புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/maanila-suyaatchi-murasoli-maran
முதல் பதிப்பிற்கு கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய அணிந்துரை
மாநில சுயாட்சி என்பது இந்தியாவைத் துண்டு துண்டாக வெட்டுவதற்குத் தூக்கப்படும் கொடுவாள் என்றும், ஒருமைப்பாட்டு உணர்வுக்கு எதிராக வைக்கப்படும் வேட்டு என்றும், தங்களைத் தாங்களே குழப்பிக்கொள்வோர் அல்லது பிறரைக் குழப்ப முனைவோர் ஆகிய இருசாராருக்கும் அளிக்கப்பட்டுள்ள விரிவான விடைதான் மாறன் எழுதியுள்ள இந்த விளக்க நூல்.
எத்தனையோ அரசியல் மேதைகள் பொழிந்துள்ள கருத்துக்களுக்குச் செயல் வடிவம் கொடுக்க முன்னணியில் நிற்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்திய நாட்டின் சுதந்திரக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. வான்முகட்டைத் தொடுவதுபோல்
அசைந்தாடும் அந்தக் கொடியின் கம்பீரம் காண, முகில்களைக் கிழித்துக் கொண்டு நமது விழிகள் தாவுகின்றன. வங்கம் தந்த தங்கக்கவி தாகூர் எழுதிய தேசிய கீதம் நமது செவிகளில் குற்றால நீர்வீழ்ச்சியின் சங்கீத ஓசையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆமாம், அடிமைப்பட்டுக்கிடந்த நாடு , தளை தனை உடைத்துக்கொண்டு தலைநிமிர்ந்து கிளம்பிய வரலாற்று வரிகள், உலகப் புத்தகத்தில் கோடிட்டு வைக்கப்பட்டுள்ளன. சிறையிலிருந்த நாடு, விடுதலை பெற்றுவிட்டது. கதவு திறந்தது. பூட்டிய இருப்புக் கூட்டிலேயிருந்து கைதி, புன்னகை மலர வெளியே வருகிறான். தந்தையைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த தளிர்நடைச் செல்வம், இளங்கரம் தூக்கி, தாவியோடுகிறது அவனைத் தழுவிக்கொள்ள! அவனும் அடக்க முடியாத மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரள மகனைத் தூக்கி முத்தமிடக் கரங்களை நீட்டுகிறான். கைகள் இயங்க முடியாமல் தவிக்கின்றன. சிறையிலிருந்துதான் விடுபட்டுவிட்டானே, இன்னும் என்ன தடை? தன்னை யார் தடுப்பது? சுற்றும் முற்றும் பார்க்கிறான். அவன் சிறையில் இல்லை, சுதந்திர பூமியில்தான் இருக்கிறான். பிறகு யார், தன் குழந்தையைக்கூடத் தழுவிட முடியாமல் அவனைக் கட்டுப்படுத்துவது? யாருமல்ல, அவன் சிறையிலிருக்கும்போது அவன் கைகள் இரண்டையும் காலையும் சேர்த்து ஒரு விலங்கு மாட்டியிருந்தார்கள். விடுதலை அடைந்த பூரிப்பில், விலங்குகளைக் கழற்ற வேண்டுமென்ற நினைப்புக்கூட இல்லாமல் அவன் வெளியே வந்துவிட்டான். அவன் சுதந்திர மண்ணில்தான் இருக்கிறான். கை, கால் விலங்கு மட்டும் கழற்றப்படவில்லை. மனிதன் விடுதலையாகிவிட்டான். கை, கால்கள் மட்டும் கட்டுண்டு கிடக்கத் தேவையில்லையே! இந்தியா, விடுதலை பெற்றுவிட்டது. அதன் அவயவங்களைப் போன்ற மாநிலங்கள் மட்டும் மத்திய அரசுக்குத் தேவையில்லாத அதிகாரக் குவியல்கள் என்னும் விலங்குகளால் கட்டுண்டு கிடப்பானேன்?
இந்தக் கேள்வியின் நீண்ட நாளைய தாகத்தைத் தீர்ப்பதுதான் மாநில சுயாட்சி எனும் நெல்லிக்கனி. கழகம் கண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், எதிர்க்கட்சி வரிசையில் ஏறுநடை போட்ட போதும், ஆளுங்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகும், எழுத்தில், பேச்சில், சட்டப்பேரவை விவாதத்தில் - மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதைக் குன்றின் மேலிட்ட விளக்கு போல் தெளிவாக்கியிருக்கிறார். மத்திய அரசின் அதிகாரங்கள் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டு மாநிலங்கள் உரிமை பெற்றுத்திகழ, அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டுமென்று அவர் குரல் கொடுத்தார்.
அந்தக் குரல்தான், இன்றைக்கும் தி.மு. கழகத்தின் குரலாக மாநில சுயாட்சிக் குரலாக, இந்திய அரசியல் அரங்கம் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாட்டு அரசியல்வாதிகள் உற்றுக் கவனிக்கிற குரலாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
தம்பி மாறன், நெடிய பல இரவுகளையும், நீண்ட பல பகல்களையும் ஓய்வின்றிப் பயன்படுத்திக்கொண்டு, புத்தகத் தோட்டங்களில் புகுந்து -- அறிஞர்கள் தம் இதயமலர்களில் நுழைந்து -- இந்த இனிய நறுமணத்தேனாம், மாநில சுயாட்சி நூலைத் தந்திருப்பது பாராட்டத்தக்கதாகும். இடைவிடாத உழைப்பு, மாறனுக்கு வாடிக்கையானதல்ல! ஆயினும் அந்த உழைப்பு இந்த மாநில சுயாட்சி நூலுக்குக் கிடைத்திருக்கிறது. அண்ணன் இருந்தால் மிகவும் பூரித்துப்போவார்.
இந்த நூல் முழுமையும் படியுங்கள். அதன்பிறகு மீண்டும் ஒருமுறை நான் எழுதியுள்ள இந்த அணிந்துரையைப் படியுங்கள். ஏன் தெரியுமா?
நேற்று (26.01.1974) குடியரசு நாள்! இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிற நாள். தலைநகரமான டெல்லியில் ஜனாதிபதி, தேசீயக் கொடியை ஏற்றிவைக்கிறார். மாநிலத் தலைநகரங்களில் கவர்னர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்கிறார்கள். 'Head of the State' அதாவது மாநிலத்தின் தலைவர் தேசியக் கொடியை ஏற்றிவைக்கிறார். 'வானொலி' - ஆங்கிலச் செய்தி, தமிழ்ச் செய்தி அனைத்தும் கேட்டேன். கவர்னர் கொடி ஏற்றினார். தமிழ்நாட்டிலே மட்டுமல்ல, எல்லா மாநிலங்களைப் பற்றியும் அதே செய்திதான். குடியரசு தினவிழாவில் கவர்னருடன், முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள் கலந்துகொண்ட செய்தியே வானொலியில் வரவில்லை. நான் தமிழ்நாட்டைப்பற்றி மட்டும் சொல்லவில்லை. எல்லா மாநிலங்களுக்கும் அதே கதிதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரும், அமைச்சர்களும் இருக்கும்போது கவர்னர்கள் மட்டும் கொடியேற்றும் உரிமை பெறுவானேன்? மாவட்டங்களில் கலெக்டர்கள், குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றுகிறார்கள். நகராட்சித் தலைவர்கள், தேசியக்கொடி ஏற்றுகிறார்கள். மாநிலத் தலைநகரங்களில்
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு இல்லாத உரிமை, நியமனம் செய்யப்பட்ட கவர்னர்களுக்கு ஏன் வழங்கப்படுகிறது?
'டெல்லியிலே கூட, பிரதமர், குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றுவதில்லை. ஜனாதிபதிதான் ஏற்றுகிறார்' என்று வாதிக்கலாம். ஆகஸ்ட் 15 விடுதலை நாளன்று டெல்லியில் தேசியக் கொடியைப் பிரதமர் ஏற்றிவைக்கிறார். அந்த நாளில் கூட, மாநில முதல்வர்களுக்குத் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்புக் கிடையாது. ஆகஸ்ட் சுதந்திர நாளிலும், கவர்னர்களே அந்தப் பணியைச் செய்கின்றனர்.
'கொடியேற்றத்தானா மாநில சுயாட்சி?' இப்படிச் சிலர் கேட்கக்கூடும். அதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். கொடியேற்றுவதில் கூட, மத்திய அரசின் நியமனப் பதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை, மக்களாட்சியின் தலைவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டத்தான் இதனைக் குறிப்பிட்டேன்.
'மிகச் சிறிய விஷயம் இது' என்பார்கள். தேசியக்கொடி, சிறிய விஷயங்களின் பட்டியலில் அடங்காது.
வாதத்திற்காக, இது சிறிய விஷயம் என்று ஏற்றுக்கொண்டால், இப்படிப்பட்ட சிறிய விஷயங்களில்கூட மாநிலங்களின் உரிமைகள் பறிபோகின்றன என்பதை ஒப்புக்கொண்டே தீர வேண்டும்.
'மாநில சுயாட்சி' கோரிக்கை--விவாத மேடைக்கு வந்துள்ள இந்தச் சமயத்தில் இந்நூல் மிகுபயன் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.
'உறவுக்குக் கைகொடுப்போம்
உரிமைக்குக் குரல் கொடுப்போம்'
என்ற கழக முழக்கத்தின் தூய்மையைப் புரிந்துகொள்ள, இந்த முயற்சி வழிவகுக்கும்.
சென்னை 27.01.74.
டாக்டர் கலைஞர்