சாதியம் குறித்து பல்வேறு ஆய்வு நூல்கள் ஆய்வாளர் களால் எழுதப்பட்டுள்ள நிலையில் இந்நூல் சாதியத்தின் வேர் முதல் இன்றைய மதவாதத்துடன் அது ஏன் கலக்கப்படுகிறது என்ற காரணத்தை நோக்கி வாசகர்களைக் கொண்டு செல்கிறது.
இந்திய அளவில் இந்தி, சமஸ்கிருதம் கட்டாயமாக்கப் பட்டு தாய்மொழி உரிமைகள் பறிக்கப்படுவதாவது பன்முகத் தன்மையுடைய மக்களின் பண்பாட்டு அலகுகள் மீது நிகழ்த்தப் படுகின்ற யுத்தமாகவே பார்க்க வேண்டி உள்ளது.
காலந்தோறும் அதிகார வர்க்கத்தால் சாதி ஏன் பாது காக்கப்படுகிறது? அதற்கான நிறுவன வேலைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன? என்ற வினாவை நோக்கிப் பயணித்த தால் இந்நூலில் அதற்கான காரணங்கள் எடுத்துக் காட்டப் பட்டுள்ளன.
சாதியத்தின் பேரால் நிகழ்த்தப்படும் சண்டைகள், கலவரங் கள் இவையெல்லாம் காலந்தோறும் பல மனித உயிர்களைப் பலி கொண்டே வந்துள்ளன. கற்றவர், கல்லாதவர்கள் அனை வரிடமும் சுயசாதிய சிந்தனை கெட்டியாகப் படிந்தே உள்ளன.
யார் இவர்? என்று தெரிந்து கொள்வதற்கு ஒவ்வொருவரும் எடுக்கும் முயற்சிகள், ஜாடைக் கேள்விகள் எல்லாம் கள்ளத் தனமாக ஒவ்வொருவரின் மனதிலும் பதிந்தே உள்ளன. அதன் மூலம் அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் குழு மனப்பான்மை இன்று பல தொழிற் கூடங்களில் உள்ளதைப் பார்க்கலாம். அதன் மூலம் அங்கு சாதிய மோதல் போக்குகள் உருவாகி தொழிலாளி என்ற வர்க்க ஒற்றுமை சிதைக்கப்படுவதை அறியலாம்.
சாதிப் பெயரில் ஓட்டல் கடைகள் நடத்துவது தவறில்லை என்ற சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்பு பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. அரசியல் அமைப்புச் சட்டமே அதற்கான உரிமைகளை வழங்கியுள்ளதாக அத்தீர்ப்புக் கூறுகின்றது.
'விரும்பும் பெயர்களை சூட்டுவதற்கும் சாதிப் பெயர்களை சூட்டுவதற்கும்' வேறுபாடுகள் உண்டு என்பது யாவரும் அறிந்ததே. இன்றும் பல ஊர்களில் உள்ள தெருக்களில் சாதிப் பெயர்கள் உள்ளன. இப்போக்குகள் ஏன் சிந்தையில் தோன்று கின்றன, இதனை எப்படி மாற்றுவது, மாற்றத்திற்காகப் போராடியவர்களால் ஏன் மாற்ற முடியவில்லை. மதம் மாறினால் சாதி ஒழிந்து விடுமா? என்ற கேள்விகள் எல்லாம் தொடரவே செய்கின்றன.
சாதியும் வர்க்கமும் ஒன்றாகக் கட்டப்பட்டுள்ள சமூக அமைப்பில் வர்க்கப் போராட்டத்தின் மூலம் சமதர்ம சமூகம் அமைந்தாலும் மீண்டும் ஒரு பண்பாட்டுப் புரட்சியை நோக்கி சமூகத்தினை நகர்த்த வேண்டிய தேவையுள்ளது. சாமி, சாதி இவற்றின் தேவையை சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்த வேண்டிய நிலை வரும்வரை அவை கூட்டல் குறைவுடனயே தொடரத்தான் செய்யும்.
இந்நூல் பல்வேறு தரவுகளுடன் எழுதப்பட்டுள்ளது. இருந்தும் இத்துடன் இவ்வாய்வு முடிவது அல்ல. சாதியும் வர்க்கப் போக்குகளையும் குறித்து தொடர்ச்சியாகப் பல நூல்களை எழுத வேண்டிய தேவையுள்ளது.
இப்படியொரு நூலினை எழுத எனக்கு வாய்ப்பளித்தவர் தோழர் மயிலை பாலு, இந்நூலைப் படித்து திருத்தம் செய்து முன்னுரையும் வழங்கியுள்ளார். அவருக்கு முதன்மையாக எனது நன்றி உரியது. சாதியற்ற தமிழர் என்ற தலைப்பில் தாம்பரம் கிளை தமுஎகச வில் பேசுவதற்கு தோழர் பேராசிரியர் அண்ணா துரை அவர்கள் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். அவருக்கும் என் நன்றி. மேலும் இந்நூல் உருவாக்கத்தில் பல்வேறு சந்தேகங்களை தெளிவுபடுத்திய என் தந்தையார் அலைகள் சிவம் அவர்களுக்கும் நூல் தேடலின் போது எனக்கு உதவிய தோழர் பார்த்தசாரதி அவர்களுக்கும் என் நன்றி என்றும் உரியது.
இந்நூலினை வெளியிட்டு தோழர்களிடம் கொண்டு சேர்க்க உழைக்கும் தமுஎகச தென்சென்னை மாவட்டக் குழு தோழர்கள் அனைவருக்கும், அச்சகத் தோழர்களுக்கு நன்றி.
- சி. இளங்கோ