கடவுள் உருவான கதை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/kadavul-uruvana-kathai
 
முன்னுரை

இன்று அறிவியல், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. உலகின் பெரும்பான்மை மக்கட்தொகை நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் உயிர் வாழ்கிறது. இவை மக்களுக்கு உணவு, தண்ணீர், சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, பொழுதுபோக்கு மற்றும் பலவற்றை வழங்கியுள்ளன. மனித இனமானது, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தொடங்கி இன்றுவரை தொடரும் காலப்போக்கிலான கற்றல் நடைமுறை மூலம் இதனை அடைந்துள்ளது. தேவைகள், வசதிகளுக்கு அப்பால், விஞ்ஞானிகள் பல்லாண்டு கால மர்மங்களுக்கு விடை கண்டுள்ளனர்.

உதாரணமாக, உயிரின் தோற்றம் குறித்த மனிதனின் ஆர்வம், பதிவு செய்யப்பட்ட வரலாறு முழுதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பல பண்டைய தத்துவவியலாளர்கள் உயிரின் தோற்றம் குறித்து தமது சொந்தக் கோட்பாடுகளைக் கூறியுள்ளனர். ஆதாம், ஏவாள் கதை அவற்றில் ஒன்று. இந்தக் கேள்விக்கு அறிவியல் பூர்வமான விடை காண, புதைபடிவ ஆய்வாளர்கள் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனிதப் புதை படிவங்களை ஆராய்ச்சி செய்துள்ளனர். விரிவான ஆய்வுக்குப் பிறகு, மனித இனம் குரங்கினத்திலிருந்து நீண்ட காலத்தில் மெதுவாகத் தோன்றியதாக சந்தேகத்திற்கு இடமின்றி முடிவுக்கு வந்துள்ளனர்; ஏதோ ஒரு புனிதசக்தி அதைத் தோற்றுவிக்கவில்லை. மாறாக, மனிதனின் கற்பனைதான், கடவுள்கள் என்று அழைக்கப்படும், மனிதனை மீறிய பல்வகை சக்திகளை உருவாக்கியது.

கடவுள் உருவான கதை, விளக்க முடியாத நிகழ்வுகளை விளக்க, ஏன், எப்போது, எப்படி மதமும், தெய்வங்களும் விரும்பத்தக்க விளக்கங்களாக ஆயின என்பதை நவீன அறிவியலைப் பயன்படுத்தி விளக்குகிறது. கடவுள் என்ற காணாத சக்திகளின் முன்னால் மக்களை மண்டியிடச் செய்ய, எந்த வகையான மனிதத் துன்பங்கள் அத்தகைய தேவையை உருவாக்கின? யார் நெறிகளையும், வழிபாட்டு முறைகளையும் பண்டைய கோட்பாடுகளையும் உருவாக்கியது?

இயற்கையின் மர்மங்கள் எப்படி புனித சக்திகளை உருவாக்கின? இவற்றுக்கு விடை காணவும், இதற்குத் தொடர்புள்ள மற்ற கேள்விகளுக்கு விடை காணவும், நான் பல்வேறு புத்தகங்களிலிருந்து மனிதனின் மதச் செயல்பாடுகள் பற்றிய ஒரு சிறு வரலாற்றைத் தொகுத்துள்ளேன். இக்குறிப்புப் புத்தகங்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. யாருடைய தனிப்பட்ட உணர்வுகளையும் புண்படுத்தாமலிருக்கவே முயற்சி செய்துள்ளேன். அப்படி இப்புத்தகத்தின் சில குறிப்புகள் யாரையேனும் புண்படுத்தினால் முன்பாகவே என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப் புத்தகம் மனித இன ஆராய்ச்சி மற்றும் கடவுள், மதங்களின் உருவாக்கம் குறித்த வரலாற்று உண்மைகளை இணைக்கும் முயற்சி. மனித இனம் தோன்றிய சகாப்தத்திலிருந்து இது துவங்குகிறது. பெரும்பாலான புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் மனித இனம் 2,00,000த்திலிருந்து 4,00,000 ஆண்டுகளுக்குள் உருவானதாக உறுதியாகக் கூறுகின்றனர். அந்த சகாப்தத்தில் மனிதர்கள் சிறு நாடோடிக் குழுக்களாக வசித்தனர். இது ஏறத்தாழ இன்றைய மனிதக் குரங்குகள் வசிக்கும் முறையை ஒத்தது. அவர்கள் அப்போது மொழியை உபயோகிக்கவோ, உடை அணியவோ அல்லது நெறிமுறைகளையோ கற்றிருக்கவில்லை. அநேகமாக அவர்களுக்குப் பேய்களையும், தெய்வங்களையும் தெரியாது.

சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பேச்சுமொழி என்ற அற்புதமான கண்டுபிடிப்பு, மனித இனத்தின் விதியையே மாற்றியது. அதன்பிறகு மனிதர்கள் தம்மைச் சுற்றி நடப்பவற்றை விவாதிக்கவும் ஆய்வு செய்யவும் துவங்கினர். அவர்கள் விளங்கிக் கொள்ள முடியாதவற்றுக்கெல்லாம், பூசாரி அல்லது அவர்களது குழுவின் தலைவர் கண்காணாத சக்தியைப் பொறுப்பாக்கியிருக்க வேண்டும். மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் ஆற்றலைக் கற்ற பிறகுதான் மதச் செயல்பாடுகள் தொடங்கியிருக்க வேண்டுமென மனித இன ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பேச்சின் உதவியுடன் மனிதர்கள் தமது மகிழ்ச்சி, துயரங்கள் மர்மங்கள், கனவுகள் மற்றும் பிற விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. பல இடங்களில் - பேசும் மனிதர்கள், ஆன்மா என்ற கோட்பாட்டைக் கண்டுபிடித்தனர். அது ஒரு உடலுக்கு உயிர் கொடுக்கும் ஒரு புனிதப் பொறி; மரணத்தை வெல்லக்கூடியது. ஆன்மாதான் முதன் முதலில் உருவாக்கப்பட்ட மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சக்தி. அந்த அறிவைப் பெற்ற பிறகு மனிதர்கள் இறந்தவர்களைப் புதைக்கத் துவங்கினர். விரிவான முறையில் அடக்கம் செய்வதுதான் மனித இனத்தின் முதல் மதச் செயல்பாடு னப் பெரும்பாலான மனித இன ஆராய்ச்சியாளர்கள் உறுதியாகக் சிதறுகின்றனர். இத்தகைய சமூகச் சடங்குகள்தான் ஆதி முதல் மதம். மக்கள் சந்தித்த நோய்கள், பேரழிவுகள், மரணங்கள் போன்ற விளங்கிக் கொள்ள முடியாத நிகழ்வுகளுடன் போராட அவர்கள் இவற்றை நடைமுறைப்படுத்தினர்.

ஏதோ ஒரு காலகட்டத்தில் - எப்போது இது நடந்தது என்பது நமக்கு துல்லியமாகத் தெரியாது - உலகின் பல்வேறு தொலைதூரப் பகுதிகளில் இருந்த மக்கள் ஒரு உள்ளுணர்வைப் பெற்றனர். தாம் கட்டுப்படுத்த முடியாத ஏதோவொரு சக்தியைச் சந்திக்க நேரிட்ட போதெல்லாம் அவர்கள் அதை வழிபடத் துவங்கினர். வழிபடுவதற்கு உலகெங்கும் பூசாரிகள் ஏறத்தாழ ஒரே முறையை வடிவமைத்தனர். கைகளை இணைத்து தொழுதல், குனிந்து வணங்குதல், முட்டி போடுவது, பூக்களால் அர்ச்சிப்பது, பிரார்த்தனைகள், பலிகள் போன்றவை. மெதுவாக இந்த சக்திகளுக்கு தெய்வங்கள் எனப் பெயரிட்டனர்.

உதாரணமாக, காலவியலாளர்கள் கி.மு 30,000க்கும் கி.மு.40,000க்கும் இடையில் ஒரு ஊழ்பனிக்காலத்தைக் கண்டறிந்துள்ளனர். அந்தக் காலத்தில் வசித்த மனிதர்களுக்கு அதிதீவிரக் குளிரிலிருந்து போதுமான பாதுகாப்பு இல்லை. அவர்கள் சூரிய வெளிச்சத்தின் கருணையில் இருந்தனர். அது தொடர்ச்சியற்றும் அவர்களது கட்டுப்பாட்டை மீறியும் இருந்தது. இந்தச் சூழலில் மக்கள் சூரிய வழிபாட்டைத் தொடங்கினர். அதுதான் தர்க்கரீதியான விளைவாக இருக்க முடியும். அதே போல் மனிதர்கள் இடியையும், மின்னலையும், பேரழிவு மிக்கவையாகவும், மர்மமான வையாகவும், பயமுறுத்துபவையாகவும் கண்டனர். இதன் விளைவாக, அவர்களது தலைவர்கள் அல்லது பூசாரிகள் வானில் நடக்கும் மாற்றங்கள் அனைத்துக்கும் பின்னால் ஒரு புனிதமான வான் கடவுளைக் கற்பனை செய்தனர். மெதுவாக அவர்கள் வானை ஒரு கடவுளாக வழிபடத் துவங்கினர். இந்துக்கள், பெளத்தர்கள், யூதர்கள், கிறித்துவர்கள், முஸ்லீம்கள் ஆகியோர் அவர்களது மதம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே சூரியனையும், வானையும் வழிபட்டதற்குப் போதுமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

பேசுதல் மற்றும் தமது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் திறன் ஆகியவை நெருப்புக் குண்டம், தையல் ஊசி, தோல், காலணி, கற்கருவிகள் போன்ற பல உபயோகமான பொருட்களைக் கண்டுபிடிக்க உதவின. இவற்றின் உதவியுடன் அவர்கள் எளிதான, ஆரோக்கியமான, பாதுகாப்பான வாழ்க்கை நடத்தத் தொடங்கினர். அதன் விளைவாக மக்கட்தொகை அதிகரிக்கத் தொடங்கியது. சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் உணவு நெருக்கடியைச் சந்திக்குமளவுக்கு அது பல்கிப் பெருகியது. இத்தகைய தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய். பல மனிதக் குழுக்கள், பயிரிடும் நுட்பத்தைக் கண்டுபிடித்து விவசாயத்தைத் தொடங்கினர். இது அவர்கள் விவசாய நிலங்களுக்கருகே குடியமரும் தேவையை உருவாக்கியது. வீடுகளுக்கும், கிராமங்களுக்கும், நகரங்களுக்கும், நாகரீகங்களுக்கும் அது வழிகோலியது. மெதுவாக விவசாயிகள் வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட அழிவை சந்தித்தனர். நல்ல பயிர் விளைச்சலைப் பெற, உலகின் பல பகுதிகளிலிருந்த பூசாரிகள் ஏதோவொரு பெண் கடவுளை வழிபடுமாறு ஆலோசனை கூறினர். இவ்வாறு, மனித இனம் புதிய சவாலைச் சந்தித்தபோதெல்லாம் பூசாரிகள் மேலும் ஒரு உபயோகமான தெய்வத்தைக் கண்டுபிடித்து, பழைய தெய்வத்தைக் கண்காணாமல் அழித்து விட்டனர்.

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பயிரிடுதல் ஆண்டு முழுவதற்கும் போதுமான உணவை வழங்கியது. நெருப்புக் குண்டங்களுடன் கூடிய நிரந்தர வீடுகள் அவர்களை மோசமான கால் நிலையிலிருந்தும், காட்டு விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்தன. பருவ மேலும் ஒரு மக்கட்தொகை அதிகரிப்புக்கு இட்டுச் சென்றது. அதே சமயம், பயிரிடுதலானது மக்களை செல்லப்பிராணிகள், எலி போன்ற பிராணிகள், கொசுக்கள், ஈக்கள், ஒட்டுண்ணிகளுக்கு அம்பலப்படுத்தியது. இந்த அம்சங்களெல்லாம் சேர்ந்து, காலரா, காசநோய், டைஃபாய்ட், பிளேக் போன்ற பெரு நோய்கள் பெருக வழியேற்படுத்தின. விரைவில், பூசாரிகள் வழிபாடுகள், சடங்குகள், இயற்கை மருத்துவம் மூலமாக நோய்களுக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கினர்.

உடல்நோய்கள் தவிர, மக்கட்தொகைப் பெருக்கமானது வறுமை, அசமத்துவம், அநீதி, குற்றம், சுரண்டல் போன்ற சமூகத் தீமைகளையும் உருவாக்கியது. இதன் விளைவாகப் பெரும்பான்மையான மக்கள் நரகத்துடன் ஒப்பிடக்கூடிய மிகத் துன்பகரமான வாழ்வையே நடத்தினர். உதாரணமாக, இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் நகர்ப்புற மக்கட்தொகையில் சரிபாதிக்கு மேல் அடிமைகளாகவே இருந்தனர். இந்தச் சமயத்தில் பல பெரும் இறைத்தூதர்கள் மோசஸ், புத்தர், இயேசு போன்றோர் மனிதர்களின் துன்பத்துக்குக் காரணத்தையும், மருந்தையும் கண்டறிந்தனர்.

உதாரணமாக, மக்களை அவர்களது துன்பங்களிலிருந்து பாதுகாக்க, பத்துக் கட்டளைகள், பலிகள், வழிபாடுகளை நட த்துமாறு மோசஸ் ஆலோசனை கூறினார். புத்தர்தான் முதலில் (முந்தைய பிறப்புகளில் மனிதன் செய்த பாவங்களால் ஏற்பட்ட சர்மவினைக்குக் கிடைத்த தண்டனைதான் மனிதத் துன்பங்களுக்கு காரணம் என்று கூறினார். மக்களைத் துன்பங்களிலிருந்து பாதுகாக்க அவர் சில நெறிமுறைகளையும் வகுத்தார். பேய்கள் பிடித்திருப்பதால் மக்கள் நோயால் துன்புறுவதாக இயேசு கூறினார்.

இந்த ஆசிரியர்களெல்லாம் அவர்களது மரணத்துக்குப் பின் தெய்வங்களாக்கப்பட்டனர்.

பின்வந்த பூசாரிகள் பலரும் இந்த இறைத் தூதர்கள் பிரச்சாரம் செய்த வழிபாடுகள், சடங்குகள், புராணங்கள், உருவகங்கள், நெறிகள் ஆகியவற்றுக்குப் பொருள் கூறினர். வேதங்கள், வேதாகமம் (பைபிள்) புத்த சரிதம், அவெஸ்தா போன்றவை இத்தகைய எழுத்துக்களின் தொகுப்பே. துன்பங்களிலிருந்து விடுபட இந்தப் புத்தகங்கள் வழிபாடுகள், பலிகள், தந்திரம் அல்லது நெறிகளைக் கடைப்பிடிக்குமாறு கூறினர். இவர்கள் கூறியதைப் பின்பற்றுவதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. இந்தப் புனிதப் புத்தகங்கள்தான் இன்றைய மதங்களை வடிவமைத்து உருவாக்கின.

எழுதும் கலையைக் கண்டுபிடித்தது மனித இனத்தின் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக இருந்தது. அதே சமயம், அது எதிர்பாராத விளைவை உண்டாக்கியது. எழுதப்பட்ட ஒவ்வொரு புத்தகத்தையும் மக்கள் உண்மை வரலாற்றின் பதிவாகக் கருதத் தொடங்கினர். உதாரணமாக, மக்கள் இம்மாதிரி புராணக் கதைகளையும், உருவகங்களையும் வரலாறாகக் கருதினர். இதுதான் இன்றைய அணிதிரட்டப்பட்ட மதங்களின் அடிப்படையாக அமைந்தது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, புனிதப் புத்தகங்களில் ஆவணப்படுத்தப்பட்ட அறிவு, மனித இனத்துக்கு வழிகாட்டியது; இன்றும் வழிகாட்டுகிறது.

மனிதத் துன்பங்களை அகற்றவும், நெறிமுறைகளைக் கற்பிக்கவும், பூசாரிகள் புனிதப் புத்தகங்களைத் தொகுத்தனர். ஆனால் இவை இறுதியில் நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தின. இரண்டாயிரம் ஆண்டுகளாக மனித இனம் பல நோய்களை அனுபவித்தது. ஏனெனில் நோய்களுக்கு சமகால அறிவார்ந்த மக்கள் காரணத்தையும், மருந்துகளையும் கண்டறியத் தொடர்ச்சியான அறிவியல் பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மேலும், பூசாரிகள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பல மதச்சார்பற்ற தத்துவ வியலாளர்களையும், அறிவியலாளர்களையும் குற்றம் சாட்டித் தண்டித்தனர்.

இவ்வாறாக பூசாரிகளும், அவர்களது புத்தகங்களும் உலகின் முன்னேற்றத்தை, மிக நீண்ட காலம் தாமதப்படுத்திவிட்டனர். எனினும் அவர்களால் அதை நிரந்தரமாகத் தடை செய்ய முடியவில்லை . இறுதியில், அறிவியல் தனது வழியைக் கண்டு கொண்டது. புனிதப் புத்தகங்களின் மூலம் பெற்ற அறிவைத் தூக்கியெறிந்த பிறகுதான் அறிவியலும், தொழில்நுட்பமும் வளர முடிந்தது. மெதுவாகக் கடந்த நூறாண்டுகளில் விஞ்ஞானிகள் உலகின் பெரும் பகுதியை சுவர்க்கமாக மாற்றி விட்டனர். இந்தப் புரட்சியின் விளைவுகள் யாரிடமிருந்தும் மறைக்கப்படவில்லை. இன்று மக்கட் தொகையில் பெரும் பகுதியினர் போதுமான உணவு, தண்ணீர், இருப்பிடம், உடை, தகவல் தொடர்பு, நீதி, ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெற்றுள்ளனர். நூறாண்டுகளுக்கு முன்பு உலகின் ஒரு சதவீத மக்கள்தான் இத் தகுதிகளைப் பெற்றிருந்தனர். அடிமைத்தனம், பெண்களைச் சுரண்டுதல், பஞ்சம், வறுமை போன்ற பெரும் மனிதத் துன்பங்களை நவீனத் தொழில்நுட்பம் அகற்றி விட்டது. மருத்துவ அறிவியல் பெரும்பாலான நோய்களுக்குக் காரணத்தையும், மருந்தையும் கண்டுபிடித்துவிட்டது. இன்று அறிவியல் ஏறத்தாழ மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் வழிநடத்துகிறது. வியப்பேற்படுத்தும்படியாக, மனித இனம் அதன் அறிவியல் முன்னேற்றங்களுக்காகக் கூட வானில் யாருக்கோ நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறது!

கடந்த நூற்றாண்டில், மருத்துவம் மற்றும் பிற அறிவியல்களின் வளர்ச்சி, மதத்தின் பங்குக்கு மெதுவாக வரம்பு கட்டிவிட்டது. மத மூட நம்பிக்கைகளின் இருளிலிருந்து வெளியேறி, சான்றுகளின் அடிப்படையிலான அறிவின் அறிவியல் பிரகாசமான வெளிச்சத்துக்கு வருமாறு மக்களை ஊக்கப்படுத்தியது. எனினும் கடந்த இருபதாண்டுகளில், மத பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்து, அவர்கள் பல அப்பாவிகளைக் கொன்றனர். அதன் பிறகு, இந்த பூமி என்ற கிரகத்தை மீண்டும் தீவிரவாதிகள்தான் ஆளப்போகின்றனர் என்று தோன்றுகிறது! பழங்காலத்தைப் போலல்லாது, நவீன பயங்கரவாதிகளிடம் மிக நவீன ஆயுதங்கள் உள்ளன. இந்த பூமி கிரகத்தையே அழிக்கும் திறனும் உள்ளது. உயிர் தரிப்பதற்காக, மனித இனம் மதவெறியை ஒழிக்க வேண்டும். அது குழந்தைப்பருவத்திலிருந்து செய்யப்படும் மத மூளைச் சலவையால் வரும் மனநோய்.

மேலும், புனிதப் புத்தகங்களுக்குத் தவறான விளக்கமளிப்பதும் நபிரவாதத்தின் பொறுப்பாகும். ஒவ்வொரு புதிய தலைமுறையும் தனது பெற்றோர், பூசாரிகள், நண்பர்களிடமிருந்து மதத்தைப் பற்றிய தனது அறிவைப் பெறுகிறது. இன்று பல நவீனப் பூசாரிகள் மக்களுக்குத் தவறான வழியைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், தாமே அறிவியலின் பயன்களை அனுபவிக்கும் அதே சமயத்தில், தம்மைப் பின்பற்றுவோரிடம் பழங்கால் மூடப்பழக்கங்களைக் சடைப்பிடிக்குமாறு பிரச்சாரம் செய்கின்றனர்.

வெறுப்பற்ற சமூகத்தைப் படைப்பதற்கு, வரும் தலைமுறையினர் கடவுள்களின் உருவாக்கம் குறித்து நம்பகமான அறிவைப் பெற வேண்டும். உயிரின் தோற்றம், மனிதவியல், ஒவ்வொரு பெரிய மருந்தின் சுருக்கமான வரலாறு ஆகியவற்றைப் பள்ளிப் புத்தகங்கள் கற்பிக்க வேண்டும். மனிதர்கள் ஏன், எப்போது கடவுளை உருவாக்கினர் என்பதை மாணவர்கள் கற்க வேண்டும். இத்தகைய செல்விக்குப் பிறகு மதத்தீவிரவாதிகளாக இளைஞர்களை ஊக்குவிப்பது கடினமாக இருக்கும்.

மனித இனம் ஏன் பல மதக் கோட்பாடுகளை உருவாக்கியது? ஆனால் ஒரே அறிவியலைத்தான் உருவாக்கியது என்பதை ஒரு கணம் சிந்திப்போம். உதாரணமாக, ஒரு கோட்பாடு, சிலை வழிபாட்டை உயர்த்திப் பிடிக்கிறது. மற்றொன்று, அதற்கு முரணாக உள்ளது. அறிவியல் கோட்பாடுகளில் இந்த முரண்பாடு கிடையாது. உண்மையில் ஒரு கோட்பாடு அல்லது ஒரு விஷயத்தில் ஒரு உண்மைதான் உள்ளது. ஆனால் பல பொய்கள் இருக்க முடியும். மனித இனம் தன்னை உருவாக்கியவராகவும் வளர்த்தெடுத்தவராகவும் கடவுள்களை உருவாக்கி வழிபட்டது; எனினும், மனித இனத்தை உருவாக்கி ஊட்டமளித்தது; ஆளும் எந்தப் புனித சக்தியையும் அது கண்டுபிடிக்கவில்லை. இன்று விஞ்ஞானிகள் பூமியில் உயிரினை உருவாக்கி ஊட்டமளிப்பவரை உறுதியாகக் கண்டுபிடித்து விட்டனர். மனித உணர்வின் இருண்ட மூலையில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதே இந்தப் புத்தகத்தின் நோக்கமாகும்.

அஜய் கன்சால்
செப்டம்பர் 2014
புதுதில்லி

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

 

கடவுள் உருவான கதை - பொருளடக்கம்

Back to blog