்சென்று படித்த தரவுகளில் தான் மனதினை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொண்டேன். மனதின் வடிவம் மீதான மற்றும் அதன் இருப்பின் மீதான தத்துவங்களின் தொடர்ச்சி, வரலாறு முழுக்க நிறைந்திருக்கிறது. நூல் பிடித்து, நூல் பிடித்து சென்றால் ஹிப்போகிரேட்ஸின் காலத்திற்கும் முன்னால் எங்கோ சென்று கொண்டிருக்கிறது.
மனதின் தத்துவங்களை எல்லாம் படிக்க தொடங்கியபோது அத்தனை தத்துவங்களையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி அதனை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். அது எத்தனை பேராசை என பின்பு தான் புரிந்தது. பொருட்காட்சிகளில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிகள் சூழ்ந்த ஒரு அறையில் மாட்டிக் கொண்டதை போல மனதின் தத்துவங்களை படிக்கும்போது உணர்ந்தேன். மனதின் பரிமாணங்களை ஒரு நேர்க்கேட்டில் புரிந்து கொள்வது அத்தனை சுலபமானது இல்லை. மனம் நம்முடைய குத,துவார்த்த பின்புலங்களில் தான் வெளிப்படுகிறது. ஒரு புராண கவாதியும், அறிவியலாளனும் மனதினை அணுகும் முறை வேறு வேறானது. நாம் நிறைய நேரங்களில் நமக்கு ஏற்றவாறு மாா 'தன் தத்துவங்களை புரிந்து கொள்கிறோம் அல்லது உள்வாங்கி கொள்கிறோம். மனதினை பற்றிய இந்த அறிவுசார் வெற்றிடம் தான் அதன் மாயபிம்பங்களுக்கும் காரணமாய் இருக்கிறது என்பது புரிய தொடங்கிய போது நான் இந்த கட்டுரையை எழுத தொடங்கினேன்.
முடிந்தவரை எளிய மொழியில், நாம் நமது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் நெருக்கடிகளின் அடிப்படையில், மனதினை பற்றிய நாம் கொண்டிருக்கும் சில அடிப்படையற்ற நம்பிக்கைகளின் | பின்னணியில் அத்தனை கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன்.
மனதின் ஆரோக்கியம் நிமித்தமாக நாம் செய்ய வேண்டிய முதன்மையான விஷயங்களில் முக்கியமான ஒன்று மன ஆரோக்கியம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வது தான். வெறும் நோயற்ற நிலை மட்டுமே ஆரோக்கியத்திற்கு போதுமானது அல்ல. அது தொடர்பான சில புரிதல்களை ஏற்படுத்துவது தான் இந்த கட்டுரையின் மையம். வெறும் நோய் இல்லாமல் இருப்பதனாலே நாம் நார்மலாக இருக்கிறோம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்காக நாம் உண்மையில் நிறைய பயணிக்க வேண்டும், மெனக்கெட வேண்டும். உடல் ஆரோக்கியத்தை போல், மன ஆரோக்கியத்தையும் நாம் முன்னெடுக்க வேண்டிய அவசியங்களை மனதின் பல்வேறு பரிமாணங்கள் வழியாக இந்த கட்டுரைகளில் பேசியிருக்கிறேன்.
என் மீது நம்பிக்கை கொண்டு எனது கட்டுரைகளை தொடர்ச்சியாக பிரசுரித்த தமிழக அரசியல் பத்திரிக்கைக்கும், அதன் நிர்வாக ஆசிரியர் சுந்தர்ராமன் மற்றும் ஆசிரியர் லட்சுமணன் அவர்களுக்கு நான் நிச்சயம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
இதை புத்தகமாக தொகுக்க நான் விருப்பப்பட்டதும் எந்த ஒரு கேள்வியும் இல்லாமல் பதிப்பிக்க சம்மதித்த கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும், உயிர்மை பதிப்பகத்திற்கும் அதன் நிர்வாக ஆசிரியர் செல்வி ராமச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி.
புத்தகத்தின் அட்டை வடிவமைப்புக்காக நான் அணுகியவுடன் அதை செய்து கொடுக்க சம்மத்தித்து, என்னிடமும் என் மனைவியிடமும் அத்தனை இயல்பாக பேசி, சில நாட்களிலேயே வரைந்து கொடுத்த திருட்ராட்ஸ்கி மருது அவர்களுக்கு நான் நிச்சயம் கடமைப்பட்டிருக்கிறேன்.
மனதினை பற்றி நான் வாசிக்க தொடங்கியதே எனது பேராசிரியர் மரு. திருநாவுக்கரசு அவர்களின் புத்தகங்களில் இருந்து தான், அவரின்றி என்னால் அத்தனை சுலபமாக மனதினை பற்றி புரிந்துகொண்டிருக்க முடியாது. ஒரு மாணவனாக என்னால், அவரின் சாயல் என் மீது படர்வதை தவிர்க்கவே முடியாது. இந்த கட்டுரைகளில் கூட நிறைய இடங்களில் மனம் பற்றி அவர் கொண்டிருந்த பார்வைகளே என் வழியாக வெளிப்பட்டிருக்கிறது. ஒரு மாணவன் ஆசிரியரின் பார்வைகளை பிரதிபலிப்பதில் ஒன்றும் தவறில்லை என நினைக்கிறேன். அந்த வகையில் எனது பேராசிரியருக்கு நன்றி.
எனக்கு எப்போதும் நம்பிக்கையை அளிக்கும், என் மீது அத்தனை அக்கறையும் அன்பும் கொண்ட அன்புமதி அக்கா, குணசேகரன் மாமா அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். அவர்கள் இல்லாமல் இந்த புத்தகம் நிச்சயம் சாத்தியம் இல்லை.
எனது மனைவி டாக்டர் சரிதா, எனது குழந்தைகள் சித்தார்த், ராதிகா என் தந்தை திரு. இளங்கோவன் மற்றும் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் அப்பா துருவாசன், அம்மா விஜயா, அக்கா சங்கீதா, தங்கை ராஜலட்சுமி, மங்களம், ஐஸ்வர்யா என அனைவரையும் நான் இங்கு நினைவு கொள்கிறேன்.
நான் எப்போதும் சொல்வது தான், இந்த எழுத்து மட்டும் தான் என்னுடையது அதற்கு பின்னால் நிறைய பேருடைய உழைப்பு இருக்கிறது, தியாகம் இருக்கிறது, கண்ணீர் இருக்கிறது, அன்பு இருக்கிறது. நான் எப்போதும் ஒரு கண்ணாடியை போல் அவர்களது இந்த பரியங்களை பிரதிபலிக்கிறேன் அவ்வளவே.
நன்றியுடன்
சிவபாலன் இளங்கோவன்
சென்னை 18/12/2017