இந்திய இலக்கியச் சிற்பிகள்: கலைஞர் மு. கருணாநிதி

புத்தகத்தை இங்கே வாங்கலாம்: https://zurl.co/xULG

"முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு பெற்றுள்ளது. (03. 06. 1924 - 07. 08. 2018) இதையொட்டிப் பல்வேறு நிகழ்வுகள், வெளியீடுகள், சிறப்புகள் நடைபெற்றுள்ளன. திராவிட இயக்கம், திராவிடக் கருத்தியல், திராவிட அழகியல் முன்னோடியாகத் திகழும் கலைஞரை, இந்திய அளவில் அறிமுகப்படுத்தும் விதமாக சாகித்திய அகாதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் நூல் ஒன்றை தமிழறிஞரும் எழுத்தாளரும் கல்வியாளருமான ம. ராசேந்திரன் எழுதியுள்ளார்.

“கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தமிழை அகப்புற நவீனத்தால் வளர்த்திருக்கிறார். மரபை விதையாக்கிக்கொண்டு வெளியுலகச் சிந்தனையை எருவாக்கிக்கொண்டு தமது கொள்கைகளை கலை, இலக்கியங்கள் வழிப் பொது மக்களிடம் பரவலாக்கிய பணியில் தமிழை அவர் அகப்புற நவீனம் ஆக்கியிருக்கிறார். அந்த வசையில் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் படைப்பாளுமை பற்றியும் பங்களிப்பு பற்றியுமான அறிமுக நூல் இது” என நூலாசிரியர் கூறுவது கருதத்தக்கது.

மிகச் சிறு வயதிலேயே எழுதவும், பேசவும் தொடங்கியவர் கலைஞர். கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், கடிதங்கள், கட்டுரைகள், உரைகள், திரைக்கதை - வசனங்கள், பாடல்கள், தன் வரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள், சொற்பொழிவுகள்ஞ் என இலக்கிய வகைமைகள் அனைத்திலும் இலட்சக்கணக்கான பக்கங்கள் எழுதிக் குவித்தவர். பன்னிரண்டு வயதிலேயே ‘செல்வ சந்திரா’ எனும் நாவலைப் படைத்தவர். சுமார் எண்பதாண்டுகள் தொடர்ந்து எழுத்தில் இயங்கியவர்.

இத்தகு ஆளுமை மிக்கக் கலைஞரை சிறு நூலில் அறிமுகப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. இயக்கத்தில், இலக்கியத்தில், வாழ்க்கையில் அருகிருந்து உணர்ந்த அனுபவத்தில் கலைஞர் எனும் இலக்கியப் பேராளுமையை அற்புதமாகச் சித்திரம் போல் தீட்டி உள்ளார் நூலாசிரியர்.

கலைஞர் ஒரு படைப்பாளியாக உருவான பின்புலத்தை அவர் பிறந்த திருக்குவளை, அவரை ஈன்ற தந்தை திருமிகு. முத்துவேலர், அவரின் ஆசிரியர்கள் மகாவித்வான் தண்டபாணி தேசிகர், டாக்டர் சி. இலக்குனார், முத்து கிருட்டிண நாட்டாரய்யா, இராஜகோபாலப்பிள்ளை உள்ளிட்ட சூழலமைவைக் குறிப்பிட்டுச் சுட்டுகிறார்.

அடுத்து கலைஞரின் இலக்கிய நோக்கை அவரின் படைப்புகளின் சாரத்தின் வழியே அறிமுகம் செய்கிறார். தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்தடம் பதித்தவராக கலைஞரைப் பதிவு செய்கிறார். “கலை இலக்கியங்கள் எல்லாம் மக்களுக்கானவை; அவர்களின் பொழுது போக்குக்காக இல்லை; அவர்களின் முன்னேற்றத்துக்கானவை என்பதில் அவரது படைப்புகள் உறுதியாக இருக்கின்றன. சமுதாயத்திலிருந்து பெற்ற பாடங்களைத் தெளிவாக உணர்ந்து சமுதாயத்திற்குப் பயன் படும்படியாகத் தன்னைக் கலந்து திருப்பி அளிக்கும் படைப்பாளியாக கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் திகழ்கிறார்” என மிகச் சரியாக மதிப்பீடு செய்கிறார்.

மேலும் “அவரது படைப்புகளின் அடிப்படை பெரும்பாலும் சமுதாயச் சிந்தனையாக இருக்கிறது. சமுதாய நிலையிலும் பொருளாதார அடிப்படையிலும் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டி, சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்துகிற வகையில் அவரது கலை, இலக்கியப் படைப்புகள் இருக்கின்றன” என வரையறை செய்கிறார்.

கலைஞரின் கலை இலக்கிய நோக்கு குறித்து நெஞ்சுக்கு நீதியில் கலைஞர் எழுதுகிறார்: “கலை என்பது கனி குலுங்கிடும் பெரிய தரு. அதனைத் தனியார் தோட்டத்து மரம் போலத் தங்கள் சொந்தப் புகழை, பொருளைக் குவித்திடப் பயன்படுத்திக் கொள்வோரும் உண்டு. அதே கலையினைக் கால்நடையாகச் செல்வோருக்குக் கனியும் நிழலும் வழங்கும் சாலை மரமாய் பொது நலனுக்கு - புதுச் சிந்தனை வளர்ச்சிக்குப் பயன்படச் செய்வோரும் உண்டு.”

ஆம். கலைஞர் பொது நலனுக்குப் பயன்படும் சாலை மரமாக நின்று காய் - கனிகளை மக்களுக்கு வழங்கினார்.

கலைஞர் மொழிப்பற்று, மொழிநேயம், இலக்கிய ஈடுபாடு, கவித்துவ மொழியாற்றல் நிரம்பப் பெற்றவர். அவரின் படைப்புகள் சமத்துவம், பெண் விடுதலை, பகுத்தறிவு, சுயமரியாதைக் கருத்துக்களை மொழிந்தன. உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டிலும் புதுமைகளைச் செய்தவர் கலைஞர். மக்களிடம் பரப்புரை செய்கின்ற நிலையில் எளிமையும் இனிமையும் உடையதாக அவரது மொழி நடை அமைந்தது.

இந்நூலில் அவரின் படைப்புகளின் அழகும், நுட்பமும் மிக இயல்பாகப் பதிவாகி உள்ளன. கலைஞரின் கருத்தியல் திராவிட அழகியலாக விரிவதை கவனப்படுத்துகிறது நூல். அதே நேரத்தில் நேரடி அரசியல் பற்றி சிறு குறிப்பும் இல்லாமல் முழுக்க இலக்கியத் தடம் பற்றி கலைஞரின் கலை இலக்கியப் பங்களிப்பை ஒரு குறியீடு போல் இந்நூல் முன்வைக்கிறது.

சாதி ஏற்றத்தாழ்வுகளும் மத வேறுபாடுகளும் மக்கள் மனதிலிருந்து மாற வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு தமது கலை இலக்கியப் படைப்புகளைத் தந்தவர். பொது நீர்நிலைகளில், சாலைகளில், மருத்துவமனைகளில், கோயில்களில் ஆலயங்களில் நிலவும் சாதிய அடக்குமுறைகளை கண்டிக்கும் படைப்புகளைத் தந்தவர்.

அவ்வகையில் மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்துதல், விதவை மண ஆதரவு, கலப்புமண ஆதரவு, தமிழின் விழுமிய மரபுகளைக் கொண்டாடுதல் ஆகியவை அவரது படைப்புகளில் அங்கிங்கு எனாதபடி எங்கும் விரவி இருக்கின்றன.

 “நவீன கலை இலக்கியம் என்பது, கடந்த காலக் கலை இலக்கியங்களைச் சமகாலத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் அக நவீனமாகவும் வெளிநாட்டுப் படைப்புகளைப் பார்த்தும் அவற்றின் செல்வாக்கிலும் தாக்கத்திலும் அவற்றைப் போன்றே தமது மொழியில் உருவாக்கும் புற நவீனமாகவும் அமைவதோடு தமது மண்ணின் வேரிலிருந்து வெளிப்படும் மரபின் தொடர்ச்சியாகவும் காலத்தின் தேவைக்கேற்ப வெளி உரத்தின் வளர்ச்சியில் உருவாகும் அகப்புற நவீனமாகவும் இருக்க வேண்டும் என்று கருதியவர்”

என்ற முடிவு தமிழ் நவீன இலக்கியத் தடத்தில் கலைஞரின் வகிபாகத்தை உணர்த்துகிறது. இந்திய ஒன்றியம் திராவிடத்தையும், தமிழையும் ஒருவித ஒவ்வாமை கண் கொண்டு பார்க்கும் வரலாற்றுத் தொடர்ச்சியில், கலைஞரின் கலை இலக்கியப் பங்களிப்பை இந்திய அளவில் நிலை நிறுத்தும் அடையாளமாக இந்நூல் விளங்குகிறது. அவ்வகையில் இது கலைஞர் அவர்களின் நூற்றாண்டு அருங்கொடையாகவும் அமைகிறது."

- இரா.காமராசு, பேராசிரியர், தலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

நன்றி: கீற்று

ஆன்லைனில் வாங்க: https://zurl.co/xULG

Back to blog