கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்! - (குரானோ குரான் - முன்னுரை)

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/geethaiyo-geethai-bibilo-bible-qurano-quran
 
முன்னுரை

மாற்றம் தவிர்க்க முடியாதது!

    இறைவன் என்றால், படைப்பில், வாக்கில், நடப்பில் பரிபூரணராக இருக்க வேண்டும். இன்றோ, நாளையோ அல்லது நேற்றோ மாறாதவராக, மாற்ற முடியாதவராக இருக்க வேண்டும். இங்கோ, படைப்பில் மாற்றம் தவிர்க்க முடியாதது ஆகிறது. இதனால் இறைவன் கேள்விக்குறியாகி விடுகிறார்.

இஸ்லாமும் மாற்றத்தையே கூறுகிறது!

   இஸ்லாம் மட்டுமல்ல, இங்கே அனைத்து சமயங்களும், மக்கள் இருந்த நிலமையைக் கண்டித்து, இருக்க வேண்டிய நிலமையையே கற்பிக்கிறது, ஆம்!  மாற்றத்தையே போதிக்கிறது; வலியுறுத்துகிறது. ஏன்? நிர்ப்பந்திக்கிறது. இறைவன் தாம் படைத்த, தம் பராமரிப்பில், பாதுகாப்பில் இருக்கிற மக்களை ஏன் கண்டிக்க வேண்டியது வந்தது? ஏன் உபதேசிக்க வேண்டியது வந்தது? ஏன் மாற்ற வேண்டியது வருகிறது? இதில் இறைக் கொள்கையின் முரண்பாடு தெரியவில்லையா? இது இறைவர் பரிபூரணமானவராக இருந்திடவில்லை என்பதைக் காட்டவில்லையா? என்று கேட்கிறோம்.

இறைவனே மாறுகிறார்!

  இறைவன், தான் தந்த முந்திய வேதங்களை விடச் சிறப்பானதைக் குர்-ஆன் மூலம் தருவதாகக் கூறுகிறார் (2-106); வசனத்தை மாற்றுவதாக வாக்களிக்கிறார் (16-10); உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொண்டதாக விளம்பரம் செய்கிறார் (9-3). இதன்படி படைப்புகள் மட்டுமல்ல, தாமே வாக்கால், நடப்பால் மாறக்கூடியவர் என்பதை இறைவன் பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார். பரிபூரணத்தைப் பார்க்க முடிகிறதா?

இறைவனையே மாற்றிக் கொள்கிறார்கள்!

  இங்கே நேற்று அப்பனுக்கு ஒரு இறைவன், இன்று மகனுக்கு ஒரு இறைவன், நாளை பேரனுக்கு எது இறைவனோ? என்று தெரியாத அளவுக்கு இறைவனை மாற்றிக் கொள்கிறார்கள். இதைப்போல் ஒருவருக்கு அப்போது ஒரு இறைவன், இப்போது ஒரு இறைவன், இனி எப்போது எது இறைவன் என்றும் உறுதிப்படுத்த இயலவில்லை. இதைவிட மொத்தத்தில் இறைவனைத் தூக்கி மாற்றியே வைக்கிறார்கள். ஆம்! ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்’ என்கிறார்கள்.

நமக்குள் மோதல் ஏன்?

       இவ்வளவு நடந்தும் எந்த இறைவனும் அலட்டிக் கொண்டதாக இல்லை, வெகுண்டதில்லை. வெட்டிக் கொண்டதாகவோ, முட்டியதாகவோ, மோதியதாகவோ எதுவும் காணவில்லையே. இத்தகைய, புத்தகங்களில் இருக்கும் காகிதக் கடவுள்களுக்காக, சதைக்குச் சதையான மனிதனே, நாம் ஏன் சண்டையிட வேண்டும்? நம் சக்தி ஏன் விரயமாக வேண்டும்? நம் சதை ஏன் கிழியவேண்டும்? நம் இரத்தம் ஏன் சிந்தப்ப்ட வேண்டும்? நம் தலை ஏன் விழ வேண்டும்? சிந்தியுங்கள்.

இஸ்லாமில் கருத்து சுதந்திரம்!

   இது அறிவியல் உலகம். இனி மனித ஆராய்ச்சியில் இருந்து எதுவுமே தப்பமுடியாது. இதனால் மாற்றுக் கருத்துக்களுக்கு வழியை விசாலமாகத் திறந்துவிட வேண்டியதே. கருத்துச் சுதந்திரம் என்பது சமுதாயத்தின் உயிர்த்துடிப்பு. அது அடங்கி விடக் கூடாது. இங்கு மாற்றுக் கருத்துக்களைக் கேட்வும், அவசியமானால் ஏற்கவும் மக்கள் பக்குவம் பெற்றாக வேண்டும். இதோ, “ஒரே கருத்தால் உலகாள்வது இறைவனுக்கு முடியாதது அல்ல. இறைவன் மனிதனை சோதிப்பதற்காகவே மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் தந்திருக்கிறான்” (5-48). என்று இஸ்லாமும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்துகிறது.

 

ஜனவரி, 1983                                                                                                                                                        - புவனன்

Back to blog