மந்திரமும் சடங்குகளும்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/manthiramum-sadangukalum
 
முதற்பதிப்பின் முன்னுரை

நாட்டார் வழக்காற்றியலின் (Folkloristics) பல்வேறு கூறுகளில் ஒன்றாக மந்திரமும் (Magic) மந்திரச் சடங்கு களும் (Magic Rituals) இடம்பெற்றுள்ளன. புராதன மனித னின் வாழ்வில் தோன்றிய மந்திரமானது இன்றும் நமது வாழ்வில் பல்வேறு மந்திரச் சடங்குகளின் வடிவில் நிலை பெற்றுள்ளது. இம்மந்திரச் சடங்குகளை, வெறும் மூட நம்பிக்கையென்று கூறி நாத்திகர்கள் எளிதில் ஒதுக்கி விடலாம். ஆத்திகர்கள் இச்சடங்குகளுக்குப் பல்வேறு புராண, இதிகாச ஆதாரங்களைக் கற்பித்தும் தத்துவச் சாயம் பூசியும் மேல் நிலையாக்கம் பெற்ற சமய நெறி களுடன் இணைக்க முற்படலாம். சமயத்திற்குப் புதுப் பொலிவூட்டும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் இச்சடங்கு களில் விஞ்ஞானக் கூறுகள் இருப்பதாகக் கூறி மகிழலாம்.

ஆனால் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளன் (Folklorist) இம்மூன்று அணுகுமுறைகளையும் மீறி மந்திரச் சடங்குகளை ஆராய வேண்டும். இதில் மிகவும் அவசியமானது அறிவியல் முறையிலமைந்த கள ஆய்வு (Field Work) ஆகும். கள ஆய்வில் கிடைத்தத் தரவுகளை (Materials) உள்ளது உள்ளபடி கூறுதல் என்ற முறையில், வருணனைத் தன்மையில் விளக்குவது மட்டும் ஆய்வாள் னின் கடமையாகிவிடாது. இச்சடங்குகளின் தொடக்கக் கால நோக்கம், சமுதாய வளர்ச்சிப்போக்கில் அவற்றில் நிகழ்ந்த மாறுதல்கள் ஆகியனவற்றையும் அவன் ஆராய முயல வேண்டும். இம்முயற்சியில், இலக்கியம், மானிட வியல் - வரலாறு - தத்துவம் - விஞ்ஞானம் போன்ற பல்வேறு அறிவுத் துறைகளையும் இணைத்துப் பல்துறைக் கலப்பு ஆய்வுமுறையின் (Inter-disciplinary approach)

அடிப்படையில் ஆய்வினை நிகழ்த்தும்போதே முழுமையான பயன் கிட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இம்மந்திரச் சடங்கு களைச் சமுதாயத்திலிருந்து பிரித்துத் தனித்தனியாக ஆராயா மல் எந்த விதமான சமூக அமைப்பு இம்மந்திரச் சடங்குகள் தோன்றுவதற்கும் நிலைத்திருப்பதற்கும் காரணமாக உள்ளது என்பதனையும் கண்டறிய வேண்டும்.

தமிழகத்தில் தென்மாவட்டங்களான மதுரை, காமராசர், முத்துராமலிங்கம், இராமநாதபுரம், நெல்லை , சிதம்பரனார், குமரி மாவட்டங்களில் பல்வேறு மந்திரச் சடங்குகள் இன்றும் பரவலாக வழக்கிலுள்ளன. "புராதன - பழக்கவழக்கங்கள் சமயத் தில் அடைக்கலம் புகுகின்றன' என்ற தேவிபிரசாத்தின் கூற்றுக் கேற்ப, சில மந்திரச் சடங்குகள் இம்மாவட்டங்களிலுள்ள கணக் கற்ற கிராமத் தெய்வங்களின் கோவில் திருவிழாக்களுடன் இணைந்து காணப்படுகின்றன. மேற்கூறிய அணுகுமுறையின் அடிப்படையில் இச்சடங்குகளை ஆராயும் முயற்சியில் எழுந்ததே இந்நூலாகும்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் தமிழ்க்கலை (தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடு), தாமரை, நாட்டார் வழக்காற்றியல் ஆகிய இதழ்களில் வெளியானவை. ஆயினும் கூறியது கூறல் என்ற குற்றம் இடம்பெறாதவாறு சிற்சில மாறுதல்கள் செய்த பின்னரே இக்கட்டுரைகள் இந் நூலில் இடம்பெற்றுள்ளன. சில புதிய செய்திகளும் இக்கட்டுரை களில் இணைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளை வெளியிட்டு உற்சாகமூட்டிய இதழ்களின் ஆசிரியர்கள், டாக்டர் து. சீனிசாமி, கவிஞர் கே. சி. எஸ். அருணாசலம், டாக்டர் மு. இராமசாமி ஆகியோருக்கும் இக்கட்டுரைகளை நூல்வடிவாக்கத் தூண்டிய அன்பு நண்பர் டாக்டர் தே.லூர்து அவர்களுக்கும் என் நன்றி உரியது.

முதற்கட்டுரையான 'மந்திரம்' இந்நூலில் இடம்பெற்றுள்ள ஏனைய கட்டுரைகளைப் புரிந்துகொள்ள உதவும் ஆதாரக் கட்டுரையாக அமைந்துள்ளது. மந்திரத்தின் விளைநிலமான ஆவியுலகக் கோட்பாடு, மந்திரத்தின் தோற்றம், மந்திரத்தின் அமைப்பு, மந்திரத்தின் வகைப்பாடு , மந்திரத்தின் நோக்கம், குறிப்பிட்ட சமூக அமைப்புகளில் தோன்றிய மந்திரம், மந்திரச் சடங்குகள், மந்திரத்தின் பயன்பாடு ஆகியன இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றன.

இரண்டாவது கட்டுரையான முளைப்பாரி' ஒரு புராதனச் சடங்கு, மூன்றாவது கட்டுரையான ஆடிப் பொம்மை, நான்காம் வது கட்டுரையான மதுக்கொடை ஆகியன 'மழை' என்ற செழிப்பினை வேண்டிச் செய்யும் செழிப்புச் சடங்குகளைக் குறித்த ஆய்வுகளாகும். மதுக் கொடை என்ற செழிப்புச் சடங்கின் வாயிலாக, 'அரிசி பீர்' என்ற மது வகையினைத் தயாரிப்பது குறித்த நம் முன்னோர்களின் வேதியியல் அறிவை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

ஐந்தாவது கட்டுரையான 'தச்சுக்கழித்தல், மரங்களில் வாழும் பேய்களைக் குறித்த அச்சத்தின் அடிப்படையில் தோன்றிய வினோதமான மந்திரச் சடங்கினை ஆராய்கிறது. ஆறாவது கட்டுரையான மந்திர வைத்தியம்' சில நோய்களைப் போக்க மக்கள் மேற்கொள்ளும் மந்திர வைத்தியங்களை ஆராய்கிறது.

இறுதிக் கட்டுரையான மந்திரத்தின் எதிர்காலம்' தொழில் நுட்பமும் அறிவியலும் வளர்ச்சியடைந்த நமது சமூக அமைப்பில், இனக்குழு மற்றும் நிலவுடைமைச் சமூகத்தின் கருத்தும் தங்கள் ஆதிக்கம் செலுத்துவதனைச் சுட்டிக்காட்டு கிறது. அத்துடன் இதனைப் போக்க வேண்டிய அவசியத்தையும் போக்கும் முறையினையும் குறிப்பிடுகிறது.

தனது வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் விருப்பத்தின் அடிப்படையில் புராதன மனிதனால் தோற்றுவிக்கப் பட்ட கற்பனையான தொழில்நுட்பமே மந்திரம் என்று தாம்சன் கூறுவார். இந்நூலில் இடம்பெற்றுள்ள மந்திரச் சடங்குகள் இக்கருத்தை உறுதிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. இத்துடன் இயற்கையைக் குறித்த மனிதனது தொடக்கக் காலச் சிந்தனைகளையும் அதனிடமிருந்து அவன் எதிர் நோக்கிய பயன்களையும் இச் சடங்குகள் உணர்த்துகின்றன.

தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இம்மந்திரச் சடங்கு கள் சிற்சில மாறுதல்களுடன் நிகழலாம்; அல்லது இதனை யொத்த வேறு மந்திரச் சடங்குகள் நிகழலாம். ஆயினும் இந்நூலில் குறிப்பிடப்படும் மந்திரச் சடங்குகளைத் தமிழகம் முழுவதற்கும் பொதுமைப்படுத்திக் கூறிவிட முடியாது. தமிழகம் முழுவதும் முறையான கள் ஆய்வு நிகழ்த்தி, இத்தகைய மந்திரச் சடங்குகள் குறித்த செய்திகளைத் திரட்டி ஆராயும் வரை இதுபோன்ற ஆய்வுகள், பகுதி (atomistic) ஆய்வுகளாகவே அமையும். இத்தகைய பகுதி ஆய்வுகள் அனைத்தையும் இணைத்து நிகழ்த்தப்படும் ஆய்வுதான் முழுமையான (wholistic) ஆய்வாக அமைய முடியும். ஆனால் அத்தகைய முழுமையான ஆய்வினை நிகழ்த்துவதற்குரிய வாய்ப்பான சூழல் இன்னும் தமிழ்நாட்டில் உருவாக்கப்படவில்லை என்பது வருந்துதற்குரிய செய்தியாகும்.

என்றாலும் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் மட்டு மின்றி, உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலவிய - நிலவும் மந்திரச் சடங்குகளுக்கும் இந்நூலில் குறிப்பிடப்படும் மந்திரச் சடங்குகளுக்குமிடையே ஒரு பொதுவான பண்பு நிலவுவதை இந்நூலைப் படிப்பவர்கள் உணர்வர்.

எனது ஆய்வு முயற்சியில் பிரேசர், ஜியார்ஜ் தாம்சன், தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, என்.என், பட்டாச்சாரியார் ஆகியோர், அவர்களது ஆய்வு நூல்களின் வாயிலாக எனது மானசீக குருநாதர்களாகவும் வழிகாட்டிகளாகவும் அமைந் துள்ளனர். இக்குருநாதர்களை எனக்கு அறிமுகப்படுத்திய எங்கள் ஆசானும் தோழனும் வழிகாட்டியுமான பேராசிரியர் நா.வானமாமலை அவர்களை நன்றியுடன் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர்கிறேன். மேலும், இந்நூலில் நான் பயன்படுத்தி யுள்ள இயங்கியல் (Dialectical) அணுகுமுறையும் அவர்கள் கற்றுக்கொடுத்ததேயாகும்.

பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் நாட்டார் வழக்கியல் ஆய்வுகளையும் அவர்கள் பதிப்பித்த நாட்டார் கதைப்பாடல்கள், நாட்டார் பாடல்கள் ஆகியனவற்றையும் சக்தி கோவிந்தன், கி.ராஜநாராயணன், கு. சின்னப்பபாரதி ஆகியோர் தொகுத்த நாட்டார் கதைகளையும் வெளியிட்டு, தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு கொண்டவர்கள் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தார் ஆவர். இந்நிறுவனம் இந்நூலையும் வெளியிடுவது குறித்துப் பெரிதும் மகிழ்கிறேன். இந்நிறுவனத்துக்கு என் உளமார்ந்த நன்றி உரியது.

ஆ. சிவசுப்பிரமணியன்
25.8.1987

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

 

மந்திரமும் சடங்குகளும் - இரண்டாவது பதிப்பின் முன்னுரை

மந்திரமும் சடங்குகளும் - மூன்றாம் பதிப்பின் முன்னுரை

மந்திரமும் சடங்குகளும் - பொருளடக்கம்

Back to blog