Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

மாநில சுயாட்சி - முரசொலி மாறன் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

 
முன்னுரை

“தி . மு . க . அதன் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் எல்லைக்குள்ளாகவே சுருக்கிக் கொள்ள நினைக்கலாம்; ஆனால், தி.மு.க. உணர்வு, இந்திய யூனியனில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தையும் கட்டாயம் சூழ்ந்து கொள்ளத்தான் போகிறது. மாநில சுயாட்சியும், அதிக அதிகாரம் கேட்கும் கோரிக்கையும் காலப் போக்கில் இளந்தலைமுறையினரிடையே உருவாகும் பயன் நோக்கும் செயல்திறன் கொண்ட அரசியல் தலைவர்களின் சிந்தனையைக் கவரப்போவது நிச்சயம்.''

-  இவ்வாறு தி.மு.க. பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியை குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களில் முழுமையான சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் அமைந்திடக் கோருவது தி.மு.க.வின் நோக்கங்களில் ஒன்றாக, அதன் சட்ட திட்டங்களில் இடம் பெற்றிருக்கிறது.

இந்த நோக்கத்தை அடைய 'அரசியல் சட்டத்தைத் திருத்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும்' - என்பது, இதுவரை தமிழக சட்டமன்றத்தில் எந்த ஒரு கட்சியும் பெறாத இடங்களைத் தி.மு.க. பெறுவதற்கு முன், தமிழ்நாட்டு மக்கள் முன்னிலையில் பிரகடனம் செய்யப்பட்ட 1971 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுக் கூறப்பட்டிருக்கிறது.

1. "The D.M.K. may choose to confine its activities to the States of Tamilnadu and Pondicherry but D.M.K. spirit is bound to engulf each and every State of the Indian Union. The demand for State autonomy and for more power is sure to catch the imagination of pragmatic political leaders the younger generation throws up in due course of time."

-- SNEH PRABHA RASTOGI, in her essay "EMERGENCE AND RISE OF THE D.M.K.", published in "Indian Political Parties", p. 171

இந்தக் கோரிக்கை திடீரென்று சூனியத்திலிருந்து பிறந்ததல்ல; கழகத்தின் மூலவராம் அறிஞர் அண்ணாவால் பேணி வளர்த்துப் பெற்றுக் கொள்ள விட்டுச் செல்லப்பட்ட இலட்சியச் சொத்தா' கும்.

1962 இல் சீனப் படையெடுப்பையொட்டி இந்திய ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து, தி.மு. கழகம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டபோதே, அறிஞர் அண்ணா அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்: 'நாங்கள் பிரிவினையைத்தான் கைவிட்டோமேயன்றி, பிரிவினைக்கான காரணங்களைக் கைவிடவில்லை; அவற்றை அடைய நாங்கள் இனி இந்திய ஒற்றுமை என்னும் நான்கு சுவர்களுக்குள்ளாக நின்று போராடுவோம்!' என்று.

அதாவது : பிரிவினையைக் கைவிட்டோம் என்கிற காரணத்தினால் இந்தி ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மொழியின் ஏற்றத்திற்கும், தமிழின் மேம்பாட்டிற்கும், தமிழ் மரபின் பாதுகாப்பிற்கும் பாடுபடுவதிலிருந்து ஓய்வு கொள்ள முடியாது; தமிழ்நாட்டு உரிமைகளுக்காகப் போராடுவதிலிருந்து விலகிக்கொள்ள முடியாது; திட்டத் தொகையிலிருந்தும், பிற துறைகளிலும் தமிழ்நாட்டிற்கு நியாயமான பங்கு கிடைக்காததைக் காதில் போட்டுக் கொள்ளாமல் இருக்க முடியாது; 'ஏகாதிபத்தியச் சுரண்டல் முறைக்குச் சரணாகதியடைய முடியாது.

இந்தி ஆதிக்க ஒழிப்பு

தமிழ் மொழி - தமிழ் இன - தமிழ் மரபின் மேம்பாடு

தமிழ்நாட்டின் உரிமைகள்; அதன் நியாயமான பங்கு

சுரண்டல் ஒழிப்பு

இதுபோன்ற இலட்சியங்களை அடைவதற்குப் பிரிவினையை ஒரு மார்க்கமாக முன்பு தி.மு.க. கொண்டிருந்தது.

பிரிவினையை முற்றிலும் ஒருமித்த முடிவாகக் கைவிட்ட பிறகு, அந்த இலட்சியங்களை - அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட முறையில், இந்திய ஒற்றுமைக்கு சிறிதும் குந்தகம் ஏற்படாத வகையில், அரசியல் சட்டத்தைத் திருத்தி, அடைவதற்கு தி.மு.க. பின்னர் ஏற்றுக்கொண்ட மார்க்கம்தான் மாநில சுயாட்சி .

அறிஞர் அண்ணா தலைமையில் 67இல் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது இன்றைய அரசியல் அமைப்புச் சட்டத்திலுள்ள கூட்டாட்சிக்கு முரண்பாடாக உள்ள பிரிவுகளை நேரடியாக அனுபவபூர்வமாக உணரும் வாய்ப்புக் கிடைத்தது.

1967, ஏப்ரல் 8ஆம் நாள் புதுடில்லி செய்தியாளர்கள் கூட்டத்தில், மாநிலங்களுக்குப் போதுமான அதிகாரங்களை வழங்கிவிட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ அவைகளை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டால் போதும்; இப்படி அதிகாரங்களைப் பங்கீடு செய்வதற்கும், அரசியல் சட்டம் செயல் படுவதற்கும், ஒரு உயர் அதிகார ஆணைக்குழு ஒன்றினை அமைக்க வேண்டும் - என்று தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா தெரிவித்தார்கள்.

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதபடியும், விலைவாசிகளைக் கட்டுப்படுத்த முடியாதபடியும், இன்றைய அரசியல் அமைப்பில் மாநிலங்கள் இருந்து வருவதைப் பலமுறை சட்டமன்றத்திலே தெரிவித்திருக்கிறார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் உயிர் வாழ்ந்தபோது இறுதியாக 'ஹோம்ரூல்' ஏட்டில் தம்பிக்கு எழுதிய முடங்கலில் தமது உள்ளக் கிடக்கையையும், தி.மு. கழகத் தொண்டர்களின் கடமையையும் ஒரு இலட்சிய விளக்கமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

அன்புள்ள தம்பி, நான் பதவியைத் தேடி பைத்தியம் பிடித்து அலைபவனுமல்ல; காகிதத்தில் கூட்டாட்சியாகவும், நடைமுறையில் மத்தியில் அதிகாரக் குவிப்புக் கொண்டதாகவும் இருக்கிற ஒரு அரசியல் சட்டத்தின் கீழ் முதலமைச்சராக இருப்பதற்கு மகிழ்ச்சி கொண்டிருப்பவனுமல்ல. இதற்காக மத்திய அரசிற்கு எரிச்சல் ஏற்படுத்துவதும், டில்லியோடு சண்டை போடுவதும்தான் எனது நோக்கம் என்று - எனது நல்ல நண்பர் ஈ.எம்.எஸ். -ஐப் போல் நான் பிரகடனம் செய்ய விரும்பவில்லை. அதனால் யாருக்கும் நன்மையில்லை. உண்மைதான்; சரியான பருவத்தில் ஒரு உறுதி ஏற்பட வேண்டுமென்பதுதான் முக்கியம். ஆனால், கூட்டாட்சி முறையைப் பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுப்பதை அதற்கு முன்னால் செய்ய வேண்டும். அந்தப் பணியில், அன்புத் தம்பி, உன்னுடைய உற்சாகமான ஒத்துழைப்பும், மனப்பூர்வமான பங்கேற்பும் எனக்குக் கிடைக்குமென்பதில் எனக்கு நிச்சயம் நம்பிக்கை உண்டு.

அப்படியானால். கொஞ்சமும் திருப்தியற்ற ஒரு அரசியல் அமைப்பின் கீழ் தி.மு.கழகம் எதற்காகப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?

- இதற்கும் அதே முடங்கலில் அறிஞர் அண்ணா அவர்கள் பதில் அளித்திருக்கிறார்கள்.

"பதவியில் இருப்பதன் மூலம், இன்றைய அரசியல் அமைப்புச் சட்டம் கொல்லைப்புறமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு இரட்டை ஆட்சிதான் என்பதைச் சிந்திக்கக் கூடிய பொதுமக்களின் கவனத்திற்கு தி.மு.க. கொண்டு வரமுடியுமானால், அது உண்மையிலேயே அரசியல் உலகிற்குச் செய்யப்படும் குறிப்பிடத்தக்க உதவியாகும்”.

- அந்தப் பணியைத்தான் தி.மு.கழகம் தொடர்ந்து செய்து வருகிறது. சிந்திக்கக் கூடிய தமிழ்நாட்டு மக்களுடைய கவனத்திற்கு மட்டுமல்ல, இந்திய மக்களின் கவனத்திற்கே தற்போதைய அரசியல் சட்டத்தின் குறைகளை எடுத்துக் காட்டி வருகிறது.

மேலேயிருக்கிற பகுதிகள் கொண்ட அண்ணா எழுதிய முடங்கல்தான் 'அண்ணாவின் உயில்' என்று - மாநில சுயாட்சிக்

1. "Dear brother... Never have I been mad after power. Nor am I happy of being the Chief Minister of our State under a Constitution which on paper is federal but in actual practice tends to get more and more centralised. On that account, I do not, like my good friend E.M.S. declare that it is my intention to irritate the Centre or pick up quarrels with Delhi. True, a sense of determination at the appropriate stage is all important. But this should be preceded by educating the public of federalism itself. In that, dear brother, I am quite confident of your active co-operation and intimate participation".

- Dr. ANNA, in his last essay "HAIL! THE DAWN!!" published in "Home Rule", Pongal Number 1969, pp.10-11

2. "If by being in office, the D.M.K. is able to bring to the notice of the thinking public, that the present Constitution is a sort of dyarchy by the back door that would be a definite contribution indeed to the political world".

- Dr. ANNA, Ibid., p.11.

கொள்கையைத் தொடக்கத்திலிருந்து முழங்கிவரும் தமிழரசுக் கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களால் சிறப்பித்துக் கூறப்படுவது.

அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது தற்போதைய அரசியல் சட்டங்களுக்குத் திருத்தம் கோரும் குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்று கேட்டார். மத்திய அரசு அவர் காலத்தில் அதைச் செய்யவில்லை. பிறகு கலைஞர், தி.மு.க.வின் தலைவராகவும், தமிழக அரசின் முதல்வராகவும் ஆன பிறகு முதல்முறையாக டில்லி சென்றிருந்தபோது அத்தகைய குழுவைத் தமிழக அரசே அமைக்குமென்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அவ்வாறே 1969, செப்டம்பர் 22ஆம் நாளன்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், நான்காவது நிதிக் குழுத்தலைவருமான டாக்டர் இராஜமன்னார் தலைமையில், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ. இலட்சுமணசாமி முதலியார், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு பி. சந்திரா ரெட்டி ஆகியோரைக் கொண்ட குழுவொன்றை மத்திய - மாநில உறவுகளை ஆராய்ந்து அறிக்கை தரும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

பின்னர் 1970 ஆம் ஆண்டு , பிப்ரவரி 21, 22 தேதிகளில் நடைபெற்ற திருச்சி மாவட்ட மாநாட்டில் அறிஞர் அண்ணாவின் உயிலுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில், தலைமையுரையாற்றிய கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி 'மத்தியில் கூட்டாட்சி, மாநில சுயாட்சி' - என்பதைத் தி.மு.கழகத்தின் இலட்சிய முழக்கங்களில் ஒன்றாக ஆக்கினார். அன்று முதல் மாநில சுயாட்சிக் கோரிக்கை' திராவிட முன்னேற்றக் கழகத்து வீர மறவர் பாசறையின் சிந்தை அணு ஒவ்வொன்றிலும் குடியிருக்கும் போர் முழக்கமாகிவிட்டது!

1971 ஆம் ஆண்டு இராஜமன்னார் குழுவினர் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தங்களது அறிக்கையை அளித்தனர். இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநில அரசு மத்திய - மாநில உறவுகள் குறித்துப் பெற்ற அறிக்கையாகும் அது! சிலருக்கு அந்த அறிக்கை பிடிக்காமல் போகலாம்; ஆனாலும் அந்த அறிக்கை இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் என்றும் நினைவிருக்கும் அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை, அந்த அறிக்கைக்கு மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களும் மறுக்க முடியாது.

1971, ஏப்ரல் 24 ஆம் நாள் கோவையில் கூடிய தி.மு.க. பொதுக் குழு, இராஜமன்னார் குழு அறிக்கையை ஆராய்ந்து பரிந்துரை கூற, இரா.செழியன், முரசொலி மாறன் - ஆகியோரை அமைப்பாளர்களாகக் கொண்ட குழுவொன்றினை அமைத்தது.

இராஜமன்னார் குழு அறிக்கை மூன்று அறிஞர்கள் - மூன்று நடுவர்கள் தயாரித்தளித்தது. அவற்றில் தி.மு.கழக இலட்சியங்களுக்கேற்ற இணைப்புகளையும், திருத்தங்களையும் செழியன்-மாறன் குழு செய்து, 8.1.1974 அன்று சென்னையில் கூடி தி.மு.கழகச் செயற்குழுவிடம் அளித்தது. அதைச் செயற்குழு சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டது. அந்த விபரங்கள் இந்நூலின் இறுதிப் பகுதியில் தரப்பட்டிருக்கின்றன.

இப்போது மீண்டும் ஒருமுறை நம் அண்ணனின் உயிலை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

* தி.மு. கழகம் பதவியிலிருப்பதே இப்போதுள்ள 'இரட்டை ஆட்சியின் குறைபாடுகளை சிந்திக்கக் கூடிய பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்குத்தான்.

ஆனால் காலாகாலமும் இதையே செய்து கொண்டிருக்க முடியுமா?

** சரியான பருவத்தில் ஒரு உறுதி ஏற்பட வேண்டும்.

- இந்த வரியின் மூலம் நம் அண்ணன் நமக்கு எவற்றையெல்லாம் உணர்த்துகிறார்? ஜாடை மூலமே அண்ணனின் மனத்தைப் புரிந்து கொள்கிற தம்பிமார்களுக்கு இதுகுறித்து விளக்கம் தேவையிருக்காது.

- ஆனால், இது இரண்டாவது கட்டம்தான். முதல் கட்டம் என்ன ?

*** கூட்டாட்சி முறைபற்றிப் பொதுமக்களுக்கு விளக்கம் கொடுத்து, அவர்கள் மனத்தைப் பக்குவப்படுத்த வேண்டும்.

- இந்த முதல் கட்டப் பணியினை கழக வீரர்கள் ஆற்றுவதற்கு அணுவளவாவது துணைபுரியுமே - என்பதுதான் இந்நூலை நான் எழுதியதின் நோக்கம்.

இந்நூலின் கருப்பொருள் கொஞ்சம் 'நெருடு' தட்டுவது. முதல் பகுதி கூட்டாட்சி முறைக் கொள்கையை விளக்குகிறது. ஐவர் ஜென்னிங்ஸ் கூறியிருப்பது போல - தவிர்க்க முடியுமென்றால் யாரும் கூட்டாட்சியை ஒதுக்கிவிடுவார்கள். செலவும், சிக்கலும் நிறைந்த முறை இது.

கூட்டாட்சி முறை இந்தியாவில் தவிர்க்க முடியாமல் போனது ஏன்? என்கிற வரலாற்றுப் பின்னணியை விளக்குவது இரண்டாவது பகுதி.

இன்றைய அரசியல் சட்டத்தின் மீது நமக்குப் பகை ஏன்? - என்பதை மூன்றாவது பகுதி சித்திரிக்கிறது. நான்காவது பகுதி மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கான நமது அடிப்படைகளை விளக்குகிறது.

இவற்றுள் எந்தத் தலைப்பில் அதிக ஆர்வமோ அதை முதலில் படிக்கலாம்.

இனியும் தடையாக இருக்காது - நல்வரவு கூறி, புத்தகத்திற்குள்ளே நுழைய உங்களை வேண்டுகிறேன்.

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு