காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/kaalam-oru-varalaatru-churukkam

மொழிபெயர்ப்பாளர் உரை

காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் நூலின் தமிழாக்கம் முதன் முதல் வெளிவந்து சுமார் 12 ஆண்டுகள் ஓடி விட்டன. நூல் இன்று கடைகளில் கிடைக்காமல் பலரும் விரும்பிய நிலை யில் இந்த இரண்டாவது பதிப்பு. இந்நீண்ட கால இடைவெளியில் அறி வியல் மொழிபெயர்ப்பில் பெரும் அனுபவம் கிடைக்கப் பெற்றேன். குறிப்பாக இயந்திர அண்டம் (The Mechanical Universe) என்னும் இயற்பியல் பெருநூலை மொழிபெயர்த்த அனுபவத்தைச் சொல்லலாம். அது அமெரிக்க கால்டெக் பல்கலைக்கழகம் சுமார் 1,500 பக்கங்களில் இரு தொகுதிகளாக வெளியிட்ட பாடநூல். அப்பெரும் அறிவு வெள்ளத்தில் மூழ்கித் திளைத்த நான் அறிவியல் நடையைப் புரிந்து கொள்வதிலும், அறிவியலின் உட்பொருள் மாறாமல் கலைச் சொற்களை உருவாக்கித் தருவதிலும் அனுபவச் செறிவு பெற்றேன்.

எனக்குப் புதிதாய்க் கிடைத்த வெளிச்சத்தில் இரண்டாம் பதிப்பை நன்கு துல்லியப்படுத்திக் கொண்டுவர வேண்டுமெனக் கருதினேன். எனவே வரிக்கு வரி பழைய மொழி பெயர்ப்பை ஆங்கில மூலத்துடன் ஒப்புநோக்கி நடையைச் சரளப்படுத்தினேன், மேலும் திரு மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட ஆளுமைகளுடன் கலந்துரையாடி அறிவியல் நேர்த்தி குன்றாது கூர்மைப்படுத்தினேன்.

எனது இடைக்கால அனுபவம் கலைச்சொற்கள் உருவாக்கத் திலும் கைகொடுத்தது. நான் சென்ற முறை கையாண்டிருந்த பல கலைச்சொற்களையும் மீளாய்வு செய்ய வேண்டிய நிலை. அருளியார் எழுதி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அருங்கலைச்சொல் அகரமுதலி, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் tamilvu.org இணையத்தளம் ஆகியவை எனது முயற்சியில் முகாமைப் பங்கு வகித்தன. இவ்விரு படைப்புகளின் அடிப்படையில் சில பல திருத் தங்கள் செய்துள்ளேன். காட்டாக, திரள் (galaxy), இயன் வழுப்புள்ளி (singularity), வானொலி அலை (radio wave), வெள்ளைக் குறளி (white dwarf) எனச் சென்ற பதிப்பில் பயன்படுத்தியிருந்த சொற்களை இந்தப் பதிப்பில் முறையே உடுத்திரள், வழுவம், கதிரலை, வெண் குறுளை எனத் திருத்தியுள்ளேன்.

தமிழ்வழிக் கல்வியில் படித்து வந்த மாணவர்களுக்கு என் தமிழாக்கம் புரிய வேண்டும் என்பதால், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவியல் புத்தகங்களின் கலைச்சொற்களைப் பயன்படுத்த முடிவெடுத்தேன். குறிப்பாகச் சென்ற பதிப்பில் பயன்படுத்திய செயலெதிர்ச்செயல் (interaction), இடையீடு (interference), இயங்கியல் (mechanics) | ஆகிய சொற்களை இப்பதிப்பில் முறையே இடைவினை, 'குறுக்கீடு, இயந்திரவியல் எனத் திருத்தியுள்ளேன்.

குவாண்டம் கோட்பாடு (quantum theory) பற்றி நான் குறிப்பிட்டாக வேண்டும். குவாண்டம் என்பதைச் சென்ற பதிப்பில் கற்றை எனத் தமிழாக்கியிருந்தேன். பின்பு பெற்ற அறிவு வெளிச்சத்தில் இந்தச் சொல் அறிவியல் அடிப்படையில் ருத்தமானதன்று என்பதை உணர்ந்தேன். அறிவியல் வரையறைப்படி, குவாண்டம் என்பது மின்காந்த அலைகளின், காட்டாக ஒளியலையின் பகுக்கவியலாத ஆகச் சிறு அளவு (smallest quantity), அல்லது அலகு ஆகும். ஒளியின் ஆகச்சிறு அலகு ஒளிமம் (ஃபோட்டான்) எனப்படுகிறது. ஆக, இந்த ஒற்றை ஒளிம அலகே குவாண்டம் ஆகும். ஆனால் ஒற்றை அலகு என்பதைக் கற்றை வெளிப்படுத்தவில்லை. காட்டாக, ரூபாய்க் கற்றை என்றால் அதில் பல பணத் தாள்கள் அடங்கியிருப்பதாகத்தான் பொருள்.

 மேலும் அருளியாரின் அருங்கலைச்சொல் அகரமுதலி, தமிழ் இணையக் கல்விக் கழகம் இரண்டுமே குவாண்டம் என்பதைக் குவையம் எனத் தமிழாக்குகின்றன. குவை என்பதுங்கூட பலவற்றையும் உள்ளடக்கும் ஓர் அளவையே குறிக்கும். ஆக, கற்றை, குவையம் இரண்டுமே ஒற்றை ஒளிம அலகாகிய குவாண்டத்தைத் துல்லியமாய் வெளிப்படுத்த வில்லை எனக் கருதுகிறேன்.

இந்நிலையில், இந்த ஒற்றை ஒளிம அலகைத் துல்லியமாக விளக்கிட அக்கு எனும் சொல்லே சரியானது என இயந்திர அண்டம் மொழிபெயர்ப்பின் போது உணர்ந்தேன். ஒரு பொருள் அக்கு அக்காய்க் கிடக்கிறது என்றால், ஒவ்வோர் அக்கும் ஓர் அலகைக் குறிக்கும். இதே வழியில், பிளாங்கின் குவாண்டம் கோட்பாட்டின்படி விளக்கமளித்தாலும், ஒளி குவாண்டம் குவாண்டமாக, அதாவது பொட்டலம் பொட்டலமாக உமிழப்படுகிறது என்னும் கூற்றை ஒளி அக்கு அக்காக உமிழப்படுவதாய்ச் சொல்வது சாலப் பொருந்தும் எனக் கருதுகிறேன். எனவே குவாண்டம் என்பதற்கு இணையாக அக்குவம் எனும் கலைச் சொல்லைப் புனைந்து அதனையே இயந்திர அண்டம் நூலில் நான் பயன்படுத்தத் துணிந்தாலும் அதற்குரிய வாய்ப்பு அப்போது அமையவில்லை. ஆனால் இப்போது அக்குவம் அறிவியல் ஒளியுடன் இந்நூலில் இடம்பெறுகிறது. குவாண்டத்தை விடவுங்கூட அறிவியல் துல்லியம் வாய்ந்த அக்குவம் தமிழ் அறிவுலகின் அறிந்தேற்பைப் பெறும் என நம்புகிறேன்.

ஆங்கிலத்தில் ஒரு பொருள் வெளியில் குறிப்பிட்ட ஓரிடத்தில் அமைந்திருப்பதைக் குறிக்கும் position என்னும் சொல் அறிவியல் தமிழில் பெருங்குழப்பம் ஏற்படுத்துகிறது. இதனைத் தமிழ்நாடு அரசு அறிவியல் பாட நூல்களும் இதர கலைச்சொல் அகராதிகளும் நிலை எனச் சொல்கின்றன. ஆனால் ஒரு பொருளின் நிலவரத்தைக் குறிக்கும் state என்பதையும் நிலை என்றே சொல்கின்றன. இப்படித் தமிழில் நிலை எடுக்கும் அவதாரங்கள் பல. ஒரு கலைச்சொல் பல பொருள் தரும்படி ஆளப்படுவது கலைச்சொல்லுக்குரிய இலக்கணம் ஆகாது. அது குழப்பங்களுக்கே வழிவகுக்கும். எனவே position, state ஆகியவற்றை முறையே அமைவிடம், நிலவரம் எனத் தமிழாக்கம் செய்துள்ளேன். மேலும் static universe என்பதை நிலையான அண்டம் எனக் கூறுவதும் நிலைக் குழப்பத்துக்கு இன்னோர் எடுத்துக்காட்டு. அது நிலைபேறுடைய அண்டம் என்ற பொருள் தரவும் வாய்ப்புண்டு. எனவே சென்ற பதிப்பின் நிலையான அண்டம் இப்போது நிற்கும் அண்டம் ஆகி நிற்கிறது.

இந்நால் குறித்துத் திறனாய்வு செய்துள்ள பலரும் கேட்டுள்ள ஒரு கேள்வி: குவாண்டம், சிங்குலாரிட்டி போன்ற ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழிலும் வைத்துக் கொண்டால் என்ன? ஆனால் அறிவியல் கருத்தாக்கத்தை வெளிப்படுத்தும் இத்தகைய சொற்களைத் தமிழ்ப்படுத்துவதுதான் அறிவியல் தெளிவை ஏற்படுத்தும். சொல்லப்போனால், இத்தகைய (கலைச்சொற்களுக்கு சப்பானியம், சீனம், கொரியம், அராபியம், வியத்னாமியம் அனைத்தும் அந்தந்த மொழிக்குரிய தனிச் சொற்களையே பயன்படுத்துகின்றன. பின் தமிழுக்கு மட்டும் தடை ஏனோ?

இந்நாலில் அணுவின் அடிப்படைத் துகள்களான எலக்ட்ரான், புரோட்டான் போன்ற பெயர்ச்சொற்கள் மின்மம், நேர்மம் என அழகு தமிழில் வெளிப்படுகின்றன. சீன, கொரிய , வியத்னாமிய மொழிகளும் இத்துகள்களை மொழிமாற்றம் (செய்து கொள்ளத் தயங்கவில்லை. அப்படியானால் செம் மொழித் தமிழுக்கு மட்டும் தயக்கம் தேவையா?

ஒன்றைச் சொல்லியாக வேண்டும்: தமிழாக்கங்களின் முதன்மை நோக்கம் தமிழ் மட்டும் தெரிந்தவர்கள் படித்து விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே; ஆங்கிலம் தெரிந்தவர்களுக்காக அன்று.

சென்ற என் தமிழாக்கம் A Brief History of Time நூலின் 1996 வெளியீட்டின் அடிப்படையில் உருவானது. இம்முறை 2011 , ஆங்கில வெளியீட்டின் அடிப்படையில் நான் திருத்தங்கள் மேற்கொண்டதையும் ஈண்டு குறிப்பிடலாம்.

இந்நாலில் [ ] என்னும் சதுர அடைப்புக்குறிகளுக்குள் காணப்படுபவை அனைத்தும் மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு எனப் புரிந்து கொள்ளவும்.

இப்பெருமுயற்சியில் துணை நின்றோரை நினைவுகூர்வ தாயின்

நூலின் பதிப்பாசிரியர் தோழர் தியாகு இம்முறையும் மொழி பெயர்ப்பு முழுவதையும் படித்துப் பார்த்துத் தேவைப்படும் அறிவுரைகள் வழங்கித் துணை நின்றதை என்னால் குறிப் பிட்டுச் சொல்லாமல் இருக்க முடியாது.

பக்க வடிவமைப்புச் செய்த திரு சு. கதிரவனுக்கு நன்றி.

புத்தகத்தின் ஒவ்வோர் அதிகாரத்தின் உள்ளடக்கக் கருத்தையும் வண்ணப் படங்களாக வெளிப்படுத்திக் காட்ட நினைத்தேன். அதற்கு நான் 8, 10, 12 ஆகிய மூன்று அதிகாரங் களுக்குப் படவிளக்கத்துடன் காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் (The Illustrated A Brief History of Time) என்ற நூலில் இடம் பெற்றிருந்த வண்ணப் படங்களையே பயன்படுத்திக் கொண்டேன். 7ஆம் அதிகாரத்தில் கருந்துளை உமிழ்வைச் சித்திரிக்கும் நாசா ஓவியம் பயன்பட்டது.

மற்ற எட்டு அதிகாரங்களுக்குரிய உள்ளடக்கத்தை விளக்கி நான் முன் வைத்த கருவை அப்படியே உள்வாங்கிக் கொண்டு அதனை வண்ணச் சித்திரங்களாய்த் தீட்டிக் கொடுத்தார் ஓவியர் பாரிவேள். நூலின் முகப்பான ஆக்கிங் படத்தையும், இறுதியில் ஐன்ஸ்டைன், கலிலியோ, நியூட்டன் படங்களையும் தீட்டிக் கொடுத்ததும் அவரே. புத்தக அட்டை வடிவமைப்புச் செய்து கொடுத்ததும் அவர்தான். பாரிக்கு என் நன்றி.

என் தமிழாக்க முயற்சியை என் சிந்தனைப்படி வர உதவிய எதிர் வெளியீடு சா. அனுஷ் அவர்களுக்கு நன்றி.

என் தமிழாக்கத்தைப் பொறுமையாகப் படித்துப் பார்த்து அதற்குச் சிறந்த அணிந்துரை எழுதியும் என் தமிழ்க் கலைச் சொல்லாக்க முயற்சிக்கு நல்ல அறிந்தேற்பு அளித்தும் இந் நூலின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள அறிவியல் அறிஞர் திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு நன்றி.

என் சுட்டிக் குழந்தை பறை என் கணினி மேசையை நெருங்கி வந்து குறும்புகள் பல செய்து என் வேலைக்கு இடையூறு செய்வாள். என்னை அண்ட விடாது அவளைத் தடுத்துக் தாண்ணுங்கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டு என் பணியில் முழுமையாக ஈடுபட உதவியவர்கள் என் மனைவி செல்வியும் என் மூத்த மகள் ஈரோடையும். அவர்களுக்கு என் நன்றி .

சென்னை
11.11.2015
நலங்கிள்ளி
enalankilli@gmail.com

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

 

காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - அணிந்துரை

காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - முன்னுரை

காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - பொருளடக்கம்

Back to blog