https://periyarbooks.com/products/kuraloviyam

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/kuraloviyam
 
நன்றியுரை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்க்கை நெறி வகுத்துக் காட்டி வள்ளுவரால் வழங்கப் பெற்ற அறிவுக் கருவூலமே திருக்குறள்.

விஞ்ஞானம் பெருகிப் பரவி வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் நிழற்படக் கருவியின் வாயிலாக ஒளிப்பதிவாளர்கள் அவர்கள் திறனுக்கேற்பவும், கற்பனைக்கேற்பவும் ஒரு அழகுமிழ்ச் சோலையையோ ஒரு ஆலயத்துக் கோபுரத்தையோ. ஒரு ஆடற்பாவையின் சிலையையோ பல்வேறு கோணங்களில் சித்தரித்துக் காட்டுகிற வித்தகத்தைக் கண்டு மகிழ்கிறோம்.

அஃதே போல் அழியாப் புகழ் கொண்ட குறளுக்குப் பதவுரையென்றும் விரிவுரையென்றும், விளக்கவுரையென்றும் அக்காலந் தொட்டு இக்காலம் வரையில் ஆய்ந்து வழங்கியுள்ள அறிஞர் பெருமக்கள் பலர் எனலாம்.

பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காலிங்கர், பரிப்பெருமாள் போன்றோர் குறளுக்குத் தந்துள்ள விளக்கங்களே யன்னியில் பிற்காலத்திலும் புலவர் பெருமக்கள் அரிய விளக்கங்களை அளித்துள்ளனர்.

குறளின் பெருமை கூற வந்த அக்காலப் புலவர் கபிலர்,

``தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட

பனையளவு காட்டும் படித்தால்,’’

என்று வியந்து போற்றுகிறார்.

காலைநேரம், கபிலர் பசும் புல் ஒன்றைப் பார்க்கிறார். தரையுடன் ஒட்டிக் கிடக்கும் அந்தச் சிறிய புல்லின் நுனியில் தினையின் அளவைக் காட்டிலும் குறைவான ஒரு பனித்துளியையும் அவர் காண்கிறார். பனித்துளியை உற்று நோக்குகிறார். அந்தப் பனித்துளியின் அளவுக்குள்ளே ஆங்கருகே ஓங்கி உயர்ந்து நிற்கும் பனைமரம் முழுவதும் தெரிகிறது! அந்தக் காட்சி கபிலரைக் கற்பனைச் சிறகடித்துப் பறக்கச் செய்கிறது! ``ஆகா! ஒரு சிறு பனித்துளிக்குள்ளே பக்கத்தேயுள்ள பனைமரம் முழுதும் தெரிகின்றதே; இதே போலத்தான் வள்ளுவனின் குறட்பாவுக்குள்ளும் இந்த வையகத்துக்குத் தேவையான பெரும் பொருள் பொதிந்து கிடக்கிறது'' என்கிறார்.

குர்ஆன், பைபிள் போன்றவை மார்க்க மத நூல்களாகப் போற்றப்படுகின்றன! அந்த மார்க்க மதங்களைச் சேர்ந்த கோடானு கோடி மக்கள், தங்களுக்குத் தக்க வழி காட்டும் அருட் பிழம்புகளென அந்த நூல்களை ஏற்றித் தொழுது பின்பற்றுகின்றனர்!

குறள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் அல்லது மார்க்கத்தின் வழி காட்டும் நூலாக இல்லாமல் பொதுவான வாழ்க்கை நெறி வகுக்கும் நூலாகத் திகழ்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு உருவாகியிருந்த தமிழ் நிலத்துச் சமுதாயச் சூழலின் நடுவிலே எழுத்தாணி பிடித்து ஏடெழுதிய வள்ளுவப் பெருந்தகையார், அறம் எதுவென அறுதியிட்டுக் கூறினார். இல்வாழ்க்கையின் இனிய பயனையும், எப்படியிருந்தால் துறவறம் சிறப்புடையது என்பதையும், வாழ்க்கையில் கொள்ளுவன தள்ளுவன எவை எவை எனப் பகுத்துக்காட்டியும், முடியரசு ஆட்சி நடந்த காலத்திற்குச் சொல்லப்பட்ட அறிவுரைகள் குடியரசு ஆட்சி நடக்கும் நாடுகளுக்கும் பொருத்துமெனக் கூறுமளவுக்கு அரசியல் கோட்பாடுகளை வகுத்தளித்தும், உயிர் இனத்தின் இயற்கை உணர்வான காம உணர்வு ஆறாவது அறிவையும் பெற்றுள்ள மனித இனத்தினையும் ஆட்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது எனினும் அதற்கு அன்பினை அடிப்படையாகக் கொண்ட இலக்கண இலக்கியக் கவசம் அணிவித்தும், எப்பாலினும் சிறந்த முப்பாலினைப் பொழிந்து அதில் தேன் தமிழும் கலந்து நம் இதயத்தின் வாயிதழ் திறந்து ஊட்டுகின்ற அமிழ்தமே திருக்குறள்!

ஒன்றுக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறட்பாக்களுக்கோ பதவுரை, விரிவுரை என்று எழுதிக் கொண்டிராமல் பலரும் விரும்பிப் படிக்கத் தக்க வண்ணம் அவர்களைக் கவர்ந்திழுத்துக் கருத்துக்களை நெஞ்சத்தில் பதிய வைத்திட வேண்டுமென்ற ஆசைத் துடிப்பு எனக்கு முப்பது ஆண்டுக் காலமாகவே உண்டு.

முதல் முயற்சியை 1956-ஆம் ஆண்டு தொடங்கினேன். ``முரசொலி'' வார இதழில் ``குறளோவியம்'' என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதிடத் துணிந்தேன். அதற்கென முதலில் நான் தேர்ந்தெடுத்து சொல்லோவியம் தீட்டிய குறள்:-

``புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து''

என்பதாகும்.

``தமைக்காத்த தலைவன் தமக்காகக் கண்ணீர் சிந்துமளவுக்கு ஏற்படுகின்ற களச்சாவினை வீரர்கள், யாசித்தாவது பெறவேண்டும்''

என்பதே இதன் பொருளாகும். களம்பட்டுத் தியாகியாக நான் மாண்டு கிடக்க என் உடல் மீது என் தலைவர் அண்ணா அவர்கள் கண்ணீர் சிந்தும் பேறு பெறவேண்டும்மென்ற அவா மிகுதியால் எழுதப்பட்ட முதல் குறளோவியம் இது.

ஆனால் நான் நினைத்தற்கு மாறாக நடந்து விட்டதே! என் அன்புத் தலைவர் எனக்கு முன் மறைந்து விட்டாரே!

முரசொலி வார இதழ், நாளிதழாக மாறிய பிறகு, வாரந்தோறும் ``குறளோவியம்'' எழுதிட வாய்ப்பில்லாமற் போயிற்று.

அதுவரை வெளிவந்த குறளோவியங்களைத் திரட்டி மிகக் சிறு நூல் வடிவில் வேலூர் நண்பர் திராவிடர் பதிப்பகக் கிருட்டிணன் அவர்கள் வெளியிட்டார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுத்தாள நண்பர் சாவி அவர்கள்; அவர் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வந்த ``தினமணி கதிர்'' வார இதழில் குறளோவியத்தைத் தொடர்ந்து எழுதுமாறு என்னைத் தூண்டிக் கொண்டேயிருந்தார்.

``தினமணி கதிர்'' இதழில் வாரந் தோறும் குறளோவியம் இடம் பெற்றது.

அதன் பிறகு முரசொலி மாறன் வெளியிடும் ``குங்குமம்'' வார இதழில் குறளோவியம் தொடர்ந்தது.

இந்த நூலில் முன்னூறு குறளோவியங்கள் இடம் பெற்றுள்ளன. பயன்படுத்தப்பட்டுள்ள குறட்பாக்கள் 354 ஆகும்.

அறத்துப்பாலில் 76 குறட்பாக்கள். பொருட்பாலில் 137 குறட்பாக்கள் இன்பத்துப்பாலில் 141 குறட்பாக்கள்.

இந்த 354 குறட்பாக்களுக்கும் சொல்லோவியம் இயற்றிட செழிப்பு மிகுந்த செந்தமிழ் எனக்குத் துணை நின்றுள்ளது என்பதை நூலுக்குள் நுழைந்தவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

கவிதை நடையை உரைநடையிற் கலந்து அதனைக் கரடுமுரடான கடுந்தமிழ்நடையாக்கி விடாமல் எழில் கூட்டி எளிய நடையில் வழங்கிடும் புதிய நடையொன்றை 1945-ஆம் ஆண்டு நான் ஈ.ரோடு `குடியரசு' அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களின் அரவணைப்பில் இருந்தபோதே அறிமுகப்படுத்தினேன்.

``கவிதையல்ல'' என்ற தலைப்பில் புதுக்கவிதைகளை அப்போதுதான் எழுதத் தொடங்கினேன்.

``மடிந்தான் உன்மகன் களத்தில் என்றான்

மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க் கிழவி ஒரு முறை!

தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு,

களமும் அதுதான்!

காயம் மார்பிலா? முதுகிலா?

கழறுவாய்'' என்றாள் - முதுகில் என்றான்!

கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்

வாளை எடுத்தனள்;

முழவு ஒலித்த திக்கை நோக்கி

முடுக்கினாள் வேகம்!''

``கோழைக்குப் பால் கொடுத்தேன்

குப்புற வீழ்ந்து கிடக்கும்

மோழைக்குப் பெயர் போர் வீரனா?

முன்பொரு நாள்

பாய்ந்து வந்த ஈ.ட்டிக்குப்

பதில் சொல்ல மார்பைக் காட்டிக்

சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர்.

அவருக்குப் பிறந்தானா?

அடடா! மானமெங்கே?''

``புறநானூற்றுத் தாய்'' என்ற தலைப்பில் எழுதிய நீண்டதோர் புதுக் கவிதையின் சில வரிகளே இவைகள்!

1953-ஆம் ஆண்டு திருச்சி சிறையில் ஆறுமாதக் கடுங்காவல் கைதியாகக் கல்லக்குடி போராட்டத்தின் காரணமாக அடைப்பட்டிருந்த போது ``புதுக்கவிதை'' பாணியில் பல எழுத்தோவியங்கள் உருப்பெற்றன.

 ``வைரமணிகள்'' எனும் நூல் வடிவில் அவை வெளி வந்துள்ளன. புகழே! நீ ஒரு கணிகை, கால் கடுக்க உன்னைத் தேடி அலைபவர்களிடம் காசு பெற்றுக் காதல் வழங்குகிறாய்!

புகழே! நீ ஒரு சந்திர மண்டலம். உன்னை முழுமையாக அடையும் முயற்சியில் பல மேதைகள் இன்னும் வெற்றி பெற முடியவில்லை.

புகழே! நீ இமயத்தின் உச்சி. இடைவிட முயற்சியால் உன்னைச் சிலர் பிடித்து விடுவார்கள்!

புகழே! நீ ஒரு பனிக்கட்டி, உன்னைக் கைக்குள்ளேயே வைத்து கெட்டியாகப் படிந்திருந்தாலும் நீராகக் கரைந்து மறைந்துவிடுகிறாய்!

புகழே! நீ ஒரு மதுக்கலயம், உன்பால் வீழ்ந்த ஈ.க்கள் எழுந்ததே இல்லை!

புகழே! நீ ஒரு நிழல். உன்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களைத் தொடர்ந்து கொண்டேயிருப்பாய்!''

புதுக் கவிதைகள் எனப் பெயர் சூட்டிக் கொண்டு இன்று ஏராளமாகப் பெருகிவிட்ட சொல்லோவியங்களை சுமார் நாற்பது ஆண்டுகட்டு முன்பே நான் உருவாக்கிட முயற்சித்தேன் என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு! இதோ மற்றொன்று:-

``மலையே! வைரமணி விளக்குகள்

ஒளிவிடும் வானப்பந்தலின் கீழ்

அரியாசனம் வீற்றிருக்கும்

பூமி அன்னையின் தலையை அலங்கரிக்கப்

பொன்னாலும் பச்சையாலும்

இழைக்கப்பட்ட மணிக்கிரீடம் என்பேன் உன்னை!

விண்ணகத்து வெண்முகில்கள் எல்லாம்

கீழே வீழ்ந்து கண்ணுக்கெட்டா உயரம்

வளர்ந்தனவோ எனத் திகைக்கின்றேன்!

பனியால் நீ உடலை மூடிக்கொண்

டிருக்கும்போது!''

இது போலச் சிறையில் நான் வார்த்தெடுத்த சிற்பங்கள் பல உண்டு.

கவிதை நடை சிறு கதைகள் பலவற்றை ``தேனலைகள்'' எனும் தலைப்பில் பல ஆண்டுகட்கு முன்பே எழுதிய பழக்கமும் எனக்குண்டென்பதைத் தமிழகம் அறியும்; அந்தப் புத்தகப் தொகுப்பின் வாயிலாக!

எனவே எழிலார் தமிழ் எடுத்து, எண்ணத்தை எழுத்து வண்ணமாகக் குழைத்தளித்துக் குறளுக்குக் கருத்தோவியங்கள் தீட்டுவதில் எனக்குத் தயக்கமில்லை. தடங்கல் குறுக்கிட்டதுமில்லை!

என் ஆற்றல் பற்றி அளக்கிறேன் ஆணவத்துடன் என்று அருள் கூர்ந்து நினைத்திட வேண்டாமெனப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

குறளோவியம் எழுதிடப் புதிதாகப் பயிற்சி பெறவில்லையென்பதையும், நாற்பது ஆண்டுக் காலமாக நான் பல்வேறு கோணங்களில் வளமை மிகு தமிழ் மொழியைப் படம் பிடித்துக் காட்டி வருவதின் தொடர்ச்சியே இந்த நூல் என்பதையும் விரித்துரைக்கத்தான் இத்தகைய எடுத்துக்காட்டுக்களே தவிர இறுமாப்பின் விளைவல்ல! அந்தத் தீய பண்பு என் இதயத்தில் எள்முனையளவு கூட என்றைக்கும் இடம் பெற்றதுமில்லை!

உரைநடையில் குறட்பாக்களை மலர் உரைத்தோர் உளர்!

சுருக்கமாகச் சுவையாகக் குறளுக்குப் பொழிப்புரை புகன்றோர் உளர்!

இசைத் தமிழால் இனிய குறளைச் செவி வழி பாயச் செய்து சிந்தை குளிர்விப்போர் உளர்!

இவற்றுக்கிடையே என் பங்காக நிகழ்ச்சிகளைக் காட்சியாக்கி நிழல் தரும் குளிர் தருக்கள் அடர்ந்த நீரோடைத் தமிழிலும், நெஞ்சில் கனலேற்றும் முழவோசைத் தமிழிலும், நீள் விழியில் நதி தோன்றத் தூண்டும் உருக்கமிகு உணர்ச்சித் தமிழிலும் குறட்பாக்களை உங்கள் முன்னால் உலவ விட்டிருக்கிறேன்.

கருத்தோவியங்களுக்கேற்ப கவின்மிகு ஓவியங்களை வரைந்துள்ள திறன் மிகு ஓவிய வல்லுநர்கட்கு என் வாழ்த்துக்கள்!

சென்னை தமிழ்க்கனிப் பதிப்பகத்தார்க்கே முழு உரிமையும் உடைய இந்த நூலின் முதற்பதிப்பை வெளியிட முன் வந்த பாரதி பதிப்பகத்து நண்பர் சிதம்பரம் அவர்கட்கு என் நன்றி!

புலவர் பெருமகனாரும் நல்ல தமிழறிஞரும் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்து முன்னாள் துணைவேந்தருமான டாக்டர். வ.சுப. மாணிக்கம் அவர்கள் இந்த நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரை, இலக்கியப் பணியில் என்னை மேலும் மேலும் தொடர்ந்து ஈ.டுபடத் தூண்டுகின்ற உளமார்ந்த வாழ்த்தாகவே அமைந்துள்ளது. அவரது பண்பும், பாசமும், அன்பும் நிறைந்த இதயத்துக்கு என்றைக்கும் நன்றியுடையவனாக இருப்பேன் நான்!

இன உணர்வுடன் இலக்கியப் பணியாற்றும் தன்மானத் தமிழ் அறிஞர்கட்கு இந்நூலைக் காணிக்கையாக்கி மகிழ்கிறேன்.

 

மு. கருணாநிதி

நன்றி:திருக்குறள்.காம்

Back to blog