நாம் திராவிடர்
பெரியாரின் சிந்தனைகள்
நமக்கென்று ஆய்வுச் சிந்தனைகள் நம் மொழியில் இல்லாமல் இல்லை. தொல்காப்பியப் பொருளதிகாரமானது தமிழரின் திறனாய்வுக் கருத்துகளின் விளைவாக எழுந்த ஒரு விதிமுறை இலக்கணமாகும். அதேபோல நன்னூலானது அறம், பொருள், இன்பம், வீடு போன்ற நூற்பயன்களைக் கூறி வாழ்விற்குப் பயன் தருவது எதுவோ அதுவே இலக்கியம் என்ற பயன்பாட்டுக் கோட்பாட்டை நமக்குத் தருகின்றது. இதன்மூலம் உறுதிப்பொருள்கள் நான்கும் உடையவையே நூல்கள். அத்தகைய தமிழகத்தின் சிறந்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட நமது இலக்கியங்கள் மற்றும் மொழி குறித்த பெரியாரின் கருத்துகளை விரிவாகக் காண்பதே இந்நூலின் அடிப்படை நோக்கமாகும்.
பெரியார் அடிப்படையில் ஒரு சீர்திருத்தவாதியாவார். திராவிடர்களில் குறிப்பாகத் தமிழர்கள் இந்துமதம், ஆரியர், சாதி, மூடநம்பிக்கை போன்றவைகளால் தங்களின் சுயமரியாதையை இழந்துள்ளனர். எனவே தமிழர்களிடமும், தமிழ் இலக்கியங்களிலும் ஊடுருவிய மேற்கூறிய கூறுகளைப் பிரித்துத் தனிமைப்படுத்திவிட்டால் அவர்கள் தாமே முன்னேறிவிடுவர் என்ற அடிப்படையில் இயங்கினார்.
பெரியாரின் கலை, இலக்கியம் குறித்த கருத்துகள் அன்றைய காலக் கட்டங்களில் தேவையான ஒன்றாகவே கருதப்பட்டன. உலகில் எந்த ஒரு சீர்திருத்தவாதியும் இலக்கியம், மொழி போன்றவற்றில் சீர்திருத்தம் தேவை என்பதை உணர்ந்து உரைத்தவர் இல்லையென்றே கூறலாம்.
இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் மூடநம்பிக்கைக் கூறுகளைக் தனித்தனியே பிரித்து எடுத்துவிட்டால் இலக்கியமானது முற்போக்குத் தன்மை அடைந்துவிடும். மொழி என்பது சமுதாயத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே அந்த மொழியைச் சீர்திருத்தி நவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியார் தமது கருத்துகளை வெளியிட்டார்.
பெரியார் தான் வாழ்ந்துவந்த கால கட்டத்தில் வழங்கி வந்த நம்பிக்கைகள், விழாக்கள், சமயம், மதம் பற்றிய சிந்தனைகள் அனைத்தையும் அறிந்து வைத்திருந்தார். மேற்கூறியவற்றிலிருக்கும் ஒழுக்க கேடுகள் இந்த நாட்டைச் சீர்குலைக்கின்றன. எனவே, இந்தச் சமுதாயம் ஏற்றம் பெற வேண்டும் என்றால் ஒழுக்கம், பகுத்தறிவு, அறிவியல், சுயமரியாதை போன்ற கூறுகள் அவசியம் என்பதைப் பெரியார் நன்கு உணர்ந்திருந்தார்.
கலை, இலக்கியம், மொழி என்பவை அந்தந்தக் கால மக்களின் நாகரீகம், பண்பாடு, போன்றவற்றை எடுத்துக்காட்டும் தன்மை உடையன. ஆனால் அத்தகையவற்றிலும் மதம், சாதி போன்றவை புகுந்து இரண்டறக், கலந்துவிட்டதைப் பெரியார் தமக்கே உரிய முறையில் எடுத்துக் கூறினார். பெரியாரின் பேச்சும் எழுத்தும் பெரும்பாலும்,
சாதி ஒழிப்பு
மத எதிர்ப்பு
பெண்ணடிமை ஒழிப்பு
கைம்பெண் மணம்
போன்ற பல்வேறு சீர்திருத்தக் கூறுகளின் மையப் பொருள்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. பெரியார் அடிப்படையில் முறையாகக் கல்வி கற்றவர் அல்லர். தமது பட்டறிவின் மூலம் கண்டு, கேட்ட அனுபவங்களின் மூலம் இந்த சமுதாயத்தைச் சீர்திருத்த எண்ணினார். பெரியார் சிந்தனைகளுக்கு அடிப்படையாவன
ஒழுக்கம்
சீர்திருத்தம்
பகுத்தறிவு
அறிவியல்
சுயமரியாதை
போன்ற பல்வேறு இன்றியமையாக் கூறுகளேயாகும். பெரியாரின் இலக்கியம், மொழி, கலை குறித்த கருத்துகள் அனைத்தும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகவியல் அணுகுமுறையாக உள்ளது.
சான்றுகள்
இந்த ஆய்விற்குப் பெரியாரின் கட்டுரைகளையும், பேச்சுகளையும் தொகுத்து வே.ஆனைமுத்து வெளியிட்டுள்ள நூல்களான,
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி - 1
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி - 2
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி - 3
என்ற மூன்று தொகுதிகளும்,
பெரியார் கணினி - தொகுதி - 1
பெரியார் கணினி - தொகுதி - 2
என்னும் இரண்டு தொகுப்புகளும் முதன்மைச் சான்றுகளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆய்வு எல்லை
பெரியார் தமது பேச்சாலும் செயலாலும் தமிழின் மக்களைக் கவர்ந்து எல்லா நிலைகளிலும் தலைமை ஊற்றாக விளங்கியவர்.
பெரியார் எனும் சிந்தனை ஊற்று பல்கிப் பெருகித் தமிழ்ச் சமுதாயத்திற்குப் பல்வேறு நிலைகளில் பயன்பட்டது. இத்தகைய சமுதாயத்தின் இலக்கியம், மொழி, கலை போன்ற கலாச்சாரப் பயன்பாட்டுக் கூறுகள் பற்றிய பெரியாரின் கருத்துகளை அறிந்து அவரின் முடிவை எடுத்துரைக்கும் ஆய்வாகவும், இலக்கியம் அதன் பயன்பாடு அவற்றின் நிறை , குறைகள் போன்றவற்றையும் மொழியின் தன்மை, பயன்பாடு, கலைகளினால் ஏற்படும் வளர்ச்சி போன்ற பல கருத்துகளை எடுத்துக் கூறி இவற்றைப் பற்றிய பெரியாரின் அணுகுமுறை எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பற்றியும் ஆய்வதே இந்த நூலின் எல்லையாகவும் அமைந்துள்ளது.
ஆய்வுக்கு அடிப்படைக் காரணம்
தமிழகத்தைப் பிணைத்திருந்த சாதிக் கொடுமை, தீண்டாமை இருள், நால்வருணப் பாகுபாடு, மூடநம்பிக்கை, மதத்தின் செயல்பாடு, பெண்ணடிமை, கைம்மைக் கொடுமை, வர்க்கச் சுரண்டல் போன்ற எண்ணற்ற சமுதாய இழிவுகளை உடைத்தெறியக் காலம் உற்பத்தி செய்த சீர்திருத்தவாதியாகப் பெரியார் விளங்கினார். இந்தச் சமுதாயத்தின் பாரம்பரியமானது காலங்காலமாய் எவ்வாறெல்லாம் மறைக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டும் ஒரு எக்ஸ்ரே கருவியாகப் பெரியார் விளங்கினார்.
இலக்கிய இடைச்செருகல், மொழியின் சிதைவு, கலையின் கட்டுகோப்பில்லாத தன்மை போன்ற பல செய்திகளைப் பெரியார் நமது கையிலே எடுத்துக் கொண்டு சில கருத்துகளை வெளியிட்டார். எனவே அவருடைய கருத்துகளை நுணுகி ஆராய்ந்து அவற்றின் உண்மை நிலையை உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ற விருப்பத்தின் வெளிப்பாடே இந்த ஆய்வை மேற்கொள்ளக் காரணமாக அமைந்தது.
ஆய்வு நோக்கம்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமுதாயம் பெரியாருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. ஒருவர் அண்டை மாநிலத்தில் பிறந்து பிறமொழி பேசுபவராக இருந்தும் தமிழ்மொழிக்கும் சமுதாயத்திற்கும் இத்துணை வேகத்தோடும், அக்கறையோடும் உழைத்து இருக்கிறார் என்றால் அது பெரியாரைத் தவிர வேறு எவருமில்லை எனலாம். அய்ரோப்பாவிலிருந்து பாதிரியார்கள் தமிழகத்திற்கு வந்து தமிழ் கற்றுப் பல மொழிபெயர்ப்புகளையும், அகராதிப் பணிகளையும், ஒப்பிலக்கண நூல்களையும் வெளியிட்டு நம்மவருக்கும், நம் மொழிக்கும் பெருமை சேர்த்தது போலப் பெரியாரும் தம் சிந்தனை, உழைப்பு போன்ற பலவற்றையும் தந்து உதவினார். அத்தகைய பெரியாரின் ஆராய்ச்சிகளை மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணங்களின் பிரதிபலிப்பே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
ஆய்வு முறைகள்
பெரியாரின் சிந்தனைகள் எந்தெந்தத் துறைகளில் அமைந்துள்ளன என்பதை எடுத்துக் கூறியுள்ளதால் இந்த ஆய்வு பகுப்பு முறையில் அமையும். மேலும் பெரியாரின் கருத்துகள் ஒவ்வொரு துறையிலும் ஊடுருவியுள்ளதை எடுத்துக் காட்டி விளக்கம் கூற உள்ளதால் இந்த ஆய்வு விளக்கமுறை ஆய்வாகவும், அவருடைய கொள்கைகள், கோட்பாடுகள் நம் சமுதாயத்திற்குப் பயன்படும் விதத்தை எடுத்துக்கூறி மதிப்பீடு செய்ய இருப்பதால் மதிப்பீட்டு ஆய்வாகவும் அமைகின்றது.
பிறமொழிச் சொற்கள்
பெரியாரின் பேச்சும், எழுத்தும் பெரும்பாலும் எளிய நடையில் இயல்பாக அமைந்துள்ளதால் இடையே தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாகப் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன. எனவே, அவருடைய மேற்கோள்களில் மட்டுமல்லாமல் இந்த ஆய்வேட்டில் பெரும்பாலான இடங்களில் நவீனம், விமர்சனம், பிரச்சாரம் போன்ற பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. பெரியாரின் கருத்துகள் சொற்பிழைகளோடு காணப்படுகின்றன. அத்தகைய கருத்துகளை ஆய்வுக்கு மேற்கோளாக எடுத்துக்காட்டும்போது அப்படியே கையாளப்பட்டுள்ளன. ஒரே மேற்கோள் பல இடங்களில் தேவையின் பொருட்டு எடுத்தாளப்பட்டுள்ளன.
ஆய்வுக்களன்
பெரியாரின் சிந்தனைகளில், கருத்துகளில் விரவியிருக்கும் இலக்கியம், மொழி, கலை ஆகியவற்றின் பல்வேறு கூறுகளின் தன்மைகளையும், பயன்பாடுகளையும் எடுத்துக்காட்டுகின்ற நிலையில் இவை ஆய்வுக்களன்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
ஆய்வுக் கட்டமைப்பு
இந்த நூல் முன்னுரை, முடிவுரை நீங்கள் ஏழு இயல்களாக அமைந்துள்ளது.
1. பெரியாரின் இலக்கியக் கொள்கை
2. பெரியாரின் கொள்கைகளும் தமிழ் இலக்கியங்களும்
3. பெரியாரின் மொழிக் கொள்கை
4. பெரியாரின் பார்வையில் தமிழ்க் கலைகள்
5. பெரியாரின் பார்வையில் இலக்கியப் பாத்திரப் படைப்புகள்
6. பெரியாரின் சமூகவியல் பார்வை
7. இலக்கியம், மொழி, கலை குறித்த பெரியாரின்
சிந்தனைகள் வழி வெளிப்படும் கோட்பாட்டுத் தீர்வுகள்
8. பெரியாரும் திருக்குறளும்
9. பெரியார் கொள்கைகளும் புத்திலக்கியங்களும்
ஒன்று
'பெரியாரின் இலக்கியக் கொள்கை' எனும் இந்த இயலில் இலக்கியம் என்பதற்குப் பெரியார் கூறும் விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கியங்களின் தன்மைகள், தமிழ் இலக்கியங்களில் பெரியாரால் ஏற்றுக் கொண்டவைகளைப் பற்றி அவரது கருத்துகள், 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் சமயத்தைப் பொதுமை உணர்வுடன் நோக்கிய சித்தர்கள், 19 நூற்றாண்டின் சீர்திருத்தவாதியான வள்ளலார் ஆகியோரின் கருத்துகளோடு பெரியாரின் கருத்துகளை ஒப்பிட்டுக் காணும் போக்கு, இதிகாச, புராணங்களைப் பற்றிய காணும் ஆகிய பல்வேறு கூறுகள் எடுத்தக்காட்டப்பட்டன.
இரண்டு
'பெரியாரின் கொள்கைகளும் தமிழ் இலக்கியங்களும் இலக்கியம் குறித்துப் பெரியார் சில கொள்கைகள், கோட்பாடுகள், எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார் என்று தெரிகிறது. ஒழுக்கம், பாத்தறிவு, சமத்துவம், அறிவியல், சுயமரியாதை, சீர்திருத்தம் போன்ற இவரது சமுதாயக் கொள்கைகள் தமிழ் இலக்கியங்களில் உள்ளனவா எண்பதையும், பெரியார் காண விழையும் இலக்கியத்திற்கும், தமிழ் இலக்கியத்திற்கும் உள்ள முரண் பாடுகள், இடைவெளிகள் அகியவற்றை அவரது பார்வையிலிருந்து மதிப்பீடு செய்வதே நோக்கமாகும்.
மூன்று
'பெரியாரின் மொழிக் கொள்கை ' இந்த இயல் மூன்றாவதாக அமைகிறது. மொழியின் பயன்பாடு, மொழியின் இன்றியமையாமை, தாய்மொழியின் அவசியம், தாய்மொழிப் பற்று தேவைதானா? என்பன குறித்த அய்யப்பாடுகள், எழுத்துச் சீர்திருத்தம் தேவை எனக் கருதும் பெரியாரின் விளக்கங்கள், அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப மொழியின் செயற்பாடுகள், கலைச்சொல்லாக்கங்களின் தன்மை, பெரியாரின் மொழிநடை போன்ற பல்வேறு விளக்கங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
நான்கு
'பெரியாரின் பார்வையில் தமிழ்க் கலைகள்' கலை என்பது பயன்பாடு உடையதாக இருக்க வேண்டுமென்பர். கலைகள் குறித்து இலக்கிய ஆய்வாளர்களின் வரையறைகள், பெரியாரின் கருத்து களுக்குப் பொருந்திவரும் தன்மைகள், கலையின் பயன்பாடு, வகைகள், கலைகளுக்குள்ள வேறுபாடுகளின் முக்கியத்துவம், தமிழிசையின் அவசியம், நாடகக் கலையின் தன்மைகள் போன்ற பல்வேறு கருத்துகள் எடுத்துக்காட்டப்பட்டன.
அய்ந்து
'பெரியாரின் பார்வையில் இலக்கியப் பாத்திரப் படைப்புகள்' இலக்கியங்களில் பெரியாரின் அணுகுமுறைக்கு ஏற்ப அமைந்துள்ள பாத்திரப் படைப்புகளின் பாங்கும், தமது கோட்பாடுகளைக் கொண்டு அவரின் அணுகுமுறைகள் அமைந்துள்ள தன்மைகளும், பெண் பாத்திரங்கள் குறித்த அவர்தம் கருத்துகளும், இராமாயணம், சிலப்பதிகாரம், மகாபாரதம், பெரிய புராணம் போன்ற பல இலக்கியங்களில் இடம்பெற்ற பாத்திரப் படைப்புகளைப் பற்றிய தமது கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளதையும் இவரது முரண்பட்ட மற்றும் உடன்பாடான பல கருத்துகளையும் எடுத்துக் காட்டியுள்ளது.
ஆறு
'பெரியாரின் சமூகவியல் பார்வை' பெரியார் பணிகளின் அடிப்படைத் தன்மைகளை விளக்கி எடுத்துக் கூறிச் சமூகவியல் அடிப்படையில் சில முடிவுகளைப் பெரியார் கூறிய நிலைகளையும், இன்றைய நடைமுறையில் பெரியாரின் கருத்துகள் மக்களால் எவ்வாறு நுகர முடிகிறது என்பன போன்ற பல்வேறு நிலைப்பாட்டையும் ஆய்கிறது.
ஏழு
இலக்கியம், மொழி கலை குறித்த பெரியாரின் சிந்தனைகள் வழி வெளிப்படும் கோட்பாட்டுத் தீர்வுகள்' மேற்கூறிய ஆறு இயல்களுக்கும் பொதுவான ஒரு முடிவைத் தரும் இயலாக இது அமைகிறது. இலக்கியம், மொழி, கலை குறித்துப் பெரியாரின் மதிப்பீடு எவ்வாறு அமைந்துள்ளது? என்பதை எடுத்துக் கூற முற்பட்டுள்ளது. மேலும் பெரியார் கருத்துகளின் உண்மைத் தன்மைகளையும், தேவையின் இன்றியமையாமை பற்றியும் மிகவும் கடினமாக எடுத்துரைக்கின்றது.
மனித இழிவை, மனித சமனியத்தை நிலைநாட்ட அடிப்படையாய் அமைந்த பணிகளோடு இலக்கியம், மொழி, கலை போன்றவற்றின் வளர்ச்சிக்காகப் பெரியார் கூறிய கருத்துகளும் பிணைந்திருப்பதே இந்த நூலின் தனித்தன்மையாகும்.
எட்டு
'பெரியாரும் திருக்குறளும் ' உலக இலக்கியங்களில் நீதி வழங்குவதில் சிறந்த நூல் திருக்குறள் ஒன்றுதான் என்று பெரியார் புகழ்ந்துள்ளார். திருக்குறளில் இந்து, இந்துமதம், சமயம், கடவுள் எனும் சொற்கள் இடம்பெறவில்லை.
திருவள்ளுவர் கூறியுள்ள கருத்துக்கள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுடையதாக இல்லை. திருக்குறளை ஊன்றிப் படிப்பவர்கள் உறுதியாகத் தன்மான உணர்ச்சிப் பெறுவார்கள் என்பதை குறிக்கும்.
ஒன்பது
'பெரியாரும் திருக்குறளும் திராவிட இயக்க எழுத்தாளர்களால் இலக்கியத்திலுள்ள கவிதை, சிறுகதை, புதினம், நாடகம் முதலிய துறைகள் புதுமைமிகு எழுச்சியுண்டாயிற்று. தந்தை பெரியாரின் கொள்கைகளால் தாக்குண்டு சமுதாயத்தை சீர்திருத்தம் பணிகளை மேற்கொண்டன. ஏழ்மை மிளிரத் தொடங்கியது. அரசியல், சமுதாயம், கலை, பண்பாடு முதலிய முறைகளிலும் பகுத்தறிவுக் கண்கொண்டு காணுகின்ற வழக்கத்தை திராவிட எழுத்தாளர்கள் ஏற்படுத்தினர் என்பதே காணலாம்.