மாநில சுயாட்சி - முரசொலி மாறன் - நாவலர் அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/maanila-suyaatchi-murasoli-maran

 

 

முதல் பதிப்பிற்கு நாவலர் அவர்கள் வழங்கிய அணிந்துரை

மாநில சுயாட்சிக் கோட்பாடு இன்றைய நிலையில் அனைத்து இந்தியாவிலும், எல்லா அரசியல் கட்சிகளாலும், பல்வேறு அரசியலறிஞர்களாலும், பற்பல அரசியலறிவியல் வல்லுநர்களாலும், பல அரசியல் துறை மாணவர்களாலும் விவாதிக்கப்படும் மிக முக்கியமானதொரு பிரச்சினையாகத் திகழ்ந்து வருகிறது.

இந்தியாவில் மொழிவழி தேசிய இனத்தின் வழி வந்த மாநிலங்கள் உண்மையான முழுப் பொருளும் பொதிந்த மாநில சுயாட்சி கொண்டனவாக இருக்க வேண்டும் என்பதையும், அந்த மாநிலங்களெல்லாம் தாமே விரும்பி ஏற்படுத்தும் முறையில் மத்திய கூட்டாட்சி அமைய வேண்டும் என்பதையும் திராவிட முன்னேற்றக் கழகம் அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தி வருகிறது.

'மாநிலத்திலே சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி' என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முழுமுதல் முழக்கமாக இருந்து வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற ஒரு பெருந் தலைவரும், தமிழகத்தில் தி.மு.கழக ஆட்சியை நிறுவி அதன் முதல் முதலமைச்சராய்த் திகழ்ந்தவரும், தமிழகப் பெருங்குடி மக்களின் இதயத்திலே நீங்கா இடம் பெற்று விளங்கியவருமான டாக்டர் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1969 ஆம் ஆண்டுப் பொங்கல் விழாவை ஒட்டிக் 'காஞ்சி' இதழில் தாம் எழுதிய கட்டுரையில் --

"மாநிலங்கள் அதிக அளவில் அதிக அதிகாரம் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எடுத்துக்கூறி வருகின்றேன்.

இதற்கான நல்லாதரவு நாளுக்கு நாள் வளர்ந்தபடி இருக்கின்றது என்பதிலே எனக்குத் தனியானதோர் மகிழ்ச்சி. நமது கழகம் மட்டுமின்றி வேறு பல அரசியல் கட்சிகளும் இப்போது இதனை வலியுறுத்த முன்வந்துள்ளன.

அரசியல் கட்சிகளைச் சாராத அறிவாளர் பலரும் இதற்கு ஆதரவு காட்டுகின்றனர். நாம் அரசு நடத்தியதால் கிடைத்திருக்கின்ற நற்பயன்களிலே இதனை ஒன்று என்றே கருதுகிறேன்.” என்று திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கழகத்தின் குறிக்கோளைச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

மாநில சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தி, அதற்கேற்ப இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தி.மு.கழகம் தன்னுடைய 1967 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் அறிக்கையிலும், 1971ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் அறிக்கையிலும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

தி.மு.கழகத்தின் பல்வேறு மாநில -- மாவட்ட மாநாடுகளில் 'மாநிலத்திலே சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி' என்ற கொள்கை தீர்மான வடிவில் கோரிக்கையாக எடுத்துக் காட்டப்பட்டு வந்துள்ளது. மாநில அரசுகள் எந்த எந்த அதிகாரங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதையும், மத்திய அரசிடம் எப்படிப்பட்ட அதிகாரங்களை ஒப்படைக்கலாம் என்பதையும் விவாதத்திற்குப் பயன்படும் வகையில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட இராசமன்னார் குழு தெளிவுபடுத்திக் காட்டியிருக்கிறது.

இராசமன்னார் குழு அளித்த அறிக்கையைத் தி.மு. கழகக் கண்ணோட்டத்தோடு ஆராய்வதற்காகத் தி.மு. கழகத்தால் அமைக்கப்பட்ட செழியன் - மாறன் குழு ஆராய்ந்து அளித்த அறிக்கையைத் தி.மு. கழகத்தின் தலைமைச் செயற்குழுவும் ஏற்று நாட்டிற்கு அறிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட அறிக்கைகளையும், கொள்கைகளையும், முழக்கங்களையும், தீர்மானங்களையும் வைத்துக்கொண்டு பலரும் பல்வேறு வினாக்களை இப்பொழுது எழுப்பத் தலைப்பட்டிருக்கின்றனர்.

மாநில சுயாட்சி என்றால் என்ன? மத்தியிலே கூட்டாட்சி என்றால் என்ன? ஒற்றையாட்சி முறைக்கும் கூட்டாட்சி முறைக்கும் வேறுபாடு என்ன? இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாகத்தானே இருக்கிறது? இப்பொழுது மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரங்கள் போதாவா? மாநில சுயாட்சி என்பது நாட்டுப் பிரிவினை அல்லவா? மாநில சுயாட்சி கேட்பது இந்தியாவின் வலிவு குன்றச் செய்யாதா? உலக நாடுகளோடு ஈடுகொடுக்க இந்தியா ஒரு வலிவான நாடாகத் திகழ வேண்டாமா? மாநில சுயாட்சி வழங்கினால் பின்தங்கிய மாநிலங்கள் மேலும் பின்தங்கிவிடாவா? என்பன போன்ற வினாக்களை எழுப்புவோர்க்குத் தக்க விடையளிக்கவும், மாநில சுயாட்சி பற்றிப் புரியாதவர்களுக்கெல்லாம் புரிய வைக்கவும், தெளிவு பெறாதவர்களுக்கெல்லாம் தெளிவுபடுத்தவும், அறிந்தும் அறியாதவர்கள் போல் இருப்பவர்களுக்கெல்லாம் அறைகூவல் விடுக்கவும் எழுஞாயிறுபோல் தோன்றியிருப்பதுதான் இந்நூல். 'முரசொலி' நாளிதழின் ஆசிரியரும், இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரும், சிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளரும், பேச்சாளருமான நண்பர் மாறன், எம்.ஏ. அவர்கள் பெரு முயற்சியோடும், பேரூக்கத்தோடும் இந்த நூலை எழுதித் தமிழகத்திற்குத் தந்துள்ளார்.

1. கூட்டாட்சிக் கொள்கை, 2. இந்தியாவில் கூட்டாட்சி முறையின் தோற்றமும், வளர்ச்சியும், 3. இன்றைய அரசியல் அமைப்புச் சட்டம், 4. எதற்காக மாநில சுயாட்சி? என்ற தலைப்புகளின் கீழ் நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பகுதியின் கீழும் பல்வேறு தலைப்புகள் அமைந்த அத்தியாயங்களை வகுத்துக்கொண்டு பிரச்சினைகளையும், பொருள்களையும் துருவித் துருவி ஆராய்ந்து நண்பர் மாறன் அலசிக்காட்டியிருக்கும் பாங்கு மிகவும் வரவேற்கத்தக்கது.

'அரசு', 'அரசியல் அமைப்புச் சட்டம்', 'ஒற்றையாட்சி முறை', 'கூட்டாட்சி முறை', 'மாநில அரசு', 'மத்திய அரசு', 'மாநில சுயாட்சி', 'மத்திய கூட்டாட்சி', 'அதிகாரத்தைக் குவிப்பது', 'அதிகாரத்தைப் பரவலாக்குவது', 'தேசிய இனம்' போன்ற பல்வேறு பொருள்களின் இலக்கணங்களைக் கூறி, அவை பல்வேறு நாடுகளில் கையாளப்பட்டுவரும் பாங்கினையும் சொல்லி, தி.மு.கழகம் கோரும் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு இயைபுடையனவாகச் செயல்பட்டு வரும் நாடுகள் எவை எவை என்பதையும் சுட்டிக்காட்டி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எவ்வாறெல்லாம் வேறுபட்டும், மாறுபட்டும், முரண்பட்டும் விளங்குகின்றது என்பதையும் உணர்த்தி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தி.மு. கழகம் கோரும் சுயாட்சிக் கொள்கைக்கு ஏற்ப எவ்வாறெல்லாம் திருத்தப்பட வேண்டியிருக்கிறது என்பதையும் வலியுறுத்தி நூலாசிரியர் விளக்கங்கள் பல தந்திருப்பது படித்துப் படித்துப் பயன்பெறுவதற்குரியனவாகும். நண்பர் மாறன் அவர்கள் தம்முடைய கருத்து விளக்கங்களுக்கு வலிவூட்ட ஏராளமான மேற்கோள்களையும், எடுத்துக் காட்டுகளையும், நிகழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டுகிறார். உலகில் தலைசிறந்து விளங்கிய -- விளங்கும் அரசியலறிவியலறிஞர்கள், அரசியல் தத்துவ அறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகள், அரசியலமைப்புச் சட்ட அறிஞர்கள், ஆட்சி நடத்தி மாட்சிமைப்பட்ட அறிஞர்கள் ஆகியோர்களின் கருத்துக்களையும், கொள்கைகளையும் அடுக்கடுக்காகக் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி வியந்து மகிழ்வதற்குரியதாகும்.

இந்தியா ஒரு நாடல்ல, அது பல்வேறு மொழிவழி தேசிய இனங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டமாகும் என்பதையும், வரலாற்றுச் சூழ்நிலையின் காரணமாக இந்தியா ஒரு நாடாக ஆக்கப்பட்டுள்ளதால், மொழிவழி தேசிய இனம் அமைந்த பகுதிகள் இந்தியாவின் உள்ளடங்கிய தனித்தனி மாநிலங்களாகக் காட்சியளிக்கின்றன என்பதையும், மாநில சுயாட்சி கேட்பது பிரிவினை கேட்பது ஆகாது என்பதையும், இந்தியாவில் மாநிலங்கள் எவ்வளவுக்கெவ்வளவு சுயாட்சித் தன்மையைப் பெறுகின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு இந்தியா வலிவு பெற்ற நாடாகத் திகழும் என்பதையும் நண்பர் மாறன் ஆணித்தரமான காரணகாரிய விளக்கங்களோடு தெளிவுபடுத்திக் காட்டியுள்ளார்.

மாநில சுயாட்சிக் கோரிக்கையைக் காங்கிரசுக்காரர்கள் முதன் முதலில் வலியுறுத்தி வந்தார்கள் என்றும், அவர்களே அதனைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள் என்றும், அவர்களே அதைக் குழிதோண்டிப் புதைக்க முயன்றார்கள் என்றும், அவர்களே இப்போது அந்தக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டி காங்கிரசுக் கட்சியின் முரண்பட்ட போக்கைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தி.மு.கழகத்தின் தலைமைச் செயற்குழுவால் சில திருத்தங்களோடு ஏற்றுக்கொள்ளப்பட்ட செழியன் - மாறன் குழுவினர் மாநில சுயாட்சி பற்றித் தந்த அறிக்கையின் சில முக்கியமான பகுதிகளை நூலாசிரியர் திறம்பட விளக்கிக் காட்டியுள்ளார்.

தி.மு.கழகம் கோருகிற மாநில சுயாட்சியைவிட மிக அதிகமான உரிமைகளையும், அதிகாரங்களையும் கொண்ட மாநில சுயாட்சி முறையை ஏற்றுக்கொண்டுள்ள அமெரிக்காவும், இரஷ்யாவும் எவ்வளவு வளம் உடையனவாக, வளர்ச்சி கொண்டனவாக, வலிவு படைத்தனவாக விளங்குகின்றன என்று இந்நூலில் ஆங்காங்கு சுட்டிக்காட்டப்பட்டிருப்பது பல கருத்துக் குருடர்களுக்குக் கண்ணொளி பயக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

தி.மு.கழகத்தின் கருத்தைச் சுருங்கக் கூறவேண்டுமாயின் இந்திய மண்ணைக் காப்பாற்ற - அதாவது இந்தியாவின் எல்லை, சுதந்திரம், உரிமை, வளம், வாழ்வு ஆகியவற்றைக் காப்பாற்ற என்ன என்ன அதிகாரங்கள், உரிமைகள் தேவைப்படுமோ அவை மத்திய கூட்டாட்சி அரசினிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; மாநில மக்களைக் காப்பாற்றவும், வாழவைக்கவும், வளர வைக்கவும் என்ன என்ன அதிகாரங்கள், உரிமைகள் தேவைப்படுமோ அவை மாநில சுயாட்சி அரசினிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இன்னும் சுருங்கக் கூறினால் 'இந்தியாவைக் காப்பாற்றுவது மத்திய அரசின் கடன், மக்களை வாழவைப்பது அந்தந்த மாநில அரசுகளின் கடன். இதற்கு ஏற்றபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டியது இன்றியமையாததாகிறது. அதற்கான வழிவகை கூறும் சிறந்த நூல்தான் இந்நூல்.

நண்பர் மாறன் இனிய எளிய தமிழில் ஆற்றொழுக்கு நடையில் இந்நூலை இயற்றி இருக்கிறார் என்பது மட்டுமல்லாமல் உணர்ச்சியை ஆங்காங்கு கொப்பளிக்கவிட்டிருக்கிறார். இந்த நூலைப் படிப்பவர்கள் எல்லாம் தெளிவு பெற்று, உணர்வு பெற்று, எழுச்சி பெற்று, உரிமைப் போருக்குத் தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வார்கள் என்பது திண்ணம்.

மாநில சுயாட்சி அறப்போருக்குப் புறப்படும் அறப்போர் வீரர்கள் அனைவரும் சளைக்காத அளவுக்குக் கையில் ஏற்கத் தக்க கருத்துக் கேடயங்களையும், ஆதார ஈட்டிகளையும் மிக வலிவாக வடித்துத்தந்துள்ள நண்பர் முரசொலி மாறன் அவர்களை நான் மனதார -- வாயார வரவேற்றுப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

மாநில சுயாட்சி அறப்போரில் ஈடுபடுத்திக்கொள்ளும் ஒவ்வொரு வீரனுடைய கையிலும் இந்த நூல் ஏந்தும் கேடயமாகவும், எறியும் ஈட்டியாகவும் திகழ்வதாக.

சென்னை
27.01.1974
நாவலர் இரா. நெடுஞ்செழியன்

Back to blog