கருஞ்சட்டைப் பெண்கள் - அணிந்துரை#1
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
பெண்ணுரிமைக் களத்தில் பதித்த சுவடுகள்
தோழர் ஓவியாவின் கருஞ்சட்டைப் பெண்கள் எனும் நூல். அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டில் வெளிவருவது மிகவும் பொருத்தமானதாகும்.
கருஞ்சட்டைப் பெண்கள் எனும் முதல் தலைப்பில் உலகளாவிய நிலையில் பெண்கள் நிலைமை எத்தகையது என்பது குறித்தும் இந்நூல் பேசுகிறது.
குறிப்பாக இந்தியாவில் பெண்களின் நிலைமையைப் பற்றி மேயோ எழுதிய இந்திய மாதா'வில் இடம் பெற்றுள்ள தகவல்களை எடுத்துக்காட்டியிருந்தது பொருத்தமானது. அந்நூலை எழுதிய அம்மையாரைக் காந்தியார், குப்பைக்காரி என்று சொன்னதும் அதனை எதிர்த்துச் சுயமரியாதை இயக்கத்தின் கருத்தாகத் தோழர் அய்யாமுத்துவின் 'மேயோ கூற்று மெய்யோ? பொய்யோ?' என்ற நூல் வெளிவந்தது குறித்தும் விளக்கியுள்ளார் நூலாசிரியர். இவையெல்லாம் இந்தத் தலைமுறையினர் அறிய வேண்டிய தகவல்களே.
இரண்டாவது தலைப்பு: தொல்காப்பியமும் மனுதர்மமும் என்பதாகும்.
தொல்காப்பியத்தில் பேணப்படும் பெண்ணடிமைத்தனத்தை எடுத்துக்காட்டுடன் கூறுகிறது இந்நூல். இது சிலருக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கக் கூடும். தந்தை பெரியார் ஏன் இலக்கியங்களைச் சாடினார் என்பதைப் பொருத்திக் காட்டியிருப்பது மிகவும் சரியே!
தொல்காப்பியத்தின் நிலையே இப்படி இருந்தால் மனுவைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமோ என்ற சொல்லாடலில் மனுவின் பெண்கள் மீதான கொடூரச் சிந்தனை வெளிப்படுகிறது!
இந்திய பெண்ணுரிமைப் போராட்டத்தின் பிதாமகனா காந்தியார்? என்ற தலைப்பு நூலின் மூன்றாம் கட்டுரை. காந்தியாரின் மறுபக்கத்தையும் காட்டுகிறது.
தன் மனைவி இறந்த பின் மறுமணம் செய்துகொள்ள விரும்பிக் காந்தியாரின் மகன் தன் தந்தையிடம் கேட்டபோது காந்தியார் என்ன கூறினார்?
உன்னைப் போலவே திருமணமான ஒரு குழந்தையுடனிருக்கும் விதவைப் பெண்ணைத் திருமணம் செய்துகொள் என்றார். இதுவரை சரி, அடுத்து வருவதுதான் கவனிக்கத்தக்கது!
காந்தியாரின் மகன் ஒரு இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற தகவல் முக்கியமானது. இதன்மீது மக்கள்தான் விவாதித்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்குள் தொலைந்துபோன தெற்கின் குரல்கள் என்பது நான்காம் தலைப்பாகும்.
காந்தியாரின் வருணாசிரம தர்மம் தந்தை பெரியாரின் வருணாசிரம எதிர்ப்பு இவற்றிற்கிடையே உள்ள சமூகவியலைத் தோழர் ஓவியா சரியாக விளக்குகிறார்.
வர்ணாசிரமத்தை வைத்துக்கொண்டு, மதத்தையும் ஏற்றுக்கொண்டு எப்படி ஏற்றத் தாழ்வுகளை, பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்ற கேள்வி சிந்தனைக்கே நல்விருந்து.
குடும்பத்திலிருந்து தொடங்கினார் எனும் தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள் சீர்திருத்தத்தை, பொதுநல நோக்கைத் தன் குடும்பத்திலிருந்து தொடங்கினார் என்று கூறி அதற்கான எடுத்துக்காட்டுகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
பட்டுப் புடவைகள் அணிந்து தமது பணக்காரத் தன்மையில் ஊறியிருந்த தன் தாயாரையே கதர் உடை உடுத்த வைத்தவராயிற்றே பெரியார். பொது வாழ்வில் தன் வாழ்விணையர், தங்கை, சகோதரரை எல்லாம் களத்தில் இறக்கிய தனி அடையாளமும், தனிச் சிறப்பும் தந்தை பெரியாருக்கு உண்டு என்பதைத் தோழர் ஒவியா இப்பகுதியில் நிறுவுகிறார்.
அன்னை நாகம்மையார், தந்தை பெரியாரின் தங்கை ச.ரா.கண்ணம்மாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், குஞ்சிதம் குருசாமி, மீனாம்பாள் சிவராஜ், வீரம்மாள், டாக்டர் எஸ்.தருமாம்பாள், நீலாவதி அம்மையார், பொற்செல்வி இளமுருகு, மலர் முகத்தம்மையார், திருவரங்க நீலாம்பிகை, சத்தியவாணிமுத்து, மஞ்சுளாபாய், மிராண்டா கஜேந்திரன், இறை இலட்சுமி அம்மையார், பரிபூர்ணத்தம்மையார், சிவகாமி அம்மையார், அலமேலு அப்பாதுரை, அன்னை மணியம்மையார் உள்ளிட்ட வீராங்கனைகளைப் பற்றி அரிய தகவல்களை இந்நூலில் அலங்கரிக்கச் செய்துள்ளார் ஓவியா.
உலக வரலாற்றில் ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை வகித்து எழுச்சியுடன் நடத்திக் காட்டிய அன்னை மணியம்மையார் குறித்து, வெளி உலகத்துக்குக் கொண்டு வரவேண்டிய தகவல்களை அரிதின் முயற்சி செய்து வெளியில் கொண்டு வந்துள்ள தோழர் ஓவியாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாரம்பரியமான இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆதலின் அந்த உணர்வும் இந்நூலின் ஒவ்வொரு எழுத்திலும் சுடர்விடுவதைக் காண முடிகிறது.
இயக்க வீராங்கனைகள் சிலரைப் பற்றி மேலும் தகவல்களைத் திரட்டி அடுத்த பதிப்புகளில் விரிவாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.
திராவிடர் இயக்கம் பெண்ணுரிமைத் தடத்தில் பொறித்த தகவல்கள் உரிய வகையில் மக்களிடத்தில் சென்றடையவில்லை. இத்திசையில் இந்நூல் அந்த கடமையைச் செய்திருப்பதாகவே கருதுகிறேன்.
பயனுள்ள இந்நூலைக் கொண்டு வருவதற்கு அரிய முயற்சிகளை மேற்கொண்டதோழர் ஓவியாவிற்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்!