Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

கருஞ்சட்டைப் பெண்கள் - என்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

 
என்னுரை

பெரியார் திடலில், 17.03.2016 அன்று முதல் 16.03.2017 வரை நிகழ்த்தப்பட்ட இந்தத் தொடர் உரை, அதைத் தொடர்ந்த இந்த நூல் பல வகையில் எனக்குச் சிறப்பான அனுபவத்தைத் தருவது. ஏனென்றால் இது நான் இணைந்திருக்கும் வரலாற்றுச் சங்கிலி. இவர்கள் ஒவ்வொருவரின் உணர்வுப் பூர்வமான அனுபவத்திற்குள்ளும் நான் மீண்டும் மீண்டும் பிறப்பதாக உணர்கிறேன். கண்ணீரையும், பரவச நிலையையும், மனம் நிமிரும் கர்வத்தையும் இந்தக் கருஞ்சட்டைப் பெண்கள் அளித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆம். நான் இவர்களின் வழித்தோன்றல். நானும் ஒரு கருப்புச் சட்டைக்காரி. என் வாழ்வின் அர்த்தமுள்ள ஒரு காரியத்தை இந்தப் படைப்பின் மூலம் நான் செய்து முடித்திருக்கிறேன்.

பெரியார் நூலக வாசகர் வட்டம் எனக்களித்த நல்வாய்ப்பு இந்தத் தொடருரை மலரக் காரணமாக அமைந்தது. இதன் பொருட்டு அதன் தலைவர் மயிலை கிருஷ்ணன் அவர்களுக்கும், அதன் செயலாளர் அய்யா சத்யநாராயண சிங் அவர்களுக்கும், மறைந்த பொருளாளர் மனோகரன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியறிதலை முதற்கண் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஓராண்டு காலம் இந்த உரை ஒவ்வொரு மாதமும் தவறாமல் மூன்றாம் வியாழக்கிழமை தோறும் நிகழ்த்தப்பட்டது. கடைசி மாதம் மட்டும் ஒரு மாதம் தவிர்த்து அதற்கடுத்த மாதம் நடத்தப் பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் அய்யா சத்யநாராயண சிங் அவர்களுடனும் மறைந்த பொருளாளர் மனோகரன் அவர்களுடனும் அன்பாய்ப் பழகும் வாய்ப்பு கிட்டியது. இந்த நூலைக் கொண்டு வந்து விட வேண்டும் என்று எனக்கு நினைவூட்டிக் கொண்டேயிருந்தவர் அய்யா மனோகரன். ஆனால் எதிர்பாராத அவரின் மரணமும் இந்த வெளியீட்டின் போது அவர் இல்லை என்பதும் வருத்தத்துக்குரியது.

இந்த உரை முடிந்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது. பாதி எழுதி அப்படியே வைத்திருந்த நிலையில் இப்போது உடனடியாக இந்த நூல் வெளிவரக் காரணம் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் அன்புத் தோழர் சுப வீரபாண்டியன் அவர்கள். அதுவும் அவர் தொடங்கும் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக 'கருஞ்சட்டைப் பெண்கள் வெளிவர இருக்கிறது என்கின்ற செய்தியை அவர் சொன்னபோது என் மனம் ஆனந்தத்தால் நிறைந்தது. அவர் பதிப்பகம் இன்னும் பயனுள்ள பல ஆக்கங்களை உருவாக்கும் என்பதையும் நினைத்து நான் மகிழ்கிறேன். அவருக்கும் திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்கும் என் நன்றி. உரை நிகழ்த்தப் பட்ட போது அதன் தலைப்பு, 'திராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு' என்பதாக இருந்தது. நூலாகக் கொண்டு வரும்போது, என்ன தலைப்பு எனச் சிந்தித்த போதில், 'கருஞ்சட்டைப் பெண்கள்' என்கின்ற தலைப்பைச் சொன்னது எங்கள் இளவல் உமா. நாங்க யாரு தெரியுமா? 'கருப்புச் சட்டைக்காரங்க..' என்று பேசி பேசி வளர்ந்த காரணத்தால் சொன்னவுடன் தலைப்பு பிடித்துப் போய் விட்டது. தலைப்பைத் தந்து நூல் ஆக்கத்துக்கான பணிகளையும் ஏற்றுச் செய்திட்ட தங்கை உமாவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

சுயமரியாதை இயக்க வீராங்கனைகளின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றிய முதற்பெருமைக்குரியவர்கள் முனைவர் பா. வளர்மதி, தோழர் மங்களம் முருகேசன் மற்றும் தோழர் ஜீவசுந்தரி பாலன் ஆகியோர். அவர்களின் எழுத்துக்களையே நான் ஆதாரமாகக் கொண்டிருக்கிறேன். எனவே அவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். அதைவிட அந்த நூல்களையெல்லாம் வரிசைப்படுத்தி எனக்கு எடுத்துத் தந்து நான் சிரமமின்றி பணி முடிக்க உதவிய பெரியார் திடல் நூலகர் தோழர் கோவிந்தன் மற்றும் ஊக்கமளித்த தோழர் இசையின்பன் ஆகியோருக்கு நன்றி. நான் பேசிய உரைகளை எழுதிக் கொடுத்து உதவியவர்கள் எமது புதிய குரல் அமைப்பின் தோழர்கள் உதயகுமார், ஜனனி, பரிமளா, சமீம், இயலரசன், உமா. அந்த உரை வடிவம் அப்படியே இங்குத் தரப்படவில்லை. அதனை ஓர் ஆதாரமாக வைத்துக் கொண்டு சில மாறுதல்களுடனும் பிற்சேர்க்கைகளுடனே இந்த நூல் தயாரிக்கப் பட்டிருக்கிறது. அந்தப் பணியில் எனக்கு முழுமையாக உதவியவர் தோழமை மகன் தமிழ் நாசர். எவ்வளவு பெரிய வரலாறு இருந்திருக்கிறது என்கின்ற வியப்போடு உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் இந்தப் பணிகளைச் செய்து தந்தார் அவர். அவருக்கும் என் நன்றி. வளர்கின்ற அவருக்கு இப்பணி உரம் சேர்க்கும் என நம்புகிறேன். இந்த நூலை முழுமையாகப் படித்து சில தகவல் பிழைகளை சுட்டிக் காட்டி திருத்தியமைக்கு அன்புச் சகோதரி வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுக்கு நன்றி.

இந்த நூலில் கிட்டத்தட்ட முதற்தலைமுறைப் பெண்களைப் பற்றியே சொல்லப் பட்டிருக்கிறது. அதுவும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விசயங்களே பெரும்பாலும். இன்னும் தேடிச் சென்று கருஞ்சட்டைக் குடும்பங்களை நேரிடையாக சந்தித்தால் இதை விட அதிகமாகக் கிடைக்கக்கூடும். அதற்கடுத்தகட்ட தலைமுறைப் பெண்கள் பற்றிய தொகுப்பை இனியொரு முயற்சி எடுத்துதான் செய்ய வேண்டும். அதனைச் செய்யும் ஆவலும் இருக்கிறது. நானோ அல்லது எம் தோழியருள் ஒருவரோ அதனை விரைவில் செய்யக்கூடும். செய்ய வேண்டும். அன்னை மணியம்மையாரை சந்தித்து அவருடன் பேசுகிற வாய்ப்பெல்லாம் எனக்கும் கிடைத்திருக்கிறது என்பதைப் பெருமையுடனும் பணிவுடனும் நினைத்துப் பார்க்கிறேன். அன்பானவர். எளிமையானவர். தனது வெளிப்புறத் தோற்றத்திற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காதவர். தலை கூட வாரியதில்லை. குளித்து விட்டு முடியை உதறி முடிந்து கொள்வார் என நினைக்கிறேன். ஆனால் எப்போதும் அழகு தவழும் முகம். சிரிக்கும் போது மிகவும் அழகாயிருப்பார். வெள்ளை ஜாக்கெட்டும் கருப்புச் சேலையும் தவிர வேறு உடையில் நான் பார்த்ததேயில்லை. நான் அப்போது பள்ளிப் பருவத்திலிருந்தேன். எனது கொள்கைப் பற்றையும் அதீத ஆர்வத்தையும் பார்க்கும் போது எச்சரிக்கையுடன், படிப்பை விட்டு விடாதே என்று அறிவுரை சொல்வார். படித்து விட்டு முழுமையாக தொண்டாற்றலாம் எனக் கூற மறக்க மாட்டார். ஆனால் நான் படிப்பு முடித்திருந்த வேளையில் அவர் இல்லை.

அம்மாவுக்குப் பின் இயக்கத்திலிருந்த ஆளுமைகள் ஆசிரியரின் தலைமையேற்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இயக்கம் என்பது குடும்பங்களின் இணைப்பாக இன்றும் தொடர்கிறது. அடையாறு அரசு மகளிர் பாலிடெக்னிக்கில் நான் சேர்ந்து படிக்க இடம் கிடைக்க உதவியதும், விடுதியில் தங்கிய எனக்கு லோகல் கார்டியனாக ஆசிரியர் அவர்களும் அவரது வாழ்க்கைத் துணைவியார் மோகனா அம்மாவும் இருந்ததையும் இந்த இடத்தில் நன்றியுடன் குறிப்பிடுவதில் பெருமைப்படுகிறேன். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும், திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிரணி செயலாளருமாகிய சகோதரி கனிமொழி அவர்களும், திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களும், அணிந்துரை வழங்கியமைக்கும் பதிப்பாசிரியர் உரை வழங்கிய தோழர் சுபவீ அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. கருஞ்சட்டைப் பெண்கள் தொடர்வார்கள்! வெல்வார்கள்!

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு