கருஞ்சட்டைப் பெண்கள் - அணிந்துரை#2

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/karunchattai-pengal
 
அணிந்துரை
கனிமொழி

நாடாளுமன்ற உறுப்பினர், திமுக மகளிரணிச் செயலாளர்

தாண்ட வேண்டிய தடைக்கற்கள்

'கருஞ்சட்டைப் பெண்கள்' என்ற தலைப்பில் திருமிகு. ஓவியா அவர்களின் படைப்பு வெளிவரவிருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். திரு சுபவீ அவர்கள் தொடங்கவுள்ள பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளிவரவிருப்பது கூடுதல் சிறப்பு. திராவிட இயக்க வரலாற்றில், வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவர்களில் பலரைப் பற்றி இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள இந்த நூல் துணை செய்யும். இன்று பொதுவெளியில் இயங்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எண்ணிப் பார்க்கும் போது, ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன், சமூகம் விதித்த கட்டுப்பாடுகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்து நமக்கெல்லாம் ஒரு பாதையை உருவாக்கிச் சென்ற, நமது கருஞ்சட்டைப் பெண்கள் சந்தித்த எதிப்புகளையும் சவால்களையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. இன்னும் பொது வெளிகளில் பெண்கள் சந்திக்க வேண்டிய தடைகள் எத்தனை என்பதை ஒவ்வொரு நாளும் கண்கூடாகப் பார்க்கிறோம்.

வேலை செய்யும் இடங்களில் உலகெங்கிலும் இருக்கும் பெண்கள் தாண்டி வரும் பாலியல் அத்துமீறல்கள், அச்சுறுத்தல்கள் என்ன என்பதை "Me too" என்ற அடையாளத்தின் கீழ் இன்று பார்க்கிறோம். வேட்டை நாய்களைப் போல் ஆணாதிக்கம் அவர்களைத் துரத்தும் கதைகள் நம்மை வெட்கப்படச் செய்யும்.

முத்துலட்சுமி ரெட்டி கல்லூரியில் சேர்க்கப்பட்டால், தம் பிள்ளைகள் அங்கு படிக்கமாட்டார்கள் என்று சொன்ன சமூகம் இன்று திராவிட இயக்கச் சிந்தனைகளால், புதிய பாதையை அமைத்துக் கொடுத்த ஆயிரக்கணக்கான பெண்களின் தியாகத்தால், தெளிவான ஆண்களின் துணையால் இன்று மாறி இருந்தாலும், மாற்றம் என்பது நாம் நமது இலக்கை அடைந்துவிட்டோம் என்று சொல்லக்கூடியதாக இல்லை. முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் மற்ற நிலைப்பாடுகள் திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு மாறுபட்டவையாக, இன்றைய சில இந்துத்துவ நிலைப்பாடுகளுக்கு அருகில் இருக்கக்கூடியவையாக இருப்பதை ஒவியா நேர்மையாகச் சுட்டிக்காட்டுகிறார். இது பலருக்கு எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய ஒன்று. இன்றைய அரசியல் சூழலில் பலர் பெரும்பான்மையினருக்கு உகந்த அரசியலைக் கையிலெடுப்பதாக நம்பி, இப்படிப்பட்ட இந்துத்துவ பிரிவினை சக்திகளுக்கு வலு சேர்த்துக் கொண்டு, அவர்களது கொள்கைகளைப் பறைசாற்றும் கருவிகளாக மாறிவிடக் கூடாது என்ற எச்சரிக்கைத் தொணியும் இதில் இருக்கிறது.

அனைவரும் வேட்டி கட்ட வேண்டும் என காங்கிரசால் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கோவணம் மட்டுமே அணியும் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் ஒரு கூட்டத்திற்கு வேட்டி அணிந்து சென்ற போது, அவர்களைக் காங்கிரசுக்காரர்களே அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் அவமானப்படுத்தப்பட்டதை அறிந்த இராமாமிர்தம் அம்மையார், அவர்களை கோவணத்துடன் மட்டுமே கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு இருந்தவர்களிடம் "வேட்டி கட்டக் கூடாது என்று நீங்கள் சொன்ன பேச்சுக்கு மரியாதை கொடுத்து கோவணம் கட்டிக் கூட்டி வந்திருக்கிறேன்” என அவர் கூறியபோது, வேட்டி கட்டுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தவர்கள் தலைகுணிந்தவாறு அந்த இடத்தைவிட்டே சென்றுவிட்டனர். இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் செய்த இந்த புரட்சிகரமான செயலை ஒவியா அவர்கள் எழுத்தின் வழியாக தெரிந்து கொண்டபோது ஆச்சரியப்பட்டேன். இன்று ராஜலட்சுமிகளுக்கும். கெளசல்யாக்களுக்கும் நாம் அந்த வீரியத்தோடு தோள்கொடுக்க வேண்டும் என்ற உறுதி பிறக்கிறது.

மேடைதோறும் பெண்ணுரிமை கருத்துகளை முழங்கி, சிறந்த பேச்சாளராக விளங்கிய குஞ்சிதம் குருசாமி அவர்கள் பொட்டு, மற்றும் தாலி அணிய மறுத்ததால், தான் பார்த்துவந்த ஆசிரியர் பணியை இழக்க நேர்ந்தது. தான் நம்பிய கொள்கைகளுக்காக வறுமையையும் மனமுவந்து ஏற்று, லட்சியப் பிடிப்போடு தன் இறுதி மூச்சு வரை பெண்ணுரிமைக்கும் சாதிமறுப்பிற்கும் குரல் கொடுத்தவர். இவரது துணிவு 33% இடஒதுக்கீடு கேட்டுப் போராடி வரும் நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம்.

நமது கருஞ்சட்டைப் பெண்கள், தேசியக்கொடியை ஏற்ற ஆங்கிலேயர்கள் அனுமதி மறுத்த போது கொடியையே சேலையாக அணிந்து சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அர்பணிப்பும் துணிவும் கொண்டவர்கள்; ஆண்கள் மேடைகளில் விதவை மறுமணத்தை ஆதரித்துப்பேசிய ஒரு நிகழ்வில், மேடையில் பேசுவதோடு மட்டுமில்லாமல் உண்மையாக எத்தனை பேர் விதவைத் திருமணம் செய்வீர்கள்? என்று மேடையிலே நேருக்கு நேர் கேட்ட துணிவு மிக்கவர்கள்; நூறு ஆண்டுகளுக்கு முன்பே தனது திருமணத்தில் தான் மேடையேறி பேசிய போது தனது கணவனை பெயர் சொல்லி விளித்தவர்கள்;

சுயமரியாதைப் பாதையில் நமது கருஞ்சட்டைப் பெண்கள் துவங்கிய பயணத்தைத் தொடந்து வரும் நாம், கடந்து செல்ல வேண்டிய தூரமும் தாண்ட வேண்டிய தடைக் கற்களும் ஏராளமாக இருக்கலாம். ஆனால் மனத்துணிவுடனும் கொள்கைப் பற்றுடனும் நாம் அடைய வேண்டிய இலக்குகளை நோக்கி அயராமல் பயணிப்பதே நாம் அவர்களுக்குச் செலுத்தும் நன்றியாக இருக்க முடியும். அவர்களது வாழ்க்கைப் பயணத்தில் அவர்களோடு பயணித்தது போன்ற ஒரு உணர்வை, மன நிறைவை ஓவியா அவர்களது இந்தப் படைப்பு நமக்குத் தருகிறது. அவரது இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும். அடுத்தடுத்த தலைமுறைகளைச் சார்ந்த கருஞ்சட்டைப் பெண்களைப் பற்றியும் இவர் தொடந்து படைப்புகளை வழங்க வேண்டும். வாழ்த்துகள்!

Back to blog