கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/kovil-nulaivup-poraattangalil-dravidar-iyakkangalin-pangerppu 
முன்னுரை

கோயில்கள் என்பவைகள் தான் இன்றும் சாதி ஆதிக்கத்தைக் கட்டி காத்து வரும் நிறுவனங்களாகச் செயல்பட்டு வருகின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர், நாடார், புலையர், முதலான ஒடுக்கப்பட்ட சாதியினரை அனுமதிப் பதில்லை. மற்ற சூத்திரச் சாதியினரையும் கருவறைக்குள் அனுமதிப்பதில்லை.

இந்த இழிநிலையை அகற்றுவதற்காக 19ஆம் நூற்றாண்டு முதலே பல வகையானப் போராட்டங்கள் இந்தியாவின் பல்வேறுப் பகுதிகளில் நடைபெற்றன.

1926ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை இயக்கம் சென்னை மாகாணத்தில் வீச்சாகச் செயல்பட ஆரம்பித்தது.

சாதி, வருண ஒழிப்புக்காகச் சுயமரியாதை இயக்கம் பல மாநாடுகளை நடத்தியது. முதலாவது சுயமரியாதை மாநாடு 1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கற்பட்டில் நடந்தது. அம்மாநாட்டில் சாதி, வருண ஒழிப்பிற்காகப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 10, 11-8-1930 இல் ஈரோட்டில் நடைபெற்ற இண்டாவது சுயமரியாதை மாநாட்டில் சுயமரியாதையை மீட்டெடுப்பதற்காகச் சத்தியாகிரகம் செய்வதற்கென்றே W.P.A. சௌந்தர பாண்டியன் தலைமையில் 'சுயமரியாதைச் சத்தியாக்கிரகக் குழு' அமைக்கப்பட்டது.

இந்த இயக்கம் தீண்டப்படாதாரை அனுமதிக்காத கோயில்களில் சத்தியாகிரகம் செய்து அவர்களைக் கோவில் களுக்குள் அழைத்துச் சென்றது.

காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு தாழ்த்தப்பட்டோருக்கு உரிமையை பெற்றுத்தருவதாக வேடம் போட்டது. ஆனால் உண்மையில் திராவிடர் இயக்கம்தான் அம் மக்களின் உரிமைகளுக்காகப் போராடியது.

திராவிடர் இயக்கம் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தியதற்கும், காங்கிரசு மற்றும் இந்து மகாசபை கோயில் நுழைவை ஆதரித்ததற்கும் அடிப்படையில் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. திராவிடர் இயக்கம் இந்து மதத்தில் உள்ள வருணத்தை ஒழிக்கப் பாடுபட்டது. சாதி ஒழிந்தால் தான், மதம் ஒழிந்தால் தான் தீண்டாமை ஒழியும் என்பதைப் புரிந்து கொண்டு போராட்டங்களை நடத்தியது.

காங்கிரசும் இந்து மகாசபையும் இந்து மதத்தின் கொடுமை தாங்க முடியாமல் ஆதித் திராவிடர்கள் வேறு மதத்திற்குப் போய்விடுவார்கள் என்று அஞ்சி அம்மக்களை இந்து மதத்திற்குள் அடைத்து வைக்கவே பாடுபட்டது.

திராவிடர் இயக்கத்தின் கோவில் நுழைவுப் போராட் டத்தை முதன் முதலில் வெளிக்கொணர்ந்தவர் குருவிக் கரம்பை வேலு அவர்கள் (குத்தூசி குருசாமி; முதல் பதிப்பு 1975, பக்கம் 68) பிறகு ஈசா. விசுவநாதன், மங்கள முருகேசன், எஸ்.வி. ராஜதுரை, வே.ஆனைமுத்து, கோ. கேசவன் ஆகியோர் திராவிடர் இயக்கத்தின் கோயில் நுழைவு முயற்சிகளைத் தங்களுடைய நூல்களில் வெளிப்படுத்தி உள்ளனர். இவ்வளவு நூல்களில் இச் செய்திகள் வெளி வந்தப் பிறகும் கூட ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதத்தில் தினமணியில் மதுரை ஏ.வைத்தியநாத அய்யர்தான் முதன் முதலாகத் தாழ்த்தப்பட்டவர்களுக்காகக் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தினார் எனப் பார்ப்னர்கள் எழுது கின்றனர். பாட நூல் எழுதுவோரும் அப்படியே எழுது கின்றனர். ஆனால் உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் கோயில் நுழைவு உட்பட பல போராட்டங்களை நடத்தியது திராவிடர் இயக்கம்தான்.

திராவிடர் இயக்கத்தினர் பெரும்பாலோர் நாத்திகர் களாய் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப் கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினர். கோயில் நுழைவுப் பேராட்டம் நடத்தியதற்காகப் பல ஊர்களில் சுயமரியாதை, நீதிக்கட்சியினர் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தகைய வழக்குகளில் ஒன்றான ஈரோடு ஈசுவரன் கோயில் நுழைவுப் போராட் டத்தின் போது 4.4.29 இல் போடப்பட்ட வழக்கு விசாரணை முழுவதையும் இந்நூலில் எழுதியுள்ளேன். நீதிக் கட்சியின் இதழான திராவிடன் அப்போது நாளேடாக வெளிவந்து கொண்டிருந்தது. வழக்கு விசாரணை முழுவதையும் திராவிடன் இதழ் வெளியிட்டு வந்தது. தந்தை பெரியாரின் குடி அரசு, ரிவோல்ட் ஏடுகளும் அவ்வப்போது இச் செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன.

திராவிடர் இயக்க வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்பெறவில்லை. அதன் ஒரு பகுதியை இந்நூல் நிறைவுச் செய்யும் என நினைக்கிறேன்.

1800வாக்கில் வைக்கத்தில் தொடங்கிய முதல் கோயில் நுழைவுப் போரில் இருந்து 1939இல் மதுரையில் வைத்திய நாத அய்யர் கோவில் நுழைவு செய்ததாக விளம்பரப் படுத்தப்பட்டது வரையில் எனக்குக் கிடைத்த ஆவணங் களிலிருந்து எழுதி உள்ளேன். தமிழ் மக்களிடம், திராவிடர் இயக்கத்தவர்களிடம் இந்நூலுக்கு நல்ல வரவேற்பு இருந்தால் மேலும் அடுத்த பதிப்பில் இதை விரிவு செய்வேன்.

இந்நூலை உருவாக்க, கணினியில் தட்டச்சு, செய்து கொடுத்த திருமதி. சுகந்தி, திரு. மு. முனியசாமி ஆகி யோர்க்கும் பிழைகளைத் திருத்தம் செய்து கொடுத்து உதவிய கவிஞர் தமிழேந்தி, க.குயில் மொழி ஆகியோருக்கும் மேல் அட்டையை வடிவமைப்பு செய்து கொடுத்த தோழர் இரா. சபாநாயகம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

.அருள்மொழி

அருள்பாரதி பதிப்பகத்திற்காக

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog