கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/konjam-darwin-konjam-dawkins
முன்னுரை

ஒரே ஒரு முறை, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நான் திரு சுப.வீரபாண்டியன் ஐயாவைச் சந்தித்தேன். அவர் என் முந்தைய புத்தகம் ஒன்றைப் படித்திருந்தபடியால், தங்களுடைய பதிப்பகத்திற்கு ஒரு புத்தகத்தை எழுதித் தரும்படி என்னைக் கேட்டார். நான் தயங்கி இந்த புத்தகத்தின் பெயரைச் சொல்லி, “இந்தத் தலைப்பில் எழுதவா?” என்று கேட்டேன். அவர் உடனே மகிழ்ந்து என்னை ஊக்குவித்தார்.

உண்மையில் இந்தப் புத்தகத்தின் கருவை நான் ரொம்ப காலமாகச் சுமந்திருந்தாலும், இது தமிழ் கூறும் நல்லுகின் முன்முடிவுகளை புரட்டிப்போடும் தன்மை கொண்டது என்பதால் இதை விரிவாக எழுத நான் தயங்கினேன். இந்தப் புத்தகத்தில் இருக்கும் கருத்துகள் முழுக்க முழுக்க அறிவியல் ரீதியானவை, யாரையும் விமர்சிக்கவோ, காயப்படுத்தவோ எழுதபட்டவை அல்ல. அறிவியல் தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது என்ற கண்ணோட்டத்தை நினைவில் கொண்டே இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நூலை எழுதிட என்னை ஊக்கப்படுத்திய தோழர்கள் உமா, செந்தில்நாதன் ஆகியோருக்கு நன்றி. வெளியிட்டிருக்கும் ஐயா திரு சுப.வீரபாண்டியனுக்கு அன்பும், நன்றியும். இந்த நூலின் அத்தியாயங்களுக்கு அழகான தலைப்புகளைக் கடன் கொடுத்த கணியன் பூங்குன்றனாருக்கு என் ஆயுட்கால நன்றி!

இந்தப் புத்தகத்தைப் பார்க்க இப்போது உயிரோடு இல்லாவிட்டாலும், எனக்குத் தமிழில் மிகுந்த ஈடுபாடு வரக் காரணமாய் இருந்த என் தந்தை, தமிழே படிக்கத் தெரியாவிட்டாலும் மகள் எழுதுகிறாள் என்று மெச்சிக்கொள்ளும் என் தாய், இரவு பகலாய் நான் எழுதிக்கொண்டிருக்க, எனக்கு மிகவும் பொறுப்பாய் ஒத்துழைப்புக் கொடுத்த என் இணையர் மற்றும் பிள்ளைகளுக்கு என் அன்பும் நன்றியும்.

என்னதான் நான் யோசித்தாலும், எழுதினாலும், இதை வாங்கிப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்ட என் வாசகரின் தேர்விற்கும் நிச்சயம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்!

அன்புடன்,
ஷாலினி உள்ளாலயம், 3, ஜகதாம்பாள் நகர்
முதல் தெரு, வானகரம், சென்னை - 600095

Back to blog