இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? - முகவுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/hindiyal-thamizh-evvaru-kedum 
முகவுரை

தமிழாசிரியரும் மாணவரும் விடுமுறை நாளெல்லாம் பட்டினம்பாக்கம் பட்டிதொட்டி யெல்லாம் புகுந்து, இந்திக் கல்வியாலும் ஆட்சியாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் விளையும் தீங்குகளைக் கட்சிச் சார்பற்ற முறையில் பொதுமக்கட்கு விளக்கிக் காட்டல் வேண்டும். இது குடியரசு (Democracy) முறைப்பட்ட மக்களாட்சி (Republic) நாடாதலால், பொதுமக்கள் முனையின் எப்படையும் எதிர் நிற்காது.

"வடக்கத்தியானையும் வயிற்றுவலியையும் நம்பக் கூடாது." என்பது பழங்காலப் பழமொழிகளுள் ஒன்று. இது எக்காலத்து எவ்விடத்து எதுபற்றி எவ்வாறு எவர் வாயிலாய்த் தோன்றிற் றென்பது தெரிந்திலது. இதை ஒருமருங்கு ஒத்ததே,

'Cold weather and knaves come out of the north.'' என்னும் ஆங்கிலப் பழமொழியும். வடக்கத்தியான் என்றது யாரை என்பது தெரியவில்லை.

இத்தகைய தொண்டாற்றும் தனியார்க்கும் படைஞர்க்கும் பயன்படுமாறு, புன்செய்ப் புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றப் பாவாணர் நூல் வெளியீட்டுக்குழுவின் விருப்பத்திற்கிணங்கி இச்சுவடியை எழுதலானேன். இதன் வெளியீட்டிற்கு அக்குழுவின் சார்பாக ஆயிரத்தைந்நூறு உருபா தண்டியளித்த ஏழு மன்றங்கட்கும் உண்மைத் தமிழர் அனைவரும் என்றுங் கடப்பாடுடையர்.

ஆங்கிலர் நீங்கிய பின், இந்தியரெல்லாரும் கண்ணியமான விடுதலையின்ப வாழ்வு வாழ எண்ணியிருந்த காலத்து, இந்தி வெறியர் ஏனைமொழியாரை முன்னினும் பன்மடங்கு இழிவான அடிமைத்தனத்துள் அமிழ்த்தவும் தமிழை நாளடைவில் மெல்ல மெல்ல அழிக்கவும் திட்டமிட்டுவிட்டனர். இது முதலாவது தாக் கியதும் முதன்மையாகத் தாக்குவதும் உலகமுதல் உயர்தனிச் செம்மொழி பேசும் தமிழரையே.

எழுத்தறிந்த தமிழருள் எளியாரும் வாங்குமாறு இது அளவான விலைக்கு விற்கப்பெறுகின்றது. இயன்றார் அனைவரும் இதை வாங்கிப் படித்து இயலா ஏனையர்க்கும் எடுத்துச் சொல்வாராக.

இந்நூலின் கட்டடமும் உய்ப்பும் பற்றித் திருநெல்வேலித் தென்னிந்திய சை. சி. நூ. ப.க. ஆட்சித் தலைவர் திரு. வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள் செய்த உதவிகள் பாராட்டத்தக்கன.

இமிழ்கட லுலக மெல்லாம் எதிரிலா தாள்வ தேனும்

அமிழ்தினுமினிய பாவின் அருமறை பலவுஞ் சான்ற தமிழினை

யிழந்து பெற்றால் தமிழனுக் கென்கொல் நன்றாம் குமிழியை

யொத்த வாழ்வே குலவிய மாநி லத்தே.

கடந்த முப்பான் ஆண்டுகளாகத் தமிழர் எத்தனையோ வகையில் எதிர்த்துப் போராடியும், மறைமலையடிகள் உள்ளிட்ட மாபெரும் புலவர் ஏரணமுறையில் எடுத்துரைத்தும், பாலறாவாய்ப் பசுங் குழவிகளை யேந்திய தாய்மார் பலர் சிறை சென்றும், தமிழைக் கருதிய இளைஞரும் நடுமையரும் தமிழ் கெடுமென்றஞ்சி அளவிறந்து உளம் நொந்து உலகை வெறுத்துத் தீக்குளித்தும், முதுகந்தண்டொடிய மாணவர் தடியடியுண்டும், இந்தி வெறியர் இம்மியும் அசையாது கடுமுரண்டுடன் அஃறிணையும் நாணுமாறு அடர்த்து நிற்கின்றனர். இதற்குத் தூண்டுகோலானவர் தமிழைக் காட்டிக் கொடுக்கும் தமிழ்நாட்டுப் பேராயக் கட்சித் தலைவரே.

அண்மையிற் பொங்கியெழுந்த மாணவர் கிளர்ச்சியின் விளைவாக, தமிழ்நாட்டுச் சட்டப் பேரவையில் இந்தி நீங்கிய இருமொழித் திட்டத் தீர்மானம் நிறைவேற்றப் பெற்றுள்ளது. ஆயினும், அகப்பகையும் புறப்பகையுங் கூடி அதன் பயனைக் கெடுக்க முயல்கின்றன. அதனால், தமிழரை எளிதாய் விலைக்கு வாங்கிவிடலா மென்றும், அது தவறின் படை கொண்டு அடக்கிவிடலாமென்றும், இந்தி வெறியர் கனாக் காண்கின்றனர்.

ஞா. தே

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog