கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்! - கீதையோ கீதை - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/geethaiyo-geethai-bibilo-bible-qurano-quran
 
முன்னுரை

காலாவதியான வேதம்?

            இங்கே முக்கியமாக மூன்று மதங்கள், மக்களின் வாழ்வை ஏன்? மூளையையே ஆக்கிரமித்துக் கொண்டு வைத்துள்ளன. இவற்றில் மிகவும் இளமையானது என்று கருதப்படுகின்ற இஸ்லாமியரின் வேத புத்தகமான குரானைப் படித்தபோது நமக்கு குமட்டலே எடுத்து விட்டது. இதற்கு அடுத்த இளைய வேதம் என்று கருதப்படுகின்ற கிறிஸ்தவரின் வேத புத்தகமான ‘பைபிளை’ப் படித்தபோது நமக்கு வாந்தியே வந்துவிடும் போல் இருந்தது. இதனால் முற்றிலும் காலாவதியாகிவிட்டதாகக் கருதிய இந்து சமயத்தவரின் வேத புத்தகங்களைப் படித்தால் காலராவே வந்து விடலாம் என்று எண்ணி நாம் ஒதுங்கியே இருந்து வந்தோம்.

வீழ்ச்சியே!

            இத்தருணத்தில் இங்கு நடந்த, இந்து எழுச்சி ஊர்வலமும், அதில் எழுப்பப்பட்ட ஒரு கோசமும் (அதாவது ‘கீதை எங்கள் உயிர்’) நம்மை கீதை படிக்கும் படி தூண்டிவிட்டது. உடனே ஒரு ‘பகவத்கீதை’ நூல் வாங்கினோம்; படித்தோம். அது தொடர்பான பாரதம், பாகவதம் எல்லாம் வாங்கிப் படித்தோம். ‘இவற்றால் நமக்கு வீழ்ச்சியே தவிர எழுச்சி ஏற்பட வழி இல்லை’ என்று தெரிந்து கொண்டோம்.

மாயையே!

            இந்தச் சமயங்களின்   நடைமுறைகளில் வித்தியாசம் இருக்கலாம். தத்துவங்கள் ஒரே அடிப்படையானவையே. இதைப்போல், இவற்றின் காலவித்தியாசங்களைக் கண்டும் நாம் மயங்க வேண்டியது இல்லை. நம்மைப் பொருத்த வரைக்கும் மொத்தத்தில் காட்டுமிராண்டிக்கால கற்பனைகளே. ‘அண்டப்புழுகு, ஆகாசப்புழுகு’ என்பார்களே! அதைப்போல ஆதாரமற்றவை; அந்தரத்தில் நிற்பவை; அற்புத அதிசயப் புரட்டுகளில் மிதப்பவை. இந்த மாயையில் வீழ்பவர்கள் எழுவதே கடினம் என்றால் மீள்வது, வாழ்வது என்பது எப்படி? இவர்கள் தங்களுக்கே பகையாவதுடன், சமுதாயத்துக்கு பரிகாரம் காணமுடியாத பிரச்சனையாக வடிவமெடுக்கிறார்கள். இத்தகைய பேராபத்தைத் தடுத்து நிறுத்த சமுதாய வளர்ச்சியில் தேக்கநிலை ஏற்படாதிருக்க சமுதாய மேம்பாட்டை உறுதிப்படுத்த நாம் செய்ய வேண்டியது என்ன?

எது மனிதாபிமானம்!

            இந்தப் புராண, இதிகாச, வேதம் என்பவை, அவை எவ்வளவு செல்வாக்குப் பெற்றவையாக இருந்தாலும் அது கண்டு மனம் தளராமல், மலைத்துவிடாமல், அவை பற்றிய உண்மைகளை ஆராய்ந்து அவை மனிதனால், மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட பழைய கற்பனைகள், கதைகள், வாழ்க்கை முறைகள் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டி, அவற்றின் மயக்கத்திலிருந்து அவர்களை விடுவித்து, மனிதர்களாக்கிப் பார்ப்பதைவிட அதற்குப் பாடுபடுவதைவிட, மனிதாபிமானம் படைத்தவர்களுக்கு வேறு என்ன வேலை இங்கு இருக்க முடியும்?

நமதுபணி

            இதே அடிப்படையில்தான், நாம் ஏற்கனவே, பைபிளை ஆராய்ந்து, “பைபிளோ பைபிள்” என்று ஒரு நூல் வெளியிட்டிருக்கிறோம். ‘குரானை’, ஆராய்ந்து “குரானோ குரான்” என்று ஒரு நூல் வெளியிடுகிறோம். ‘பகவத்கீதை’, ‘பாரதம்‘, ‘பாகவதம்‘முதலியவற்றை ஆராய்ந்து இந்த “கீதையோ கீதை”யை வெளியிடுகிறோம்.

வியாசர் பகவான்

            இந்த ‘கீதை’, பாரதத்தின் ஒரு பகுதியான வருகிறது. இதைப் பகவான் கிருஷ்ணன் தனியாக அருள எந்த அவசியமும் இல்லை. இன்னும் இது பகவான் மொழி மட்டுமல்ல, உரையாடலாகவே பார்க்கிறோம். இனி, இதைக் கூறுவதற்கு ஒரு பகவான்தான் வேண்டும், என்றாலும் வியாசரும் பகவான் என்றுதான் வழங்கப்படுகிறார். கிருஷ்ணனைப்போல் விஷ்ணுவின் அம்சமாக, அவதாரமாகத்தான் (பாக:1-3) விளங்குகிறார். இதைவிட “நான் முனிவரில் வியாசராக இருக்கிறேன்” என்று கிருஷ்ணனே மொழிகிறார் (10-37). இதைப்போல் “நான் வியாசரின் திரு அருளால் இந்த ஒப்புயர்வற்ற யோகத்தை கிருஷ்ணனிடமிருந்து நேராகச் சொல்லக் கேட்கப்பெற்றவனானேன்” (18-75) என்றுஅர்ச்சுனன் கூறுகிறார். இதுவுமல்லாமல், வியாசர் அருளிய பாகவதத்தின் தேவிகீதையும், பகவத்கீதையும் அதிகமும் ஒரே அடிப்படையில், ஒரே கருத்துக்களையே தாங்கி நிற்கின்றன. இதை எல்லாம் பார்க்கும் போது, பகவத்கீதையும் வியாசரின் படைப்புத்தான் என்பது விளங்குகிறது. அது எப்படியோ போகட்டும். விடுங்கள், விசயத்துக்கு வருவோம்.

 

ஜனவரி, 1983                                                                                                                                                       - புவனன்

வாய்மையகம்,

வாட்டர்டாங்கு சமீபம்,

நாகர்கோவில்-1

Back to blog