Skip to content

மண்ணுக்கேற்ற மார்க்சியம் - ஒரு சமகால அறிவுசார் வரலாறு

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

 

https://periyarbooks.com/products/mannukketra-marxiam 

ஒரு சமகால அறிவுசார் வரலாறு

நான் எழுதிய கலை - இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு 2003ல் வெளிவந்தது. அதற்குப் பின்னர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டால் என்ன? - எனும் யோசனை திடீரென்று ஒருநாள் உதயமானது. சேகரித்து வைத்திருந்ததை எடுத்துப் பார்த்தால் கலை - இலக்கியக் கட்டுரைகள் குறைவாகவும் சமூகம், வரலாறு, தத்துவம், தலைவர்கள் பற்றியவை அதிகமாகவும் இருந்தன. அதுபோலவே பதிவான உரைகளும். இந்தக் காலத்தில் எனது இயங்குநிலை என்னவாக இருந்தது என்பது புரிந்தது. இத்தகைய கட்டுரைகளும் முக்கியமானவையே என்பதாலும், இன்னும் பரந்துபட்ட வாசகர்களை இவை ஈர்க்கும் என்பதாலும் வெளியிடத் துணிந்தேன்.

தொகுப்பிற்கு என்ன தலைப்பு இடுவது என யோசித்த போது கட்டுரைகள் - உரைகளின் உள்ளார்ந்த சாரம் மார்க்சியமாக இருந்தது மட்டுமல்லாது, அதை இந்திய - தமிழகச் சூழலுக்குப் பொருத்திப்பார்க்கும் முயற்சியாகவும் இருந்தது மனதில் எழுந்தது. ஆகவே "மண்ணுக்கேற்ற மார்க்சியம்'' என்று பெயரிட்டேன்.

இதை இரண்டு விதமாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்று, மார்க்சியத்தின் அடிப்படைக்கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்திய மண்ணுக்கும் பொருந்தக் கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால், அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்பது. அவ்வப்போது எழுந்த பிரச்சனைகள் - கேள்விகள் - தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு இந்த இரு கோணங்களிலிருந்தும் பதில் சொல்ல முயன்றிருக்கிறேன்.

அந்தப் பதில்கள் சரியானவைதாமா என்று வாசகர்கள் யோசிக்கலாம். அந்த யோசனை மார்க்சியத்தை மேலும் கற்பது, தமிழக - இந்திய வரலாறை மேலும் வாசிப்பது, நடப்பு வாழ்வை மேலும் கூர்ந்து நோக்குவது என்பதற்கு இட்டுச் செல்லுமேயானால் அதுவே இந்த நூலின் வெற்றி என்பேன். அத்தகைய ஆழ்ந்த யோசனைக்கு இந்த நூல் நிச்சயம் ஒரு தொடக்கமாக இருக்கும். காரணம், இதிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் - உரைகள் மார்க்சிஸ்ட் கட்சியின் ஏடுகளாகிய "தீக்கதிர்", "செம்மலர்", "மார்க்சிஸ்ட்" ஆகியவற்றில் வெளிவந்து ஏற்கனவே ஒரு பொதுவான வாசகர் வட்டத்தைப் பெற்றிருப்பவை. இந்தச் சமயத்தில் அந்த ஏடுகளது ஆசிரியர் குழுவினருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓரிரு கட்டுரைகளைத் தவிர மற்றவை எல்லாம் கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்தவை. "தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் - இரு நூற்றாண்டு வரலாறு", "காலந்தோறும் பிராமணியம்" எனும் எனது படைப்புகள் 20ம் நூற்றாண்டோடு முடிந்து நிற்பவை. இந்த 21ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தை அறிய இந்தத் தொகுப்பு உதவும். அந்த வகையில் இது ஒரு சமகால அறிவுசார் வரலாறு.

ஒரு சிலவற்றில் கூறியது கூறல் இருக்கிறது. தொடர்ச்சிக்காகவும், கூறப்பட்ட இடம் வேறு என்பதாலும் அதை அப்படியே விட்டு வைத்திருக்கிறேன். மண்ணுக்கேற்ற மார்க்சியமானது இடதுசாரி வட்டாரத்திற்கு அப்பாலும் கொண்டு செல்லப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் அடியேன் ஒரு பங்களிப்பைச் செய்திருக்கிறேன். கல்வி நிறுவனங்கள், மாற்று சமூக-அரசியல் மேடைகளிலும் அதை எதிரொலித்திருக்கிறேன். அங்கெல்லாம் விஷயம் எப்படி முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திடவும் இந்தத் தொகுப்பு பயன்படும்.

சோவியத் ஒன்றியத்தின் சிதைவிற்குப் பிறகு சோசலிச லட்சியம் அரசியல் வட்டாரத்திலும், மார்க்சிய ஆய்வு அறிவுஜீவிகள் வட்டாரத்திலும் குறைந்து போனது. முன்பு மார்க்சியர்களாக அறியப்பட்டவர்களில் சிலர் "தமிழ்த் தேசியவாதி"களாகச் சுருங்கிப் போன விபத்தும் நடந்தது. ஆனால், தேசிய இனப்பிரச்சனை உள்ளிட்ட இந்தியாவின் சமூக-அரசியல்-பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வு மார்க்சியத்தில் தான் உள்ளது என்பதை மனித வாழ்வு முன்னெப்போதையும் விட இப்போதுதான் இன்னும் அழுத்தந்திருத்தமாகச் சுட்டி வருகிறது. ஆளும் வர்க்கங்கள் எத்தனை போர்வைகளைப் போட்டு மூடப் பார்த்தாலும் மார்க்சியம் எனும் அந்த மகா ஜோதி சகலத்தையும் விலக்கி சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.

மார்க்சியமானது மனித வாழ்வு எப்படி இயங்குகிறது எனும் மகா ரகசியத்தைப் புரிந்தது. அந்தப் புரிதல் மனிதகுலம் பெற்றெடுத்த ஞானிகள் பலரது நற்சிந்தனைகளை உள்வாங்கி அவற்றின் வளர்நிலையாக வெளிப்பட்டது. எனவே, அது சாகாவரம் பெற்ற சிந்தாந்த வழிகாட்டி. அந்த மகத்தான பாடப்புத்தகத்திற்கு இந்தத் தொகுப்பு நூல் ஓர் ஆரம்பக் கையேடாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு சமர்ப்பிக்கிறேன்.

ஓரிரு கட்டுரைகளைத் தவிர மற்றவை எல்லாம் கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்தவை. “தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்-இரு நூற்றாண்டு வரலாறு”, “காலந்தோறும் பிராமணியம்" எனும் எனது படைப்புகள் எல்லாம் 20ம் நூற்றாண்டோடு முடிந்து நிற்பவை. இந்த 21ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தை அறிய இந்தத் தொகுப்பு உதவும். அந்த வகையில் இது ஒரு சமகால அறிவுசார் வரலாறு.

மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை இரண்டுவிதமாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்று, மார்க்சியத்தின் அடிப்படைக்கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்திய மண்ணுக்கும் பொருந்தக் கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால், அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரயோகிக்க வேண்டும். அவ்வப்போது எழுந்த பிரச்சனைகள் - கேள்விகள் - தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு இந்த இரு கோணங்களிலிருந்தும் பதில் சொல்ல முயன்றிருக்கிறேன்.

கட்டுரைகளைத் தேடி எடுத்துத் தந்த தீக்கதிரின் தோழர் பாண்டி, செம்மலரின் தோழர் நாகராஜன், அவற்றை சிரமப்பட்டு கோர்த்த சிபி டிசைன்ஸ், பிழை திருத்தம் செய்த அன்பு நெஞ்சங்கள் கே.ராஜேந்திரன் - சிவலிங்கம், அட்டைப்படத்திற்கான புகைப்படம் தந்து உதவிய தினகரன் - வசந்தம் ஆசிரியர் மதிப்பிற்குரிய கே.என்.சிவராமன், அச்சிட்ட பிரியதர்ஷினி பிரின்டோ கிராப்ஸ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.

 

அருணன்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog