அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்
அறியாமையின் விளைவன்று பெண்ணடிமைத்தனம்
திராவிட இயக்க வீராங்கனைகளின் வரலாறு பற்றியும். பெண் விடுதலைப் போராட்டத்தில் பெரியார் இயக்கம் ஆற்றிய பங்கையும் பற்றித் தெரிந்து கொள்வதற்கு எந்த நூலைப் படிப்பது என்ற கேள்வியை அடிக்கடி எதிர் கொள்கிறோம், அதிலும் அண்மைக் காலத்தில் ஆண்களும் பெண்களுமாய் ஏராளமான புதியவர்கள் பெரியாரைத் தேடித் தேடிப் படிக்கிறார்கள், வியக்கிறார்கள், அவர்களது அறிவு வெறும் செய்தித் தொகுப்புகளைத் தாண்டி கோட்பாடு விளக்கங்களுடன். ஆதாரங்களுடன் விவாதங்களை முன் வைக்கும் கேள்விகளுடன் புத்தகங்களைத் தேடுகிறது, பொய்ப் பட்டறைகளில் போட்டோ ஷாப்களின் உதவியுடன் உருவாக்கப்படும் அவதூறுக் கதைகளுக்கும் பதில் சொல்லும் தெளிவைக் கொடுக்கும் நூல் வேண்டும் என்பது அவர்களின் தேடல், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பேராசிரியர் வளர்மதி அவர்கள் எழுதி உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட 'சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்' என்ற நூலைத் தவிர வேறெந்த நூலும் இல்லை, பிறகு அதன் இரண்டாம் பாகத்தை வாழும் 'சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்' என்ற நூலை மறைந்த அம்மையார் மானமிகு ஏ.பி.ஜே.மனோரஞ் சிதம் அவர்கள் எழுத உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது,
அப்படி ஒரு நூலுக்கானத் தேடலுக்கு விடை சொல்ல நேரும் போதெல்லாம் ஒரு குற்ற உணர்வு ஏற்படும், எவ்வளவு பெரிய சமூகப் புரட்சி இயக்கம் இது, இந்த இயக்கத்தில் முன்னோடிகளாய் நின்ற பெண்கள் எத்தகைய வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள், உலகில் எந்தச் சீர்திருத்த இயக்கமும் பெறமுடியாத வெற்றியைப் பெற்ற சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றில், அந்த வெற்றிக்கான பெரும் பங்களிப்பைச் செலுத்தியப் பெண் போராளிகளைப் பற்றிய முழுமையானதொரு வரலாற்று ஆய்வு நூலை உருவாக்காமல் வைத்திருக்கிறோமே என்ற குற்ற உணர்வே அது. ஆம், அது ஒரு கூட்டுப் பொறுப்பு. சட்ட மொழியில் இந்தக் கூட்டுப் பொறுப்பிற்கு, (jointly and severally liable) கூட்டாகவும், தனித்தனியாகவும் கடமைப்பட்டவர்கள் என்று பொருள் கூறுவார்கள். அதை நிறைவேற்றுவதில் இந்த இயக்கத்தால் பலன் பெற்ற ஒவ்வொருவருக்கும் பொறுப்புள்ளது: பெண்கள் கூடுதலாகக் கடமைப் பட்டவர்கள்.
இடது சாரிச் சிந்தனையாளரான தோழர் 'ஜீவசுந்தரி பாலன்' அவர்கள் எழுதிய மூவாலூர் ராமாமிர்தம் அம்மையாரின் வாழ்வு பற்றிய ஆய்வு நூலும், பேராசிரியர் மங்களம் முருகேசன் அவர்கள் எழுதிய அன்னை நாகம்மையாரின் வாழ்க்கை வரலாற்று நூலும் பெருங்கடல் போன்ற சுயமரியாதை இயக்கப் பெண்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் தேவையை நினைவூட்டிய இரு பேரலைகள் எனலாம்.
அந்தக் கடலின் ஆழ அகலத்தை ஒரு வரைபடத்திற்குள் கொண்டு வந்து, இன்னும் பல ஆய்வாளர்கள் செய்ய வேண்டிய பணிகளின் மீது வெளிச்சம் பாய்ச்சும் கலங்கரை விளக்கமாகத் தோழர் ஓவியா அவர்களின் 'கருஞ்சட்டைப் பெண்கள்' எனும் இந்த நூல் வெளியாகிறது,
தோழர் ஓவியா அடிப்படையில் தந்தை பெரியாரின் கொள்கை வழி வந்த குடும்பத்தில் பிறந்தவர், பெரியாரியலை வாழ்வியலாகக் கற்றவர். மார்க்சியத்தை ஆழ்ந்து படித்தவர், அம்பேத்கர் அவர்களின் எழுத்துகளையும், அவரது பணிகளையும் உள் வாங்கி, தனது 'புதிய குரல்' என்ற இதழின் மூலமாக திராவிட இயக்கச் சிந்தனை உலகிற்கு அதிகமாகக் கொண்டு சென்றவர். இந்தப் பின்னணியில் அமைந்த அவரது ஆய்வும், வாழ்வியல் அறிவும், பெண் விடுதலையே மானுட விடுதலை என்ற தெளிவை நோக்கி அவரது எழுத்தை ஒரு முகப்படுத்தியுள்ளன. அதை அடைவதற்கான வழி தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க வழியே என்பதைத் தன் பேச்சாலும், எழுத்தாலும், செயல்பாடுகளாலும் நிலை நிறுத்தி வருகிறார் ஓவியா.
பெண் விடுதலை என்ற இலக்கை நோக்கி எட்டு வைத்தால்தான் புரியும், அது அவ்வளவு எளிதான நடைப் பயணம் அன்று, தடைகளைத் தாண்டி ஓட வேண்டிய போராட்டம் என்று. தடைகள் ஒன்றா, இரண்டா? அதுவும் சாதாரணத் தடைகளா? கடவுள், மதம், சாதி, மொழி, பண்பாடு என்று பெரும் பெரும் தடைகள். மலை போல் நிற்கும் அவற்றைத் தாண்டுவது இன்று கூட எளிதன்று, எனும் போது, முரட்டுத் துணியில் எட்டு கஜம் (மீட்டர் அல்ல) புடவைகளுக்குள் சுற்றப் பட்டிருந்த காலத்தில் சுயமரியாதை இயக்கப் பெண்கள் எப்படி அந்தத் தடைகளை உடைத்தெறிந்து பொது வெளிக்கு வந்தார்கள், எத்தகைய வாழ்க்கைப் போராட்டத்தை அவர்கள் எதிர் கொண்டார்கள், எவ்வாறு தங்கள் மன உறுதியை நிலைநாட்டினார்கள் என்ற வீரம் செறிந்த வரலாற்றை விரிவாகப் பதிவு செய்து இந்தக் 'கருஞ்சட்டைப் பெண்கள்' என்ற தொகுப்பாக உருவாக்கியுள்ளார் தோழர் ஓவியா.
ஒரு நீண்ட நெடியகாலப் போராட்டத்தை எப்படித் தொடங்குவது, எங்கிருந்து சொல்லுவது என்பது ஒரு தேர்ந்த எழுத்தாளரின் முத்திரையாகும். அந்தப் போக்கில் பார்த்தால் கருஞ்சட்டைப் பெண்களின் வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது, தோழர் ஓவியாவின் ஆய்வில், அது தாய் வழிச் சமூகம் தன் தலைமையை இழந்து வீட்டுச் சிறையில் அடைபட்ட அந்தப் புள்ளியில் தொடங்குகிறது. அதுதான் இந்த நூலில் சுவையான தொடக்கம். நோய் நாடி, நோய் முதல் நாடும், தந்தை பெரியாரின் ஆய்வு முறையிலேயே, பெண்ணினம் ஆண் இனத்திடம் அடிமைப்பட்டக் காலத்திலிருந்து தாய் வழிச் சமூகத்தின் பெண் ஆளுமை எப்படி தந்தை மயமானது, என்ற கேள்வியுடன் தொடங்கும் தோழர் ஓவியா, 'குடும்பம், தனிச் சொத்து, அரசு' என்று மனிதர்கள் நிறுவன மயமான வரலாற்றை எடுத்துக் கூறிய அறிஞர் ' ஏங்கெல்சின் ஆய்வில் இருந்து அதற்கான விடைகளைப் பெறுகிறார். புவியெங்கும் விரிந்த அந்த ஆணாதிக்கப் போரில் தொடங்கி, இந்தியா என்று ஆங்கிலேயர்களால் இணைக்கப்பட்ட இந்த நிலப்பரப்பில் சாதியும் அதன் காப்பாகிய இந்து மதமும் எப்படிப் பெண்களைக் கடவுள், புராணம், இலக்கியம் மூலமாக அடக்கி ஒடுக்கி வந்தது என்ற விவரங்களையும், தமிழ்ச் சமூகத்தில் பெண்ணடிமைக் கூறுகள் எப்படி வேர் கொண்டன என்ற விளக்கத்தையும் தொல்காப்பியம் - மனுதர்மம் என்ற நூல்களை ஒப்பிட்டுத் தொடங்குகிறார். அதிலும் இரண்டையும் பற்றிய தோழர் ஓவியா அவர்களின் ஆய்வும், ஒப்பீடும் தனித்துவம் மிக்கவை.
தொல்காப்பியத்திற்கும் மனுஸ்மிருதிக்கும் என்ன வேறுபாடு? தோழர் ஓவியாவின் ஒப்பீடு இது. மனுஸ்மிருதி சட்டம்; அது விதிகளை முன் வைக்கிறது; அதை மீறினால் தண்டனை உண்டு. அது மன்னர்கள் மூலமாகச் செயல்படுத்தப்பட்டது. ஆனால் , தொல்காப்பியம் என்பது சட்டநூல் அன்று; இலக்கியமும் அன்று. அது இலக்கண நூல்; மொழிக்கு மட்டுமன்று, வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த நூல்; 'தொல்காப்பியம் தண்டனை பற்றிப் பேசவில்லை; அது சமூகத்திடம் வாழ்க்கை நெறிகளை முன் வைக்கிறது என்று, அதற்குரிய மதிப்புடன்தான் தனது ஆய்வைத் தொடங்குகிறார். அப்படி முன் வைக்கப்படும் நெறிகள் என்பவை ஒரு சார்பாகவும் பெண்ணடிமையை வலியுறுத்தியும் சொன்ன கருத்துகள், புராணம், இலக்கியம் மூலம் சொல்லப்படும் செய்திகள் காலத்தின் வழியில் நின்று நிலைத்து விடக் கூடியவை. நல்லவையும், தீயவையும் அப்படியே மக்கள் மனத்தில் பதிந்து விடும், அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படும்.
இவ்வாறு நயமாக விதைக்கப்பட்ட பெண்ணடிமை நச்சு விதைகள் இன்றளவும் இலக்கியமாக, கலை வடிவமாக, திரைப்படக் கதையாக நம் முன்னே இன்றும் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பெண்ணை அவளது இயல்பான மனிதச் செயல்பாடுகளில் இருந்து ஒடுக்கி, தனிமைப்படுத்தி, உணர்வுகளைச் சிதைத்து, தனக்கென 'வீடு' என்ற ஒன்றே இல்லாதவளாக, பரத்தை வீட்டுக்குச் செல்லும் கணவன் திரும்பி வருவானோ, இல்லையோ என்று கவலையில் வாடும் ஒரு அபலையாக மாற்றும் வாழ்வை 'கற்பு நெறி' என்றும், அத்தகை மகளிருக்கு 'ஆடவர் உயிர்' என்றும் வரையறுத்தது தொல்காப்பியம். அந்த ஆடவருக்கு உயிர், பெண்டிர் என்று கூறவில்லை. 'வினையே ஆடவர்க்குயிரே' என்று சொல்லிவிட்டது. 'ஆம்பளைக்கு ஆயிரம் வேலை இருக்கும் என்று இன்று வரை ஒவ்வொரு பெண்ணுக்கும் அது சொல்லப்படுகிறது.
தொல்காப்பியம் சொல்கிற நிபந்தனைகளின் படி, ஒரு கற்புள்ள பெண் கணவனிடம் கூட தன்னைப் புகழ்ந்து கொள்ளக் கூடாது. தனக்கு கூடல் (உடலுறவு) இன்பம் வேண்டும் என்று வாய்திறந்து கேட்கக் கூடாது. அவன் பரத்தையிடம் பெற்ற பிள்ளையைத் தன் பிள்ளையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் தொல்காப்பியம் விதித்த விதிகள் என்பதை ஆதாரத்துடன் நிறுவும் ஒவியா அவர்களுக்கு அறிவுள்ள தமிழ்ப் பெண் சமூகம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.
ஆரியர் வந்த பிறகுதான், தமிழ் மொழியில் ஆரியத்தின் தாக்கம் ஏற்பட்ட பிறகுதான் பெண்ணடிமைத் தனம் ஏற்பட்டது என்பது போன்ற கற்பனைகளில் ஈடுபடாமல், தொல்காப்பியம் கூறும் கற்புநெறி, பரத்தமை வாழ்க்கை ஆகியவை பற்றி மிக நுட்பமான கேள்விகளோடு அந்தப் பகுதிகளையே நாம்மைப் படிக்க வைக்கிறார் தோழர் ஓவியா. அன்றயை தமிழ்நாட்டின் 'பரத்தமை வாழ்வு' என்பது, வட இந்தியாவில் பெண்களுக்கு நடந்த 'சதி' என்னும் உடன் கட்டை ஏற்றும் கொடுமைக்கு நிகரானது என்கிறார் ஓவியா.
இந்தப் பகுதியில் நாம் வியக்கத்தக்க செய்திகள் நிறைய இடம் பெற்றுள்ளன.
குழந்தைத் திருமணம், பிள்ளைப்பேறு, விதவைக் கொடுமை, சதி என்று சிலந்தி வலைபோல பின்னிய சதிக்குக் காரணமானது சாதி, அதைக் காப்பாற்றும் கடவுள், இதன் மூலமாக நிலை பெற்ற இந்து மத வர்ணாஸ்ரம தர்மம். இவற்றை எல்லாம் எதிர்க்காமல் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி மேலோட்டமான தீர்வுகளை முன் வைப்பது புண்ணில் இருந்து வழியும் சீழைத் துடைக்கும் வேலை. அதைச் செய்த பெண்ணுரிமையாளர்களான மகாத்மா காந்தியையும், பாரதியாரையும் தான் இந்தியாவில் பெண்ணுரிமை இயக்கங்கள் அடையாளமாக முன்னிறுத்தின.
அந்தப் புண்ணை ஆற்றுவதற்கும் அதன் மூல காரணத்தை அறிந்து அதை முழுமையாகக் குணப்படுத்துவதற்கும் ஒரே வழி, அடிப்படைக் காரணிகளான கடவுள், சாதி, மதத்தை ஒழிப்பதுதான் என்று சொல்லி, போராடி வென்ற ஒரே சிந்தனையாளர் தந்தை பெரியார் என்று சான்றுகளால் நிறுவுகிறார். இந்தப் பெண் விடுதலை வரலாற்றுத் தேடலில் பெண்ணுரிமை பேசிய தலைவர்கள். சான்றோர்கள் யாருடைய பங்கையும் மறைக்காமல், அவர்களின் சிந்தனைப் போக்கில் இருந்த குறைகளையும் சுட்டிக் காட்டுகிறார். இந்தியாவில் பெண் விடுதலைக்காகப் பேசிய, போராடிய பெரியோர்களை ஓவியா இப்படி வரிசைப்படுத்துகிறார்.
1. பூலே - நாராயணகுரு
2. காந்தியார் - பாரதியார்
3. பெரியார் - அம்பேத்கர்
தத்தம் வழியில் அவர்கள் முன்வைத்த கருத்துகள் இயல்பாக இந்த ஒப்பீட்டுக்கு வழிவகுக்கின்றன.
இந்தியாவில் பெண் விடுதலை இயக்கத்தின் பிதாமகன் காந்தியா என்ற கேள்வியை எழுப்பும் ஓவியா அவர்கள், காந்தியாரின் சிந்தனைகளில் உள்ள முரண்பாடுகளைத் துல்லியமாகக் காட்டுவதுடன் நிற்காமல், அதற்கான முடிவுரையை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறார். காந்தியாரின் வர்ணாசிரமப்பற்று இந்து மதம் பற்றிய பெருமிதம் ஆகியவை உணர்ச்சிப் பூர்வமானவை. வெளி வேடத்திற்காகச் சொல்லப்பட்டவை அல்ல என்று அதற்கு உரிய மரியாதையுடன் பதிவு செய்யும் ஒவியா அவர்கள், 'ஆனால் அவர் போற்றும் வர்ணாசிரம தர்மம் என்பதே பெண்ணை ஓர் ஆணின் அடிமையாக, பிள்ளை பெறும் இயந்திரமாகத்தான் வைக்கிறது எனும் போது, அதைக் கேள்வி கேட்காத காந்தியாரால் பெண் விடுதலை பற்றி எப்படிப் பேச முடிந்தது?' என்று கேட்டு, அதற்கான விடைகளை காந்தியாரின் எழுத்துகளில் இருந்து தேடி எடுக்கிறார்,
காந்தியாரின் சிந்தனைகளில் உள்ள முரண்பாடு பற்றி ஓவியா அவர்கள் முன் வைக்கும் காரணங்கள் ஆய்வுலகின் புதிய சாளரத்தைத் திறக்கின்றன. இந்நூலின் மிகச் சிறந்த பங்களிப்பாக அந்தப் பகுதி விளங்குகிறது.
'ஒரு பெண்ணுக்கு ஆணைப் போல எல்லாச் சுதந்திரமும் உரிமையும் இருக்கின்றன. அவளுக்கு ஓர் உயர்ந்த நிலையை அடைவதற்கான எல்லா உரிமையும் இருக்கிறது. அவளுக்கு வரையறுக்கப்பட்டிருக்கிற நடவடிக்கைகளில் உயர்ந்த நிலையை அடைவதற்கு அவளுக்கு உரிமை இருக்கிறது. எப்படி ஆணுக்கு வரையறுக்கப்பட்ட இடத்தில் உயர்ந்த நிலையை அடைய அவனுக்கு உரிமை இருக்கிறதோ அப்படி பெண்ணுக்கும் இருக்கிறது' என்கிறார் மகாத்மா காந்தி. இதனை எடுத்துக் காட்டி, ஒவியா இப்படிக் கூறுகிறார்: 'இது தான் காந்தியாரின் கோட்பாடு, இது தான் வர்ணாசிரம் கோட்பாடும் ஆகும். ஆனால் ஒரு பெண் இதுதான் தன்னுடைய வேலையா என்று கேட்கக் கூடாது. பாத்திரம் துலக்குவதும், சமையல் செய்வதும், பிள்ளை பெறுவதும், அவற்றை வளர்ப்பதும், இவைதானா தன் வேலை என்று ஒரு பெண் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்காமல் இருக்கும் வரை, பெண்ணுக்கான மரியாதையை, பாதுகாப்பை, அங்கீகாரத்தை நாங்கள் மறுக்க மாட்டோம். இதுதான் காந்தியாரின் பெண் விடுதலை பற்றிய அடிப்படையான புரிதல்'.
அதே நேரத்தில், பெண்கள் பெருமளவில் பங்கேற்ற இந்திய விடுதலைப் போராட்டத்தை வழி நடத்தியவர் காந்தியடிகள் என்பதும் உண்மையே. எனில், எதற்காகப் பெண்களைப் பொதுப் போராட்டத்திற்குக் காந்தியார் அழைத்தார் என்பது பற்றி ஓவியா அவர்கள் கூறும் இந்தக் காரணத்தை இது வரை வேறு யாரும் கூறியதாகத் தெரியவில்லை .
'இப்படிப்பட்டக் கருத்துகள் கொண்ட காந்தியார், பெண்கள் பொது வாழ்க்கைக்கு வரவேண்டும் என்று கருதுகிறார். ஒரு விடுதலை இயக்கத்தில் சமூகத்தில் பெண்களுக்கென்று ஒரு பெரிய பங்கு இருக்கிறது என்று அவர் சொல்கிறார். இப்படி, பெண்களோடு ஓர் இணைப்பை அவர் வரலாற்றில் ஏற்படுத்திக் கொள்கிறார். அவரை அப்படிப் பெண்களோடு இணைத்தப் புள்ளி எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்து பார்த்தால், அந்தப் புள்ளி அவருடைய அகிம்சைக் கோட்பாடாக இருக்கிறது என்று நான் விளங்கிக் கொள்கிறேன். ஏனென்றால், பெண்களை அவர் வன்முறைக்கு வெளியில் உள்ள மக்கள் தொகுதியாகப் பார்க்கிறார். “MUSCLE POWER” (உடல் உறுதி) என்பதற்கு வெளியில் பார்க்கிறார், நாம் முன்னரே சொன்னதைப் போல 'ஆணுக்கு இணையானவள் பெண் என்று சொல்லாமல், சிந்திக்கும் திறனில் ஆணுக்கு இணையானவள்' என்று பிரித்துச் சொல்கிறார். “MUSCLE POWER” என்பதைப் பொதுவாகவே பெண்ணிற்கு எதிராகப் பார்க்கிறார். காந்தியார் தன்னுடைய அரசியல் சித்தாந்தத்தில் 'அகிம்சை' என்பதற்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம், பெண்ணை அவர் அகிம்சையின் வடிவாகப் பார்த்ததால், இந்தப் பெண் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஏற்ற சக்தி என்று அவர் முடிவெடுக்கிறார். ஒரு போராட்டத்தில் வன்முறை இல்லாமல் போராடுங்கள் என்று ஆண்களைச் சொல்வதை விட, பெண்களைச் சொல்வது எளிதான விசயமாகும். எளிதான விசயம் என்று நாம் கொச்சைப் படுத்தவில்லை. காந்தியார் குணாம்ச ரீதியாகப் பெண்ணை அகிம்சைக்கான கருவியாகப் பார்க்கிறார். அகிம்சையோடு பெண்ணுக்கு இருக்கக் கூடிய உடன்பாடுதான், பெண்ணை ஒரு முக்கிய சக்தியாகக் காந்தியாரை நினைக்க வைத்தது'.
காந்தியாரின் பெண் விடுதலை ஏன் இப்படிக் குழப்பமான ஆபத்தான வர்ணதர்மத்தில் இணைந்தது என்றால், அதற்கும் ஒரு மூல காரணம் இருக்கிறது என்ற ஆய்வுப் பார்வையில் தந்தை பெரியாரின் வழியினைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார் ஓவியா. காந்தியார் மட்டும் அல்ல, இந்திய சுதந்திரப் போராட்டமே இந்து தர்மத்தைக் காப்பதற்காகத்தான் தொடங்கப்பட்டது என்கிற கருத்தாக்கத்தை மிக வலிமையாக முன் வைக்கிறார். ஆம், ஆங்கிலேயர்கள் வணிகர்களாக இருந்த வரை இந்திய உயர் ஜாதி சமூகமாகிய பார்ப்பனர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சியாளர்களாக மாறிய போதும் அவர்களின் நெருக்கமானப் பணியாளர்களாய்ப் பணியாற்றியதும் அவர்களின் உயர்வுக்குக் காரணமானது.
இந்திய விடுதலைப் போரை முன்னெடுத்த பார்ப்பனர்கள் மற்றும் உயர் ஜாதியினர் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் தொடங்கிய காலம் மிக முக்கியமானது. அதற்கான பின்னணியை ஆதாரத்துடன் நிறுவுகிறார் ஓவியா. குறிப்பாக, சதி என்னும் உடன்கட்டை ஏற்றும் வழக்கம் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டது, இந்து சனாதனிகளின் ஆத்திரத்தைக் கிளப்பியது. தங்கள் தர்மத்தைக் காக்க அவர்கள் விடுதலைப் போரைத் தொடங்கினார்கள் என்பதை இப்படிக் கூறுகிறார் ஓவியா:
'தங்களுடைய பழக்க வழக்கங்களில் ஆங்கிலேயர்கள் தலையிடக் கூடாது' என்ற குரல்தான் வெள்ளையர்களை எதிர்த்த தொடக்கக் காலக் குரலாகும். 'சதி' என்பது ஒரு கொலை. 'நான் கொலை செய்வேன்', நீ ஆட்சியாளனாக இருந்தாலும் அதைக் கேட்கக் கூடாது' என்ற நிலை இருந்தது'.
தங்களுடைய மத உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் பெண்ணடிமைத் தனத்தையும் சாதியையும் காப்பாற்றுகிற உரிமைக்காகத்தான் இந்து சனாதனிகள் ஆங்கிலேயருடன் போராடினார்கள். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக ஓவியா அவர்கள் சுட்டிக்காட்டும் செய்தி மிக முக்கியமானது. 'உலகளவில் பெண்ணிய விடுதலைப் போராட்டங்களைப் படிக்கும் போதும், இந்த நாட்டின் பெண் விடுதலைப் போராட்டங்களைப் படிக்கும் போதும், மிகவும் நுட்பமான வேறுபாடு இருப்பதைப் பார்க்க முடியும். மேலை நாட்டுப் பெண் விடுதலைப் போராட்டங்களில் அவர்களுடைய துன்பங்கள்தான் முன் வைக்கப்படும், 'இந்த துன்பங்களில் இருந்து விடுபட வேண்டும், எங்களுடைய பிறவி உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும்' என அடிப்படையான ஒரு கட்டமைப்பு இருக்கும், ஆனால் இங்குள்ள பெண் விடுதலை இயக்கங்களின் குரல்கள் எல்லாம் எப்படி ஆரம்பிக்கும் என்றால், 'நம்முடைய சமூகத்தில் வேத காலத்தில் பெண்கள் சிறப்போடு இருந்தார்கள்' என்று தொடங்கும். இன்றைக்கு இருக்கும் கொடுமையைச் சுட்டிக் காட்டி விடுதலை கேட்காமல் ஏன் தொடங்கும் போதெல்லாம் பெருமைக்குரிய வரலாறு இருப்பதாகச் சொல்லித் தொடங்க வேண்டும், இது பெண் விடுதலையை இங்குள்ள ஆண்களை நோக்கி வைக்காமல், எங்கள் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்வோம்' என்று ஆங்கிலேயர்களிடம் எடுத்துரைக்கும் மொழியாகவே இருக்கிறது. ஒரு மொழி என்பது எதை ஒட்டி நாம் பேசுகிறோமோ அதை ஒட்டி மாறுபடுகிறது'.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காகக் காங்கிரசு இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய தந்தை பெரியார், இப்படி விடுதலைப் போராட்டத்தையே இந்து வர்ணாசிரமப் பாதுகாப்புப் போராட்டமாகக் காந்தியாரும், காங்கிரசும் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் அங்கிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்னால் தந்தை பெரியார் பெண்ணுரிமை என்பதை எப்படித் தன் வாழ்க்கையில் தொடங்கினார் என்ற வரலாற்றை, அவரது தாயான சின்னத்தாய் அம்மாளிடமிருந்து தொடங்குகிறார் ஓவியா. பெண்ணுக்கு அரசியலை அறிமுகப்படுத்துவதைத் தன் தாயிடம் தொடங்கியவர் பெரியார் மட்டுமே என்பதையும், காங்கிரசில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார் அதனை ஒரு பெரும் குடும்பமாக வடிவமைத்தார் என்பதையும், அந்தப் பெருங்குடும்பத்தின் அன்னையாக நாகம்மையார் உருவான கதையையும், மகிழ்ந்து, வியந்து, சொல்லிச் செல்கிறார். நாகம்மையார் கதையைச் சொல்லும் போதே, ஒரு பெண்ணை கோயிலுக்குப் போகாமல் கட்டாயப்படுத்துவது பெண்ணுரிமைக்கு எதிரானதல்லவா என்ற கேள்வியை ஒவ்வொருவரும் எதிர்கொள்கிறோம். அதற்கான விடையை தர்க்கப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்.
மூவாலூர் இராமாமிர்தம் அம்மையாரின் வாழ்க்கையும், போராட்டமும் தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டிய வரலாறு. அதைப் படிக்கும் போதே மனம் கசிந்து உருகும். நடனமாடுவதற்காக இரண்டு தேவதாசிப் பெண்களை இங்கு அனுப்பிவைக்கப் போவதாகச் சத்தியமூர்த்தி அய்யர் கூறியபோது, அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர் மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார். அவர் எழுதிய 'தாசிகளின் மோசவலை' என்ற நூலை வெளியிட, சிவகிரி ஜமீனின் மகளாக இருந்த வெள்ளைத்துரைச்சி நாச்சியார் என்ற பெண் உறுதுணையாக இருந்த செய்தியை அதற்கான சிறப்புடன் பதிவு செய்கிறார். மூவாலூர் அம்மையாரைத் தொடர்ந்து அதே போராட்டத்தைக் கல்விப் பின்னணியுடன், காங்கிரசு ஆதரவுடன் முன்னெடுத்த டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியார் மட்டுமே அதிகம் பேசப்படுகிறார். அதற்கான காரணங்களை வெளிப்படையான விவாதமாக முன்னெடுத்திருப்பது ஒவியா அவர்களின் நேர்மைக்கும், துணிவுக்கும் எடுத்துக் காட்டாகும்.
முதன் முதலாக மனைவியின் பெயரைத் தன் பெயருடன் சேர்த்துக் கொண்டவர் இளமுருகு -பொற்செல்வி என்ற கொள்கை வீரர். அவரது வாழ்க்கைக்குத் தன் கொள்கையால் உரம் சேர்த்தவர் பொற்செல்வி - இளமுருகு. குடியரசு, ரிவோல்ட் இதழ்களின் பதிப்பாசிரியராக இருந்த பெருமைக்குரிய நாகம்மையார், தந்தை பெரியார் மீது கொண்ட காதல், பிரிவாற்றாமையால் அவர் அடைந்த துயரம், 48 வயதில் அடைந்த மரணம் என, அனைத்து பேசப்படாதச் செய்திகளையும் பதிவு செய்கிறார் ஓவியா. இன்னும் வரலாற்றின் அடையாளங்களான வீராங்கனைகள் மஞ்சுளாபாய் தொடங்கி ஒவ்வொருவர் வாழ்வும் கண்ணீர்த் துளிர்க்கும் பாடங்களே. சிவகாமி அம்மையாரும், குஞ்சிதம் குருசாமி அம்மையாரும் எத்தகைய அறிவும், வீரமும் மிக்கப் போராளிகள் என்பதை வரும் தலைமுறை படித்துக் கொண்டாடும் வாய்ப்பை ஓவியா அவர்கள் தொகுத்துக் கொடுத்துள்ளார்.
தோழர் ஓவியா அவர்களின் கருத்துகள் குழப்பமில்லாத தெளிவான சொற்களால் செதுக்கப்படும் வாக்குமூலங்கள். பெண்ணடிமைத் தனம் என்பது அறியாமையால் விளைந்தது அன்று, அது சமூகத்தில் பெண்கள் மீது திட்டமிட்டுத் திணிக்கப்பட்ட வன்முறை. அதன் மூல வேரை அழிக்காமல் பெண் விடுதலை என்பது சாத்தியமில்லை என்பதைத் தமிழ்நாட்டின் தெருக்களில் இறங்கி முழங்கிய, வீரமும், தியாகமும் நிறைந்த கருஞ்சட்டைப் பெண்களின் வரலாற்றைப் பதிவு செய்ததற்காகத் தோழர் ஓவியா அவர்களுக்கு நன்றியும், பாராட்டும்.