ஜாதி ஒழிப்புப் புரட்சி - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/jaathi-ozhippu-puratchi
 
பதிப்புரை

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுய சிந்தனையாளர் பகுத்தறிவுப் பகலவன் பதந்தை பெரியார்! ‘ஏட்டுச் சுரைக்காய்' கல்வியினால் உருவாக்கப்பட்டவர் அல்லர்; அவர் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட இயற்கைத் தலைவர் - "மண்ணை மணந்த மணாளர்!"

வீட்டு அனுபவம் தொடங்கி நாட்டு நிகழ்வுகள் உட்பட அத்தனையும் கண்டு, அலசி, ஆராய்ந்து ஒரு ‘பூரண பகுத்தறிவுவாதி' என்ற நிலையில் நின்று முடிவெடுத்து சுயமரியாதை இயக்கம் கண்ட சூரியன் தந்தை பெரியார்!

அவர் பதவி ஆசையிலிருந்து 'துறவு பூண்டார். உள்ளூர் பிரமுகராக இருந்து 29 பதவிகளை அலங்கரித்த நிலையில், ஒரே ஒரு வெள்ளைத்தாளில் அத்தனைப் பதவிகளிலிருந்தும் விலகல் எழுதிக் கொடுத்து விட்ட நிலைதான் அந்தத் துறவு.

இதுதான் அவரது முழுப் பகுத்தறிவு தன்மானப் பொதுவாழ்வுக்கு ‘திறவு'ம் ஆயிற்று.

மனித குலத்தை ஓர் உருவமாகப் பார்க்க விரும்பும் மானிட நேயர் - 'மனிதம்' வழிந்தோடிய மகத்தான தலைவர் அவர்!

மற்றவர் எவரும் சமுதாயப் பணி செய்ய முன் வராததே தனக்குள்ள தனித் தகுதி என்று துணிவுடன் தன் பணியை - லட்சியப் பயணத்தை மேற்கொண்டார். சுழன்றடித்த எதிர்ப்புச் சூறாவளி - இந்தச் சுயமரியாதைச் சொக்கத்தங்கத்தை மேலும் ஒளிவிடச் செய்ததே தவிர, ஓடி ஒளிந்து கொள்ளச் செய்யவில்லை.

"ஒரு பெரும் பணியை - லட்சியம் கருதி நாம் செய்ய முனையும்போது, அதில் வெற்றியா? தோல்வியா? என்று சீர் தூக்கிப் பார்க்காமல், அது செய்யப்பட வேண்டிய பணியா அல்லவா என்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்து, தனது லட்சியப் பயணத்தைத் தொடர வேண்டும்" என்று இலக்கணம் வகுத்தவர்.

சொன்னதைச் செய்தார்! பெரு வெற்றியும் கண்டார்

பல்வேறு எதிர்ப்புகளும், ஏளனங்களும். எள்ளல்களும் அலை அலையாகத் தாக்கினாலும், அவற்றையெல்லாம் புறங்கண்டு, “தாம் வாழ்ந்த காலத்திலேயே தமது கொள்கைக்கான வெற்றியை அறுவடை செய்து, விளைச்சலையும் அது தந்த பலனையும் நேரில் பார்த்து மகிழ்ந்த அரிய தலைவர். உலக வரலாற்றில் தந்தை பெரியாரே என்று அவரது சீடரான தமிழ்நாட்டின் முதலமைச்சர் அறிஞர் சி.என். அண்ணாதுரை ஆகிய 'அண்ணா ' அவர்களே அமெரிக்காவிலிருந்து அவருக்குக் கடிதம் எழுதி, பாராட்டி ஊக்கமும் உற்சாகமும் தந்தார்.

அவரது சீடர்களே அரசியலுக்குச் சென்று, பகுத்தறிவாளர் அமைச்சரவை அமைத்து, அந்த அரசையே அவருக்குக் காணிக்கை என்று சட்டமன்றத்தில் பிரகடனப்படுத்திய வரலாறு - உலக வாலாற்றில் எங்கு தேடினும் எளிதில் கிடைக்காத சாதனைச் சரித்திரம் அல்லவா?

செருப்புவீச்சு, அழுகிய முட்டை முதல் மலம், சாணி, கல்வீச்சு எல்லாம் அவர் அந்நாளில் சந்தித்த பூமாலைகள் - பொன்னாடைகள்

அந்த - இழிவுகளை தன்னாடையில் துடைத்துக் கொண்டு, நிறுத்தாமல் தன் தொண்டறத்தைத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டு தந்த தன்னிகரில்லாத் தத்துவத் தலைவர் தந்தை பெரியார்!

அவர்தம் ஜாதி ஒழிப்புச் சிந்தனைகள் - செயல் திட்டங்கள் - ஒரே தொகுப்பில் - சுயமரியாதைச் சூளுரைகளாகத் திரட்டப்பட்டுள்ள இந்நூல் ஒரு அறிவுக் கருவூலம், தெவிட்டாத சிந்தனைத் தேனமுது!

படியுங்கள்!

இதனைத் திரட்ட பெரிதும் உதவிய என்னருமைத் தோழர் மு.ந.மதியழகன் அவர்களுக்கு நன்றி!

கற்க, கசடு அற; நிற்க அதற்குத் தக!

வாழ்க பெரியார்!

வருக அவர் காண விரும்பிய புத்துலகம்!

 

31.05.2017                                                                                                                                                    (கி.வீரமணி)

சென்னை                                                                                                                                        தொகுப்பாசிரியர்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog