naam-dravidar

 

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/naam-dravidar
நூல் அறிமுகம்

 

 

 

முனைவர் ப. கமலக்கண்ணன்

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்

தமிழ்த்துறை

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு - 638 004

 

தமிழகத்தின் மிகப்பெரும் தன்மான இயக்கத்தின் தந்தையாகவும், சீர்திருத்தத்தின் தனிப்பெருந்தலைவராகவும் திகழ்ந்தவர் தந்தை பெரியார். நடுங்கும் வயதிலும் நடுங்காத கொள்கை பிடிப்பு உள்ளவராய் சமுதாயத்தில் சிந்தனைப் புரட்சியையும், சமுதாய மற்றும் இலக்கிய மறுமலர்ச்சியையும் உண்டாக்க அரும்பாடுபட்டவர்.

 மனிதனுடைய பகுத்தறிவை அளவுகோலாகக் கொண்டு வாழ்வின் பல்வேறு இயல்புகளையும், நிலைகளையும் , அமைப்புகளையும் உண்மைகளையும் கண்டறிந்து மாந்தரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

 மனித மாண்பு, மனிதநேயம், மனித உரிமை ஆகியவற்றைப் பெற்று வாழ்ந்திடவும், சமத்துவம், சமூக பொருளாதாரம், அரசியலில் உரிமை பெற்றிடவும் தமிழகத்தில் சில இயக்கங்கள் எழுச்சி கொண்டன. இதில் புதிய சத்தியாக உருவெடுத்தது திராவிட இயக்கம் எனலாம்.

 தமிழ் மொழியின் சீர்மையையும், தமிழினத்தின் மேன்மையையும் உலக அரங்கில் கொண்டு சேர்த்தவர் கால்டுவெல் ஆவார். இவரது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் தமிழின் தொன்மை, வளமை, தூய்மை முதலிய செம்மைப் பண்புகளையும் தமிழினத்தின் பண்பாடு, நாகரிகத்தையும் உலக மக்களிடம் எடுத்துச் சென்றன. 'திராவிடம்' எனும் சொல்லை முதன் முதலில் மொழி நூல் உலகில் அறிமுகப்படுத்தியவர். இன்றைக்குத் தென்னிந்தியப் பல்கலைக் கழகங்களில் திராவிட மொழிகள் ஏற்றமும் தோற்றமும் பெற்று விளங்குவதற்கு இவரே காரணமாவார்.

 மானுடத்தின் கவலையற்ற நல்வாழ்வுக்கும் திராவிடரின் நல் வாழ்வுக்கும் தன்மானக் கொள்கை இன்றியமையாதது என்பதை தந்தை பெரியார் உணர்ந்திருந்தார்.

 1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு நடத்தினார். இதன் நோக்கம் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழிவகை காண வேண்டும். எனவே இதிலும் சமூக நீதி பிரச்சினையையே மையமாக முன் வைத்தார். இவ்வாறு திராவிட இயக்க உணர்வு இந்த நூற்றாண்டுத் தமிழரின் நாடி நரம்புகளில் நீக்கமற பரவி கிடக்கிறது. தமிழர்கள் அனைவரும் தன்மானம் உடையவர்களாக அறிவுடையவர்களாக குறிப்பாக மனிதர்களாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சமூக நீதியின் தந்தை பெரியாரும், அவர் இயங்கமும் பணியாற்றினர்.

 இலக்கியத்தின் மூலம் வார்த்து அனுப்பப்படும் எத்தகைய கருத்தும் சமுதாயத்தை எளிதில் சென்றடையும். ஏனெனில் கலை இலக்கியங்களுக்கு உள்ள ஆற்றல் அத்தகையது. கலை இலக்கிய முயற்சிகளைக் கைகழுவிய எந்த இயக்கமும் மக்களால் கைவிடப்பட்டு விடும். ஆனால் ஒரு கால கட்டத்தின் தேவையாய் திராவிட இயக்கக் கவிஞர்களின் கவிச்சிந்தனைகள் ஒலித்தன. கவிதை இங்கே ஒரு கருவிதான். ஆனால் இனத்தை, மொழியை, சீர்திருத்தத்தை பற்றிய அக்கறை அரும்ப இவைகள் காரணமாக அமைந்தன.

 திராவிட இயக்க இலக்கியக் களங்கள் சமுதாயத்தில் நெடுநாட்களாகப் புரையோடிப்போன பழமைகளையும் மூடப் பழக்கங்களையும் நையாண்டிச் செய்தும் சாதி மறுபாடுகளை சாடியும், காதல் மற்றும் கலப்புத் திருமணங்களை வரவேற்றும் பங்களிப்பை செய்துள்ளன.

 திராவிட இயக்கத்தாரின் படைப்புகளும் அவர்தம் இலக்கண இலக்கிய ஆய்வுகளும் தமிழ் இலக்கிய வரலாற்றை உண்மையாக வடித்துக்காட்ட பெரிதும் துணை புரிந்தன.

 திராவிட இயக்கமானது சமூக நீதி, இட ஒதுக்கீடு, தமிழ்மொழி, இனம், நாடு ஆகியவற்றின் மேம்பாடு போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கவிதை, நாடகம், இதழ்கள், திரைப்படம் போன்ற ஊடகங்களில் தங்களது இருப்பை தக்கவைத்துக் கொண்டனர்.

 வருணாசிரமக் கோட்பாடு, தனிமனித கோட்பாடு ஆகிய இரண்டையும் எதிர்த்து வளர்சிதை மாற்றமுறச் செய்து சமுதாயக் கோட்பாடாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்திற்கே உண்டு.

 திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்பது இன்றைய சமுதாயக் கட்டமைப்பினை முழுமையாக மாற்றி சாதி சமய மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்குவதுதான் என்பதை அழுத்தமாக தமது இலக்கியப் படைப்புகளைப் படைத்தனர்.

 இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் மீண்டும் எழுச்சி பெற வேண்டும். இந்துத்துவம் மேலோங்கி வளர்ந்து வரும் இத் தருணத்தில் திராவிட இயக்கம் தமது கருத்தியலையும், செயல்பாடுகளையும் தீவிரப்படுத்திக் கொள்வது அவசியமாகும். தமிழகத்தில் சாதி அமைப்புகள் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றன. பல்வேறு கடவுள் வழிபாடுகள் தோன்றிய வண்ணம் உள்ளன. இத்தகைய சூழலில் திராவிட இயக்கத்தின் தேவை காலத்தின் கட்டாயமாகிறது.

 மனித உரிமைகள் எந்த வகையில் பாதிக்கப்பட்டாலும் அதனைக் களைய வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தவர். மனித மாண்பையும், மனிதத்துக்குள் சமனியத்தை நிறுவுவதை இலக்காகக் கொண்ட உலகு தழுவிய அறிவியல் தன்மதிப்புக் கோட்பாட்டாளரான தந்தை பெரியாரின் சிந்தனைகள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு நடுநிலையான ஒரு ஆய்வாக இந்த நூல் வெளி வருகிறது.

 தந்தை பெரியாரின் சிந்தனைகள் குறித்த தேடலுக்கும், தேடியப் பயன்பாடுகளைக் கணிப்பதற்கும் தேவை இருக்கிறது என்பதின் அடிப்படையில் உருவானதுதான் இந்த நூல். தமிழனின் மொழி, இனம், பண்பாடு, சாதி, சமயம், அரசியல் சார்ந்த நடப்புகள் குறித்து பெரியாரின் சிந்தனைகள், மொழியின் கூர்மையான ஒரு பகுதியாக விளங்கும் இலக்கிய வளம் குறித்த பெரியாரின் பார்வை ஆகியவை இந்த ஆய்வு நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

 இந்த நூல் முழுமை பெறவும், உருவாகவும் ஒத்துழைப்பும் நிதி உதவியும் அளித்த தமிழ் வளர்ச்சி இயக்குநர் (தமிழ் வளர்ச்சி இயக்ககம்) அவர்களுக்கு என் நன்றி.

 இந்த நூலுக்கு அழகிய அணிந்துரை வழங்கிய அருமை மாணவர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செ.சதீஸ்குமார் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

 இந்த நூலை திருத்தம் செய்து உதவிய சிவகிரியிலுள்ள பாரதியார் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ஆ.ரேவதி அவர்களுக்கும் நன்றி

 இந்த நூலை அழகாக கட்டமைத்த காவ்யா சண்முகசுந்தரத்திற்கும் காவ்யா பதிப்பகத்திற்கும் எனது உளம் நிறைந்த நன்றி.

 சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை பேராசிரியர்கள் முனைவர் சா.சிவமணி, முனைவர் அர.ஜோதிமணி, பேரா.க.இராக்கு, முனைவர் ந.மணிகண்டன், முனைவர் இரா.விஸ்வநாதன் மற்றும் திராவிட இயக்க ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் ச.வேணுகோபால், மு. மகேந்திரன், ப.கெளரிசங்கர், அ.சேதுபதி, இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கா.கிருத்திகா, பெ.தமிழ்ச்செல்வி, ஈ. செளந்தர்யா, திருமதி நித்யா ஆகியோருக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.

 தொடக்கம் முதல் முடிவு வரைப் படித்துப் பார்த்து, சுவைத்து, விவாதித்து, ஆலோசனைகளை வழங்கி விளக்கமும் உற்சாகமும் தந்தவர் எனது அன்புத் துணைவியார் முனைவர் சி.அங்கயற்கண்ணி இவர்தான் இந்த நூலின் முதல் வாசகர்.

 இந்த ஆய்வு சிறக்க ஒல்லும் வகையால் அல்லும் பகலும் ஆக்கம் அளித்து அவ்வப்போது ஆற்றுப்படுத்திய நெறியாளர் முனைவர் மா.மயில்சாமி அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

 இந்த நூல் உருவாவதற்குக் காரணமாக அமைந்து எப்போதும் எனது உள்ளத்தில் உளமார வீற்றிருக்கும் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உடன்பிறந்தோர் திரு.ப.முத்தமிழன், திரு.ப.தீனதயாளன், சகோதரி திருமதி.ப.வசந்தி பத்மநாபன் ஆகியோரையும் எனது அன்பு நிறைந்த பெற்றோரையும் அன்புடன் நினைத்துப் பார்க்கிறேன்.

மேலும் பெரியாரின் கருத்துக்களை என்னோடு விவாதித்து விளக்கமளித்து ஆய்வுக்கு உறுதுணையாக விளங்கிய சிங்காரவேல் நகர் திரு. சி. சின்னசித்தன் அவர்களுக்கும் என் நன்றி.

Back to blog