Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

குறளோவியம் - கருணாநிதியை குறளோவியம் எழுத வைத்தவர்! (சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

கருணாநிதியை குறளோவியம் எழுத வைத்தவர்! (சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள்

தாம் ஓர் எழுத்தாளர், என்று நினைவு கூறப்படுவதை விட, ஒரு பத்திரிகையாளர் என்று நினைவு கூறப்படுவதைத்தான் ஆசிரியர் சாவி பெரிதும் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்.

தாம் எழுதுவது மட்டுமல்ல; மற்ற எழுத்தாளர்களையும் ஊக்குவித்து, அவர்களிடமிருந்து சிறந்த படைப்புகளைப் பெற்று வெளியிட்டு, அவர்களைப் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் சாவிக்கு அலாதி ஆனந்தம்.

கவியரசு கண்ணதாசனை, அர்த்தமுள்ள இந்துமதம் எழுத வைத்ததும், கலைஞர் மு.கருணாநிதியை குறளோவியம் எழுத வைத்ததும், கவிப்பேரரசு வைரமுத்துவை கவிராஜன் கதை எழுத வைத்ததும் சாவிதான்! அதுமட்டுமல்ல; இந்தத் தலைப்புகள் கூட சாவி தந்தவையே!

ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தவருக்கு புஷ்பாதங்கதுரை என்னும் கவர்ச்சிகரமான புனைபெயர் சூட்டி, அவரை புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் சாவிதான். 'ஜெயில் கைதிகளிடமும் ஹ்யூமன் ஸ்டோரி இருக்கும்' என்று சொல்லி, அவரை சிறைக் கைதிகளோடு உரையாட வைத்து, அவர்களின் கதைகளை 'சிறைக் கதைகள்' என்னும் தலைப்பில் வெளியிட்டார் சாவி. சிவப்பு விளக்குப் பெண்களிடமும் உருக்கமான கதைகள் இருக்கும் என்று, அவர்களிடம் பேசச் செய்து, அந்தக் கதைகளை, 'சிவப்பு விளக்குக் கதைகள்' என்று வெளியிட்டார். அந்நாளில் வேறு எவருமே யோசிக்காத புதுமையான முயற்சிகள் இவை. மேலும், 'ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது', என்று விசித்திரமான தலைப்பு கொடுத்து, புஷ்பாதங்கதுரையை தொடர்கதை எழுதச் சொன்னார் சாவி. இது பின்னர் சினிமாவாகவும் எடுக்கப்பட்டது.

அதே புஷ்பாதங்கதுரையை மீண்டும் ஸ்ரீவேணுகோபாலன் அவதாரம் எடுக்கச் செய்து, திருவரங்கன் உலா எழுதச் செய்தவரும், சத்யமே சாயி எழுதச் செய்தவரும் கூட சாவி சார்தான்!

நாடக நடிகர் மற்றும் நாடக ஆசிரியராக மட்டுமே அதுவரை பரிச்சயமாகியிருந்த சோவிடம் உள்ள எழுத்தாற்றலைக் கண்டு, அவரை தாம் ஆசிரியராக இருந்த தினமணி கதிர் பத்திரிகையில் எழுத வைத்து, எழுத்தாளர் ஆக்கியவர் சாவிதான். தினமணி கதிர் பத்திரிகையில் சோ எழுதிய, 'மை டியர் பிரம்மதேவா!' என்னும் தலைப்பில் அமைந்த அரசியல் நையாண்டித் தொடர் கட்டுரைகள்தான், அவர் பின்னாளில் ஒரு முழுமையான அரசியல் பத்திரிகையை நடத்துவதற்கான அடித்தளமாக அமைந்தன என்று சொன்னால் மிகையில்லை.

பத்திரிகையாளர் சோ-வுக்கு பெருந்தலைவர் காமராஜின் மீது எத்தனை பெரிய அபிமானம் உள்ளதென்று அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆரம்ப காலத்தில் சோ, காமராஜ் மீது அப்படியொன்றும் அபிமானம் கொண்டிருக்கவில்லை. அவருக்குப் பெருந்தலைவரின் பெருமையை உணர்த்தி, காமராஜ், சோ இருவரையும் தம் வீட்டுக்கு வரவழைத்து, சோவை காமராஜிடம் அறிமுகப்படுத்தி, பெருந்தலைவர் மீது சோவுக்கு மரியாதையும் பக்தியும் ஏற்படக் காரணமாக இருந்தவர் சாவிதான்.

தாம் தொடங்கிய 'சாவி' பத்திரிகையின் முதல் இதழிலேயே சுஜாதாவின் தொடர்கதை ஒன்றைத் தொடங்க விரும்பினார் சாவி. ஓர் எழுத்தாளரிடம் ஒரு தொடர்கதை கேட்டுப் பிரசுரிப்பது என்று முடிவு செய்துவிட்டால், உடனே ஒரு தலைப்பு சொல்லும்படி கேட்பது சாவியின் வழக்கம். ஆனால், கதை இன்னதென்று எதுவும் நிச்சயிக்காத நிலையில் சுஜாதாவால் தலைப்பு எதுவும் சொல்ல இயலவில்லை. 'நில்லுங்கள் ராஜாவே' என்று சாவியே ஒரு தலைப்பு தர, அதற்கேற்ப உடனடியாக முதல் அத்தியாயத்தை எழுதிக் கொடுத்தார் சுஜாதா.

சாவி வைக்கும் தலைப்புகள் புதுமையாக இருக்கும். சாவியில், 'ஆப்பிள் பசி' என்றொரு தொடர்கதை எழுதினார் சாவி. இந்தத் தலைப்பு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரை மிகவும் கவர்ந்துவிட, அதே பாணியில், 'விஸ்கி தாகம்' என்னும் தலைப்பிட்டு ஒரு நாவல் எழுதினார் அவர்.

தலைப்பு பற்றிச் சொல்லும்போது, சாவி ஆனந்த விகடனில் எழுதிய, 'விசிறி வாழை' தொடர்கதைத் தலைப்பு குறித்தும் சொல்ல வேண்டும். "வயதான தொழிலதிபர் ஒருவருக்கும், சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு பெண்மணிக்கும் இடையே காதல். இந்த ஒன்லைன் ஸ்டோரியை விரிவாக்கி தொடர்கதையாக எழுத முடியுமா? ஜெயகாந்தனோ அல்லது நீங்களோதான் இதை வெற்றிகரமாகச் செய்ய முடியும்", என்று விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் சொல்ல, ஒப்புக்கொண்ட சாவி, 'விசிறி வாழை' என ஒரு தலைப்பையும் உடனே சொன்னார். 'வாஷிங்டனில் திருமணம்' ஒரு நகைச்சுவைத் தொடர்கதை என்றால், 'விசிறி வாழை' சென்டிமென்ட் நிரம்பிய ஒரு சீரியஸ் தொடர்கதை.

‘கதையே இன்னும் முடிவாகவில்லை, அதற்குள் 'விசிறி வாழை' “என உடனே எப்படித் தலைப்பிட்டீர்கள்? என ஆசிரியர் பாலசுப்ரமணியன் வியப்புடன் கேட்க, "கதாநாயகியின் வாழ்க்கை யாருக்கும் உபயோகமில்லாமல் வீணாகப் போவதாகத்தான் இந்தக் கதை நீளும் சாத்தியம் இருக்கிறது. விசிறி வாழை பார்க்க அழகாக இருக்கும். ஆனால், அதனால் யாருக்கும் உபயோகம் இராது. எனவேதான், அதையே தலைப்பாக வைத்தேன்" என்றார் சாவி.

சாவியால் முன்னுக்கு வந்த எழுத்தாளர்களின் பட்டியல் நீளமானது. ஆனால், அதற்கான பெருமை எதையும் தனக்கு எடுத்துக் கொள்ள மாட்டார் சாவி. 'நான் யாரையும் உருவாக்கவும் இல்லை; வளர்த்துவிடவும் இல்லை. அவரவர்களுக்குத் திறமை இருந்தது. அதன் காரணமாகவே அவர்கள் மேலுக்கு வந்தார்கள்' என்பார். அதையும் கூட அருமையான ஓர் உதாரணத்தோடுதான் சொல்வார். 'விளக்கு இருக்கிறது; அதில் போதுமான எண்ணெய் இருக்கிறது; திரியும் இருக்கிறது. சொல்லப்போனால் அது எரிந்துகொண்டும் இருக்கிறது. நான் கீழே கிடந்த ஒரு சின்ன குச்சியைக் கொண்டு திரியைத் தூண்டிவிட்டேன். அது பிரகாசமாக எரிவதாக உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது. அவ்வளவுதான்! விளக்கில் எண்ணெயும் இல்லாமல், திரியும் இல்லாமல் இருந்தால் தூண்டிவிட்டு என்ன பிரயோசனம்?' என்பார்.

பயணங்கள் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர் சாவி. வெளிநாடு செல்லும் போதெல்லாம் தம்மோடு எழுத்தாளர் புஷ்பாதங்கதுரை, ஓவியர் ஜெயராஜ் என யாரையாவது உடன் அழைத்துச் செல்வார். தவிர, எடிட்டோரியல் மீட்டிங் என்கிற சாக்கில், தனது உதவி ஆசிரியர்களை அழைத்துக் கொண்டு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை பெங்களூர், ஊட்டி, குன்னூர் என இரண்டு மூன்று நாட்கள் சென்று தங்கி வருவது வழக்கம். சிங்கப்பூர் சென்று வருவதென்பது சாவி சாருக்கு அண்ணா நகரிலிருந்து மந்தைவெளி சென்று வருகிற மாதிரி!

ஆனந்த விகடன் அதிபர் எஸ்.எஸ். வாசன் தமது காரில் கல்கி, துமிலன், ஓவியர் மாலி என தமது சகாக்களை அழைத்துக் கொண்டு அடிக்கடி சென்னை, மவுண்ட் ரோடில் உள்ள காஸ்மோபாலிடன் கிளப்புக்குச் சென்று, சிற்றுண்டி வாங்கித் தருவது வழக்கம். அந்நாளில், விகடனில் கற்றுக்குட்டி உதவி ஆசிரியராகச் சேர்ந்த சாவியின் மனதில் இது அழுத்தமாகப் பதிந்தது. பின்னாளில் தமது சகாக்களையும் அதே போல் தமது காரில் அதே காஸ்மோபாலிடன் கிளப்புக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி வாங்கித் தருவதை வழக்கமாக்கிக் கொண்டார் சாவி.

எஸ்.எஸ்.வாசன், கல்கி, சதாசிவம், பெரியார் எனத் தம்மோடு பழகியவர்களைப் போலவே மிமிக்ரி செய்து பேசுவதில் வல்லவர் சாவி. எஸ்.எஸ்.வாசன் போலவே நடந்து, அவரைப் போலவே சாவி மிமிக்ரி செய்து பேசும்போது அமரர் வாசனையே நேரில் பார்த்ததுபோல் இருக்கும்.

மகாத்மா காந்தி, தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜ், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்பச் செட்டியார், பேராசிரியர் கல்கி, அறிஞர் அண்ணா, முஜிபுர் ரஹ்மான், இசைக்குயில் லதா மங்கேஷ்கர், கிருபானந்த வாரியார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி எனப் பல முக்கியப் பிரபலங்களுடனும் நெருங்கிப் பழகியவர் சாவி. வேறு எந்தப் பத்திரிகையாளருக்கும் இத்தகைய அபூர்வ வாய்ப்பு கிட்டியதில்லை.

தமது குரு பேராசிரியர் கல்கி மீது பெரும் மதிப்பும், மரியாதையும் கொண்டவர் சாவி. சின்ன வயதில் சில்க் ஜிப்பா அணிவதென்றால் சாவிக்கு அத்தனை இஷ்டம். ஆனால், தேசியத்தில் பற்றுடையவரான கல்கி, ஜிப்பாவெல்லாம் கூடாது. நல்ல கதர்ச் சட்டையாக வாங்கி அணிந்து கொள்! என்று சொன்ன ஒரே காரணத்துக்காக, தனது முதல் சம்பளத்தில் ஆசை ஆசையாக வாங்கி அணிந்த சில்க் ஜிப்பாவை அன்றைக்குக் கழற்றிப் போட்டவர்தான்... அதன்பின் சாவி தமது வாழ்நாள் முழுவதும் சில்க் ஜிப்பா அணியவே இல்லை என்பதோடு, பெரும்பாலான நாட்களில் கதர்ச் சட்டையே அணிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த விகடனில் பணியாற்றுவதையே சாவி பெரிதும் விரும்பினார் என்றாலும், கல்கி அங்கிருந்து வெளியேறியதும், குருவின் மீதுள்ள அபிமானத்தால் தானும் அங்கிருந்து வெளியேறி, குருவின் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்றார் சாவி.

கல்கியுடன் ஏற்பட்ட ஒரு சின்ன மன வருத்தத்தில், அவரின் கல்கி பத்திரிக்கையிலிருந்து விலகி, சொந்தமாக வெள்ளிமணி பத்திரிக்கையைத் தொடங்கினார் சாவி. இருந்தாலும், முதல் இதழை தன் குருநாதர் கல்கிக்கு அர்ப்பணம் செய்வதாக அதில் குறிப்பிட்டிருந்தார். வெகு சீக்கிரமே, சாவியின் மனசு புரிந்து கோபம் தணிந்த கல்கி, சாவி கேட்டுக்கொண்டதன் பேரில் வெள்ளிமணிக்கும் கட்டுரைகள் எழுதித் தந்துள்ளார். அது மட்டுமல்ல, தானே ஆசிரியராக இருந்து வெள்ளிமணியை நடத்தித் தருவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார். கூடவே, வெள்ளிமணி பத்திரிகையை இன்னும் சிறப்பாகக் கொண்டு வர, தமக்குப் பழக்கமான செல்வந்தர்கள் சிலரிடமிருந்து நிதி உதவி பெற்றுத் தரும் முயற்சியிலும் இறங்கினார் கல்கி. ஆனாலும், வேறு பல காரணங்களால், வெள்ளிமணி பத்திரிகையை சாவியால் தொடர்ந்து நடத்த இயலாமல் போனது.

சுப்புடுவை அற்புதமான சங்கீத விமர்சகராக வாசகர்களுக்கு வெளிச்சமிட்டுக் காண்பித்தவர் சாவிதான். அவருக்கும் கூட ஒரு பாராட்டு விழா எடுத்திருக்கிறார் சாவி.

சென்னை, அண்ணா நகரில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தபோது, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் நாதஸ்வரக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார் சாவி. சாவியின் அன்பு அழைப்பின் பேரில் பெருந்தலைவர் காமராஜ் வந்திருந்து அந்தக் கச்சேரியை முழுக்க இருந்து கேட்டு ரசித்துவிட்டுப் போனார்.

ஆனந்த விகடனில் சாவிக்கு சீனியராக இருந்தவர் துமிலன். பின்னாளில், அவர் சிரமதசையில் இருந்த காலத்தில், காமராஜரிடமும் தனக்கு நெருக்கமான காங்கிரஸ் அன்பர்களிடமும் தொடர்ந்து பேசி, 'சுதந்திரச் சங்கு' என்ற வாரப் பத்திரிகையை ஆரம்பித்து, துமிலனை அதன் ஆசிரியராக்கினார் சாவி.

நன்றி:விகடன்

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு