இந்துத்துவத்தின் பன்முகங்கள் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/hinthuththuvaththin-panmugangal
 
முன்னுரை

எனது மூன்றாவது பெருந்தொகுப்பு இது. இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு (ஜூலை, 1999), ஆட்சியில் இந்துத்துவம் (ஜூலை 2001), இந்துத்துவத்தின் இருள்வெளிகள் (ஜூன் 2004) என்கிற தலைப்புகளில் வெளிவந்த எனது மூன்று முக்கிய இந்துத்துவம் குறித்த விமர்சன நூற்களின் பெருந் தொகுப்பு இது.

90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின் காலம் என்றே சொல்லலாம். இந்துத்துவ அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்திலிருந்து அ. மார்க்ஸ் அதன் பல்வேறு பரிமாணங்களை மிகக் கூர்மையாக அவதானித்துப் பதிவுசெய்து வந்திருக்கிறார். ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு முகங்களின் நகர்வுகளையும் விளைவுகளையும் பற்றி அ. மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. வகுப்புவாத அரசியலுக்கு எதிரான மாபெரும் ஆவணமாகத் திகழும் இந்நூல் மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பாதுகாப்பு, பெரும்பான்மை வாதத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டம் எனப் பல தளங்களிலும் விரிந்து, நம் காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் பல தவறான எண்ணங்களையும் பொய்களையும் அழுத்தமாக எதிர்த்துப் போராடுகிறது. புனைவுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைத் தேடிச் செல்கிறது.

இத்தொகுப்பில் உள்ள 51 கட்டுரைகளில், முதல் தொகுப்பில் உள்ள ஐந்தைத் தவிர பிற அனைத்தும் 1998லிருந்து 2004 காலகட்டத்தில் எழுதப்பட்டவை. அதாவது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிக் கோலோச்சிய காலத்தில் எழுதப்பட்டவை. பிற ஐந்து கட்டுரைகளில் நான்கு (முதல் நூலில் உள்ள 2,3,4,5 கட்டுரைகள்) ஒரே விரிந்த ஆய்வுக் கட்டுரையாக 1994ல் நிறப்பிரிகையில் வந்தவை. முதல் நூலில் உள்ள ஆறாவது கட்டுரை இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள் என்கிற தலைப்பில் தொண்ணூறுகளின் மத்தியில் குறுநூலாக வெளிவந்த ஒன்று.

அமைப்பு ரீதியான இந்துத்துவச் செயல்பாடுகளுக்கு ஒரு நூற்றாண்டு வரலாறு இருந்த போதிலும் ஆட்சியை நோக்கி தீவிரமாக இயங்கி முதன் முறையாக ஆட்சியைக் கைப்பற்றி அது இயங்கிய காலகட்டத்தில் எழுதப்பட்டவைதான் இந்நூலிலுள்ள அனைத்துக் கட்டுரைகளும். கடைசிக் கட்டுரை 2004ல் பா.ஜ.க. கூட்டணி அரசு தேர்தலில் தோற்ற கையோடு எழுதப்பட்டது.

அவர்கள் முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது அவர்களுக்கு அறுதிப் பெரும்பான்மைக் கிடையாது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நம்பி இருந்த ஆட்சி அது. ஆனால் அவர்களது கூட்டணிக் கட்சிகள் கிட்டத்தட்ட அனைத்தும் அப்படி ஒன்றும் மதச்சார்பின்மையைத் தீவிரமாக முன்னிறுத்துபவை அல்ல. எனினும் அவற்றின் சொந்த மாநிலங்களின் தன்மைகளுக்கு ஏற்ப, சிறுபான்மையினரைப் பெரிய அளவில் விரோதித்துக்கொள்ள வேண்டாம் என்கிற நிலை இருக்கும் பிரச்சினைகளில் மட்டும் அவை மெலிதான எதிர்ப்புகளை முன் வைத்தன. அத்தகைய நிலைகளிலும் கூட பா.ஜ.க.வைப் பொருத்த மட்டில் ராம ஜன்மபூமி, பொது சிவில் சட்டம், அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்குதல் முதலான அம்சங்களில் நாங்கள் எவ்வகை யிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்பதை அவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்துவதில் தயங்கியதில்லை என்பதையும் ஆர்.எஸ்.எஸ்ஸால் இயக்கப்படும் எண்ணற்ற பாசிச அமைப்புகள் மூலமாக நாளொரு வண்ணம் அவர்கள் தமது நிகழ்ச்சி நிரலை நகர்த்தி சிறுபான்மை மக்களுக்கு மட்டுமின்றி இந்திய ஜனநாயகத்திற்கும் நெருக்கடிகளை அளித்துக் கொண்டிருந்ததையும் இந்நூலை வாசிக்கும் யாரும் உணர்வர்.

செப்டம்பர் 2000த்தில் அமெரிக்கா சென்றிருந்த அன்றைய இந்துத்துவப் பிரதமர் வாஜ்பேயி ஸ்லேட்டன் தீவில் இந்துத்துவ ஆதரவு இந்தியர்களைச் சந்தித்தபோது, "இன்று நமக்கு அறுதிப் பெரும்பான்மை கிடையாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் போது நமக்கான கனவு இந்தியாவை நாம் உருவாக்குவோம்” எனச் சொன்னதை நாம் மறந்துவிட இயலாது.

இன்றும் அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று விடவில்லை. ஆனால் கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி ஆட்சி அமைக்கும் அளவிற்கு அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளனர். இந்தப் பின்னணியில்தான் மீண்டும் இந்த நூல்கள் ஒரே தொகுப்பாக இன்று வெளிவருகின்றன.

சரியாகப் பத்தாண்டுகளுக்குப் பின் வெளிவரும் இந்நூலின் மெய்ப்பைத் திருத்தும்போது முதல்முறை ஆட்சியைப் பிடித்தபோது அவர்கள் செயல்பட்ட தன்மைக்கும் இப்போதைய அவர்களின் செயல்பாடுகளுக்கும் இடைவெளிகளைக் காட்டிலும் தொடர்ச்சியே மிகுதி என்பதை உணர்ந்தேன். மோடியைக் காட்டிலும் வாஜ்பேயியோ இல்லை, அமித் ஷாவைக் காட்டிலும் அத்வானியோ மென்மையான வர்கள் என நம்பினால் நாம் ஏமாளியாகிவிடுவோம். சிறுபான்மை மக்களை அவர்களின் தனித்துவத்தை அழித்து உட்செரிக்க வேண்டும் எனவும் ஆர்.எஸ்.எஸ்ஸே என் ஆன்மா எனவும் பிரகடனப்படுத்திய தோடல்லாமல் அவரது ஆட்சியில் நடைபெற்ற அனைத்து வன்முறை களையும், குஜராத் 2002 உட்பட, வாஜ்பேயி பெரிதாகக் கண்டிக்கவோ, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவோ இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். டாங்ஸ் மாவட்டத்தில் ஒரு கிறிஸ்துமஸ் தினத்தில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டபோது, "மதமாற்றம் பற்றிய ஒரு தேசிய விவாதம் வேண்டும்” எனச் சொல்லி, ஏதோ மதமாற்றம் செய்ததால் தான் இது நடந்தது என்பது போலவும், மதமாற்றம் நடந்தால் அப்படித்தான் நடக்கும் எனவும் மறைமுகமாகச் சொன்னவர்தான் வாஜ்பேயி. இந்துத்துவத் தலைவர்களிலேயே மிகவும் வஞ்சகமானவர் என அவர் குறித்து நான் இந்நூலில் ஓரிடத்தில் பதிவு செய்துள்ளது மிகையன்று.

அதேபோல கார்பொரேட்களுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையிலான நெருக்கமான தொடர்பும் முந்தைய அவர்களின் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது. இந்துஜா, அம்பானி ஆகியோருடன் வாஜ்பேயி அரசு காட்டிய நெருக்கம் கவனிக்கத்தக்கது. பாசிசமும் கார்பொரேட் களும் பிரிக்க இயலாது பிணைந்து நிற்கும் என்பது வரலாறு, அதன் உச்சகட்டம்தான் இன்றைய மோடி அரசு. அடுத்த ஐந்தாண்டுகளில் அவர்கள் என்னென்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நாம் இந்தத் தொகுப்பைப் படிக்கும் போது விளங்கிக்கொள்ளலாம்.

காங்கிரசை வீழ்த்தி, பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதென்பது ஏதோ ஜனநாயகத்தில் நடைபெறும் ஒரு வழமையான ஆட்சி மாற்றம் அல்ல. அது ஜனநாயகத்திலிருந்து வேறுபட்ட பண்பு மாற்றம். இரண்டு முறை பா.ஜ.க. அரசு அமைத்தபோதும் கூட்டணி ஆட்சிகளைத் தோற்கடித்தே அது ஆட்சியைக் கைப்பற்றியது. முதல் முறை தேவ கவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோரின் தலைமையில் இருந்த கூட்டணி அரசும், இரண்டாம் முறை மன்மோகன்சிங் தலைமையில் இருந்த கூட்டணி அரசும் தோற்றுத்தான் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இரண்டு முறையும் கூட்டணி ஆட்சிகளின் குறைபாடுகள், ஊழல்கள் ஆகிய வற்றை முன்னிறுத்தி, இப்படியான கையாலாகாத ஆட்சிகளிலிருந்து வேறுபட்டு உறுதியான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு பிரதமர் எனத்தான் வாஜ்பேயியும், மோடியும் முன் நிறுத்தப்பட்டனர். இவர்களின் வெற்றிக்குப் பின்புலமாக, குறிப்பாக மோடியின் வெற்றியில், கார்பொரேட்கள் இருந்தன.

வரலாற்றில் இதற்கிணையான இன்னொரு ஆட்சி மாற்றமும் உண்டு. 1930களில் ஜெர்மனியில் வெய்மார் குடியரசின் கூட்டணி அரசும் இதேபோலத் தோற்கடிக்கப்பட்ட பின்னணியில் தான் ஹிட்லரின் பாசிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. அப்போதும் உறுதியான முடிவுகள் எடுக்கக்கூடியவர் எனத்தான் ஹிட்லரை முன் நிறுத்தினர். பிரச்சினை உறுதியான முடிவு எடுப்பது என்பதல்ல, என்ன உறுதியான முடிவு எடுக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகள், அமெரிக்கச் சார்பு, ஊழல் ஆகியவற்றை நாம் ஏற்க முடியாது. ஆனால் இந்த மூன்று அம்சங்களிலும் பா.ஜ.க ஆட்சி எல்லா வகைகளிலும் காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் பல மடங்கு மோசமானது என்பதை இந்நூலிலுள்ள கட்டுரைகள் உணர்த்தும். கூடுதலாக பா.ஜ.க. அரசின் நிகழ்ச்சி நிரல் மக்களைப் பிளவுபடுத்தும் வெறுப்பை விதைத்து அரசியல் லாபம் தேடுவது, போர் வெறியூட்டப் பட்ட சமூகமாக இந்தியாவைக் கட்டமைப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அரசியல் சட்டத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயகக் கூறுகளை ஒழித்துக் கட்டுவது என்கிற கூறுகளின் அடிப்படையில் தான் பா.ஜ.க.வின் வெற்றியை நாம் வெறும் ஒரு ஆட்சி மாற்றமாகப் பார்க்க இயலாது என்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் பத்திரிகை ஆசிரியரும், இந்நாள் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினருமான தாருண் விஜய் சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் (Frontline, Dec! 2, 2014), தாங்கள் நேருவை முற்றாகப் புறக்கணிப்பதற்கு ஐந்து காரணங்களைச் சொல்கிறார். அவை: 1அண்டை நாடுகளுடன் அறம் சார்ந்த "பஞ்சசீலக்” கோட்பாட்டைக் கடைபிடித்தது 2. இந்தியாவை ஒரு இராணுவத் தன்மையிலான அரசாக அல்லாமல் கனவு கண்டது, 3 அயல் உறவுகளில் அணி சேராக் கொள்கையைக் கடை பிடித்தது 4. "திட்டமிட்ட பொருளாதார மாதிரியை” சோவியத் ரசியாவிடமிருந்து எடுத்துக் கொண்டது 5. அவருடைய சோஷலிசம் ஆகியன.

இந்துத்துவம் வெறுக்கும் இதே காரணங்களுக்காகத்தான் நாம் இந்துத்துவத்தை வெறுக்கிறோம். இந்துத்துவம் மதச்சார்பின்மைக்கு மட்டும் எதிரியல்ல என்பதைப் புரிந்து கொள்வதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்.

இந்திய வரலாற்றில் இந்துத்துவத்தால் அடியோடு வெறுக்கப்படு பவர்கள் அசோகர், காந்தி, நேரு ஆகிய மூவர். ஏன் இவர்கள் இப்படி வெறுக்கப்படுகிறார்கள் என நோக்கும்போதுதான் இந்துத்துவத்தின் உண்மை முகத்தை விளங்கிக்கொள்ள இயலும். இளைஞர்கள் முன்முடிவுகளின்றி, திறந்த மனத்துடன் வரலாற்றை அணுகும்போதே இந்துத்துவ ஆபத்தின் முழுப் பரிமாணங்களையும் விளங்கிக் கொள்ள ஏதுவாகும்.

இந்தத் தொகுப்பில் உள்ள முதல் நூல் இந்துத்துவத்தின் வரலாற்றை யும், கோட்பாடுகளையும் ஆய்வு செய்கிறது. இதன் முதல் சில கட்டுரைகள் கோட்பாடுகளை ஆய்வு செய்வதன் விளைவாகச் சற்றுச் செறிவுடன் அமைந்துள்ளது தவிர்க்க இயலாததாகி விட்டது. 'ஆட்சியில் இந்துத்துவம்' எனும் இரண்டாவது நூல் கட்டுரைத் தொகுப்பாக இல்லாமல் நூலாகவே எழுதப்பட்டது. மரியா காசலோரி யின் ஆய்வுகளின் உதவியோடு எழுதப்பட்டுள்ள இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள் குறித்த கட்டுரை அவர்களின் வரலாற்றைப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவும். இந்துத்துவத்தின் இருள்வெளிகள் எனும் மூன்றாவது நூல் இந்துத்துவ ஆட்சியில் நடந்தேறிய பல்வேறு நிகழ்வுகளை அவ்வப்போது நுணுக்கமாக அணுகி இதழ்களில் எழுதப்பட்டவை.

இந்நூல்கள் அனைத்தும் வெளிவந்தபோது பெரிதும் வரவேற்கப்பட்டவை. கடந்த பல ஆண்டுகளாக இவை அச்சில் இல்லை.

இந்துத்துவத்தின் வரலாறு, கோட்பாடு, செயல்முறைகள், ஆட்சியில் அவர்களது அணுகல் முறைகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு எளிய கையேடாக வாசிப்பவர்களுக்கு இத் தொகுப்பு உதவும் என நம்புகிறேன்.

இந்நூலை மிக்க ஈடுபாட்டுடன் வெளியிடும் உயிர்மை பதிப்பக உரிமையாளர் கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு என் நன்றிகள். வடிவமைத்த செல்வி, தட்டச்சு செய்த ஸ்ரீவித்யா, சரோஜா அழகிய அட்டையை வடிவமைத்த அரஸ் எல்லோருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

 

சென்னை                                                                                                                                                       அ.மார்க்ஸ்

டிசம்பர் 23, 2014

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog