காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/kaalam-oru-varalaatru-churukkam
தமிழாக்கத்துக்கு அணிந்துரை

"மெல்லத் தமிழினிச் சாகும்.", என்று பாரதி பாடியதாய்ச் சிலர் சொல்வார்கள். ஆனால் அது ஒரு பேதையின் பிதற்றல் என்பது பாரதியின் கூற்று.

''சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்பதே பாரதியின் அறைகூவல். இந்த வழியில் வந்த ஒரு நல் முயற்சிதான் உங்கள் கைகளில் இருக்கும் இந்தப் புத்தகம்.

காலம் பொன் போன்றது என்ற தமிழ்ப் பழமொழி மிகவும் அர்த்தம் பொதிந்தது. எல்லா மாற்றங்களுக்கும் பொதுவான ஒரே அச்சாணி என்ன என்று பார்த்தால் அது காலம் மட்டும்தான். கடந்து சென்ற காலத்தை அறிவியல் கண் கொண்டு ஆராய்ந்தால் நாம் வாழும் பூமியும், நமது சூரியக் குடும்பமும், பால்வெளியும் எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதை ஓரளவு ஊகிக்க முடியும். இதன் மூலம் இனி வரும் காலங்களில் நமது பாதை எவ்வாறு இருக்கலாம் என்பதை ஓரளவு கணிக்கவும் வழி பிறக்கலாம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு தமது அறிவியல் ஆராய்ச்சி மூலமாக உலக மக்களின் அறிவியல் நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் முக்கிய மான இடத்தைப் பிடிக்கிறார். அறிவியலாளர் கார்ல் சாகனின் முன்னுரையில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைத் தாம் முதல் முறை பார்த்த விதத்தைச் சொல்லும் போது நமக்கு நெஞ்சு உருகுகிறது. ஹாக்கிங்கின் தன்னுரையில் தமக்குக் கை, கால் செயல் இழந்தது மட்டுமன்றி பேச்சும் முடியாமல் போனதைப் படிக்கும் போது இந்த மனிதரின் விந்தைகளுக்கு ஒரு அளவே இல்லையா என்று தோன்றுகிறது. மனிதப் பிறப்பின் மகோன்னதத்தைப் பறைசாற்றும் காட்சி அதைப் படிக்கும் ஒவ்வொருவின் மனத்திரையிலும் உதிக்கும் என்று நான் உணர்கிறேன்.

இயற்பியல் கருத்துக்களை அவர் தமது புரிதலின் அடிப் படையில் விளக்கிச் சொல்லும்போது அங்கே மனித மூளை பின் மகோன்னதம் தூக்கலாய்த் தெரிகிறது. அரிஸ்டாட்டில் முதற்கொண்டு ஐன்ஸ்டீன் வரை அண்டவெளியில் நமது பூமியின் இருப்பை, காலத்தோடு அது கை கோத்துக் கொண்டு செல்லும் நேர்த்தியை எவ்வாறு புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதைச் சொல்லி இனி முன்னோக்கியுள்ள காலத்தை ஹாக்கிங் அர்த்தம் செய்து கொண்டிருக்கும் விதத்தைப் படிக்கும்போது விண்வெளியில் விரிந்த கண்களோடு ஆச்சர்யங்களைப் பார்த்தவாறு பறந்து செல்வதைப் போல ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது.

கல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு, இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஓர் இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்துக் கொடுக்கும் முயற்சியிது. கடினமான அறிவியல் கோட்பாடு களை எளிமையான சொற்றொடர்கள் மூலம் கருத்து மாறாமல் சொல்லுவது என்பது மூளையைப் பின்னிப் பிணைந்து எடுக்கும் வேலை. திரு நலங்கிள்ளி இதனை மிகவும் திறம்படச் செய்துள்ளார். கடுமையான உழைப்பும், தளராத முயற்சிகளும் இதன் பின்னணியில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. பல இடங்களில் புதிய சொற் களை உருவாக்கியும் அவற்றின் பொருளானது அடிப் படையைச் சிதைத்துவிடாமலும் இருக்கும் வண்ணம் மிகக் கவனமாகவும் 'அறிவியல் தமிழ்' என்னும் கத்தி மேல் பக்குவமாய் நடந்துள்ளார். தமிழில் இது ஒரு புதிய முயற்சி.

குவாண்டம் ஃபிசிக்ஸ்' என்பது இருபதாம் நூற்றாண்டின் ஓர் இணையற்ற இயற்பியல் கோட்பாடு. அடிப்படைத் துகள்கள் எவ்வாறு பயணப்படுகின்றன என்பதை விளக்கும் இந்தக் கோட்பாட்டின் முக்கிய நாயகன் 'குவாண்டம்' என்ற சக்தித் துகள். இதனைத் தமிழில் 'அக்குவம்' என்றும், 'அக்கு அக்காகப் பிரித்தல்' என்ற மூல அர்த்தத்தின் அடிப்படையில் செய்திருப்பதும் அருமையான சிந்தனை. இப்படியான முத்துக் குவியல்கள் இந்தப் புத்தகத்தில் ஏராளம். தமிழாக்கப் பட்ட ஆங்கில வார்த்தைகளையும் அங்கங்கே உடன் சேர்த்திருப்பதால் ஆங்கில மூலத்தைப் படித்தவர்கள் கூட தாய்த்தமிழில் படிக்கும் போது இதமாய்ப் புரிய உதவும்.

மொழிபெயர்ப்பு என்பது கருத்துக்களின் ஆழத்தோடு சேர்ந்து வரவேண்டும் என்று நண்பர் திரு நலங்கிள்ளி பாடு பட்டிருப்பது புத்தகத்தின் இறுதிப் பக்கம் வரை கண்கூடாகத் தெரிகிறது. அறிவியல் கோட்பாடுகளை புரிந்துகொள்ள சிந்திக்க வைப்பது மட்டுமன்றி, அவற்றைத் தமிழ் மூலம் புரிந்து கொள்ளத் தூண்டுவதிலும் இந்தப் புத்தகம் சிறப்பாகத் தோன்றுகிறது.

படங்கள் கருத்துக்களைச் சொல்வதில் முக்கியப் பங்கு ஆற்றக்கூடியவை. பல பக்கங்களில் எழுத்துக்கள் மூலம் சொல்ல முனையும் கருத்தை ஓர் அழகான அறிவார்ந்த படத்தின் மூலம் சுலபமாகச் சொல்லிவிடலாம். இதனைத் திரு நலங்கிள்ளி பாரட்டத்தக்க விதத்தில் நிரூபித்து இருக் கிறார். அவரது கற்பனா சக்தியோடு இயற்பியல் கோட் பாடுகளை அவர் புரிந்து கொண்டிருக்கும் நேர்த்தியும் இந்தப் படங்களில் தெரிகின்றன. ஓவியர் பாரிவேள் தமது திறமையை அபாரமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். இந்த இருவரின் ஆக்கத்தில் உண்டாகியுள்ள தூரிகைகள் இயற்பியலின் முக்கியமான சில கோட்பாடுகள் பார்ப்பவர் களுக்கு உடனே புரிந்துவிடும் வண்ணம் அமைந்துள்ளன.

குறிப்பாக எட்வின் ஹபிள் பூமி உருண்டையின் மேல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பெரிய தொலை நோக்கியினுள்ளே நோக்க, அவர் தலைக்குப் பின்னே மேலே அண்ட வெளிகள் பல வண்ணங்களில் மிளிர்வதைப் பார்க்கும் போது 'ஆகா, அற்புதம்!' என்று பாராட்டத் தோன்றுகிறது. அறிவியலைப் புரிந்து கொண்டு அதைப் பற்றிப் பேச கற்பனா சக்தி அவசியம். புத்தகமும், புத்தகத்தின் படங்களும் இதை நிரூபிக்கின்றன.

தமிழில் படிக்கத் தெரிந்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருசேரப் படித்துணர வேண்டிய நூல். அறிவியலில் ஆவல் வளரவும், தேடலின் தீவிரம் கூடவும் இந்த நூல் உதவும்.

'தமிழுக்குப் புகழ் சேர்ப்போம்' எனப் பல இடங்களில் கூறக் கேட்டிருக்கிறோம். இந்தப் புத்தகம் இதற்குக் கொஞ்சம் (மேலே போய் தமிழ் மனங்களை உலகளாவிய அறிவியல் நோக்கிற்கு அழகாகக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.

நண்பர் நலங்கிள்ளியின் பணி தொடரவும், புத்தகத்தை மாணவர் - ஆசிரியர், சிறுவர் - பெரியவர், ஆண் - பெண் என்ற அனைத்து மட்டத் தமிழர்களும் படித்துப் பயன் பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அறிவியலும், அன்பும், தமிழும் கலந்த வணக்கங்களுடன்,

பெங்களூரு 08.12.2014
முனைவர் மயில்சாமி அண்ணாதுரை
தொலை நுண்ணுனர் & அறிவியல் செயற்கைத்
துணைக்கோள்களின் தலைமைத் திட்ட இயக்குநர்,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம்,
பெங்களூரு

Back to blog