மதங்களும் சில விவாதங்களும்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/mathankalum-sila-vivaadhangalum
முன்னுரை

பேசுவதே தொழில். 37 ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றி 2003ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். நாட்கள் மெல்ல நகர்ந்தன. வெறுமையான நாட்களாகத் தோன்றின. கணினி உலகிற்குள் மெல்ல ஒரு கைநாட்டுக்காரன் போல் நுழைந்தேன். முதலில் வெறும் தேடல்களும், வாசிப்புகளுமாய் இருந்தேன். பின் ஆங்கிலத்தில் ஒரு இணையப் பக்கம் - blog - ஆரம்பித்தேன். ஆரம்பித்த போது என்ன எழுதுவேன்; எப்படி எழுதுவேன் என்ற பயத்தோடுதான் ஆரம்பித்தேன். கடிவாளம் சிறிது கைக்குள் வந்தது போலிருந்தது. ஆனால் அதற்குள் தமிழிலும் இணையப் பக்கம் ஆரம்பித்து எழுத முடியும் என்பது தெரிந்த போது தமிழில் இணையப் பக்கத்தை 2005ல் ஆரம்பித்தேன். வெகு சில நாட்கள் இரு குதிரையிலும் பயணம் செய்ய முயன்றேன். ஆனால் தமிழ்ப் பதிவுகளுக்குக் கிடைத்த ஆதரவும், மற்ற பதிவர்களோடு கிடைத்த கருத்துத் தொடர்புகள், கேள்விகள் போன்றவை மேலும் தமிழில் எழுதும் ஆர்வத்தைத் தூண்டின. எழுதுவதில் ஒரு மகிழ்ச்சி; மக்களிடமிருந்து கிடைக்கும் எதிர்வினைகள் மேலும் மேலும் வாசிக்கவும், சிந்திக்கவும், எழுதவும் வைத்தன.

ஏற்கெனவே மதங்களைப் பற்றிய நான் கொண்டிருந்த கருத்துகளைப் பதிவாக்க ஆரம்பித்தேன். நானெப்படி பிறப்பினால் என்னோடு ஒட்டிக் கொண்ட கிறித்துவ மதத்தை விட்டு வெளியே வந்தேன் என்று எழுதினேன். மறுப்புகள் என்று அதிகம் ஏதும் இல்லை . அதோடு நிற்காது மற்ற மதங்களில் நான் கண்ட 'ஓட்டைகளைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தேன். ஒரு புறத்திலிருந்து நிறைய எதிர்ப்புகள். அவைகளுக்குப் பதிலளிக்க நிறைய வாசிக்க வேண்டியதிருந்தது. ஏற்கெனவே தேடலாக இருந்தது இப்போது ஒரு புது வேகத்தோடு வளர்ந்தது. நிறைய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. அது என்னை மேலும் புதுப் புது விஷயங்களைத் தேட வைத்தது. நல்ல ஒரு academic pursuit. மதங்களைப் பற்றிய உரையாடல்கள் நீண்டன. ஓரளவு எழுதி முடித்ததை ஒரு நூலாக்க ஓர் ஆசை எழுந்தது. பயன் - இன்று உங்கள் கைகளில் இந்த நூல்,

ஏறத்தாழ ஒன்பதாண்டுகள் தனித் தனியாக எழுதியதைத் தொகுத்து இந்த நூலாகக் கொண்டு வந்துள்ளேன். நான் எழுதி உள்ளவை எல்லாமே அங்குமிங்கும் தேடிய கருத்துக்களின் குவியலே, நிச்சயமாக எந்தப் பொய்யான தகவல்களையும் தரவேயில்லை. நம்முடைய மதங்களைப் பற்றி நமக்கே தெரியாத விஷயங்கள் பலவும் இருக்கும். அவைகளை முதன் முறையாகக் கேட்கும் போது அவைகள் உண்மையா என்ற கேள்வி மனதிற்குள் எழுவது இயற்கை. உதாரணமாக, Gospel of Judas என்றொரு நூலைப் பார்த்த போது அட்! அவரும் ஒரு நற்செய்தி சொல்லியுள்ளாரா? என்ற ஆச்சரியம் எனக்குள் வந்தது. அதுபோன்ற ஆச்சரியமான சூழலில் நான் தரும் ஒரே உறுதிமொழி - வேண்டுமென்று எங்கும் தவறான எந்தத் தகவல்களையும் இந்நூலில் தந்து விடவில்லை என்பதே.

ஒரு குறை என் நூலில் உண்டு. எங்கெல்லாம் முடியுமோ அங்கேயெல்லாம் மேற்கோள்கள் எடுத்த இடங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்துள்ளேன். ஆயினும் சில கட்டுரைகளை இணையத்திற்காக முதலில் எழுதும் போது மேற்கோள்களை அக்கட்டுரைகளில் சேர்க்கவில்லை. ஆகவே சில கட்டுரைகளில் வரும் கருத்துகள் பெறப்பட்ட இடங்கள் தெரியாது. அவைகளை நான் கொடுக்க முடியாமைக்காக வருந்துகிறேன்.

இணையத்தில் தொடர்ந்து எழுதி ஒரு நூலாக இதைக் கொண்டு வர உதவியவர்கள் பெரும்பாலும் என் கருத்துக்களுக்கான எதிரிகளே! இவர்களோடு என் கருத்துக்களுக்கு துணை நின்றவர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். இந்த இரு குழுக்களின் உந்துதலும், உதைத்தலும் இல்லாமல் போயிருந்தால் நானும் நிறைய வாசித்திருக்க

மாட்டேன்; சிந்தித்திருக்க மாட்டேன்; உறுதியாக அவைகளைத் தொகுத்து எழுதியிருக்க மாட்டேன். இவ்வளவு உதவி செய்த என் கருத்துகளின் மறுப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் என் முதல் நன்றி.

தமிழ்ப்படை, ஜமாலன், R. கோபால், தஜ்ஜால் என்ற நான்கு பதிவர்களின் கட்டுரைகளை இங்கே கொடுத்துள்ளேன். இவர்களில் தமிழ்ப் படையின் அனுமதி கேட்டு என் இணையப் பக்கத்தில் பதிந்தேன். அதை அப்படியே இந்த நூலிலும் கொண்டு வந்துள்ளேன். R. கோபால் அவர்களைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நால்வருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்நூலுக்கு அணிந்துரை கேட்டதும் சம்மதித்து அதனை உடனே கொடுத்த பேராசிரியர் முனைவர் சாமிநாதனுக்கு மிக்க நன்றி.

இதை நூலாகக் கொண்டு வர சம்மதித்து அழகிய ஒரு நூலாகக் கொண்டு வந்த 'எதிர் வெளியீடு' பதிப்பகத்தாருக்கு வெறுமனே 'நன்றி' என்று மட்டும் சொல்வதில் பொருளேது மில்லை .

தருமி

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

மதங்களும் சில விவாதங்களும் - பொருளடக்கம்

Back to blog