1940இல் ராகுல் சாங்கிருத்யாயன் அவர்கள் அகில இந்திய கிசான் சபையின் பலாஸா மாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அலகாபாத்தில் டாக்டர் உதய நாராயண் திவாரியின் வீட்டில் தமது தலைமையுரையை எழுதிக் கொண்டிருந்த போது இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
1940 - 42ஆம் ஆண்டுகளில் அவர் பெரும்பாலும் 'தேவ்லி முகாம் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். நாட்டின் வட பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இங்குதான் அடைக்கப் பட்டிருந்தனர். இவர்களிடம் பல்வேறு விஷயங்களைப் பற்றிய புத்தகங்கள் நிறைய இருந்தன. அவர்களில் யார் யாரிடம் என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்னும் ஆராய்ச்சியை ராகுல்ஜி செய்துவிட்டார். இரண்டாம் உலக யுத்தத்தினிடையே விரைவில் விடுதலையும் கிடைக்காதென்பதை அவர் உணர்ந்து கொண்டிருந்ததால், படிக்கவும் - எழுதவும் ஒரு திட்டம் தீட்டிக்கொண்டார். இங்கேயே ராகுல்ஜி ஒவ்வொன்றாக “மனித சமுதாயம்” "தத்துவ வழிகாட்டி" (இந்து, பவுத்த, இஸ்லாமிய, ஐரோப்பியத் தத்துவ இயல்கள்), "விஞ்ஞான லோகாயத வாதம்", "உலக வரிவடிவம்", "வால்காவிலிருந்து கங்கை வரை" ஆகிய நூல்களை எழுதினார்.
1942-இல் ஹஜாரிபாக் மத்திய சிறையில் நாங்கள் சந்தித்துக் கொண்ட பிறகு ராகுல்ஜி, தாம் எழுதிய நூல்களின் கையெழுத்துப் பிரதிகளை எனக்குக் காட்டினார். அவை குறித்து நாங்கள் விவாதிக்கவும் செய்தோம். அவர் எழுதிய இத்தனை நூல்களைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ந்தேன். சிறையிலிருந்து விடுதலையான பின்னர் குறைந்தது இரண்டு மாதங்களாவது ஏதாவதொரு பெரிய நூல் நிலையத்தில் அமர்ந்து, எல்லாக் கையெழுத்துப் பிரதிகளையும் திருத்தி வெளியிடுமாறு நான் ஆலோசனை கூறினேன்.
1942-ஆம் வருட மத்தியில் சிறையிலிருந்து விடுதலை அடைந்ததுமே ராகுல்ஜி அரசியலில் மிகத் தீவிரமாக இறங்கிவிட்டதால், கையெழுத்துப் பிரதிகளைச் சரிபார்க்கும் வாய்ப்பே அவருக்குக் கிடைக்கவில்லை.
பாட்னாவிலுள்ள கிரந்தமாலா' காரியாலயத்தின் உரிமையாளர் திரு. ராமதஹின் மிஸ்ராவுடன் ராகுல்ஜி தமது நூல்களின் பிரசுரம் பற்றிப் பேசினார். 1943-இல் "மனித சமுதாயம்" இங்கிருந்துதான் வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு அலகாபாத்திலிருந்தும், கல்கத்தாவி லிருந்தும் இப்பயனுள்ள நூல் பலமுறை பிரசுரிக்கப் பட்டது. ஒவ்வொரு பதிப்பின் போதும் ராகுல்ஜி ஆங்காங்கே ஒன்றிரண்டு விஷயங்களைச் சேர்ப்பார்; ஆங்காங்கே பெயரளவுக்கான திருத்தங்களைச் செய்வார். இவ்விதம் இந்நூல் மறுபதிப்பாகிக் கொண்டிருந்ததே தவிர, முழுவதுமாகச் சரி பார்க்கப்படவில்லை.
"மனித சமுதாயத்தின் இப்புதிய பதிப்பை ஓரளவுக்குத் திருத்தப்பட்ட புதிய பதிப்பாகக் கருதலாம். முழு நூலையும் படித்து நான் இதிலிருந்த எத்தனையோ குறைபாடுகளையும், வருடங்களிலும், தேதிகளிலும் இருந்த தவறுகளையும் திருத்தினேன். ஆங்காங்கே புத்தம் புதிய விஞ்ஞானத் தகவல்களையும், சந்தர்ப்பச் செய்திகளையும் இணைத்தேன்.
1933இல் நான் அறிமுகமாவதற்கு முன்பே ராகுல்ஜி "பொது உடைமை ஏன்?'', "உனது வீழ்ச்சி'', "இருபத்திரண்டாம் நூற்றாண்டு” ஆகிய நூல்களை எழுதி முடித்திருந்தார். ஆனால் அப்பொழுது மார்க்ஸியத்துடன் நெருங்கிய அறிமுகம் இல்லாததால், அந்நூல்களில் கற்பனாவாதப் பொது உடைமைக் கருத்துகளும் நிரம்பியிருந்தன. நான் அவருக்கு அக்காலத்தில் சட்ட விரோதமாக இயங்கிக் கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசுரங்களை அறிமுகம் செய்து வைத்தேன். இதன் பின்னர், ராகுல்ஜி மார்க்ஸீய இலக்கியத்தை அறிந்து கொண்டார். அதன் ஒரு பகுதியை நாங்களிருவரும் சேர்ந்து கற்றுத் தேர்ந்தோம்.
1937-இல் ராகுல்ஜி கடைசியாகத் திபேத்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு கல்கத்தா வந்த போது நான் அவரை முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அவர் பீகாரில் இருந்து கொண்டு கட்சிப் பணியாற்றவும் அப்பொழுதுதான் முடிவு செய்யப்பட்டது.
1944-இல் ராகுல்ஜி தமது மனைவியையும், குழந்தையையும் பார்க்க சோவியத் நாட்டிற்குச் சென்றிருந்த போது நான்தான் "தத்துவ வழிகாட்டி' யிலிருந்த எத்தனையோ குறைகளைத் திருத்தினேன். ''மனித சமுதாயத்தின் வங்கப்பதிப்பையும் நானே பதிப்பித்தேன். இதே போல் "வால்காவிலிருந்து கங்கைவரை" யையும் சரி பார்த்தேன்.
இந்த "மனித சமுதாயம்" நூலில் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய வரையிலான விஷயங்கள் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நான் ஒரு தனி நூலாக எழுத விரும்புகிறேன்.
“மனித சமுதாயம்” இந்தி மொழியில் ஒரு தனிச்சிறப்பு படைத்த நூலாகும். இந்தி, வங்கமொழி வாசகர்களுக்கு இது மிகவும் பயனுடையதாக இருந்தது. நேப்பாளத்தில் கூட இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
ஏஷியாடிக் சொஸைட்டி, மகாதேவ ஸாஹா
கல்கத்தா – 16
24 நவம்பர் 1976