மண்ணுலகையும் விண்ணுலகையும் வென்ற ஸ்டீபன் ஹாக்கிங்

மண்ணுலகையும் விண்ணுலகையும் வென்ற ஸ்டீபன் ஹாக்கிங்

தலைப்பு

மண்ணுலகையும் விண்ணுலகையும் 
வென்ற ஸ்டீபன் ஹாக்கிங்

எழுத்தாளர் இரா.கோமதி
பதிப்பாளர் வ.உ.சி.நூலகம்
பக்கங்கள் 192
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை
விலை ரூ.200/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/mannulagaiyum-vinnulagaiyum-vendra-stephen-hawking.html

 

முன்னுரை

ஆய்வகங்கள், பல்கலைக்கழக வளாகங்கள் ஆகியவற்றைக் கடந்து எளிய மக்களின் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்திய இயற்பியல் விஞ்ஞானிகள் என்று மூவரை மட்டுமே சொல்ல முடியும். நியூட்டன், ஐன்ஸ்டைன், ஸ்டீவன் ஹாக்கிங் என்ற அந்த மூன்று பெயர்கள் எல்லாருடைய ஞாபகத்துக்கும் வந்துவிடும்.

பிரபஞ்சத்தைச் சுற்றிய மனம்

நியூட்டனின் இயக்க விதிகள், குறிப்பாக மூன்றாம் விதி லட்சக்கணக்கானவர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. ஐன்ஸ்டைனோ இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபத் தோராம் நூற்றாண்டிலும் ஒரு விஞ்ஞானி எப்படி இருக்க வேண்டும்மென்பதற்கு உதாரணமாக மாறினார்.

ஸ்டீவன் ஹாக்கிங்கின் புகழ்பெற்ற 'தி பிரீஃப் ஹிஸ்டரி ஆப் டைம்' புத்தகத்தால் மட்டுமல்ல; வாழ்க்கை , தான் ஆற்றிய பணிகளால் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களைத் தொட்ட நபர் ஹாக்கிங். இயற்பியலின் பல்வேறு பிரிவுகளில் நியூட்டனைப் போலவோ ஐன்ஸ்டைனைப் போலவோ விரிந்த புலத்தில் பங்களித்தவர் அல்ல அவர். பிரபஞ்சவியலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஹாக்கிங், தனது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு காலத்திலிருந்து அதிலேயே முதன்மையான பங்களிப்புகளைச் செய்தார். பிரபஞ்சவியல் தொடர்பான ஆய்வு, பங்களிப்புகள் ஆகியவற்றைத் தாண்டி, ஸ்டீவன் ஹாக்கிங்கின் வாழ்க்கையே உலக மக்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது.

செயலிழந்தது உடல் மட்டுமே

1963ல் 21 வயதில், ஷீ நாடாவை முடிச்சுப் போடுவதில் சிரமத்தை உணர்ந்தார் ஸ்டீவன் ஹாக்கிங். 'ஆமியோடிராஃபிக் லேட்டரல் ஸ்கிலரோசிஸ்' என்ற மோட்டார் நியூரான் நோய் அவருக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. மூளை, தண்டுவடத்திலிருந்து கொடுக்கப்படும் தகவல்களுக்கேற்பத் தசைகள் செயல்படாமல் போகும் நிலை அது.

இந்த நோய் குணப்படுத்தப்பட முடியாதது என்றும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அவர் உயிருடன் இருக்க முடியும் என்றும் மருத்துவர்கள் நாள் குறித்தார்கள். அவர் மன அழுத்தத்துக்கு உள்ளானார். அத்துடன் பிரபல பிரபஞ்சவியலாளரான பிரெட் ஹாய்லியுடன் பணியாற்றுவதற்கு அவர் விரும்பியிருந்த வாய்ப்பும் தவறிப்போனது. பின்னர் அவர் மணந்து கொண்ட ஜேன் வைல்டுடனான காதலே அவரை மீட்டது. மருத்துவர்கள் கணித்த மரணத்தை அவர் தனது விஞ்ஞான வேலைத்திட்டம், அது சார்ந்த தளராத ஊக்கம் ஆகியவை வழியாகவே படிப்படியாக வென்றார். அவருக்கு வந்த நோயின் தன்மையும் மெதுவாகவே செயலிழக்கும் தன்மை கொண்டதாக இருந்ததையும் அவர் சாதகமாக்கிக்கொண்டார்.

தனது உடல் நலக்குறைவுகளுக்கும் நலிவுகளுக்கும் இடையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவில் பேராசிரியர் டென்னிஸ் சியாமாவின் மேற்பார்வையில் முனைவர் பட்டத்தை மேற்கொண்டார். தனது ஆய்வுத்தாளிலேயே லட்சிய மனிதராக நினைத்த பிரெட் ஹாய்லின் கருதுகோள்களுடன் முரண்பட்டார்.

விரியும் அண்டம், நொறுங்கும் கருந்துளை

விரிந்து கொண்டே இருக்கும் பேரண்டத்தில் பொருளின் அடர்த்தி மாறாமல் இருக்கும் என்ற ஸ்ட்டி ஸ்டேட்' கோட்பாட்டை முன்னிறுத்தியவர்களில் ஒருவர் பிரெட் ஹாய்ல். அதுதான் அப்போது எல்லாரும் ஏற்றுக்கொண்ட கருதுகோளாகவும் இருந்தது. பேரண்டத்துக்குத் தொடக்கமும் கிடையாது என்று ஹாய்ல் கருதினார். அண்டங்கள் (கேலக்ஸிகள்) ஒன்றுக்கொன்று விலகி நகர்ந்தாலும் உருவாக்கப்படும் பொருளின் அடர்த்தி மாறாதது என்று அவர் கூறினார். இந்தக் கோட்பாடு, அடிப்படையில் பெருவெடிப்புக் கோட்பாட்டுக்கு (பிக் பேங்க் தியரி) எதிரானது.

விஞ்ஞானியும் சக நூலாசிரியருமான ரோஜர் பென்ரோஸின் தாக்கம் பெற்றவராக ஆரம்ப காலத்தில் ஸ்டீவன் ஹாக்கிங் இருந்தார். சூரியனைவிடப் பலமடங்கு நிறையுள்ள விண்மீன், ஒருகட்டத்தில் நொறுங்கி குறுகிக்கொண்டே போய் அளவில் சிறியதாகவும் நிறையில் அளப்பரியதாகவும் மாறும். அதுதான் கருந்துளை. கருந்துளையின் மையம் காலமும் இடமும் அர்த்தமிழந்து போகும் ஒருமை நிலை எனப்படுகிறது. இந்த ஒருமை நிலைக் கோட்பாடு (சிங்குலாரிட்டி) சார்ந்த கணிதவியலாளர் அவர். ஹாக்கிங்கின் முனைவர் பட்ட வழிகாட்டி சியாமாவின் தாக்கத்தால் பென்ரோஸும் நட்சத்திரங்கள், கருந்துளைகள் தொடர்பான ஆய்வில் ஈர்க்கப்பட்டார்.

ஒரு நட்சத்திரம் ஒரு புள்ளிக்கு மேல் தன் ஈர்ப்பு விசையின் காரணமாக நொறுங்கினால், அந்த வினையை நிறுத்த முடியாது என்று பென்ரோஸ் கூறினார். பொதுச் சார்பியல் கோட்பாட்டின்படி, இந்த வினையின் முடிவில் அளவிட முடியாத அடர்த்தியோ ஒருமையோ அடையப்படும். ஹாக்கிங் இந்த முடிவால் உற்சாகமடைந்து அதை முழு அண்டவெளிக்கும் பொருத்திப் பார்த்தார். பொதுச் சார்பியல் கோட்பாடு சரியாக இருக்குமானால், அண்டத்தின் வளர்ச்சியைப் பின்னோக்கிப் பார்க்கும்போது ஒரு தருணத்தில் ஒருமைநிலை இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

பெரு வெடிப்பு பிரபஞ்சவியலில் அவர் அளித்த இப்பங்களிப்புக்கே அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. இயற்பியலாளராக அவர் அளித்த முதல் பங்களிப்பு இதுவென் றாலும், மிகப் பெரியது. அதுவே அவரைச் சர்வதேச அளவில் புகழ் பெற்ற விஞ்ஞானியாக ஆக்கியது. விரிந்து கொண்டே இருக்கும் அண்டம், தனது ஈர்ப்பிலேயே நிறுத்தவே இயலாமல் நொறுங்கும் கருந்துளை என இயற்பியலாளர்களாலும் கற்பனை செய்யவே முடியாத இரண்டு அதீத நிகழ்வுகளை அவர் விளக்கி நிரூபித்தார்.

புரியும் மொழிநடையில் அண்ட அறிவியல்

வெப்ப இயக்கவியல் விதிகளைப் போலவே தென்படும் கருந்துளை இயக்கவியல் விதிகளை அவர் உருவாக்கினார். இந்த அடிப்படையில் அவர் செய்த கணிப்பொன்றால் ஒரு முரண்பாட்டையும் சந்தித்தார். கருந்துளைகளிலிருந்து கதிர்வீச்சு வெளிப்படும் என்பதுதான் அது. ஒளி உட்பட எதுவும் தப்பிக்க முடியாது என்று முன்னர் கருதப்பட்டது. இந்நிலையில் குவாண்டம் கோட்பாட்டை இணைத்து இந்த முரண்பாட்டை அவரே தீர்த்தார். 'ஹாக்கிங் கதிரி யக்கம்' என்று அந்தக் கண்டுபிடிப்பு அழைக்கப்படுகிறது

இயற்பியல் விஞ்ஞானியான அவர் எழுதிய, 'எ ப்ரீஃப் ஆப் டைம்' நூல், துறை சார்ந்த தொழில்நுட்ப மொழியில் அமைந்ததல்ல. அண்டவெளியின் அமைப்பு, வளர்ச்சி, ஆகியவற்றை முடிந்த அளவு சாதாரண வாசகர்களும் புரிந்துகொள்ளும் சுவாரசியமான மொழியில் எழுதப்பட்டது. பிரபஞ்சங்களின் ரகசியங்களை ஆராய்ந்தது மட்டுமல்ல, மனித நம்பிக்கை, முயற்சியால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த சாதனை வாழ்க்கை அவருடையது. ஒருவரின் கனவுகளை நனவாக்குவதற்கு ஊனம் ஒரு தடையே அல்ல என்பதை ஒவ்வொரு கணமும் சக்கர நாற்காலியில் இருந்துகொண்டு இயங்க முடியாமல், பேச இயலாமல் இருந்த நிலையிலும் சாதித்தவர் அவர். வாழ்தலுக்கான விருப்புறு தியின் அடையாளம் ஸ்டீவன் ஹாக் கிங்.

தமிழில்: ஷங்கர்
நன்றி: தி இந்து ஆங்கிலம் 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

மண்ணுலகையும் விண்ணுலகையும் வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் - யார் இந்த ஸ்டீவன்?

மண்ணுலகையும் விண்ணுலகையும் வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் - பொருளடக்கம்

Back to blog