கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்! - மத நூல்கள் மீதான மறுவிசாரணை
பெரும்பாலானவர்கள், தங்களது மத நூல்களை முழுமையாகப் படிக்காமலேயே அல்லது அவற்றின் மீது எந்தக் கேள்வியும் எழுப்பாமலேயே, அளவிற்கதிகமான புனித பிம்பத்தை மதம் மற்றும் கடவுள்கள் மேல் ஏற்றி வைத்துவிடுகிறார்கள். பின்பு, மதம் பற்றியோ கடவுள்கள் பற்றியோ சிறிய அளவிலான விவாதமோ விமர்சனமோ எழும்போதுகூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தீவிரமான மத நம்பிக்கையாளர்களே கூட, தங்கள் மத நூல்களை, திறந்த மனதுடன், குறைந்த அளவு விமர்சனத்தோடு முழுமையாகப் படித்தாலே, தங்கள் கடவுள்கள் மேல் உள்ள புனித பிம்பங்களும் மூடத்தனங்களும் உடைந்துவிடும்.
திரைப்படங்களில் கதாநாயகன் மீது வில்லன் வீசுகின்ற ஆயுதங்களைக் கைப்பற்றி, அதைக்கொண்டே வில்லனைத் தாக்குகின்ற கதாநாயகனின் இலாவகத்தைப் போன்றதொரு பாணிதான் தோழர் புவனன் இந்த நூல்களில் மேற்கொண்டிருக்கும் விமர்சன அணுகுமுறை. கீதை, பைபிள், குரான் ஆகிய மதநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களையும் சம்பவங்களையும் கொண்டே அவற்றில் உள்ள மூடத்தனங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
நாங்கள் இந்த நூலினைப் பதிப்பித்ததற்குப் பின்னால் ஒரு சிறு தேடலும் பயணமும் உள்ளது. ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், “ஏன் பெரியார் இயக்கங்கள் தொடர்ந்து இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கின்றன?” என்கிற ஒரு கேள்வி எழுந்தபோது, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இந்து மதத்தை அதிகம் விமர்சிப்பதற்கான காரணங்களை விளக்கியதோடு, ‘கீதையோ கீதை, ‘பைபிளோ பைபிள், ‘குரானோ குரான்’ ஆகிய நூல்களையும், பெரியாரியவாதிகள் எழுதியிருக்கிறார்கள் என்றதொரு பதிலினைக் கொடுத்தார். பெரியாரிய இயக்கங்கள், வெறுமனே இந்து மதத்தினை மட்டுமே விமர்சிப்பதாக ஓர் அவதூறு மிக நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அவதூறுகளை மறுப்பதற்கான மற்றுமொரு சான்றாக இந்நூல்களின் தொகுப்பு அமையும் எனக்கருதி, இவற்றைத் தேட ஆரம்பித்தோம்.
ஆவடியில் பெரியாரிய தோழர் கோபாலகிருஷ்ணனிடம் பழைய தமிழ் நூல்கள் நிறைய இருப்பதாகவும், அவற்றைப் பாதுகாக்க முடியாத காரணத்தால் யாரிடமாவது கொடுத்துவிடலாம் என்கிற எண்ணத்தில் அவர் இருப்பதாகவும் திராவிட இயக்க எழுத்தாளர் தோழர் வாலாசா வல்லவன் மூலம் அறிந்தோம். அதன்படி அவரிடம் இருந்து பழைய நூல்கள் சிலவற்றைப் பெற்றுவந்தோம். அதில் ஒன்றாக “குரானோ குரான் என்கிற சிறு நூல் கிடைத்தது. ஏற்கெனவே “பைபிளோ பைபிள்” (சிந்தனை வெளியீடு, திண்டுக்கல்) நூல் எங்களிடம் இருந்தது. “நாளை விடியும்” இதழின் ஆசிரியர் தோழர் அரசெழிலன், “கீதையோ கீதை” நூலினை தன்னுடைய சேகரிப்பில் இருந்து தேடி, பிரதியெடுத்து எங்களுக்கு அனுப்பி வைத்தார். அவர் மூலமாகவே மறைந்த தோழர் புவனனுடைய வாழ்விணையர் தோழர் கிருஷ்ணேஸ்வரி, நாகர்கோவில் அருகே மிடாலம் என்கிற ஊரில் வசித்துவருவதாகவும், திராவிடர் கழகத்தில் குமரி மாவட்டச் செயலாளராக இருப்பதையும் அறிந்தோம். தோழர் கிருஷ்ணேஸ்வரி அவர்களை நேரில் சந்தித்து இந்த நூல்களை வெளியிடுவதற்கான அனுமதியைக் கோரினோம். மகிழ்ச்சியுடன் எங்களை உற்சாகப்படுத்தி அனுமதி கொடுத்தார். மேலும், தோழர் புவனன் கடைசியாக வெளியிட்ட, “நாத்திகம் வேண்டும், ஏன்?” என்கிற சிறு நூலினையும் கொடுத்தார். அந்த நூலினையும், முக்கியத்துவம் கருதி, இத்தொகுப்பில் இணைத்துள்ளோம்.
தோழர் புவனன், சிறந்த ஒரு நாத்திகவாதியாகவும் பெரியாரியவாதியாகவும் வாழ்ந்து மறைந்திருக்கிறார். தன் வாழ்வின் பெரும் பகுதியை நாத்திக பிரச்சாரத்திற்காகவும், பெரியாரிய கொள்கைகளைப் பரப்புவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செலவளித்திருக்கிறார். இப்படி ஒருவர் வாழ்ந்தார், எழுதினார், செயல்பட்டார் என்பதை ஆவணப்படுத்துவது மிகவும் அவசியமான பணி என்பதைக் கருத்தில் கொண்டு இந்த நூலினை வெளியிடுவதில் பெருமையடைகிறோம்.
இந்நூலுக்கு மிகச்சிறப்பான அட்டைப்படத்தையும், உள்ளடக்கத்தையும் வடிவமைத்துக் கொடுத்த திரு.ராஜரத்தினம் அவர்களுக்கும், சிறப்பாக அச்சிட்டுக் கொடுத்த ஜோதி என்டர்பிரைசஸ் (திருவல்லிக்கேணி) அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்நூல், பக்தர்கள் தங்கள் மதங்களைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு சிறந்த தொடக்கமாக இருக்கும். கடவுள் மறுப்பாளர்கள், கடவுள் நம்பிக்கையாளர்களை எதிர்கொள்ள சிறந்ததொரு கருத்தாயுதமாகவும் இருக்கும்.
சென்னை, ஜெ.ஜோன்சன் - அ.பிரபாகரன்
01-10-2019 நிகர்மொழி பதிப்பகம்