மாநில சுயாட்சி - முரசொலி மாறன் - பேராசிரியர் அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

 

 

https://periyarbooks.com/products/maanila-suyaatchi-murasoli-maran

 

முதல் பதிப்பிற்கு பேராசிரியர் அவர்கள் வழங்கிய அணிந்துரை

நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான எனது அருமை நண்பர் முரசொலி மாறன், எம்.ஏ. அவர்கள், நாட்டு மக்களுக்குத் தெளிவும் நல்லறிவாளர்களுக்கு விளக்கமும் வழங்கும் திறனுடைய 'மாநில சுயாட்சி' என்னும் விரிவான, விளக்கமான ஓர் அரசியல் - ஆய்வு நூலை இயற்றியுள்ளது கண்டு நான் பெரிதும் மகிழ்கிறேன்.

'மாநில சுயாட்சி' என்னும் குரல் கேட்ட அளவில், அதன் உயர் நோக்கத்தையும், உண்மையான பயனையும் உணராமலும், உணர்ந்தும் உண்மையை ஏற்கும் நியாய உணர்வு இன்றி, , அரசியல் கட்சி நோக்கத்திற்காகத் திரித்தும், மாற்றியும், மறைத்தும், மறுத்தும் மக்களைக் குழப்புவார் பலராக உள்ள நிலையில், அரசியல் வரலாற்று அடிப்படையில் உண்மையை விளங்க வைத்து உய்த்துணரச் செய்வது இன்றியமையாததொரு கடமையாகும். 'மாநில சுயாட்சி' உலக நாடுகள் சிலவற்றின் அரசியல் அமைப்பில் இடம் பெற்று வெற்றியுடன் செயல்பட்டு வருவதுடன் இந்தியாவின் அரசியல் அமைப்பு உருவான கட்டத்திலும் அதற்கு முன்னரும் பல்வேறு காலகட்டங்களில் - பல்வேறு கொள்கைகள் கொண்ட தகுதி மிக்க தலைவர்கள், அரசியல் சட்ட அறிஞர்கள் முதலான பலராலும் ஏற்றுரைக்கப்பட்ட கொள்கையேயாகும். தமிழகத்தின் தன்னிகரற்ற வழிகாட்டியும், நமது ஒப்பற்ற தலைவருமான பேரறிஞர் அண்ணா அவர்கள், நாட்டுப் பிரிவினைக் கொள்கையை முற்றும் கைவிட்ட பின்னர் கழகத்தின் அரசியல் குறிக்கோளாக நாட்டுக்கு வழங்கியுள்ள கொள்கையே 'மாநில சுயாட்சி'. இது மக்கள் ஆட்சியின் - தேவைகளின் இயல்பான விளைவுதான் என்றாலும், இது கழகத்தின் கண்டுபிடிப்போ , திணிப்போ அல்ல; அரசியல் சந்தர்ப்பவாதமும் ஆகாது.

மக்களுடைய உரிமை அடிப்படையில், விடுதலை பெற்ற ஒரு நாடு, மக்களுடைய உரிமையுள்ள நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்திற்கும் துணையாக நிறைவேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்புகளை - மக்களுடைய இசைவோடும் ஒத்துழைப்போடும் அணுக்கத் தொடர்போடும் நிறைவேற்றுவதற்காகவே ஆட்சிமுறை என்னும் ஓர் அமைப்பை, வடிவத்தை அரசியல் சட்டத்தின் மூலம் உருவாக்குகின்றது. ஒரு நாட்டு மக்களுடைய மரபுகள், வரலாற்றுப் பின்னணி, சமுதாய அமைப்புத் தன்மைகள், மொழி, கலை, பண்பாட்டு வழிப்பிரிவுகள், இயற்கையமைப்பு, மக்களின் இசைவான உடன்பாட்டின் அளவு, வளரும் தேவைகளை நிறைவேற்றுவதற்குள்ள வாய்ப்பு இவைகட்கேற்ற வகையில் ஆட்சி அமைப்புகள் என்னும் சக்கரங்கள் இயங்குமாறு அமைய வேண்டும்.

மக்களின் உரிமை வேட்கை நிறைவேறும் வகையில், அவர்களே பங்குகொண்டு, கருத்தறிவித்து, உடன்பாடு கண்டு, ஒத்துழைத்து, உருவான பயன் காணும் வகையிலும் - அதற்கு ஆட்சிமுறை அமைப்பு இடமளிக்கவில்லை என்று குறைகாண இடமில்லாத வகையிலும் நிகழ்வதே சிறந்த மக்களாட்சியாகும். ஆட்சி அமைப்பின் தலையான உரிமைகளைக் கொண்ட மன்றத்தோடும், தலைமை ஆட்சிப் பொறுப்பினரோடும் ஒரு நாட்டு மக்கள் எல்லோரும் நெருக்கம் உடையவர்களாய் அமையும் வாயில்களைப் பொறுத்தே இணக்கமான மக்களாட்சி தழைக்கும். அவ்வாறு அமையும் வழியற்ற ஒரு பெரிய துணைக்கண்டத்தில், பலகோடி மக்களுடைய வாழ்வுக்கான மக்களாட்சி முறையில், மக்களுடைய பெரும்பான்மையான தேவைகளும், வேட்கைகளும் விருப்பங்களும் எளிதாக நிறைவேறும் வண்ணம், ஆட்சி உரிமை கொண்ட பல அமைப்புகள் மக்களாட்சியின் நிறைவுக்குத் தேவையாகின்றன. அந்த அமைப்புகளே மாநிலங்களும், அவற்றிற்கான சட்டப் பேரவைகளும், அவற்றால் உருவாகும் அமைச்சரவையுமாகும். அவற்றிற்கு உட்பட்டு ஆங்காங்கே தேவைப்படும் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றும் அமைப்பே உள்ளாட்சி மன்றங்களாகும்.

ஒரு கடிகாரத்தின் முட்களில் மணிமுள் முதன்மையுடையது எனினும், நிமிடமுள் பேரளவு இயங்கினால்தான் மணிமுள் சிற்றளவு இயங்குவது முறை. அதனை ஒப்ப - மக்களோடு நெருக்கம் உடையதாக இயங்கும் மாநில அரசு பேரளவு இயங்க இடந்தந்து, மத்திய அரசு அதற்கு இணக்கமாக, அளவுடன் இயங்கும் நிலையே - மக்களாட்சியின் சிறந்த நெறியாகும்.

எவ்வாறோ, கூட்டாட்சி முறையைக் கொள்கையளவில் ஏற்றும், நடைமுறையில் ஒற்றை ஆட்சி முறையுடன் பெரிதும் உவமிக்கப்படும் வண்ணம் - இன்றைய இந்திய அரசின் நடைமுறை உருவாகி வந்துள்ளது கண்கூடு. எனவேதான் - தேய்ந்து வரும் மாநில ஆட்சி உரிமைகளைப் புதுப்பித்து, சுயாட்சியின் இலக்கணம் ஏற்கப்படவும் - நாளும் வளர்க்கப்பட்டு வரும் ஒற்றையாட்சி முறை தடுத்து நிறுத்தப்படவும், 'மாநில சுயாட்சி' ஒரு கோரிக்கையாக, தமிழகத்திலும் - வெவ்வேறு அளவில் வேறு பல மாநிலத்திலும் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது. 'மாநில சுயாட்சி' என்பது - தனியாட்சி அல்ல என்பதை உறுதிப்படுத்தவே - 'மாநில சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்னும் முழக்கம், தமிழக முதல்வரும் கழகத் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களால் எழுப்பப்பட்டது. 'மாநிலம் என்பதால் - மத்தியில் ஓர் அமைப்பு உண்டென்பதும், 'கூட்டாட்சி' என்பதால் 'சுயாட்சி' அதில் இயங்கும் ஓர் பகுதியே என்பதும் எவருக்கும் தெளிவாகும்.

இதனால் 'ஒற்றுமை' கெடும் என்போர் - 'ஒற்றுமையின் பெயரால் 'ஒருமைத்தன்மையைத் திணிப்பதன் கேடுகளை உணர வேண்டும். 'Union' - ஒற்றுமை வேண்டும், அதுவும் மக்கள் ஆர்வத்தோடு வளரவேண்டும் என்பதற்கே 'கூட்டாட்சி' முறையாகும். 'Uniformity' - ஒருமைத் தன்மையே, ஒற்றுமை என்பது - பல்வேறு பகுதி, மாநில மக்களின் தனிச் சிறப்புகளையும், ஒற்றுமை விழைவையும், பொது நோக்கையும் சிதைக்கவே வழிகோலும் என்பதையும் சிந்திப்போர் உணரலாகும்.

பெற்ற சுதந்திரத்தைப் பேணி வளர்ப்போர் எவராயினும் உரிமையுடைய மக்கள் எல்லோருக்கும், தம்மைத்தாமே ஆண்டு கொள்வதில் உரிய பங்கு கிடைக்கச் செய்ய - 'மாநில ஆட்சி' பிறைமதி நிலையிலிருந்து முழுமதியாக வளர வேண்டும் என்பதை ஏற்றேயாக வேண்டும்.

ஏற்போர், ஏற்காதார், கேட்டார், கேளார், மறுப்போர், மறைப்போர் ஆகிய எத்திறத்தாரும் 'மாநில சுயாட்சியின் இயற்கை நியாயத்தைத் தெளிய, மத்திய ஆட்சியின் செயற்கை ஆதிக்கத்தை உணர, நண்பர் மாறன் அவர்கள் தனது நுண்மாண் நுழைபுலத்திறனோடு, வரலாற்று ஏடுகளையும், அரசியல் சட்ட ஆய்வு நூல்களையும், நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் ஆராய்ந்தும், ஆய்ந்தும், அரிய கருத்து விளக்கக் குறிப்புகளை எல்லாம் தொகுத்து, தொடர்பு காட்டி விளக்கியுரைத்து, ஐயம் நீங்கும் வண்ணம் மாறுபாடுகளை எல்லாம் அலசிக்காட்டி ஒரு தீர்மானமான முடிவினை கற்போர் ஏற்குமாறு - படலம் படலமாக இந்த நூலை இயற்றியுள்ளார்கள்.

ஒவ்வொரு பகுதியும் ஒரு மேற்கோளுடன் தொடங்கி, சான்றுகள் பல தாங்கி, நிகழ்ச்சிகளை உள்ளடக்கி, குறிக்கோளை முடிவாக விளக்கி நிற்கிறது. நல்லறிவாளர், ஆராய்ச்சியாளர், அரசியல் தலைவர்கள், சட்ட நிபுணர்கள், தலைசிறந்த நீதிபதிகள் ஆகியோர் துணையுடன், முரசொலி மாறன் தமது வழக்கினை எடுத்து வைத்திருக்கும் ஆற்றல் - எம்மனோரையும் வியப்பில் ஆழ்த்துவதாகும்.

'மாநில சுயாட்சி' குறித்து தமிழில் வெளிவந்துள்ள இந்த நூல் விரைவில் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டு, அகில இந்தியாவிலும் இதன் 'உண்மை ' விளக்கம் பெறவேண்டும் என்பதே என் அவா.

அறிவும் தெளிவும் ஆர்வமும் முயற்சியும் கொள்கை உரனும் வாய்ந்த மாறன் அவர்கட்கு 'வாழ்த்தும்' - அவர் முயற்சிக்கு 'வெற்றியும்' கூறி எனது அணிந்துரையை முடிக்கிறேன்.

சென்னை 29.01.74
பேராசிரியர் க. அன்பழகன்

Back to blog