கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்! - தோழர் புவனன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
1937-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் நாள் வருவேல்-பிரகாசி ஆகியோரின் மகனாக குமரி மாவட்டத்தில் மிடாலக்காடு என்னும் சிறு கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் கிறிஸ்தவ மதத்தினராவார்கள். உடன் பிறந்தவர்கள் ஏழுபேர். அருகில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் படித்து முறையான கல்வியைக் கற்று தனது 19-வது வயதில் குறும்பனை ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.
இவர் கட்டுக்கு அடங்காத பிள்ளையாக இருந்தமையினால் பெற்றோர் ஒரு பாதிரியாரிடம் சேர்த்து விட்டார்கள். ஆகையினால் பாதிரிமாரின் பழக்க வழக்கங்கள் நடைமுறைகள் எல்லாம் நேரில் கண்டு உணர்ந்த காரணத்தினால் மதப்பற்று குறையத் துவங்கியது.இவருடைய இளம் வயதில் உடன் பிறந்த சகோதரி, சகோதரர்களை மரணம் பறித்துக்கொண்டது. அதோடு தாயையும் இழந்தார். தன் தாயைப் பறித்தவர் கடவுளாக இருக்கலாம், ஆனால் அவர் இரக்கம் உடையவராக இருக்க முடியாது என எழுதி வைத்துள்ளார். இதன் பின்னர்தான் பெரியாரைத் தேடிப்பிடித்து இணைந்து செயல்பட்டுள்ளார்.
குத்தூசி குருசாமியின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டவராவர். 1967-ம் வருடம் சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டர். மனைவியின் பெயர் கிருஷ்ணவேணி. இவரும் சாதி, மத எதிர்ப்பாளர் ஆவார். இருவருமாக இணைந்து திராவிடர் கழகத்தில் செயலாற்றி வந்தார்கள். குமரி மாவட்ட செயலாளர்களாக பல வருடம் செயல்பட்டார்கள். திராவிடர் கழகம் நடத்தும் குற்றாலம் பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு ‘கிறிஸ்தவ மதம்‘என்னும் தலைப்பில் பேராசிரியராக இருந்து பாடம் எடுத்து வந்துள்ளார்.மாணவர்களின் கேள்வி நேரத்தின் போது ஓர் மாணவர் ‘ஆவிகள் எதற்கு உதவும்?’ என கேட்க இவர் ‘புட்டு அவிக்கலாம், இட்லி அவிக்கலாம்‘என்றாராம். இதை, திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்கள் இப்போதும் பசுமையாகச் சொல்வது உண்டு.
தனக்குத் தானே நியாயமாகவும், நேர்மையாகவும், சிக்கனமாகவும் வாழ்ந்து 2002-ம் ஆண்டு மே 18-ம் நாள் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்போது “நாத்திகம் வேண்டும் ஏன்?” என்னும் புத்தகம் அச்சில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தோழர் புவனன் எழுதிய பிற நூல்கள்:
1) களத்தில் கடவுளர்கள்: உலகம் யாருக்குச் சொந்தம்? (வழக்காடு மன்றம்)
2) மீண்டும் கண்ணகி (நாடகம்)
3) பச்சை மரம் (நாடகம்)
4) நல்ல தேர்வு (நாடகம்)
- தோழர் கிருஷ்ணேஸ்வரி
தோழர் புவனன் தன்னைப் பற்றி...
“எப்போதுமே நான், பெரியாரியக்கத் தோழர்களை, உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும், உயர் மட்டத்தலைவராக இருந்தாலும், அடிமட்ட தொண்டராக இருந்தாலும், கழற்றி விடப்பட்டாலும், கழன்று நின்றாலும், சென்றாலும், தனி அமைப்பு கண்டாலும், பிற அமைப்புகளில் போய், கலந்து கொண்டாலும் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒரே அணியில் வைத்தே பார்த்து வந்திருக்கிறேன். கொள்கை உறுதி, லட்சியப் பிடிப்புதான் எனக்கு முக்கியம். பெரியார் என்பது ஒரு கொள்கை. ஒரு லட்சியம். அவ்வளவுதான். இதற்கு அழிவே கிடையாது. அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள். இந்தத் தெளிவுதான் என்னை சுதந்திரமனிதனாக்கியது. ஆம் நாத்திகனாக்கியது. இதனால் எதைப் பெற்றேன் எதை இழந்தேன் என்று நான் கணக்குப் பார்க்கவில்லை. சமாதானத்தைக் கைப்பற்றிவிட்டேன். சிரித்துக் கொண்டே இருக்கிறேன். சிரித்துக் கொண்டே இறப்பேன்.”
(‘நாத்திகம் வேண்டும், ஏன்?’ &நூல் முன்னுரையில்)
தொடர்புடைய மற்ற பதிவுகள்: