பதிப்புரை
எம். ஆர். ராதா ....
தன் மனத்தில் பட்டதைத் தயக்கமின்றிச் சொன்னவர். தான் நினைத்தபடி வாழ்ந்தவர். அதனால் கலகக்காரன் என்று பெயர் எடுத்தவர். தன் கொள்கைகளில் முரட்டுத்தனமான பிடிவாதத்தைக் காட்டினாலும் சக நடிகர்களில் பலர் முன்னுக்கு வரக் காரணமாக இருந்தவர். தேனாம்பேட்டையிலிருந்த சக நடிகர்கள் அவரை ''நைனா'' என்றுதான் கடைசிவரை அழைத்தார்கள். தன் தொழிலை நேசித்தவர். நாடக மேடையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தன் உயிர் பிரிய வேண்டுமென்று ஆசைப்பட்டவர். நாடக மேடைகள்தான் அவரது சுவாசம். நீ படத்துல முதல்ல வரணும். அப்புறம் நடுவுல அப்பப்ப வரணும். அப்புறம் கடைசியில் முக்கியமான ஆளா வந்து உன்னை நிரூபிக்கணும். ஆனா, படம் முழுக்க நீ இருந்துக் கிட்டிருக்கீயே? - சிவாஜி கணேசனிடமே அவர் அடித்த கமெண்ட் இது. எம்.ஜி.ஆர் இருக்கும்போது செட்டில் யாரும் உட்காரமாட்டார்கள். ஆனால் எம். ஜி. ஆரோ ராதாவின் முன்னால் உட்காரமாட்டார். அப்படிப்பட்ட ஆளுமை அவரிடமிருந்தது. என்னுடைய சிநேகிதன் ராமச்சந்திரன். நாங்க ஏதோ கோபத்துல சுட்டுக்கிட்டோம். கையில் கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு. அந்த நேரத்துல அத எடுத்து அடிச்சிக்கிட்டோம் என்று எம்.ஜி.ஆருடனான மோதலைப்பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளாது சொன்னவர். பெரியார் இறந்தபோது தமிழர்களுக்கு என்று இருந்த ஒரே தலைவர் இறந்து விட்டார் என்று கதறியவர். ஆனால் பெரியாருடைய கருத்துகள் எல்லாமே தனக்கு உடன்பாடானவையல்ல என்று வெளிப்படையாகவே சொன்னவர்.
இவரது வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பும் சுவையும் சிறிதும் குன்றாமல் நமக்குத் தந்திருக்கிறார் முகில். இந்தப் புத்தகம் முகிலின் மற்ற புத்தகங்களைப்போலவே எழுத்துலகில் தன் தடத்தைப் பதிக்கும் என்பதில் ஐயமில்லை.
அன்புடன்
சு. புகழேந்தி