குறளோவியம் - கலைஞரின் குறளோவியத்தில் பகுத்தறிவுச் சித்திரங்கள்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/kuraloviyam 

கலைஞரின் குறளோவியத்தில் பகுத்தறிவுச் சித்திரங்கள்

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

வள்ளுவப் பெருந்தகையின் வாழும் குறள் நெறியைப் பரப்புவதில் காலந்தோறும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்திருப்பதை வரலாறு காட்டுகிறது. வள்ளுவரின் குறள்நெறிபரப்பிட மாநாடுகள் எடுத்த புதுமையாளர் தந்தை பெரியார். தவிர உரைகள், உரை வீச்சுகள், கவிதை மழைகள், சிறுகதைகள், நாடகங்கள், நாவல்கள் எனும் புதினங்கள், கட்டுரைப் படைப்புகள், கடித இலக்கியங்கள் எனப் பல்வகை இலக்கியச்சிற்பங்கள் செதுக்கிய சிற்பிகள் எண்ணற்றோராவர். இவற்றில் எளிய மக்களின் இதயச் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தவை சிலவே. தலைவர் கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டம், குமரிமுனையில் எழுப்பித்த குறளாசான் நெடிய திரு உரு, அவரின் எழுதுகோல் தீட்டிய குறளோவியம் என்றும் நிலைத்து நிற்பவையாகும்.

குறளோவியம் - ஒரு குறுங்கதை, குறுங் கவிதை, குறு நாடகம் எனலாம். குறள் ஒன்றை எடுத்து அதனை விளக்கி வெளிச்சம் போடக் கதை ஒன்று அல்லது நிகழ்வு - அடைத்திட்ட சொல்லோவியம். தலைவர் கலைஞருக்கு மட்டுமே கைவந்த கைவண்ணம் - அதுவே குறளோவியம். குறளுக்கு நல்லதோர் விளக்க மளித்திட விழையும் கலைஞர் அதைச் சொற் சித்திரமாய்த் தீட்டிப் படிப்போரை மகிழச்செய்கிறார். அவ்வாறு தீட்டிய குறளோவியம் உடற்சோர்வுக்கு, உளச்சோர்வுக்கு மட்டும் விருந்தாகாமல் - மருந்தாகாமல் - அவர் வந்த பகுத்தறிவு நெறிகாட்ட, வழிகாட்டப் பயன்படும் அற்புதம் தான் நம்மை வியக்கமட்டுமின்றித் திகைக்கவும் வைக்கிறது. வெறும் இலக்கியவாதியாக மட்டுமல்லாமல், பகுத்தறிவுவாதியாகவும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நெறியை எடுத்துச்சொல்லவும் குறளோவியம் தீட்டுகிறார்.

குறளிடத்துத் தலைவர் கலைஞருக்கு உண்மையான மதிப்பும், ஈடுபாடும், தெளிவும் அது உலகிற்குப் பெரிதும் பயனளிக்கவல்லது எனும் உணர்வும், உறுதியும் மிகுந்து உள்ளது.

குறளோவியத்தில் வரும் மாந்தர் வழி வள்ளுவரைப் புகழ்தல், படைப்பாளராகத் தாமே வள்ளுவரைப் புகழ்தல், கருத்துகளிள் வெளிப்பாட்டில் குறளின் தாக்கம் மட்டும் காட்டாமல் தம் இதயக்கொள்கை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போற்றிய பகுத்தறிவுக் கொள்கை ஆகியவற்றின் பரப்புரைக்குப் பரப்புரை என உணர வைத்திடவே தீட்டுகிறார் குறளோவியம்.

கலைஞரின் படைப்பில் அவர் காலூன்றி வளர்ந்த கொள்கை, இயக்கத்தின்தாக்கம் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ வெளிப்பட்டுத்தான் தீரும்.

ஈரோட்டுப் பாதையே அவர் நடந்த பாதை, அவர் பயின்ற பள்ளி ஈரோட்டுப் பாசறை என்பதோடு நம் சமுதாய விடிவெள்ளி தந்தை பெரியாரின் உண்மையான வழித்தோன்றல்களுள் ஒருவர் என்பதால் அவர் உயிர் மூச்சுக் கொள்கையான அவர் சார்ந்த பகுத்தறிவு இயக்கக் கொள்கையின் தாக்கம் குறளோவியத்தில் இடம் பெற்றுள்ளமை இயல்பானதாகும். குறளுக்கு எத்தனை, எத்தனையோ அறிஞர் பெருமக்கள் தம் தம் வழியில் விளக்கம் அளித்தபோதும் தம் உரையில் புரட்சிக் கவிஞர், பேராசிரியர் அன்பழகனார் விளக்கம் அளித்தனர் எனினும், குறளோவியம் தீட்டுகையில் பகுத்தறிவு இயக்கங்கள் கொண்டு விளக்கம் காண முயன்றவர் கலைஞர் ஒருவரேயாவார்.

எல்லாவற்றையும் எடுத்து இயம்பி அதன் மணம் நுகரச் செய்ய இடம் போதாது; ஒன்றிரண்டை மட்டும் தொட்டுக் காட்டுவோம்.

குறளோவியம் ஒன்றில் வரும் தலைமகள் மருத்துவம் பயின்றவள். அவளிடம் மருத்துவத்திற்கு அன்னை ஒருத்தி தன் மகளை அழைத்து வருகின்றார். அதைக்காட்டக் கலைஞரின் தூரிகை தீட்டும் ஓவியம் இது.

“என் பெண் இருந்தார்போல் இருந்து ஏதோ பிதற் றுகிறாள், பேய்ச்சேட்டைபோல் தெரிகிறது. உங்களிடம் ஏதாவது மருந்து இருக்கிறதா அம்மா, மந்திரவாதியோ வெளியூர் போயிருக்கிறார்” என்று ஒரு வயதான தாயார் தன் மகளை அழைத்துக்கொண்டு மருத்துவர் மரகதத் திடம் வருவாள். மரகதம் அந்த முதியவளின் அறி யாமையை எண்ணி வருந்துவாள். இப்படி ஒரு மூடநம்பிக்கை தாய்க்குலத்தைப் பிடித்து ஆட்டுகிறதே என்று கவலைப்படுவாள். மருத்துவரான மரகதம் வந்த பெண்ணின் நோய் வகை அறிந்து அதனை மருந்தால் நலம் பெறச்செய்வதாகக் கூறுகிறாள். இங்கு மருத் துவராக மரகதம் எனும் பெயரில் பகுத்தறிவுப் பல் கலையில் பயிற்சி பெற்ற மருத்துவராகத் தோன்றக் காண்கிறோம்.

அடுத்து ஒரு குறளோவியம் காண்போம். ஒரு தலை மகள் தன் கணவனுக்கு உணவு படைக்கிறாள். சோறு, வெங்காயப்பச்சடி, கிழங்கு வறுவல் ஆகியவற்றை இலையில் வைத்ததுடன் பாகற்காயையும் படைக்கிறார். இலைதனில் எப்படிப்படைக்கிறார் என்பதைக் கூறு கையில் பகுத்தறிவுக் கொள்கை எத்தகையது என்ப தனைப் பாங்குடன் கூறுகிறாள் இப்படி. அவர் கூறுவதாக அங்கே கலைஞர் எனும் பகுத்தறிவாளர் கூறுவது இது.

“கசக்குமெனினும் பாகற்காய் பகுத்தறிவுக் கொள்கை போல நல்ல பயன்தரும் என்பீர்களே! அதற்காகத்தான் இன்று அதைச் சமைத்தேன் என்று கூறியவாறே பாகற்காயைப் படையலிடுகிறாள்.

இக்குறளோவியத்தில் கலைஞர் காட்டும் கணவன் பகுத்தறிவுச் சிந்தனையாளர். அவருடைய பகுத்தறிவுச் சிந்தனையின் தாக்கம் மனைவிக்கும் ஏற்பட்டு இருக் கிறது. கலைஞர் கணவனின் கருத்துக்கு முரண்பட்ட வளாக மனையாளைக் காட்டாது, கணவனின் கொள்கை யினை ஏற்றுக்கொண்ட மனையாளையும் காட்டி, மனையாளும் மாறுபட்டு இருத்தல் கூடாது என்பதைக் காட்டுகிறார்.

இங்கே கலைஞரின் குறளோவியத்தில் ஒரு சிறப்பினைக் காண்கிறோம். பகுத்தறிவுக் கொள்கை சார்பான உணர்வையும், கூற்றையும் குறளோவியங்களி லிருந்து எடுத்துவிட்டாலும் குறளுக்கான விளக்கங்களில் பாதிப்பு ஏற்படாது.

நம் சமுதாயத்தில் மூதேவி, சீதேவி தொடர்புடைய நம்பிக்கைகள் உலவி வருவதை அறிவோம். பகுத்தறிவுக் கொள்கையாளர்களான இரு நண்பர்களைக் கொண்டு இந்த மூதேவி, சீதேவி தொடர்புடைய நம்பிக்கையை நையாண்டி செய்கிறார் கலைஞர் ஒரு குறளோவியத்தில்!

இராமாயணத்தை அடித்துத் துவைத்து வெளுத்துப் போட்ட ஒருவர் உண்டு எனில் அவர் தந்தை பெரியார் ஒருவரே. எனவே அவர் கொள்கை வழிநிற்கும் கலைஞர் மட்டும் இராமாயணத்தை விட்டுவிடுவாரா?

1971ஆம் ஆண்டு தேர்தலில் இராமனுக்குச் செருப்பு மாலை போட்டதால் திமுக தோற்றுப்போய்விடும் என்ற பூச்சாண்டியை மதிக்காது எதிர் கொண்டு நின்று அதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் எவருமே பெற்றிராத இன்றுவரை எட்டமுடியாத எண்ணிக்கையைப் பெற்ற - முறிக்கவியலாத வரலாற்றுச் சாதனையாளர் அல்லவா?

“ஆ! கீர்த்தனா ரம்பத்திலே” என்று தொடங்கி இராமாயணத்தைச் சுவைபடக் கூறிக் காலட்சேபம் செய்யும் பாகவதர் ஒருவரைக் காமவேட்கையராகச் சித்தரிக்க வேண்டுமெனில் எத்துணைத் துணிச்சல் வேண்டும்! குறளோவியம் ஒன்றினை ‘குங்குமம்’ இதழில் (27.11.1978), பலர் படிக்கும் வார இதழில் தீட்டியிருக்கிறார் அவர்.

குறள்கள் சிலவற்றிற்குத் தரும் விளக்கங்களிலும் பகுத்தறிவு இயக்கப்பார்வையைக் காண்கிறோம்.

அறத் தாறிதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோ டூர்ந்தான் இடை            (குறள் 37)

என்னும் குறளுக்கு உரை தருகையில் பகுத்தறிவு உரையாளராக நிமிர்ந்து நிற்கிறார் கலைஞர்.

இக்குறளுக்குப் பல்வேறு வகை மாறுபட்ட உரைகள் உள்ளன.

சமயச் சார்புடையோர் இக்குறளுக்கு உரை கூற முற்படுகையில் முற்பிறப்புக் கோட்பாட்டை ஏற்று, முற்பிறப்பில் செய்த நன்மை, தீமைகள், அவற்றின் விளைவுகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே உரை கூறிச் சென்றுள்ளனர்.

பகுத்தறிவாளர் கலைஞர் இக்குறளுக்கு அவர்கள் அனைவரிலும் மாறுபட்ட ஓர் உரை விளக்கம் அளிக்கிறார். கலைஞர் அளித்திடும் விளக்கம் இது.

“அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் செல்ப வனைப் போல் வாழ்க்கையில் வரும் இன்ப - துன்பங்கள் இரண்டையும் எளிதாகக்கருதிப் பயணத்தைத் தொடர்வர். தீயநெறிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்குகிறவர்களைப் போல் இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், அதே சமயம் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவமின்றி வாழ்வையே வெறும் சுமையாகக் கருதுவர்”

இப்படி ஏராளமான பகுத்தறிவு வழிப்பட்ட உரைச்சான்றுகள் கலைஞரின் குறளோவியத்தில் குறள் விளக்கத்தில் காணலாம். இந்தப்பகுத்தறிவாளர் தீட்டிய குறளோவியம் சுவை குன்றாதது.

நன்றி:விடுதலை

Back to blog